சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்

3. மார்க்கம்

1. சத்துக்குரிய மார்க்கம் இயற்கை. சத் – இறை ; மார்க்கம் – இயற்கை.

2. இயற்கையோடு இயைந்து வாழ்வது சத்மார்க்கம். (சத்தை அடைதற்குரிய மார்க்கம் சத்மார்க்கம் – சன்மார்க்கம்).

3. இயற்கையோ டியைந்து வாழ்வது என்பதும், இறையோ டியைந்து வாழ்வது என்பதும் ஒன்றே.

4. இறை, புலனாகாது இயற்கையுடன் எங்கும் என்றும் நீக்கமற நிறைந்து நிற்கும் ஒன்றாதலான், மன உணர்வினர் இயற்கையை விடுத்து இறையைத் தனியே நாடுதல், நீர் வேட்கையைத் தணித்துக்கொள்ளக் கானற் சலத்தை நாடி ஓடினவன் கதையாக முடியும்.

5. இயற்கையும் இறையும் பிரிவின்றி இருத்தலானும், இறையை விடுத்து இயற்கை நிற்றலின்மையானும், இயற்கை என்னும்போது அஃது இறையையுங் குறிப்பதெனக்கொள்க.

6. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள ஒருமைப்பாட்டைப் புலப்படுத்த இறையை, இயற்கை – இறை என்றோ, இயற்கை என்றோ கூறலாம்.

7. மன உணர்வு உடையோர், மார்க்கமாகிய இயற்கையைப் பற்றுக்கோடாகக்கொண்டு வாழ்வது ஒழுங்கு. அவர்க்கு அது சிறந்த வழிபாடாகும்.

8. இயற்கையில் மனம் படியத் தக்க துறைகளில் மக்கள் இறங்கப் பயில்வது நல்வாழ்வுக்கு அடிகோலுவதாகும்.

9. இயற்கைத் துறை நண்ணி, இறை இன்பம் நுகர முயலாது, இயற்கையை வெறுத்து, நெறியல்லா நெறியில் உழலுதல் கூடாது.

10. இயற்கையை வெறுப்பது இறையை வெறுப்பதாகும். இயற்கை, இறையின் உடலாதலால் இயற்கையை வெறுப்பதும் நாத்திகமாகும்.

11. இயற்கை வாழ்வை வெறுப்பது துறவு என்று சில இடங்களில் கருதப்படுகிறது. அது தவறு.

12. துறவு என்பது என்னை? இயற்கைக் குணத்துக்கு மாறுபட்ட செயற்கைக் குணத்தை நீப்பது துறவாகும்.

13. தன்னுயிரைப் போல் மன்னுயிரைக் கருதுவது உயிரின் இயற்கைக் குணம். அவ்விழுமிய குணம் விளங்காதவாறு அதனை மறைப்பது செயற்கைக் குணம்.

14. செயற்கைக் குணத்தின் வரலாற்றை ஆராய்வதில் பொழுது போக்க வேண்டுவதில்லை. செயற்கைக் குணமிருத்தலை நாம் உணர்கிறோம். அதனை அகற்ற முயல்வது அறிவுடைமை.

15. பொறை, அன்பு, அருள், வண்மை, தனக்கென வாழாமை, பிறர்க்கென வாழ்தல், அவ்வாழ்வுக்குரிய தொண்டாற்றல், இன்ன பிற – இயற்கைக் குணத்தின் கூறுகளாம்.

16. பொறாமை, எரி, பகை, வன்கண்மை, தனக்கென வாழ்தல், பிறர்க்கென வாழாமை, பிறர் நலங் கருதித் தொண்டாற்றாமை, இன்ன பிற – செயற்கைக் குணத்தின் கூறுகளாம்.

17. துறவு என்பது செயற்கைக் குணத்தை நீப்பது.

18. செயற்கைக் குணத்தை நீத்து, இயற்கைக் குணத்தில் நிலைத்திருப்பின், இன்ப வாழ்வு கூடும்.

19. செயற்கைக் குணத்தை எப்படி நீப்பது? இயற்கையை வெறாது, அதனுடன் இயைந்து வாழ வாழச் செயற்கைக் குணம் தானே ஒழியும். இயற்கை வாழ்வை வெறுப்பது செயற்கைக் குணத்தை நீப்பதாகாது.

20. உடலையும், பெண் ஆணையும், ஆண் பெண்ணையும், மண்ணையும், பொன்னையும், இன்ன பிறவற்றையும் வெறுத்து நீப்பது இயற்கை வாழ்வாகாது.

21. இயற்கை வாழ்வுக்குரிய உடல் முதலியவற்றை வெறுத்து நீத்தலைத் துறவெனக் கருதுவது பாவம்.

22. முதலாவது உடலை நன் முறையில் ஓம்புதல் வேண்டும்.

23. உடல், உயிர் விளக்கத்துக்கென இயற்கை – இறையால் வழங்கப்பட்ட உடைமை. உடல், இயற்கையின் காரியம். அஃது இறையின் கோயில்.

24. இயற்கைக் காரியம், ஒவ்வொருவித உடலாக அமைந்து அமைந்து, உயிரைப் படிப்படியே விளக்கி விளக்கி, அதனை அறியாமையினின்றும் விடுதலை செய்து வருகிறது. அத்தகைய உடலை ஓம்பவேண்டுவது நம் பெருங்கடமை.

25. உடலை மாயை எனக் கருதி, அதனை வெறுத்தலும், ஒறுத்தலும், தீயொழுக்கத்துக்குப் பாழ்படுத்தலும், அகால மரணத்துக்கு உட்படுத்தலும் பாவம்; பாவம்; பெரும்பாவம்.

26. உடல், இறைகோயில் அதை நோய்க்குடிலாக்குவது தவறு. அதனால் உயிர்நலனுக்குக் கேடு நேரும்.

27. உயிரின் கட்டை அறுப்பதற்கு உடல் ஒரு கருவி. அக் கருவியைப் பழுதுபடுத்தல் உயிரின் நலத்துக்குக் கேடு சூழ்வதாகும்.

28. உடலோம்புவது இயற்கை வாழ்வுத்துறைகளுள் ஒன்று.

29. உடலோம்பலுக்குரிய துறைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும். இன்றியமையாத சில வருமாறு :- மரஞ் செடிகள் சூழ்ந்து, காற்றும் ஒளியும் எளிதில் பரந்து படரும் வீட்டில் வாழ்தல், வைகறைத் துயிலெழல், காலைக் கடன்களை முடித்தல், கதிரொளியில் மூழ்கல், காற்றில் உலவல், குதிரை ஏற்றமோ, பந்தாட்டமோ, நீராடலோ, கடற்செலவோ, தரைச் செலவோ இவைகளில் ஒன்றையோ சிலவற்றையோ கொள்ளல், இயற்கை – இறையை நினைத்தல், பொருந்திய உணவு அருந்தல், பசிக்கனல் எழுந்த பின் சாப்பிடுதல், குறித்த வேளையில் கடனாற்றல், எரி பகை முதலியவற்றை எழுப்பும் துறைகளிலும் தொழில் முறை களிலும் ஈடுபடாதிருத்தல், இயற்கைப் பொருள்களை விருப்பொடு நோக்கி நோக்கி, உன்னி உன்னி மகிழ்தல், பெண்ணுடன் ஆணும் ஆணுடன் பெண்ணும் கலந்து வாழ்தல், ஒழுக்கங்காத்தல், பாவிய ஓவியங்களிற் கருத்திருத்தல், பிற உயிர்கட்கிரங்கல், தீங்கு செய்வோர்க்கும் நலஞ்செய்தல், இன்னோரன்ன பிற.

30. நல்லுடலுக்கு அறிகுறி மலச்சிக்கலின்மை. மலச் சிக்கலே எல்லா நோய்கட்குந் தாயகம்.

31. மலம் சிக்கித் தங்கிப் பழமையாய், நஞ்சாய், உறுப்புக்களில் ஊறும். அதனால் நஞ்சு எவ்விடத்திலேனும் நோயரய்த் தலைதூக்கும். அந்நோய்க்குப் பலவிதப் பெயர்கள் மருத்துவரால் சூட்டப்படுகின்றன.

32. தங்கு மலம், பழமை ஆக ஆக, அது நஞ்சாகி, நாடி நரம்புகளில் தேங்கி, மூளையையும் பற்றும்.

33. மலநஞ்சேறப்பெற்ற மூளையினர்க்கு அமைதித் தியானங் கூடுதலரிது. அவர்க்குத் தியானங் குலைந்து கொண்டே போகும்.

34. தியானம் உடல் நலனுக்கும் உயிர் நலனுக்கும் வேண்டற் பாலது. இது பின்னுங் கூறப்படும்.

35. மலச்சிக்கலால் வெம்மை எழும். அவ்வெம்மை பலவிதத் தீயொழுக்கங்கட்கு வழிகோலும்.

36. மலச்சிக்கல் உறாதவாறு உடலைக் காப்பது அறிவுடைமை, உடற்பயிற்சியும், பொருந்திய உணவும், நல்லெண்ணமும், தியான மும் மலச்சிக்கல் உறாதவாறு காக்கும் (உணவில் சிறப்பாகக் குறிக்கத்தக்கன கீரையும் பழமும்.)

37. மலச்சிக்கலால் உறும் நோயைப் போக்க உலகம் மேற்கொள்ளும் முறைகள் பலதிறத்தன. அவைகள், முத்திறத்தில் அடங்கும். முத்திறமாவன : இறைவழி அதாவது தியானம், இயற்கை மருத்துவம், மருந்து முறை.

38. மலச்சிக்கல் உறின், அதை மருந்தால் போக்க முயல்வது, தற்காலச் சாந்தி தேடுவதே யாகும். மருந்தால் பழைய மல நஞ்சு அறவே நீங்காது.

39. நோன்பு முறை பொருந்தியது. இஃது இறைவழிக்கும் இயற்கை மருத்துவத்திற்கும் அரண் செய்வது; பொதுமையது.

40. அவரவர் உடல் நிலைக்கேற்றவாறு வாரத்துக்கொரு முறையோ மாதத்துக் கொருமுறையோ நோன்பிருப்பது நலம். நோன்பிகட்கு மலஞ்சிக்குதல் இல்லை.

41. மலச்சிக்கல்உறின், அதைப்போக்கும் பேராற்றல் நோன்புக்கு உண்டு.

42. நோன்பு, முறைப்படி இருத்தல் வேண்டும். நோன் பிருத்தற்கு முன்னாள், பகல் உணவு கொண்டு, அன்றிரவு எவ்வுணவுங் கொள்ளலாகாது. மறுநாள் காலை எழுந்து, காலைக்கடன்களை முடித்தல் வேண்டும். நோன்பு வேளையில் சோர்வு குமட்டல் மயக்கம் நேரும்போதெல்லாம் நீர் அல்லது உப்புக் கலந்த நீர் அருந்தல் வேண்டும். நீர் அருந்தாமல் இருப்பது தவறு. அருந்தும் நீர், சோர்வு குமட்டல் மயக்கங் களைப் போக்குவதுடன், உட்கருவிகளை வறள ஒட்டாமல் காத்து, அவைகளில் ஏறித் தேங்கி ஊறியுள்ள மல நஞ்சு கீழிறங்கத் துணை செய்யும். நோன்பின்போது தீயொழுக்க நினைவுந் தோன்றலாகாது. அந்நினைவு நாடி நரம்புகளை அரித்துப் பாழாக்கும். அச்சமயத்தில் தெய்வத் தியானஞ் செய்தும் தெய்வக் கதைகள் கேட்கும் இருப்பது நலம். காற்றொளி படராத இடங்களில் இருத்தலாகாது. முறைப்படி சூரிய நானம் செய்வது தவறுதலாகாது. மூன்றாம் நாள் வழக்கம்போலக் காலைக்கடன்களை முடித்து நோன்பு கழிக்கப் புகுதல் வேண்டும். நோன்பைப் படிப்படியே கழித்தல் வேண்டும். திடீரெனப் பரு உணவுகளை உண்ணுதல் பெறுந்தவறு; உண்ணின் நோன்பின் பயனுங்கெட்டு, மெலிந்த உட்கருவிக ளெல்லாம் இடர்ப்பட்டு, நலத்துக்குப் பதிலாகத் தீமை விளையும். முதலாவது நீர் பருகிப், பின்னே பழச்சாறு பருகிப், பின்னே நீர்மோர் கஞ்சி போன்றன பருகிப், பின்னே வழக்க உணவு ஏற்கலாம். இஃது ஒருநாள் நோன்பு முறையாகும். விரிவு, நோன்பு நூல்களிற் காண்க; இயற்கை மருத்துவரிடங் கேட்டுத் தெளிக.

43. நோன்பால் பண்பட்ட நல்லுடல் இயற்கை வாழ்வுக்குப் பொருத்தமானது. அந்நல்லுடல் தியானத்துக்குப் பெருந்துணை செய்யும்.

44. நல்லுடலுக்கு மரஞ் செடி கொடிகளிடை வாழ்வதுந் தேவை.

45. மரஞ் செடி கொடி முதலிய தாவரங்கட்கும் உயிருண்டு.

46. ஒவ்வொரு வீட்டையும் மரஞ் செடி கொடிகள் சூழ்ந்திருத்தல் அழகு.

47. ஞாயிற்றொளியும் நறுங் காற்றும் எளிதில் நுழையும் முறையில் அமையும் வீடுகள் வாழ்வுக்கு உரியன.

48. ஒளியையும் காற்றையும் செயற்கைவழிப் பெறும் முறையில் வீடுகள் அமைதலாகாது.

49. நாடுகளின் தட்பவெப்ப நிலைமைக்கேற்ற வண்ணம் வீடுகள் அமைவது இயற்கைக்கு அரண் செய்வதாகும். மாறு பாட்டால் நோய் மிகும்.

50. பாதைகளின் இரு பக்கமும் மர வரிசைகள் அமைந் திருத்தல் நல்லது.

51. பயிர் பச்சைகளின் பரவையும், சோலைகளின் ஓங்கலும் ஒவ்வோர் ஊருக்குந் தேவை.

52. காடுகளை நன்முறையில் காப்பது நாடுகளைக் காப்பதாகும்.

53. நாட்டின் உயிர்ப்பு காடு; நாட்டைக் காப்பது காடு.

54. ஓரூரின் ஜனத்தொகையைப் பார்க்கிலும் மரஞ்செடி களின் தொகை அதிகமிருத்தல் வேண்டும்.

55. மரஞ் செடி கொடி முதலியன உயிர்ப்பை (பிராண வாயுவை) உமிழ்கின்றன; கீரை, பூ, காய், கனி முதலியவற்றைக் கொடுக்கின்றன; பசுமைக்காட்சியை வழங்குகின்றன; பாடும் பறவைகளுக்கு இடந்தருகின்றன; வேறு நலன்களையும் அளிக் கின்றன.

56. பசுமைக் காட்சி வழங்காத ஊர் பாழ். அங்கே பிணிகள் பெருகும். பசுமை, மூளைக்கும் நாடி நரம்புகட்கும் நலஞ் செய்வது. அது வெம்மை தணிக்கும் இயற்கைமருந்து.

57. நகரங்களில் பிணிகள் பெருகுதற்குக் காரணங்கள் பல உண்டு. அவைகளுள் ஒன்று மரஞ் செடி பயிர் பச்சை முதலியன பெரிதும் இன்மை.

58. மரத்தடியிலிருந்தோ நின்றோ உலவியோ கதிரொளியில் முழ்குவது (சூரிய நானஞ் செய்வது) சிறப்பு. கதிரொளி, பச்சிலைகள் வாயிலாக உடலில் படர்வது பொருத்தம்.

59. மக்கள், மரஞ் செடி முதலியவற்றை ஓம்புவது தங்களை ஓம்புவதாகும்.

60. வாயில்லா ஏழைப் பிராணிகளை அன்புடன் வளர்த்தல் அறம். அவைகளை வதைப்பது அறமன்று.

61. நமது உடம்பைப்போலவே பிற உயிர்களின் உடம்பையும் பாவித்தல் வேண்டும். பிற உயிர்களின் உடம்புகளுக்குத் தீங்கு செய்வது நம் உடம்புக்கு நாமே தீங்கு செய்வதாகும்.

62. இயற்கையில் ஒரு சக்தி இருக்கிறது. அதன் இயல்பு உயிர்களின் வளர்ச்சியை நாடுவது. அவ்வளர்ச்சிக்கென இயற்கையில் உடலங்கள் அமைகின்றன. அவ்வுடலங்களுக்குக் கேடு சூழ்வது இயற்கை வளர்ச்சியைத் தடுப்பதாகும். அத்தடை, கேடு சூழ்ந்தோரையுந் தாக்கி இடர்ப்படுத்தும். ஆகவே எவ்வுயிருடலுக்குங் கேடு சூழ்தலாகாது.

63. உயிருக்கு உடனமைந்துள்ள உடலோடு வேறு சில உடலங்களுமுண்டு. அவை வீடு, ஊர், நாடு, உலகம். இவைகளை யும் உடலைப் போலவே பாவித்தால் அன்பு ஊற்று தானே திறந்துகொள்ளும்.

64. நல்வழியில் உடலை ஓம்புவதுடன் கல்வி பயின்று வருதல் வேண்டும்.

65. கல்வி என்பது அறியாமையைக் கல்லி அறிவை விளக்குவது. அதாவது இருளையோட்டி ஒளியை வழங்குவது.

66. இளமையிலே கல்வி பயில முயல்வது நலம்.

67. இளமை, பின்னெழும் வாழ்வு நிலையத்திற்கு அடிப்படை.

68. கல்வித் துறைகள் பல. அவைகளில் மக்கள் தத்தம் இயல்புக்கேற்ற ஒன்றைக் குறிக்கொண்டு, அதைச் சிறக்கப் பயில்வது முறைமை. பிற துறைகளில் ஒல்லும் வகை பொது அறிவு பெற முயல்வது ஒழுங்கு.

69. தொழிற் கல்வியும் கல்வியின் பாற்பட்டதே.

70. கல்வி, பெண் ஆண் என்னும் இருபாலார்க்கும் உரியது.

71. ஒத்த கல்வியுடைய ஒருவரை ஒருவர் மணப்பது செழுமை.

72. ஏட்டுக் கல்விப் பயிற்சியுடன் இயற்கைக் கல்விப் பயிற்சியுந் தேவை.

73. ஏட்டுக் கல்வி என்பது இயற்கையின் படம்.

74. இயற்கையோடியைந்து நின்று வாழ்வு நடாத்திய அறிஞர், அவ்வாழ்வில் தாம் பெற்ற அநுபவங்களைப் பின் வருவோர் பொருட்டுப் பலதிறக் கலைகளாக எழுதிச் சென்றனர். அக்கலைகளின் பொருள் இயற்கை.

75. ஏட்டுக் கலைகள், இயற்கைக் கழகத்தில் எப்படிப் பயில்வது என்பதை உணர்த்துவன.

76. கலைகள் பலதிறத்தன. அவைகளை இருகூறு படுத்த லாம். ஒன்று இயற்கை இயல்களைக் கூறும் இனம்; இவ்வினம் அறிவியற்கலை (Science) எனப்படும். மற்றொன்று இயற்கைக் காட்சி இனம். இவ்வினம் காவிய – ஓவியக்கலை எனப்படும்.

77. அறிவியற் கலையை வாழ்வு நலத்துக்குப் பயன் படுத்துவது நியாயம். அக்கலையைப் போருக்கும் கொலைக்கும் பயன்படுத்துவது தவறு.

78. அறிவியற்கலை வாழ்விற்குப் பயன்படு முறையில் வளர்ந்துவரின், அதனால் மன்பதைக்குத் தீங்கு விளையாது. அக்கலை போருக்கும் கொலைக்கும் என்று வளர்ந்துவரின், அதனால் மன்பதைக்குத் தீங்கு நேரும்.

79. அறிவியற்கலை நன்முறையில் வளர வளர, இயற்கையை உடலாக்கொண்ட இறை உண்மையை எளிதில் உணர்ந்து உறுதிபெறுதல் கூடும்.

80. காவியமும் ஓவியமும் இயற்கை அன்னையின் திருக் கோயில்கள். அக்கோயில்களில் நுழைந்து பார்த்தால், இயற்கை அன்னையின் உறுப்புக்களும், கோலங்களும், ஆடல்களும், இயற்கை வாழ்வுத் திறங்களும், இன்ன பிறவும் விளங்கும்.

81. காவியங்கள் எழுத்தால் ஆக்கப்பட்ட சொல்லடுக்குக் கூடங்களல்ல; ஓவியங்கள் வரிக்கீற்றோ வடித்தலோ கொண்ட பிண்டங்களல்ல. அவைகளைப் பயின்று பயின்று, அவைகளின் நுட்பங்களைக் கூர்ந்து உன்னி உன்னி, அவைகளில் ஒன்றி ஒன்றி, ஈடுபடப்பட, அவைகள் இயற்கைப் படக்காட்சிக் கூடங்கள் என்பது நனி விளங்கும்.

82. காவியமும் ஓவியமும் உயிர்களைச் செயற்கையி னின்றும் இயற்கையிற் சேர்க்கும் பாலங்கள்.

83. எவ்வெம் மொழியில் எவ்வெக் காவியங்கள் தோன்று கின்றனவோ, அவ்வம் மொழியில் அவ்வக் காவியங்களைப் பயின்றால் காவிய இன்பத்தை நன்முறையில் நுகர்தல் கூடும்.

84. ஒரு மொழியில் தோன்றிய காவியத்தை மற்றொரு மொழியில் பெயர்த்துப் பயின்றால் காவிய இன்பத்தை நுகர்தல் இயலாது.

85. மொழிபெயர்ப்பில் காவியக் கதைகள் அடங்கி வரும்; ஆனால் காவிய இன்பம் அடங்கி வாராது.

86. காவிய இன்பத்துக்குத் தாய்மொழிப் பயிற்சி இன்றியமை யாதது.

87. அறிவியற் கலைக்கு மொழிக் கட்டுப்பாடு வேண்டுவ தில்லை. அதை எம்மொழி வாயிலாகவும் பயிலலாம்.

88. தாய்மொழி என்று பிற மொழிகளை நிந்தித்தலாகாது.

89. மொழிகளின் ஒலியில் வேற்றுமையுண்டு. கருத்தில் வேற்றுமை கிடையாது.

90. மயில் தோகை விரித்தாடுகிறது. அவ்வாடலைத் தமிழன் தமிழில் எழுதுகிறான்; வடமொழியன் வடமொழியில் எழுது கிறான்; ஆங்கிலன் ஆங்கிலத்தில் எழுதுகிறான்; மற்ற மற்றவர் தத்தம் தாய்மொழியில் எழுதுகிறார். இப்பலதிற மொழிகளா லாகிய பாடல்களின் முதற்பொருள் ஒன்றே யன்றோ?

91. மொழிகளின் தாயகமும் சிந்திக்கத்தக்கது. அது நாத மூலம். நாத மூலம் நாடுகளின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ற வாறும், பிற வேற்றுமைகளுக் கேற்றவாறும் பலதிற மொழியொலி களாகப் பரிணமிக்கிறது.

92. இசையும் நாடகமும் வாழ்க்கைக்குத் தேவை.

93. கலைக் கழகப் பயிற்சி நாளடைவில் இயற்கைக் கலைக் கழகப் பயிற்சியாக மாறும். அம்மாற்றம் பெறுதற்கு இயற்கையில் அறம் என்பது அமைந்திருக்கிறது.

94. அறம் இரு கூறுடையதென்றும், ஒன்று இல்லறமென்றும், மற்றொன்று துறவறமென்றும், முன்னையது பெண்ணுடன் வாழ்வதென்றும், பின்னையது பெண்ணை நீத்து வாழ்வதென்றும், அஃது இழிந்ததென்றும், இஃது உயர்ந்த தென்றும் சிலர் கூறுகிறார். அக்கூற்றுப் பொருளற்றது.

95. அழுக்காறு அவர் வெகுளி முதலிய தீக்குணங்களை அறுப்பது அறம்.

96. அழுக்காறு முதலிய தீக்குணங்கட்கு அடிப்படையா யிருப்பது தன்னலம்.

97. தன்னலம் அறுந்தால் அறம் விளங்கும். தன்னலத்தை அறுப்பது எப்படி?

98. ஒருத்தியோ ஒருவனோ தொடக்கத்தில் தன்னலம் உடையவராக இருத்தல் வெள்ளிடைமலை. அவளும் அவனும் உற்ற வயது அடையும்போது அவர்பால் காதல் எழுகிறது. அக்காதல் இருவரையும் ஒன்றுபடுத்துகிறது. பின்னே அவரவரிடம் தனித்தனியே தன்னலமாகக் கட்டுப்பட்டுக் கிடந்த அன்பு இருவரிடமும் பரவுகிறது. இருவர்க்கும் பிள்ளைகள் பிறந்த பின்னை இருவரிடமும் பரவிய அன்பானது மூன்றாவது உயிர்களிடம் பரவிப் பெருகுகிறது. பிள்ளைகளின் நலத்துக்குத் தாய் தந்தையர் தன்னலம் அற்றுத் தொண்டு செய்தலை விரித்துக்கூற வேண்டுவதில்லை. ஹிருவரும் ஹிளமைழீல் பெற்ற கலைஞானமும், நின்னே வாழ்க்கைழீல் பெற்ற அநுபவமும் ‘நம் உழீர்கட்கும், நம்மைச் சார்ந்த உழீர்கட்கும், மற்ற உழீர்கட்கும் என்ன வேற்றுமை ஹிருக்கிறது? என்று கருதச் செய்து, மற்ற உயிர்கட்குத் தொண்டு செய்ய உந்துகின்றன. இப்பொழுது அன்பு பிற உயிர்கள் மாட்டும் செல்வதாகிறது. அன்பு விளையும் இடங்களில் அழுக்காறு அவா வெகுளி முதலிய தீக்குணங்கள் இடம் பெறுவதில்லை. ஆகவே, தன்னல அழிவு, பெண் ஆண் கூட்டுறவில் நேர்தல் கருதற்பாலது.

99. தன்னல அழிவு, படிப்படியாகப் பெண் ஆண் கூட்டுறவால் நிகழ்தல் உள்ளங்கை நெல்லிக்கனி. அவ்வழிவு தனித்த வாழ்வில் எங்ஙனம் உறும்?

100. தனித்த வாழ்வில் தன்னலம் அழிதல் அரிது. ஒருவேளை அவ்வாழ்வில் தன்னலம் பெருகினும் பெருகும்.

101. தன்னலத்தை நீப்பது துறவு. அது பெண் ஆணின் அன்பு வாழ்க்கையால் நிகழ்வது. ஆகவே, பெண் ஆணை நீத்தும், ஆண் பெண்ணை நீத்தும் வாழ்வது துறவாகாதென்க.

102. தீக்குணங்கட்கு உறைவிடமான தன்னலத்தை நீப்பது அறம் என்பது மேலே விளக்கப்பட்டது. அவ்வறத்தை இல்லறம் என்றோ துறவறம் என்றோ கூறலாம்.

103. பெண் ஆண் கூட்டுறவு, அன்பு வளர்ச்சிக்கென ஏற்பட்ட இயற்கை அறம்.

104. இயற்கை அறத்தை இல்லறம் (இல்லில் வாழும் அறம்) என்றால் என்ன? துறவறம் (தன்னலத்தைத் துறக்கும் அறம்) என்றால் என்ன? பெயரைப் பற்றிய போராட்டம் வேண்டுவ தில்லை. வேண்டுவது தன்னலத்தை அறுப்பது.

105. இயற்கை அறம் என்பது, இளமையில் பெற்ற கலைஞான இயல்களை வாழ்வில் செயலில் கண்டு தெளிந்து மெய்ஞ்ஞான அநுபூதிபெறச் செய்வது.

106. ஒருத்தியும் ஒருவனும் உற்ற வயது அடையும் போது, அவர்பால் காதல் இயல்பாகவே எழுகிறது. அவ்வெழுச்சி இயற்கையி னின்றும் பிறத்தலால், அதற்குரிய பெண் ஆண் கூட்டுறவு இயற்கையின் பாற்பட்டதென்று தெளிக.

107. இயற்கை அன்னையும், இறை அப்பனும் கூடி இருத்தலால் உலகம் முகிழ்த்துக் கொண்டிருக்கிறது.

108. உலகம் பெண் ஆண் மயமாயிருத்தல் கண்கூடு.

109. தாவரம் முதல் மக்கள் ஈறாக உள்ள உயிர்கள் யாவும் பெண்ணாகவே இல்லை, அல்லது ஆணாகவே இல்லை. உங்கள் பெண்ணும் ஆணுமாகவே அமைந்திருக்கின்றன.

110. பெண்ணும் ஆணும் இயற்கை அமைப்பிலிருத்தலால், பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் வெறுத்துத் துறத்தல் இயற்கை ஆறமாகாது.

111. பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் துறத்தல் இயற்கை அறமாயின், இயற்கையில் பெண் ஆண் என்னும் வேற்றுமை தோன்றாதவாறு படைப்பு நிகழும். ஆனால் பெண் ஆண் என்னும் வேற்றுமை தோன்றவே படைப்பு நிகழ்ந்து வருகிறது. இயற்கையில் பெண் ஆண் தோற்றம் இருத்தலால், உலகிலும் பெண் ஆண் கலந்த அன்பு வாழ்வு நடைபெறுதல் வேண்டுமென்பது அறியத்தக்கது.

112. பெண்ணை நீத்தல் துறவு என்று எவரோ சிலர் கூறிப் போந்தனர். அது வழக்கில் வந்துவிட்டது.

113. இறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று. அது பெண்ணிடத்திலுஞ் சிறந்து விளங்குகிறது. பெண்ணிடத்துள்ள இறைமையை உணர முயலாது, அவளை வெறுத்துக் காட்டுக் கோடுவது, இறையின் அகண்டாகாரத்தை மறுக்கும் பாவத்துக் குள்ளாவதாகும்.

114. பெண்ணை வெறுத்தோடும் ஒருவன், தான் எங்கே இருந்து தோன்றினான் என்பதை எண்ணுவானாக. இவன் தந்தை ஒரு பெண்ணுடன் கூடி வாழாதொழிந்திருப்பனேல், இவன் விழுமிய பிறவியை எங்ஙனந் தாங்கியிருத்தல் கூடும்? தாய்மையுடைய பெண்ணை இழிவாகக் கருதுவது அறமாகாது.

115. உடல் தாங்குவதென்பது இயற்கைச் சட்டம்.

116. உயிர் ஒளியாயிருப்பது. அவ்வொளி இருளால் மறைவுண்டு கிடக்கிறது. அம்மறைவைப் போக்குங் கருவி உடல். உடல்களைப் படிப்படியாகத் தந்தே இயற்கை அன்னை உயிரின் இருளை முறை முறையே போக்கி வருகிறாள். உயிர் உடல் தாங்குதல் என்னும் இயற்கைச் சட்ட நிறைவேற்றுதலுக்கென்று இயற்கையில் பெண் ஆண் தோற்றம் அமைந்திருக்கிறது.

117. படிப்படியாக உடலைத் தாங்குவதென்பது, படிப்படி யாக அன்பைப் பெருக்குவதாகும்.

118. ஒருவன் உடல் தாங்கிப் பிறந்த பின்னையே, அவன் உலகு உயிர் கடவுளை ஆராய வல்லவனாகிறான். அவ்வாராய்ச்சி யால் அவன் மெய்யின்ப உண்மையை உணர்ந்து, அதனை நுகர முயல்கிறான். அவன் பிறவி தாங்காதிருப்பனேல், அவன் இம் முயற்சியில் தலைப்படுதல் கூடுமா? ஆகவே, பிறவி தாங்குதற்குத் தாய்மையுடைய பெண் வேண்டுமா வேண்டாமா என்பதை உன்னிப் பார்க்க.

119. ஒருவன் பிறவி எடுத்து, அழியா இன்பத்தை நுகர முயல்வதற்கு, அவன் தந்தை பெண்ணுடன் வாழ்ந்து துணை நின்றதுபோல, அவனும், சில உயிர்கள் தன்மாட்டுத் தோன்றி இன்ப நுகர முயல்வதற்குப் பெண்ணுடன் வாழ்ந்து இயற்கைப் போக்குக்குத் துணைபுரிதல் வேண்டும். அதற்கு உடன்படாது தனித்து வாழ்வது தன்னலத்தின் பாற்படுவதாகும்.

120. தன்னலம் இயற்கைக்கு மாறுபட்டது; அஃது அஞ்ஞானம்; இருள்; இன்பமில்லாதது; பிணி உடையது. அதில் இயற்கை அருள் பதியாது.

121. பிள்ளைப் பேறு உண்டாவதும் உண்டாகாததும் இயற்கை – இறையின் செயல். பெண் ஆணுடனும், ஆண் பெண்ணுடனும் வாழ்ந்து இயற்கைக்கு அரண் செய்யத் தவறுதலாகாது.

122. பெண்ணுடன் ஆணும், ஆணுடன் பெண்ணும் கூடி வாழ இயலாத முறையில் சிலர் படைக்கப்படுகிறார். அவர் வாழ்விற்குப் புறம்பானவர். அவர் இயற்கை வேறு.

123. இல்வாழ்க்கைக்குரிய இயல்புடன் பிறந்து, வேண்டு மென்றே ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் வாழாது, சந்நியாசம் என்னும் பெயரால் தீயொழுக்கத்துக்கு எளியராய்த் திரிவோர் இயற்கை அன்னையால் ஒறுக்கப்பெறு வோர். இவரால் சமூகம் பல வழியிலும் அல்லலுறும். இவர் பாவிகள்.

124. ஆண் ஞானிகளிற் சிலர், பெண்ணை இழித்துக் கூறிய தென்னை என்று சிலர் ஐயுறலாம். அவர் பெண் பிறவியை இழித்துக் கூறினாரில்லை. பெண்ணைக் காமப் பொருளாகவே கருதி இடர்ப்படுங் காமுகர்க்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த வேண்டி, அவர் காமத்தின் இழிவைப் பலவாறு விளக்கிப் போந்தனர். போகத்துக்கென்றே தாங்கள் படைக்கப் பட்டதாக அறியாமையால் கருதும் தீயொழுக்கப் பெண்களை நல்வழிப் படுத்த வேண்டியும் ஞானிகள் அவர்களை இழிவாகப் பேசினார்கள். பெண்ணிடத்திற் பிறந்து, பெண்ணிடத்தில் வளர்ந்து, பெண்ணிடத்தில் வாழ்ந்து, பெண்ணின் துணையால் ஞான உணர்வு பெற்ற பெரியோர், தாய்மைப் பெண்ணை ஒருபோதுங் குறைகூறமாட்டார். அவர் பெண்ணிடத்துங் கடவுளைக் காண்பவர். பெண்ணிடத்துள்ள இறைமை அவர்க்கே நன்கு புலனாகும். பெண்பிறவியை இழித்துக் கூறுவோர் பெரியோராகார்.

125. பெண்பிறவி மிக விழுமியது. அப் பிறவியில் பெண்மை, தாய்மை, இறைமை என்னும் இயல்கள் சிறந்து விளங்குகின்றன.

126. பெண்மையினின்றும் தாய்மையும், தாய்மையினின்

றும் இறைமையும் மலர்கின்றன.

127. பெண்மையில் பிள்ளைப் பேற்றிற்குரிய காதலும், தாய்மையில் பயன் கருதா அன்புத் தொண்டும், இறைமையில் பிறர்க்கென வாழ்தலும் திகழும்.

128. பெண் வெறுங் காமக்கூடன்று.

129. பெண்ணை வெறுங் காமப்பொருளாகக் கருதி வாழ்வது மடமை. பெண்ணிடத்துள்ள பெண்மை தாய்மை இறைமை என்னுந் தன்மைகளை உணர்ந்து நடப்பவர் பெண் பிறவியின் விழுப்பம் உணர்ந்தவராவர்.

130. பெண் ஆண் பிறவியில் உயர்வு தாழ்வு என்பது கிடையாது. இருபாலுள் உயர்வு தாழ்வு கற்பிப்பது இயற்கை நுட்பத்தை உணராமையே யாகும்.

131. ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறது.

132. பெண்ணுரிமையுள்ள நாடு நாகரிக நாடு. அவ்வுரிமை யில்லா நாடு அநாகரிக நாடு.

133. உரிமை என்பது பெண் ஆண் இருபாலார்க்கும் பொதுவா யிருப்பது. இயற்கையில் ஆணுக்குள்ள உரிமை பெண்ணுக்கும் உண்டு; பெண்ணுக்குள்ள உரிமை ஆணுக்கும் உண்டு.

134. ஒருவன் ஒருத்தியையும், ஒருத்தி ஒருவனையும் மணந்து வாழ்வது நாகரிகம். ஒருவன் பல மகளிரையும், ஒருத்தி பல ஆடவரையும் மணந்து வாழ்வது அநாகரிகம்.

135. நோய் போர் பூகம்பம் முதலிய காரணங்களால் சில இடங்களில் ஆடவர் தொகை சுருங்கி, மகளிர் தொகை பெருகலும், அல்லது அத்தொகை பெருகி இத்தொகை சுருங்கலும் நேரும். அவ்விடங்களில் ஒருவன் சில மகளிரை மணக்கவோ ஒருத்தி சில ஆடவரை மணக்கவோ நிலைமைக் கேற்றவாறு தற்காலிகமாக விதி கோலப்படும். தற்காலிக விதியை நிலைபேறாக உள்ள இயற்கை விதி என்று கொள்ளலாகாது. நிலைமை மாறியதும், ஒருத்திக்கு ஒருவன் – ஒருவனுக்கு ஒருத்தி என்னும் இயற்கை விதி ஆட்சியில் வரும். நிலைமையைச் சீர்செய்யும் பொறுப்பு இயற்கை அன்னையினுடையது. அவள் எப்படியாவது தன் கடனை ஆற்றுவள்.

136. தீயொழுக்கம் மிகுந்த நாடுகளில் பல கொடுமைகள் நடைபெறும். அவைகளுள் ஒன்று ஓர் ஆடவன் பல மகளிருடன் கூடி மறவாழ்க்கை நடத்துவது. அவ்விடங்களில் நாளடைவில் அறிஞர் முயற்சியால் சீர்திருத்தம் படிப்படியே நிகழப்புகும். தொடக்கத்தில் இத்தனை மனைவியர் என்று தொகை குறிக்கப்படும்; பின்னே மேலும் தொகை சுருக்கப்படும். தொகை சுருங்கிச் சுருங்கி ஒருவன் ஒருத்தி – ஒருத்தி ஒருவன் என்னும் இயற்கை அறம் இடம்பெறும். தீயொழுக்க நாடுகளைச் சீர்செய்ய அவ்வப்போது அறிஞர் கோலும் முறைகளை இயற்கைச் சட்டமென்று கொள்வது அறமாகாது.

137. காதல் ஒரே இடத்தில் படிந்து ஒன்றி நிலைத்து நிற்பது. காமம் பல இடங்களில் ஓடி ஓடி அலைவது.

138. அன்புக்கூறு பலவிதம். அதில் விழுமியது காதல். காதல் ஒப்புயர்வற்றது.

139. ஒருவனுக்கு ஒருத்தி இடத்திலும், இவளுக்கு அவனிடத் திலும் காதல் எழுகிறது. அவர் தம் உள்ளத்தில் ஒப்பாகவோ உயர்வாகவோ பிறிதொன்று தோன்றாது; தோன்றினால் உள்ளத்தில் எழுந்த ஒன்று காதலாகாது. அது காமமாகும். ஒப்புயர்வற்ற ஒன்றே காதல். அஃது இருவர் அகத்தை ஒருமைப் படுத்துவது; அதாவது ஈருடலை ஓருயிராக்குவது.

140. ஒருத்தி தன்னியலுக்கியைந்த ஒருவனையும், அவ்வாறே ஒருவன் தன்னியலுக்கியைந்த ஒருத்தியையும் காதலித்து மணந்து கொள்வது இயற்கை நோக்குக்குத் துணைபோவதாகும்.

141. காதல் மணம் நலந்தருவது. காம மணமும், கட்டுப் பாட்டு மணமும், இன்ன பிற மணங்களும் நலந்தருவனவாகா.

142. ஒருமைக் காதலில் பிறக்குங் குழந்தையே நல்லதாகும். நற்பிள்ளைகளால் ஆகும் உலகில் அன்பும் அமைதியும் நிலவும்.

143. காதல் மணத்தில் பிரிவு நிகழ்தல் அரிது. மற்ற மணங் களில் பிரிவு நிகழ்தல் கூடும்.

144. பெண் ஆண் கூட்டுறவு என்பது தெய்வத்தன்மை வாய்ந்தது. அதனின்றுந் தெய்வத் தன்மையை எழுப்பவல்ல அன்பு, தியாகம், தொண்டு முதலிய நறுங்குணங்கள் வளரும்.

145. உளங்கலந்த கூட்டுறவு, அழுக்காறு அவா வெகுளி முதலிய தீக்குணங்களை ஒழித்து, அன்பு தியாகம் தொண்டு முதலிய நறுங்குணங்களை வளர்க்கும்.

146. நறுங்குணங்களை வளர்க்கும் ஆற்றல், காதல் மணத்துக்கு உண்டு.

147. பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் கால முழுவதும் நீத்துத் தனித்து வாழ்வது இயற்கை வாழ்வாகாது. அவ்வாழ் வினர் அன்பின் தன்மையையுங் காணாது பிறவியைப் பாழ் படுத்தியவராவர்.

148. மக்கள் இயல்பு சேர்ந்து வாழ்வது; தனித்து வாழ்வதன்று. சேர்ந்து வாழ்வது இயற்கைவழி நிற்பதாகும். தனித்து வாழ்வது இயற்கை வழிக்கு மாறுபட்டு நிற்பதாகும்.

149. மண்ணையும் பொன்னையும் இன்ன பிறவற்றையும் வெறுப்பதும் துறவு என்று சில இடங்களில் கருதப்படுகிறது. இக்கருத்து இயற்கை வாழ்விற்கு முரண்பட்டது.

150. மண்ணும் பொன்னும் பிறவும் உயிர்களின் வாழ்விற் கென இயற்கை அன்னையால் வழங்கப்பட்டன. மண் பொன் முதலியன வாழ்விற்கு இன்றியமையாதன.

151. ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கியைந்த ஒவ்வொரு வித முயற்சியில் தலைப்பட்டு, அறவழியில் பொருளீட்டுதல் வேண்டும். முயன்று பொருளீட்டி வாழ்வு நடத்தாது, சோம்பித் திரிந்து, பிறர் கையை எதிர்பார்த்து நிற்பது வாழ்வாகாது.

152. பிறர்க்குப் பயன்படாத முறையில் பொருளைச் சேர்த்து வைப்பது பாவம்.

153. குடும்பச் செலவுக்குப் போய்ப் பொருள் எஞ்சி நிற்குமாயின், அதனைக் கல்விச்சாலை, தொழிற்சாலை, மருத்துவச் சாலை முதலிய அறச்சாலைகட்குப் பயன்படுத்தல் வேண்டும். இதுவே மன்பதைக்குத் துணைபுரியும் முறைமை.

154. உழைத்துப் பிழைக்கத்தக்க உடல் நலம் வாய்க்கப் பெற்றோர்க்கு, நாடோறுஞ் சோறு கூறை அளித்து உதவி புரிவது பாவம். அவர்களைச் சோம்பேறிகளாக்குவது பெரும்பாவம்.

155. சில சமயங்களில் ஆட்சிமுறை தவறுதலாலும், வேறு சில காரணங்களாலும் உடல் நலம் வாய்க்கப்பெற்றுத் தொழில் புரிய ஊக்கமுடையவரும், தொழில்கிடையாமையால் வருந்தல் நேரும். அந்நிலையில் அவர்க்கு உதவிபுரிதல் பாவமாகாது.

156. தொழில் கிடையா நிலைமையை மாற்றி, வறுமையைப் போக்க, அறிஞர் முயலுதல் வேண்டும்.

157. சன்மார்க்கம் நேரிய முறையில் மன்பதையில் பரவினால் தொழில் கிடையாது வருந்தும் நிலை நேராது. இது பின்னும் விளக்கஞ் செய்யப்படும்.

158. உழைத்துப் பிழைக்க இயலாத முடவர்க்கும், குருடர்க்கும், தீராப் பிணியாளர்க்கும், திக்கற்ற குழந்தைகட்கும், இவரணைய பிறர்க்கும் சோறு கூறை அளித்து உதவி புரிவது புண்ணியம். இவர்கட்கென அறச்சாலைகள் அமைப்பது பெரும் புண்ணியம்.

159. எஞ்சும் பொருளை அறச்சாலைகட்குப் பயன் படுத்தாது, அதை வட்டிக்கென்றே கடன் கொடுத்தல் கூடாது; வட்டிக்குக் கடன் வாங்கும் பழக்கமும் தீயது.

160. இயற்கையை வெறாது, இயற்கையோடியைந்து வாழ்ந்து, தீக்குணங்களை அறுப்பது அறம் என்பது மேலே விளக்கப் பட்டது.

161. ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இயற்கை வாழ்க்கை- காதல் வாழ்க்கை – இல்வாழ்க்கை – அன்பை வளர்க்கும். அன்பு வாழ்க்கை குடும்பத்தில் அமைதியை நிலைபெறுத்தும். குடும்பங் களின் அமைதி ஊரை நல்வழிப்படுத்தும். நல்ல ஊர்களினின்றும் செவ்விய நாடு மலரும். செவ்விய நாடுகளால் உலகில் அமைதி யும் ஒழுங்கும் நிலவும். உலக அமைதியும் ஒழுங்கும் வாழ்க்கைக்குத் தேவை.

162. எவ்வகை அமைதிக்கும் அடிப்படை காதல் வாழ்க்கை.

163. வாழ்க்கை இருவிதம். ஒன்று அக வாழ்க்கை; மற் றொன்று புற வாழ்க்கை. அக வாழ்க்கை இல்வாழ்க்கை என்பது; புற வாழ்க்கை கல்வி, தொழில், பொருள், அரசு முதலியவற்றைக் கொண்டது.

164. அக வாழ்க்கையின் நலத்துக்குப் புறவாழ்க்கையின் உரிமை இன்றியமையாதது. புற உரிமையின்றி அகத்தில் இன்பம் நிகழாது.

165. வாழ்க்கையின் அடியில் போட்டி இருத்தலாகாது. போட்டி போராட்டத்தை ஈனும்.

166. போட்டியற்ற வாழ்க்கைக்கு நிலம் பொருள் உழைப்பு முதலியன பொதுவாதல் நல்லது.

167. பொதுமை அறம் வாழ்க்கையில் போட்டியையோ போராட்டத்தையோ எழுப்பாது.

168. கவிகள் இயற்கையைப் பலவாறு வருணிப்பதன் நோக்கம் என்னை? மக்கள் வாழ்க்கையில் இயற்கை இன்ப அன்புரிமையைப் பெறுதற்கு உலகில் பொதுமை அறம் நிலவ வேண்டுமென்பது அவர்கள் நோக்கம். உரிமை வாழ்க்கையை உணர்த்துவது கவிகள் மரபு.

169. இயற்கை ஒன்று; அதன் காரியம் பலவிதம்.

170. இயற்கை பலவிதமாய்க் காரியப்பட்டு, ஆங்காங்கே தட்பம் வெப்பம் முதலியவற்றை வேறுபடுத்தலால், உலகில் பலவித மொழி நிறம் வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றைக் கொண்ட நாடுகள் பலவாகப் பிரிந்து கிடக்கலாயின.

171. நாடு என்பது வெறும் நிலப்பரப்பன்று.

172. கல்வி, தொழில், அரசு, வழக்க ஒழுக்கம், நாகரிகம் முதலியவற்றாலாகிய ஒன்று நாடு (Nation) என்பது.

173. இயற்கை அன்னையின் கருணைவழிக் காரியப்பட்ட அவ்வந் நாட்டுக்குரிய தன்மைகளுக்கேற்ற வண்ணம் அவ்வந்நாட்டார் வாழ்வு நடாத்துவது சிறப்பு.

174. ஒரு நாட்டார், தம் வழக்க ஒழுக்கங்களை மற்றொரு நாட்டாரிடை வலிந்து புகுத்துவதும், இவர், அவர் வழக்க ஒழுக்கங்களை ஆராய்ச்சியின்றி ஏற்று நடப்பதும் இயற்கையின் பாற்பட்ட செயல்களாகா.

175. தாய்மொழிவழிக் கல்வி பயில்வது இயற்கைக்கு அரண் செய்வதாகும். இயற்கை அறிவு விளங்கிய பின்னை மற்ற மொழிகளைப் பயில்வது நலந்தரும்.

176. அவ்வந்நாட்டு மொழியில் அவ்வந்நாட்டுக்கு வேண்டப் படும் கலைகள் இயற்கை அன்னையால் அருளப்படுகின்றன.

177. நாட்டுக் கலைகளை அழியவிடும் நாடு பல நலன்களை இழந்து வாட்டமுறும்.

178. நாட்டுக் கலைகள் நாட்டின் உயிர்நாடி. அவைகளை ஓம்புவது இயற்கை அன்னையின் அருளை நாடுவதாகும்.

179. இயற்கையில் அமைந்த நாடு மொழி கலை தொழில் முதலியன அழியுமாறு எத்தேசம் இடந்தருகிறதோ, அத்தேசம் இயற்கை இன்பம் நுகர்தல் அரிது.

180. அவ்வந்நாடு தன் தன் இயற்கை வழி இயங்குகிறதா என்று பார்த்துக்கொள்ள அரசு என்பது ஏற்பட்டது.

181. அரசுகள் இயற்கைச் சட்டத்துக்கு மாறுபட்டு நடந்தால் உலகில் அமைதி நிலவாது.

182. இயற்கை – இறை பேரரசு. அவ்வரசின் உறுப்புக்களாக உலக அரசுகள் இயங்குதல் வேண்டும். பேரரசை மறக்கும் அரசு மன்பதைக்கு நலஞ் செய்வதாகாது.

183. இயற்கைச் சட்டத்தின்வழி இயங்கும் அரசே அரசாகும்.

184. இயற்கை அரசு எது? இயற்கையின் விளைவை எல்லார்க்கும் பொதுமையில் பயன்படுத்துவது இயற்கை அரசு. இதற்கு உலகம் எப்பெயர் வழங்கினும் வழங்க.

185. ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரைப் பற்றுவதும், இவர் அவர்க்கு எளிவருவதும் இயற்கைச் சட்டத்தை மீறுவதாகும். நாளடைவில் இரு சாரார்க்கும் கேடு நேரும்.

186. நாடுகளின் பிரிவுகள் இயற்கையால் உண்டாக்கப் பட்டன. பிரிவுகள் இயற்கையின் காரியப்பாடுகளால் நிகழ்வன. காரியப்பாடுகளுக்குக் காரணமாக நிற்பது ஒன்றே. அவ்வொன்றை உயிராகவும், காரியப்பாடுகளை உடலுறுப்புக்களாகவும் கொள்ளுதல் வேண்டும்.

187. நாடுகள் ஒன்றோடொன்று பிரிவுற்றிருந்தாலும், அவைகள் ஒன்றுடன் ஒன்று பிணங்குதல் கூடாது. அப் பிணக்கம் நாடுகளையும், நாட்டின்வழி உலகையும் துன்பஞ் செய்வதாகும்.

188. உயிர் ஒன்று. அதன் போர்வையாகிய உடல் பல உறுப்புக் களைக் கொண்டது. உடலின் உறுப்புக்கள் ஒன்றோ டொன்று பிணங்கினால் உயிர் வாழ்வு என்னாகும்? உயிர் வாழ்வுக்கு உறுங்கேடு உடலின் உறுப்புக்கட்கெல்லாம் நேர்தல் இயல்பன்றோ? ஆகவே, நாடுகள் ஒன்றோடொன்று பிணங்காது, இணங்கி வாழ்தல் வேண்டும். அப்பொழுதே மன்பதை இயற்கையோ டியைந்த இன்பம் நுகர்தல் கூடும்.

189. நாடு, நிறம், மொழி, வழக்க ஒழுக்கம் முதலியவற்றை ஒட்டி மக்களுக்குள் காணப்படும் வேற்றுமைகள் புறத் தோற்றத் தின் பாற்பட்டன. உள்நிலையில் எவ்வித வேற்றுமைத் தோற்ற மும் இல்லை.

190. உள் அமைதிக்குப் புற ஒற்றுமை இன்றியமையாதது.

191. நாடு, நிறம், மொழி, வழக்க ஒழுக்கம் முதலிய புற வேற்றுமைகளைக்கொண்டு மக்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிப்பது அறியாமை.

192. பிறப்பில் உயர்வு தாழ்வு சில இடங்களில் கருதப் படுகிறது. இக்கருத்து ஆன்ம நேயத்தை அழிப்பதாகும்.

193. பிறப்பில் உயர்வு தாழ்வு கருதும் இழிவு நாளடைவில் தீண்டாமை முதலிய கொடுமைகளைப் பெருக்குவதாகிறது.

194. மக்களுக்குள் தீண்டாமை கருதுவது மடமை.

195. கடவுள், தீண்டுங் கடவுள் தீண்டாக் கடவுள் என்று இரண்டுபட்டில்லை. ஒரு கடவுளில் தீண்டாமை எங்கிருந்து பிறக்கும்?

196. பிறப்பில் உயர்வு தாழ்வும், தீண்டாமையும் கருதுவோர், அன்புக் கடவுளின் அன்பராயிருத்தல் முடியாது.

197. பிறப்பில் உயர்வோ தாழ்வோ தீண்டாமையோ கருதுவது ஜீவகாருண்யமாகாது.

198. பிறப்பில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை முதலிய கொடுமைகளைக் கருதும் இடம் நரக பூமியாகும்.

199. பிறப்பில் மக்களெல்லாரும் சமத்துவமானவர் எல்லா உடல்களும் பூதங்களால் ஆக்கப்பட்டன. நிலம் நீர் நெருப்பு காற்று ஒளி முதலியன எல்லார்க்கும் பொதுவாகவே துணை செய்கின்றன. இன்ப துன்பங்கள் எல்லார்க்கும் பொது.

200. உயிரில் எவ்வித வேற்றுமையும் இல்லை.

201. கல்வி அறிவு ஒழுக்கம் முதலிய சிறப்புக்களில் எல்லாரும் ஒத்திருப்பதில்லை. இவைகளில் மக்கள் வேற்றுமைப் படுதல் கண்கூடு.

202. கல்வி அறிவு ஒழுக்கம் முதலிய சிறப்புக்கள் பொது உடைமை. அவை பிறப்பை ஒட்டின அல்ல.

203. எல்லா உயிர்களிலும் வீற்றிருக்கும் பரம்பொருள் ஒன்றே. அது பொதுவாக எல்லாரிடத்திலும் வீற்றிருக்கிறது. ஒரே பரம்பொருளைத் தாங்கியுள்ள உயிர்களுக்குள் பிறப்பில் உயர்வோ தாழ்வோ தீண்டாமையோ கற்பிப்பது அஞ்ஞானம்.

204. எல்லா உயிர்களிடத்திலும் வீற்றிருக்கும் பரம் பொருளை உணர்ந்து தெளியும் ஒருவன், தனக்கும் மற்ற உயிர்கட்கும் உள்ள தொடர்பை உணர்தல் கூடும். பிற உயிர்கட்குத் தீங்கு நினைப்பது, தன்னுயிர்க்கே அத்தீங்காகுவது அவனுக்கு நன்கு விளங்கும். அவன் தன்னுயிரைப் போல மன்னுயிரைப் பார்ப்பன்.

205. தன்னுயிரைப் போல் மன்னுயிரைக் கருதுவது சகோதர நேயம்.

206. சகோதர நேயம் பெறாது தெய்வத் தன்மை அடைதல் இயலாது.

207. தன்னுயிரைப்போல மன்னுயிரைப் பார்க்கும் சகோதரநேயம் எப்படிக் கூடும்? உள்நோக்கைப் பெருக்கப் பெருக்க அந்நேயம் கூடும்.

208. உள்நோக்கைப் பெருக்காது, புறநோக்கை மட்டும் பெருக்கப் பெருக்கப் பிளவு; பிணக்கு, போர், கொலை, கொள்ளை, பொய், நிந்தனை, ஏமாற்றம், இன்ன பிற பெருகி, உலகை இடர்ப்படுத்திக் கொண்டிருக்கும்.

209. உள்நோக்கில் கருத்துச் செலுத்தாது புறநோக்கிலேயே கருத்துச் செலுத்திச், சகோதர நேயத்தைப் பற்றிப் பேசப்படும் பேச்சுக்களாலும், எழுதப்படும் எழுத்துக்களாலும் சிறிதும் பயன் விளையாது.

210. உள்நோக்கு எனில், பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் துறந்து, வீட்டை விட்டுக் காடு மலைகட்கோடித் தனித்திருந்து மூச்சைப் பிடிப்பதன்று. துறவு நுட்பம் மேலே சொல்லப்பட்டது.

211. பெண் ஆணுடனும், ஆண் பெண்ணுடனும் வாழ்தலால், தீயகுணங்கள் தேய்ந்து அன்பு வளர்கிறது. அன்பு, உள்நோக்குப் பெருக்கத்துக்கு உறு கருவி.

212. உள்நோக்கு விரிய விரியப் புறவேற்றுமைபொன்றும். அந்நிலையில் உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பு தெளி வாகும். அத்தொடர்பைத் தெளியத் தெளிய உயிர்களிடத்து அன்பு என்னும் சகோதர நேயம் பெருகும்.

213. உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பு இயல்பா யிருப்பது அதைத் தெளிவது அநுபூதி (Realisation) எனப்படும்.

214. உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பைத் தெளிவது ஞானம்; அதைத் தெளியாதிருப்பது அஞ்ஞானம். இத் தெளிவிற்கென்றே தனுகரண புவனபோகங்கள் இயற்கையில் ஏற்பட்டன. இவைகளை வெறுத்துத் துறந்தால் அநுபூதி உண்டாகாது. ஆதலால், அவைகளை வெறாது, அவைகளுட னிருந்து கொண்டே, தீக்குணங்களைப் போக்கி, அன்பைப் பெருக்கிப் பெருக்கி, அநுபூதி பெறுதல் வேண்டும்.

215. அன்பைப் பெருக்கி, அநுபூதி பெறுதற்குரிய முழு மார்க்கம் சமயம் என்பது.

216. சமயம் என்பது சத்தைத் தெளிதற்குரிய மார்க்கம்.

217. சத்துக்குரிய மார்க்கம் இயற்கை என்பது முன்னர்ச் சொல்லப்பட்டது. ஆகவே இயற்கை நெறி சமயம் என்க.

218. இயற்கையோடியைந்த வாழ்வு சமய வாழ்வாகும்.

219. சமய வாழ்வு வேறன்று; இயற்கை வாழ்வு வேறன்று.

220. உலகியல் வாழ்வினின்றும் சமயம் பிரிந்து நிற்கும் ஒன்று என்று நினைப்பது தவறு. வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் சமயம் உண்டு.

221. உலக வாழ்வினின்றும் பிரிந்து நிற்பது சமய நெறியில் நிற்பது என்று கருதுவது, கானற் சலத்தை நாடி ஓடுவது போன்ற தாகும்.

222. வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் தூய்மையாயிருப்பது சமயநெறி நிற்பதற்கு அறிகுறி.

223. சமயம் என்பது, வெறும் புறக்கோலம் என்றும், வெறும் சம்பிரதாயக் கட்டு என்றும் பலவிடங்களில் திரிபாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. சமயம் வெறும் புறக்கோலமுமன்று; வெறும் சம்பிரதாயக் கட்டுமன்று.

224. வெறும் வெறும் புறக்கோலங்களும் சம்பிரதாயக் கட்டுகளும், இவைகளை ஒட்டி எழுந்த வழக்க ஒழுக்கங்களும் சமயத்தின் பேரில் புரோகிதர்களால் நுழைக்கப்பட்டன. இவைகள், உயிர்க்கும் இறைக்கும் இயல்பாயுள்ள தொடர்பைத் தெளியப் படுத்தும் மார்க்கமாகிய சமயம் ஆகா.

225. புறக் கோலங்களும், சம்பிரதாயக் கட்டுகளும், இவை களை ஒட்டி எழுந்த வழக்க ஒழுக்கங்களும் புரோகித மதங் களின்பாற்பட்டன.

226. புரோகித மதங்கள் பல. அவை ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவிதமாக விளங்கும்.

227. புரோகித மதங்களில் கட்டுப்பாடுகளிருத்தலால், அவை உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பைத் தெளியப் படுத்தத் துணை செய்யா. அத்துணை செய்யாமையால் அம்மதங் களால் சகோதர நேயம் வளர்வதில்லை. அவைகள் சகோதர நேயத்தைக் குலைப்பவை என்றுங் கூறலாம்.

228. புறக் கோலங்கள் பல தொடக்கத்தில் சுகாதாரத்துக் கெனக் கோலப்பட்டன. நாளடைவில் அவைகள் சமயப் பெயரில் குடிபுகுந்தன.

229. சுகாதாரத்துக்கு முரண்செய்யும் கோலங்களும் பின்னாளில் வாழ்வில் புகுந்துள்ளன. அவை, களையப்படல் வேண்டும். சுகாதாரத்துக்கு அரண் செய்யும் புறக்கோலங்களால் தீங்கில்லை.

230. புறக் கோலங்களைப் பூண்பது கடவுள் நெறி நிற்பது என்று எண்ணுதல் தவறு. புறக்கோலங்கள் மட்டும் இறையை உணர்த்தா. இறையை உணர்த்துவது இயற்கை.

231. நல்ல சம்பிரதாயங்கள் சில, சமூக (Society) வளன் கருதித் தொடக்கத்தில் வகுக்கப்பட்டன. அவைகளில் மூடப் பழக்க ஒழுக்கங்கள் நாளடைவில் குடிபுகுந்தன. அவைகட்கும் கடவுள் நெறிக்கும் தொடர்பில்லை.

232. சமூக நலனுக்குத் துணை செய்யும் சம்பிரதாயங்களால் தீங்கு விளையாது.

233. புறக் கோலங்களும் சம்பிரதாயங்களும் மதங்களாக நாளடைவில் புரோகிதரால் அறிவுறுத்தப்பட்டன.

234. புரோகித மதங்கள் புரோகிதரால் காணப்பட்டன.

235. சத்துக்குரிய மார்க்கமாகிய சமயம் ஒருவரால் காணப் படாதது; அஃது என்றும் இருப்பது. அது மக்களால் எங்கே திரிபாக உணரப்படுகிறதோ? அங்கே குருமாரில் எவராவது ஒருவர் தோன்றி, அதன் நுட்பத்தை அக்கால தேச வர்த்தமானங்கட் கேற்ற முறையில் விளக்கிச் செல்வர்.

236. புரோகிதர் குருமாரல்லர். புரோகிதர் காமக் குரோதங் களுடையவர். புரோகிதர், தம் நலன் கருதி, மக்களை அறியாமை யில் அழுத்தி, மூடப் பழக்க ஒழுக்கங்களையும், வெற்றுச் சம்பிரதாயம் முதலிய கட்டுகளையும், பிற போலி களையும் அவரிடைப் பெருக்கிக்கொண்டிருப்பவர். குருமார் காமக் குரோதங்களில்லாதவர். குருமார், மக்கள் நலங்கருதி, அவர்கள் அறியாமையைப் போக்க, அவர்களை அறிவு ஒளியில் நடத்த முயன்றுகொண்டிருப்பவர். குருமார் யார் என்பதும், அவர் இயல்கள் இன்ன என்பதும் முன்னே சிறிது கூறப்பட்டன; பின்னுஞ் சில விளக்கப்படும்.

237. புரோகித மதங்கட்கும் கடவுள் நெறியெனுஞ் சமயத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

238. சமயம் என்பது என்ன? சமயம் என்பது உயிர்க்கும் சத்துக்கும் உள்ள தொடர்பைத் தெளியப்படுத்தும் மார்க்கம்; சத்துக்குரிய மார்க்கம் என்று சுருங்கச் சொல்லலாம்; சத்+மார்க்கம் – சன்மார்க்கம்.

239. சமயம் என்பது சன்மார்க்கம்.

240. சமயம் ஆராய்ச்சியைக் கடந்தது; ஆராய்ச்சிக்கு எட்டாதது. அஃது ஆராய்ச்சியில் அடங்கா ஒன்று. ஆராய்ச்சி முட்டும் இடத்தில் முளை விடுவது சமய உணர்வு.

241. சமயம் ஒன்றா? பலவா? சமயம் ஒன்றே.

242. உலகில் பல சமயங்கள் பேசப்படுதற்குக் காரணம் என்னை? சமயங்கள் பல இல்லை. சமயப் பெயர்கள் பல உண்டு.

243. உலகில் மொழிகள் பலவா யிருத்தலான், சமயத்துக்கும் பெயர்கள் பலவாக வழங்கப்படுகின்றன. உலகில் மண்ணுக்கு எவ்வளவோ பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயர் பலவா யிருப்பினும் பொருள் ஒன்றே யன்றோ?

244. சமயத்தின் புறப் பெயர்களை நீக்கி, அதன் அகத்தை நோக்கின் பொருள் ஒன்றாயிருத்தல் புலனாகும்.

245. பல சமய உணர்ச்சிக்குச் சில புறக் கோலங்களும் காரணமாக நிற்கின்றன. அவரவர் புறக்கோலங்கொண்டு அவரவர் இச்சமயத்தவர் அச்சமயத்தவர் என்று சொல்லப் படுகிறார். புறக் கோலங்கள் செயற்கையா இயற்கையா என்பது சிந்திக்கப் படல் வேண்டும். புறக் கோலங்கள் பிறப்பில் அமைவ தில்லை. உலகில் பிறந்த பின்னை சேர்க்கை காரணமாக ஒவ்வொருவர் ஒவ்வொருவிதப் புறக்கோலந் தாங்குகிறார். புறக்கோலங்கள் இயற்கைச் சின்னங்களாயின், அவைகள் படைப்பில் அமைதல் வேண்டும். அவைகள் படைப்பில் அமையாமையால் அவை களைச் செயற்கை என்று விளக்க வேண்டுவதில்லை. புறக் கோலங் களைக்கொண்டு, உலகில் சமயப் பாகுபாடுகள் செய்யப் படுதலால், அப்பாகுபாடுகள் இயற்கையின் பாற்பட்டன அல்ல என்பது வெள்ளிடைமலை. ஆகவே புறக்கோலச் சமயங்கள், உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பைத் தெளிவிக்கும் அநுபூதி நிலை கூட்டும் இயற்கைச் சன்மார்க்கமென்னுஞ் சமயம் அல்ல என்பது உணரத்தக்கது.

246. குருமார் ஆங்காங்கே தோன்றி அறிவுறுத்திய சமயம் ஒன்றே. அதுவே சன்மார்க்கம் என்பது. சன்மார்க்கம் ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு பெயர் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு பெயரையும் ஒவ்வொரு சமயமென்று கருதுவது திரிபேயாகும். அத்திரிபு நீண்ட காலம் உலகில் படிந்து கிடக்கிறது. ஆனால் அதனால் பெருந் தீமை விளையாது. தமது சமயம் தமது சமயம் என்று அவரவர் கருதுமாறு, அவரவர் தம் தம் சமயத்தில் நின்று ஒழுகுவாராயின், அவரவர் முடிவில் அடையும் அநுபூதி ஒன்றே ஆகும். திரிபால் அவரவர் தாம் தாம் கருதுஞ் சமய வழி நின் றொழுகாது, என் சமயம் மெய்; உன் சமயம் பொய் என்று வாதத்தில் இறங்கினால் தீமையே விளையும்.

247. சமயத்துக்கும், சமய வாதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இது வேறு; அது வேறு.

248. சமய வாதம் பொல்லாதது. அஃது எரி பகை முதலிய கொடுமைகளை வளர்ப்பது. எரி பகை முதலிய தீக்குணங்கள் அன்புக் கடவுளை எங்ஙனம் உணர்த்தும்?

249. சமய வாதம் சன்மார்க்கத்தை விளங்கச் செய்யாது. சமய வாதம் இழிந்தது; மிக இழிந்தது.

250. துன்மார்க்கத் துறைகள் பல உண்டு. அவைகளுள் தலையாயது சமய வாதம். சமய வாதிகளே துன்மார்க்கங்களில் தலையாயவர்கள். சமய வாதம் மக்களை விலங்காக்கும்.

251. எக்காரணம் பற்றியும் மக்கள் சமய வாதத்தில் இறங்க லாகாது.

252. மக்கட்குச் சமயம் இயற்கை; சமய வாதம் இயற்கையன்று.

253. பலமொழி பேசுவோர் ஒரு காட்டின் வழியே போதல் நேர்ந்தது. அவர்கள் நெடுந்தூரம் நடந்தமையால் அவர்கட்கு நீர் வேட்கை எழுந்தது. நீர் நிலை சமீபத்திலில்லை. நீர் எங்கே கிடைக்கும் என்று ஒருவரை ஒருவர் அவரவர் மொழியில் வேட்கை மிகுதியால் விரைந்து கேட்டனர். ஒருவர் மொழி ஒருவர்க்குத் தெரியவில்லை. ஒருவரை ஒருவர் கேட்பது நீர் என்பதை அவரவர் உணராது, ஒருவரை ஒருவர் திட்டுவதாகக் கருதி, ஒருவரோடொருவர் அறைந்து கொண்டே ஓடினர். இடையிடை அறை, அடியாகவும் உதையாகவும் முதிரலாயிற்று. பலர்க்குக் காயங்களும் உண்டாயின. இவ்வாறு போரிட்டு ஓடுவோர் எதிரில், ஓர் அழகிய நீர் நிலை திடீரெனத் தோன்றியது. அதைக் கண்டதும் எல்லாரும் போரை மறந்து, அதனிடம் விரைந்து ஓடி, நீர் அருந்தி, இளைப்பாறச் சாய்ந்தனர். அங்கே பலமொழி பயின்ற ஒரு பெரியார் போந்தனர். அவர், நீர் அருந்திப் படுத்துக் கிடக்கின்ற கூட்டத்தாரைப் பார்த்தார். இவர்கள் உடல்களில் காயங்கள் காணப்படுகின்றன. இவர்கள் உறக்கத்திலிருக்கிறார்கள். உண்மை உணர்தல் வேண்டும் என்று கருதி, ஒரு மரத்தடியில் அவர் அமர்ந்து சாதாரிப்பண் பாடினர். அப்பாட்டு, உறங்கிய பலரை எழுப்பியது. அப்பலரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவ்வேளையில், அவர் பாட்டை ஒருவாறு முடித்து, அவர்களை நோக்கி, நீங்கள் யார்? c§fŸ clšfËš fha§fŸ g£oU¤j‰F¡ fhuz« v‹d? என்று கேட்டார், நடந்ததை அவரவர் தத்தம் மொழியில் சொற்றனர். பெரியார் உண்மை உணர்ந்து, அவரவர் மொழியில் அவரவர் விரும்பிய பொருள் ஒன்றென்பதை விளக்கிக் காட்டினர். அவர்கள் தங்கள் அறியாமை உணர்ந்து வருந்தினார்கள். சமய வாதிகள் இக்கதை நுட்பத்தை உணர்வார்களாக.

254. பசுக்களிற் சில வெண்மையா யிருக்கின்றன; சில செம்மையா யிருக்கின்றன; சில கருமையா யிருக்கின்றன; இன்னும் வெவ்வேறு நிறமுடைய பசுக்களும் உண்டு. சில பசுக்களுக்குக் கொம்புகள் நீண்டிருக்கின்றன; சிலவற்றிற்குக் கொம்புகள் வளைந்திருக்கின்றன; பற்பலவாறு கொம்புகளைக் கொண்ட பசுக்களும் உண்டு. இப்பலதிறப் புறவேற்றுமை களுடைய பசுக்களைக் கறந்தால், இவைகள் யாவும் அளிக்கும் பால் எத்தன்மையது? எல்லாம் பசுக்களும் வெண்ணிறப் பாலையே தருகின்றன. சமய வாதிகள் இவ்வெடுத்துக் காட்டின் நுட்பத்தை ஓர்வார்களாக.

255. புறப் பெயர் வேற்றுமைகளில் கருத்தைச் செலுத்தச் செலுத்தப் பன்மை விகாரமே தோன்றும். புறப்பெயர்களை நீக்கி, அகத்தை நோக்கினால், ஒருமை இன்பத்தை நுகரலாம்.

256. சத் ஒன்றே. அதற்குரிய மார்க்கமும் ஒன்றே. அவ் வொன்றை எம்மொழியால் எப்பெயரால் அழைத்தால் என்ன?

257. சமயங்கள் பல என்று கொண்டு, மெய்ச் சமய பொய்ச் சமய வாதங்களைத் தொடுத்து, ஒரு சமயம் விடுத்து மற்றொரு சமயம் புகுதலும், அதற்கெனக் கிரியைகள் முதலியன செய்தலும் உலகில் பல இடங்களில் நடந்து வருகின்றன. அவை இயற்கையின் போக்குக்கு அரண்செய்வன அல்ல.

258. இறை ஒன்று. அஃது எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது. அஃதில்லா இடம் இல்லை. எங்கே போனாலும் எங்கே வந்தாலும் அங்கங்கே இருப்பது ஓர் இறையே. உண்மை இவ்வாறாக எதை விடுத்து எங்கே போதல் என்பதும், எதைக் கொண்டு எங்கே வருதல் என்பதும் விளங்கவில்லை!

259. உலகில் சமயங்கள் பலவாயிருந்து, அவைகளில் மெய் பொய்ச் சமயங்களிருக்குமாயின், இயற்கைப் படைப்பில் இது மெய்ச் சமயம் என்னுங் குறி எம்முறையிலாதல் பொறிக்கப்படும். இயற்கைப் படைப்பில் அத்தகைக் குறி ஒன்றையுங் காணோம். இதனால் இயற்கைச் சமயம் ஒன்றே என்பது தேற்றம்.

260. மக்கள், பிறந்த பின்னரே மற்றவர் சேர்க்கையால் தங்களை அம்மதத்தார் இம்மதத்தார் என்று சொல்லிக் கொள் கிறார்கள். பிறக்கும்போது அவர்கள் எச்சமயக் குறியுடனும் பிறப்பதில்லை.

261. மதவாதம், மதமாற்றம், மாற்றத்துக்கெனக் கிரியை முதலியன புரோகிதரால் நிறுவப்பட்டன. இயற்கைச் சன்மார்க்கத் துக்கு மதவாதமோ மதமாற்றமோ கிரியையோ ஒன்றும் வேண்டுவ தில்லை.

262. பல சமய உணர்வு கொள்வது தவறு. அவ்வுணர்வு, ஒரு சமயம் விடுத்து, மற்றொரு சமயம் புக இடம் பெறுதலால், அஃது ஒரு கடவுளைப் பல கடவுளராகப் பாவிக்கவும், இயற்கைப் படைப்பை அவதூறு செய்யவும் தூண்டுவதாகிறது.

263. மனந் திரும்புதற்கு மதவாதமோ, மதமாற்றமோ, அதற்கெனக் கிரியையோ வேண்டுவதில்லை. மதவாதம் முதலியன மனந்திரும்புதற்குத் துணைசெய்யாமல், பிடிவாதத் துக்கே துணைசெய்யும்.

264. மக்களிடத்தில் பொதுவாக இருவித நிலைகள் இருக்கின்றன. ஒன்று பேய் நிலை; மற்றொன்று தெய்வ நிலை. பேய்நிலை தீய குணங்களின் உறைவிடம்; தெய்வ நிலை நல்ல குணங்களின் உறைவிடம். பேய் நிலையை ஜீவபோதம் என்றும், தெய்வ நிலையை ஜீவபோதம் அற்றது என்றும் சுருங்கச் சொல்லலாம். பேய் நிலையினின்றும் தெய்வநிலை அடைவது மனந்திரும்புவதாகும். இதற்குச் சன்மார்க்கம் என்னும் ஒரு சமயம் இயற்கையில் அமைந்திருக்கிறது. உள்ள அவ்வொன்றில் போதல் எங்கே? வருதல் எங்கே?

265. மத வாதமும், மத மாற்றமும், கிரியையும், இன்ன பிறவும் பேய்நிலையை நீக்கித் தெய்வநிலையை நல்குகின்றனவா என்பது கருதற்பாலது. இவைகளால் அம்மாறுதல் நிகழ்வதில்லை என்பது வெளிப்படை.

266. கல்வி கேள்வி ஆராய்ச்சிகளாலும், நல்லோர் சேர்க்கை யாலும், இன்ன பிறவாற்றாலும் மனம் படிப்படியாக மாறுதல் அடைந்துகொண்டே போகும். மனமாற்றமாவது அறிவுப்படி ஏறுவது. இஃது உள் நிகழ்ச்சி.

267. உள் நிகழ்ச்சி நொடிக்கு நொடி மாறுவதும் உண்டு. இது, மதம் மாறுதல் என்று சொல்லப்படின் உலகில் எத்துணை மதங்கள் தேவையா யிருக்கும்! ஒவ்வொருவனுக்கு ஒவ்வொரு போது ஒவ்வொரு மதம் வேண்டுமன்றோ? இதைக் கொண்டே சமயம் பலவாயிருத்தல் அரிது என்று ஊகித்து உய்த்துணரலாம்.

268. மதங்களைப் பலவாக்கொண்டு, மதவாதத்திலும் மதமாற்றத்திலும் தலைப்படுவதால் விளையுந் தீங்குகள் பல அவ்வம் மதத்தார் தம் தம் மதத்தின் ஜனத்தொகையைப் பெருக்கவே முயல்வர். அம்முயற்சியால் மக்களிடை எழும் எரி, கொலைவரைப் பொங்கி எழுவதை உலகம் பலமுறை அநுபவித் திருக்கிறது. எரியைத் தூண்டும் மதவாதமும் மதமாற்றமும் கடவுள் நெறியாகா. எரி அற்ற இடத்தில் திகழ்வது கடவுள்நெறி.

269. மதவெறியால் கொலை செய்யப் புகுவோன், தன்னை வேறாகவும், தன்னால் கொலை செய்யப்படுவோனை வேறாகவும் நினைக்கிறான். தன் உயிரிலும், மற்றவன் உயிரிலும் ஈசன் ஒருவனே இருக்கிறான் என்னும் உணர்வு மத வெறியனிடத்தில் விளங்குவதில்லை. தன்னுயிரைப் போல் மன்னுயிரைப் பார்க்குஞ் சகோதர நேயமே கடவுள் நெறியில் நிற்பதற்கு அறிகுறியாகும். மதவெறியை எழுப்பும் மதவாதமும், மதமாற்றமும், இன்ன பிறவும் சகோதர நேயத்தை வளர்த்தல் அரிது. ஆகவே, மதவாதம், மதமாற்றம் முதலியவற்றில் தலைப் படாது? பேய் நிலையி னின்றும் தெய்வ நிலைக்கு மனத்தைத் திருப்பவல்ல கடவுள் நெறியெனுஞ் சன்மார்க்கத்தில் நிற்க மக்கள் முயலல் வேண்டும்.

270. மனந்திரும்புதல் என்பது ஒருநாளில் இருநாளில் புறக்கிரியைகளால் நிகழ்ந்து விடாது. மனக்கோள், மாறி மாறி வளர்ந்து போகும் இயல்பினது. அவ்வளர்ச்சி மெய்யறிவு விளங்கும்வரை செல்லும்.

271. மக்கட்கு மெய்யறிவு விளங்கும்வரை இடை இடையே ஒன்றைப்பற்றிய நம்பிக்கையும், அவநம்பிக்கையும் மாறி மாறித் தோன்றித் தோன்றி மோதிக் கொண்டேயிருக்கும். அவ்வப் போது உற்றுவரும் மாறுதலால், அவரவர் மனோ நிலைக்கேற்ற வண்ணம் நம்பிக்கைகள் பலதிறத்தனவாய்ப் பிறத்தல் இயல்பு. அவரவர் நம்பிக்கை வழி அவரவர் நடக்க அவரவர்க்கு உரிமை இருத்தல் வேண்டும். அவ்வுரிமையைப் பலாத்காரத்தாலோ, சம்பிரதாயங்களாலோ, இன்ன பிறவற்றாலோ இடர்செய்தல் தவறு.

272. இறை அப்பன் உரிமையோ டிருக்கிறான்; இயற்கை அன்னை உரிமையோ டிருக்கிறாள்; ஆகவே, உயிர்களும் உரிமையோடு உலகில் வாழ்தல் வேண்டும்.

273. மெய்யறிவு விளங்கும்வரை ஒருவன் நம்பிக்கை இன்னொருவனுக்கும், இவன் நம்பிக்கை அவனுக்கும் மாறாகத் தோன்றுதல் கூடும். இத் தோற்றத்தால் ஒருவன் ஒருவனைத் தன் தன் வழியில் திருப்பும் முயற்சியும் அவன் அவன்பால் எழுதல் கூடும். இவன் தவறான வழியில் செல்கிறானென அவன் இரங்கியும், அவன் தவறான வழியில் செல்கிறானென இவன் இரங்கியும் ஒருவனை ஒருவன் திருப்பப முயல்கிறான். இதற்குப் பலாத்காரம் அநாவசியம். உண்மையான இரக்கம் பலாத்காரத்தில் இறங்கச் செய்யாது. பலாத்காரம் எழும் இடத்தில் நியாயம் இராது. பலாத்காரத்தால் ஒருவரை ஒருவர் திருப்ப முயல்வது காட்டுமிராண்டிச் செயலாகும். அன்பில் நின்று ஒருவன் தான் உண்மை என்று நம்புவதை மற்றவனுக்கு அறிவுகொளுத்த முயல்வது நாகரிகம். அன்புப் போதனையால் திரும்புவோர் திரும்புக; திரும்பா திருப்போரிருக்க. எதற்கும் எவர்க்கும் உரிமை இருத்தல் வேண்டும். உரிமை, பலாத்காரத்தால் பாழ்படலாகாது.

274. மதவெறியால் விளையுங் கேடுகளைக் காணுஞ் சிலர், கடவுள் நெறியே இக்கேடுகளுக்குக் காரணமாக நிற்றலான், அந்நெறியே வேண்டாம் என்று சொல்வதுண்டு. மதவாதிகளின் இழிந்த செயல்கள் இவர்களை இவ்வாறு சொல்லவும் நடக்கவும் தூண்டுகின்றன. கடவுள் நெறி இயற்கை என்று மேலே சொல்லப் பட்டிருக்கிறது. இதை உணர்வோர், மத வெறிக்கும் கடவுள் நெறிக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை எளிதில் தெளிவர்.

275. மதவெறியை வெறுத்து ஒதுக்குவது விரும்பத்தக்கது. ஒதுங்கும் அளவுடன் நில்லாது கடவுள் நெறியெனுஞ் சன்மார்க்கத்தில் நிற்க உறுதிகொள்ளல்வேண்டும். தீமையை வெறுப்பது நன்மையைக் கடைப்பிடிப்பதாகாது. நன்மையைக் கடைப்பிடிப்பது தீமையை வெறுத்தொழிப்பதாகும். நன்மையைக் கடைப்பிடிப்பது சன்மார்க்கத்தில் நிற்பதாகும். சன்மார்க்கத்தில் நிலவா வாழ்வு சிறையுண்டா நீர் (Stagnant water) போன்றதாகும்.

276. சன்மார்க்கத்துக்கு நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலிய வேற்றுமைகளில்லை. அம்மார்க்கம் மன்பதைக்குப் பொதுவாயிருப்பது.

277. சன்மார்க்கத்தில் நின்று நாடு மொழி முதலியவற்றில் பற்றுக்கொள்ளலாம். சன்மார்க்கத்தில் நில்லாது வெறும் நாடு மொழி முதலியவற்றைத் தனிமைப்படுத்தி, அவைகளிடத்துப் பற்றுக்கொள்வது உலக சகோதர நேயத்தைக் கண்டப்படுத்துவ தாகும். அதனால் மன்பதையில் போராட்டமே பெருகும்.

278. நாடு மொழி முதலியவற்றிற் பற்றுச் செலுத்தல் கூடாதென்பது சன்மார்க்கத்தின் கருத்தன்று. அப்பற்று, மற்ற நாடு மொழி முதலியவற்றினிடத்துப் பொறாமை எழுப்பிப் பகைமை விளைப்பதாயிருத்தல் கூடாதென்பது சன்மார்க்கத் தின் கருத்து. சன்மார்க்கம் நாடு மொழி முதலியவற்றைக் கடந்து நிற்றலான், அதில் ஈடுபட்டு? நாடு மொழி முதலியவற்றிற் பற்றுச் செலுத்தினால், உலக சகோதர நேயத்துக்குப் பங்கம் நேராது.

279. எல்லா நாட்டார், எல்லா மொழியார் முதலிய எல்லாரிடத்திலும் வீற்றிருக்கும் சத்தெனும் பொருள் ஒன்றே என்று உணர்த்தும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கிருத்தலான், அம் மார்க்கத்தில் நின்று, நாடு மொழி முதலியவற்றிற் பற்றுக் கொள்வதால், பிரிவு உணர்வு எழுதற்கு இடம் இல்லாமற் போகிறது.

280. எல்லா உயிர்களிலும் வீற்றிருக்கும் பரம்பொருள் ஒன்றே என்று உணர்த்துவது சன்மார்க்க மாதலின், உலகில் சமரச ஞானத்தை வளர்ப்பதற்கு அதுவே சிறந்த கருவியாகிறது. அச்சிறப்பு அதன் மாட்டிருத்தலான், அது சமரச சன்மார்க்கம் என்று வழங்கப்படுவதாயிற்று.

281. சமரசம், வாழ்விற்கு இன்றியமையாதது. அது சகோதர நேயத்தை வளர்ப்பது. சமரச நோக்கு இல்லாவிடத்தில் சகோதர நேயம் பிறத்தலும் அரிது. சகோதர நேயத்துக்கு அடிப்படை சமரசம். அச்சமரச நோக்கை எளிதில் கூட்டவல்லது சன்மார்க்கம் ஒன்றே.

282. எவ்வுயிரும் ஆண்டவன் கோயில் என்னுஞ் சமரச சன்மார்க்க உணர்வின்றிப் பேசும் சகோதர நேயம் பொருளற்ற தொன்று. அது சிலரை நேசிக்கவும் சிலரைப் பகைக்கவும் தூண்டுவ தாகும்.

283. உலகில் அமைதி வேண்டும். அமைதிக்குச் சகோதர நேயம் வேண்டும். சகோதர நேயத்தை, நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலிய பிரிவுகள் குலைத்து விடுகின்றன. ஆகவே, இவைகளைக் கடந்த ஒன்று சகோதர நேயத்துக்கு அவசியந் தேவை. அஃது எல்லா நாட்டார் எல்லா மொழியார் முதலிய எல்லார்க்கும் பொதுவாயிருத்தல் வேண்டும். அஃது எது? அஃது எல்லா உயிர்களிலும் வீற்றிருக்கும் சத் ஒன்றே. அதை உணர்த்தும் இயற்கை நெறி சன்மார்க்கம் என்பது. அச் சன்மார்க்கம் ஒன்றே நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலிய பேதங்களை நீக்கி, அபேதத்தை நிலைபெறுத்திச், சகோதர நேயத்தை வளர்த்து, அமைதி இன்பத்தை வழங்கவல்லது.

284. எல்லா உயிர்களிலுமுள்ள சத்தெனும் இறை உண்மையைக் கலைஞானத்தால் அறிவது ஒரு வழி; மெய்ஞ் ஞானத்தால் தெளிவது மற்றொரு வழி. கலைஞானத்தளவில் நின்று விடுவது வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகாது. மெய்ஞ்ஞானத் தெளிவுப் பேறே வாழ்வின் நோக்கத்தை நிறை வேற்றுவதாகும்.

285. மெய்ஞ்ஞானத் தெளிவுக்குப் பலமுறைகள் அமைந் திருக்கின்றன. அவைகள் யாவும் நாட்டின் இயல்பு, மக்களின் இயல்பு முதலியவற்றிற்கேற்ற வண்ணம் அமைந் துள்ளன. அவைகள் எல்லாவற்றிலும் ஊடுருவிப் பொதுவாக நிற்பது ஒன்றுளது. அஃது எது? அது தியானம்.

286. ஒளி உடலுக்கு எங்ஙனம் இன்றி அமையாததோ, அங்ஙனமே தியானம் உயிருக்கு இன்றி அமையாதது.

287. தியானத்தின் முதிர்ச்சியில் ஒருவித அமிழ்தம் பிறக்கும். அஃது உயிரையும் உயிர்வழி உடலையும் ஓம்பும். அவ் வமிழ்தம் பிறத்தலும் தெரியாது; உணவாதலும் தெரியாது. அஃது உயிருக்கும் உடலுக்கும் வழங்கும் ஆறுதலால், அதன் தன்மையை மட்டும் உணர்தல் கூடும். தொடக்கத்திலேயே தியானம் எளிய முறையில் ஒருவித ஆறுதல் அளிப்பது அநுபவத்தில் தெளிவாகும்.

288. உடல் நலனுக்கும், உயிர் நலனுக்கும் தியானம் இன்றியமையாதது. அலையும் மனத்துக்கும், அதன்வழி உழலுங் கருவி கரணங்கட்கும், பிற உறுப்புக்கட்கும் தியானம் உதவும் நலனை அநுபவத்தில் உணரலாம்.

289. தியானம், தியான யோகம் என்றுஞ் சொல்லப்படும்.

290. யோகம் என்பதற்கு ஒன்றல் என்பது பொருள்.

291. யோகம் என்பது மூச்சை அடக்குவதுதான் என்று சிலர் கருதுவதுண்டு. மூச்சைப் பிடிக்கும் முறைகள் எல்லாம் யோகங்கள் ஆகா. வழி துறையின்றி மூச்சைப் பிடிப்பதால் பல இடர்கள் விளைவதும் உண்டு.

292. யோக வகைகள் பல. அவைகளை இரண்டு இன மாகப் பிரிக்கலாம். ஒன்று மல யோகம்; மற்றொன்று அமல யோகம்.

293. மலயோகம், உடல்நலன் கருதி முயன்று வலிந்து செய்வது. காற்றை ஈர்த்தல் நிறுத்தல் விடுதல் முதலியன மல யோகத்தின்பாற் பட்டன. இவைகளில் தவறுதல் நேரின் உடலுக்கே ஊறு நேரும். ஊரை ஏமாற்றவுஞ் சிலர் மலயோகம் பயில்வர். தீயொழுக்கத்துக்குஞ் சிலர் அவ்யோகம் பயில்வர். மலயோகம், தக்கார்மாட்டுக் கேட்டுப் பயின்று ஒழுங்காகச் செய்யப்படின், அதனால் உடலுக்கு நலன் விளையாமற் போகாது. மலயோகத்தால் ஆத்ம ஞானங் கைகூடாது. மலயோகிகள் ஆத்ம ஞானிகளல்ல.

294. மலயோக வகைகள் பல. மூச்சைப் பிடிக்கும் மலயோகம், மூச்சைப் பிடியாத மலயோகம், கண் காது முதலியவைகளின் வழிச் செய்யும் மலயோகம் முதலிய பலவகைகள் உருக் கொண்டன. அவைகளில் சிலவற்றில் சில சமயங்களில் ஒலி கேட்டலும் ஒளி தோன்றலும் நிகழும். இவைகளைக் கொண்டு சில மலயோகிகள் பெருங் கோட்டை கட்டி உலகை வஞ்சிக்க முயல்வார்கள். அவர்களுக்கு உலகம் மிக எச்சரிக்கையா யிருப்பதாக.

295. மூச்சைப் பிடிப்பதில் தவறுதல் நேர்ந்தால் நோயுண் டாகும். அந் நோயாளிகட்கும் சில வேளைகளில் ஒலி கேட்கும். இதற்குக் காரணம் நுரைஈரலின் நலிவும், மண்ணீரலின் சவலையும், பிறவுமாகும்.

296. நோய்வாய்ப்படாத நல்ல மலயோகிகள் சிலருக்கும் ஒலி கேட்கும். அவ்வொலி அவர்களது பயிற்சி மிகுதியால் நரம்புக் குழாய்களினின்றும் பிறப்பதாகும். அஃது இயற்கையினூடு பரந்து நிற்கும் அருள்நாதம் அன்று.

297. மலயோகத்தில் தோன்றும் ஒளி, பயிற்சி மிகுதியால் நுண்ணிய நரம்பொலிகளின் உராய்தலால் தோன்றுவது. அது பூத ஒளி. அவ்வொளி அருள் நாதஒலிக்கு ஊற்றாயுள்ள ஞான ஒளி அன்று.

298. மலயோக ஒலிக்கும் ஒளிக்கும் அஞ்ஞான வேரைக் கல்லி அறுக்கும் ஆற்றல் கிடையாது.

299. கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பாவங் களில் தோய்ந்து கிடக்கும் ஒருவன், மலயோகத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் அணுகி, அவ் யோகப் பயிற்சி செய்து வருவானாயின், அவனும் ஒலி கேட்கவும் ஒளி தோன்றவும் பெறுதல் கூடும். அவ்வொலியும் ஒளியும் மேல் நிலை உய்க்கும் எனில் உலகில் ஒழுக்கமே வேண்டுவதில்லையன்றோ? ஆகவே, மலயோக ஒலி ஒளி அளவில் நின்று, உலகம் ஏமாறாமல் இருப்பதாக.

300. அமல யோகத்துக்கு அடிப்படை ஒழுக்கம். ஒழுக்கம் அற்ற இடத்தில் அமல யோகம் கூடுதல் அரிது.

301. ஒழுக்கத்துக்கு முதலில் பஞ்சசீலப் பயிற்சி தேவை. பஞ்சசீலப் பயிற்சி மிக மிக, மற்ற சீலங்கள் தாமே படியும்.

302. பஞ்ச சீலங்கள்; கொல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, காமுறாமை, பொய்யாமை.

303. அமல யோகம் வலிந்து முயன்று செய்வதன்று. அஃது இயற்கைவழி இயங்குவது. அதற்கு மூச்சைப் பிடித்தல் முதலியன வேண்டுவதில்லை. அதனால் உடலுக்கோ உயிருக்கோ தீங்கு விளையாது. அஃது உடலையும் உயிரையும் ஓம்பும்; ஆத்ம ஞானத்தைக் கூட்டும். அமல யோகம் எழுத்தால் எழுதிக் காட்டக் கூடியதன்று.

304. தியானம் முதிர முதிர அநுபவத்தில் – இயல்பில் – குருவருளால் அமல யோகம் படிப்படியே கூடும். ஆகவே, அமல யோகத்தைப்பற்றிச் சிந்திக்கவும் வேண்டுவதில்லை. தியானத்துக் குரிய அடிப்படையான துறைகளில் வாழ்வைப் பண்படுத்தி அதில் (தியானத்தில்) தலைப்பட முயல்வது ஒழுங்கு.

305. மேலே குறிப்பிட்ட உடலோம்பல், கல்வி, இல் வாழ்க்கை, ஒழுக்கம் முதலியவற்றினின்றும் பரிணமிப்பது தியானம்.

306. தியானம் உயிர்; அதற்குரிய உறுப்புகள் உடலோம்பல் முதலியன.

307. உடலோம்பல் முதலியவற்றுடன் குறித்த ஒன்றைக் குறித்த காலத்தில் செய்து பண்படல், அகப்புறத் தூய்மை, வாய்மை, தன்னலம் பாராட்டாமை, பிறர் பொருளை இச்சியாமை, உயிர்களிடத்து இரக்கம், இரக்கங்கொண்டு உயிர்கட்குத் தொண்டு செய்தல், உள்ளநிறை, அடக்கம், பொறை, நடுநிலை, எரிபகை எழாமை, மன்னிப்பு, செய்த தீங்குகட்கு வருந்தி வருந்தி அழுதல், அவ்வழுகையால் மீண்டும் தீங்குகட்கு ஆளாகாத உறுதியும் ஆற்றலும் பெறுதல், ஒழுக்கங் காத்தல் முதலிய நல்லியல்புகளும் வேண்டற்பாலன. தியானம் என்னும் நிலையம் எழுதற்கு இவைகள் சாரங்கள் போன்று துணைசெய்வன. இந்நல்லியல்புகளை வாழ்வில் பெறாமல் தியானத்தில் அமர்வ தால், தியானம் சித்தியாது; அத்தியானம் குலைந்து குலைந்து போகும். ஆகவே, அந்நல்லியல்புகளைப் பெறும் முறையில் வாழ்வு நடாத்திப் பண்படல் வேண்டும்.

308. தியானத்தில் அமரும் முறையிலும் தியானத்திற்குத் துணை சேரும். இதற்குப் பலதிற ஆசனங்கள் சொல்லப்படு கின்றன. அவைகளில் பத்மாசனம் சாலப் பொருந்தியது. பத்மாசனம் நாடி நரம்புகளை ஒழுங்கில் நிறுத்தித் தியானத்துக்கு அரண் செய்யும்.

309. சர்வாங்க ஆசனம், சிரசாசனம், சவாசனம் முதலியன வும் உடலை நன்முறையில் ஓம்புவன.

310. ஆசனங்கள் அளவில் நிற்றல் தியானமாகாது. ஆசனங்கள் சாரம் போன்றன. ஆசனப் பயிற்சி இன்றியும் தியானங் கூடுதல் உண்டு.

311. தியானத்துக்குரிய சிறந்த இடம் இயற்கைவெளி. காடு, மலை, கடலோரம், ஆற்றோரம் முதலியன பொருந்தியன. காற்றும், ஒளியும், அமைதியும் குறைபடாத வேறிடங்களும் உரியனவாம். தியான முதிர்ச்சியில் இக்கட்டுப்பாடு வேண்டுவ தில்லை.

312. தியானம் எனில் எதைத் தியானிப்பது? தியானிக்க மனத்துக்கு ஏதாயினுங் குறி தேவை. குறியற்ற ஒன்றை மனம் தியானித்தல் அரிது. (மனத்தின் உருவ அருவ நிலைகளை மேலே காண்க.) மனங்கடந்த ஒரு நிலைக்குக் குறி வேண்டுவதில்லை. அந்நிலை கூடுதற்குத் தியானம் இன்றியமையாதது.

313. மனத்தால் இறைவனைத் தியானித்தல் வேண்டும் என்பது பொது வாக்கு. அது சிந்திக்கத்தக்கது. மனம் எல்லைக் குட்பட்ட ஒன்றைத் தியானிக்கவல்லது. இறையோ நாமரூப மின்றி எல்லையற்ற அகண்டமாயிருப்பது. எல்லையற்று அகண்டமாயிருக்கும் ஒன்றை எல்லையுடைய மனம் எப்படித் தியானிக்கும்?

314. இறை உயிர் என்பதும், இயற்கை உடல் என்பதும் முன்னர் விளக்கப்பட்டன. இறை அகண்டமாய் மன உணர்வுக்கு எட்டாததாயிருத்தலான், அதனைத் தனியே மனத்தால் தியானித்தல் இயலாது. அவ்வியலாமையைப் போக்க இறையாகிய உயிர், இயற்கையை உடலாக்கொண்ட ஒரு நிலையைத் தியானிக்க முயல்வது முறைமை.

315. தியானத்துக்குத் துணைபுரிய இயற்கை அன்னை, பலப்பல கோலந்தாங்கி நிற்கிறாள்; ஞாயிறு, திங்கள், வான், மீன், மலை, காடு, அருவி, ஆறு, ஏரி, குளம், பயிர், வெளி, கடல், பலதிற உடலம் முதலியன அவள்தன் அழகுக் கோலங்கள்.

316. மலை தியானத்துக்கு மிகச் சிறந்த இடம். மலை மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் நிற்பது; கீழிருந்து மேல்நோக்குவது. கீழ்நோக்குத் துன்பத்தையும், மேல்நோக்கு இன்பத்தையும் வழங்குவது இயல்பு. துன்பம் அறிவுச் சுருக்கம். இன்பம் அறிவு விளக்கம். துன்பம் சூழும்போது மக்கள் கீழ்நோக்குவதும், ஒன்று விளங்காத போது அதை அறிவால் விளங்கிக்கொள்ள மேல்நோக்குவதும் இயற்கை. மேல் நோக்குடைய மலையை உன்ன உன்னத் துக்க நீக்கத்துக்குரிய தியானம் தானே கூடும் மலையே தியானம் மயமாக விளங்குவது. அது தன்னை அணைவோரையும் தியான மயமாக்கும். ஆதலால், மலை தியானத்துக்குச் சாலச்சிறந்ததாகிறது.

317. ஓய்ந்த நேரங்களில் தியானத்துக்கு மக்கள் மலைக்குச் செல்வது நலம் – (கடலடுத்த மலையை நாடுவது மிகச் சிறப்பு.) மலைமீது ஏறி நின்று, இயற்கை அன்னை வழங்குங் கோலங் களைக் கண்டு கண்டு, உன்னி உன்னி, அவைகளில் ஊன்றி ஊன்றி, ஒன்றப் பயிலல் வேண்டும். காலையில் செங்கதிர் பரப்பி நீலக்கடலில் எழும் இளஞாயிற்றை நோக்குவோம்; உன்னுவோம்; அதில் இரண்டற மூழ்குவோம்; மூழ்கித் தெளிந்தெழுந்து அஞ்ஞாயிறு நினைவுடன் வெயிலை நிலவாக்குமாறு பரந்து விரிந்து நிற்கும் ஒரு பச்சை மரத்தடியில் சேர்வோம்; சேர்ந்து நானா பக்கங்களிலும் உலவி உலவி, உதிர்ந்த சனிகளை உண்டு, அருவி நர் அருந்தி, ஓரிடத்தில் அமர்வோம். இயற்கை அன்னை புலன்களுக்கு விருந்து அளிக்கிறாள். தென்றலின் வீச்சும், அருவியின் முழவும், மயிலின் ஆட்டமும், குயிலின் கூவலும், வண்டின் பாட்டும், மலரின் மணமும், மானின் துள்ளலும், பிறவும் புலன்களுக்கு விருந்தாகின்றன. அவ்விருந்து நெஞ்சை ஒருமையில் நிறுத்தும். அதனால் அமைதி கூடிக்கிடப்போம். பகல் கழிந்த பின்னை மரத்தடியினின்றும் வெளிப்போந்து, இயற்கை அன்னையின் பெருங்கோலத்தை நோக்குவோம். நானா பக்கங்களிலும் பசுமை உருகி உருகிப் பெருகிப் பெருகிப் பாய்ந்து ஓடி இழிதருங் காட்சி நம்மை வயப்படுத்தும். பசுமைக் கடலில் மூழ்குவோம். அப் பசுமைக் கடல், தன்னில் மூழ்கிய சிந்தையை நீலக் கடலில் புகுத்தும். அதன் கண் தோய்நது இன்புறும் வேளையில் தண்ணிலவு பொழிந்து வெண்டிங்கள் காட்சியளிக்க முந்துகிறது. பறவையொலி கேட்கிறது. கால்நடை களின் மணியோசை கேட்கிறது. அந்திவான் செம்மையில் ஞாயிறு பொலிகிறது. ஒருபால் திங்களும் மற்றொருபால் ஞாயிறும் நேர்பட வழங்குங் காட்சியைக் காணும் கண்ணன்றோ கண்? அக்காட்சியில் படியும் நெஞ்சமன்றோ நெஞ்சம்? வெண்ணிலவு பொழிந்த வண்ணமா யிருக்கிறது. விண் மீன்கள் ஒளிர்கின்றன. நீலவான் அமைதியில் நெஞ்சம் முட்டுகிறது. இவ்வாறு இயற்கை அன்னையின் பலதிறக் கோலங்களில் நெஞ்சம் பதியக் கீழிறங்குவோம். கடலுடுத்துப், பசுமை போர்த்து, வான்முடி யணிந்து, இருகதிர் விழித்து நோக்கும் இயற்கை அன்னையின் அழகு வடிவம் மனத்தில் நின்று நின்று அமைதியூட்டும். அவ்வழகு வடிவைத் தியானிப்போம்; தியானித்த வண்ணமிருப்போம்.

318. மலையினின்றுங் கீழிறங்கி வாழ்வில் தலைப்படும் வேளைகளிலும் இயற்கைத் தியானத்தை மறத்தலாகாது. இடையிடை மறுப்புநேரினும் நேரும். அம்மறப்புக்கு இரை யாகாதவாறு காப்புத் தேடுவது நல்லது. இதற்கு என் செய்வது? கருத்தில் நிலவும் இயற்கைக் கோலங்களைப் பாட்டாக எழுதவும் ஓவியமாக வரையவும் பயிலுதல் வேண்டும். இப்பயிற்சி இயற்கைத் தியானத்தை ஓம்பும். இயற்கைத் திருக்கோலங்களை முன்னோர்களும் காவியங்களிலும் ஓவியங்களிலும் இறக்கி வைத்துள்ளார்கள். அவைகளை ஆய்ந்து சிந்தித்து அவைகளில் ஈடுபட்டு ஒன்றுவதும் இயற்கைக் கோலங்களுடன் உறவு கொள்வதாகும். காவிய ஓவியங்கள் இயற்கையின் கூட்டுறவுக்குப் பாலம் போலத் துணை செய்வன. காவிய ஓவியங்களும் இயற்கை வழிபாட்டிற்கென ஏற்பட்டன என்று கூறல் மிகையாகாது.

319. காவிய ஓவியங்களை இயற்கைக் கோலத் தத்துவ நுட்பங்களின் அறிகுறிகள் என்னும் உணர்வுடன் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறின்றிக் காவியச் சொல்லையும், ஓவியப் பிண்டத்தையும் பொருளாக் கொள்வது தவறு. அது, விக்கிரக ஆராதனையாக முடியும்.

320. எங்கும் உள்ள இறையை ஒரு சிறிய செயற்கை உருவாக நினைந்து வழிபடுவது இறையை நிந்தனை செய்வதாகும். இவ்வழிபாடு அறிஞரால் மறுக்கப்பட்டிருக்கிறது. இம் மறுப்பின் நுட்பம் தேறாத சிலர் காவிய ஓவியங்களையே மறுக்கப் புகுகிறார். இதுவுந் தவறு.

321. இயற்கைத் தியானம் முதிர முதிர நெஞ்சில் இயற்கை இயல்கள் படிகின்றன. இயற்கை இயல்கள் பலப்பல. அவை களின் உயிர் நாடியா யிருப்பது தனக்கென வாழாமை. இச்சீரிய இயல்நெஞ்சில் படிவதற்கு இயற்கைத் தியானம் இன்றியமையாத தாகிறது.

322. இயற்கைத் தியானம் மக்களிடத்துள்ள தன்னலம் என்னும் விலங்கியல்பை வீழ்த்தித் தேய்த்துப் பரநலம் என்னும் தெய்வ இயல்பைப் பெய்து வளர்க்கும். இயற்கைத் தியானத்தின் முன்னர், நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலியவற்றால் தோன்றும் பிரிவு உணர்வுகளும், அவ் வுணர்வுகளால் எழும் பொறாமை பிணக்கு முதலிய இழிவுகளும் பொன்றும். எவ்வுயிரையும் தன்னுயிர் போல் கருதும் அன்பு நிலையை இயற்கைத் தியானம் கூட்டும் என்று சுருங்கச் சொல்லலாம். இயற்கைத் தியானத்தில் அமர்ந்து பார்க்கப் பார்க்க அதன்பெற்றி நன்கு புலனாகும்.

323. இயற்கைத் தியானம் அலையும் மனத்தை அமைதியில் நிறுத்தும். அமைதி, வாழ்விற்கு வேண்டற்பாலது. அமைதி கருவி கரணங்களிலும் நாடி நரம்புகளிலும் புகுந்துள்ள வெம்மையைப் போக்கித் தண்மை வழங்கும் அமிழ்தம். வெம்மை, எரி பகை முதலிய தீமைகளை ஈனுவது. தண்மை அவைகளை நீக்கி அன்பு அருள் முதலிய நன்மைகளை நல்குவது. அன்பு அருள் முதலியன உடல் நலனுக்கும், உயிர் நலனுக்கும், பர நலனுக்கும் வேண்டுவன. இயற்கைத் தியானத்தால் அமைதியும் நல்லெண்ணமும் நல்லுடலும் பெறுதல் கைகண்ட பலன்.

324. இயற்கைத் தியானம் உலகில் பெருகப் பெருக மன்

பதையே தூய்மையுறும்; சகோதரநேயம் ஆக்கமுறும். பல்லோர் பலகால் முயன்றும் கைகூடாத சீர்திருத்தங்களையெல்லாம் இயற்கைத் தியானம் விரைவில் எளிதில் வாழ்வில் நிலைபெறச் செய்யும்.

325. உலகை ஒழுங்குபடுத்தக் கற்றைக் கற்றை நூல்களும், பெரும்பெரும் மகாநாடுகளும், நீண்ட நீண்ட தீர்மானங்களும், கிளர்ச்சிகளும், புரட்சிகளும் வேண்டுவதில்லை. இயற்கைத் தியானம் ஒன்று சாலும்.

326. இயற்கைத் தியானத்துடன் உயிர்த்தொண்டுஞ் செய்துவருதல் வேண்டும். இஃதும் இயற்கை வழிபாட்டின் பாலது.

327. நாளடைவில் இயற்கையின் பல கோலங்களைத் தியானிப்பதில் படிப்படியே சிற்சில மாறுதல் நிகழும். இதற்கு இயற்கை அன்னையே துணை செய்வாள். அத்துணையுடன் நமது சிறு முயற்சியும் கூடின் விரைவில் நலன் விளையும். இயற்கையின் பல கோலங்களைப் பற்றிய தியானம் நாளுக்கு நாள் படிப்படியாக மாறி மாறி, அது பெரிதும் ஞாயிற்றில் மட்டும் செல்வதாகும். இஃது இயற்கையின் போக்கு. நாமும் தொடக்கத்திலேயே ஞாயிற்றின்மீது சிறப்பாகக் கருத்துச் செலுத்துவோமானால் இயற்கையின் துணை எளிதில் கூடும்.

328. ஞாயிறு, சிந்தையில் நின்று நின்று, இயற்கையின் வேறு கூறுகளையெல்லாம் நாளடைவில் தன் மயமாக்கும். இந்நிலையில் எங்கும் பரவியுள்ள இயற்கை ஒலி (அருள் நாதம்) கேட்கும். அவ்வொலி ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு விதங் கேட்கும். ஒலி கேட்கும் நிலைக்குமேல் இயற்கையின் காரியப் பாடுகளாக உள்ள பன்மைக் கோலங்கள், அவைகளின் காரண மாக உள்ள ஒருமை அழகொளியாகித் தோன்றித் தோன்றி மறைவுறும். அவ்வொளி பெருகிப் பெருகி நிலைபேறாக நிற்க நிற்க மன உணர்வு முறை முறையே மாயத் தொடங்கும்.

329. மன உணர்வு மாயும்போது, சில சமயங்களில் போராட்டம் சோதனை முதலியன நிகழும்; சித்தியும் கூடும். அவைகளுக்கு எளிமையாகாத உறுதி வேண்டும். அவ்வுறுதியில் குருநாதன் தோன்றித் துணை செய்வன்.

330. குருநாதன் தோன்றி உண்மை விளக்கியதும் மன உணர்வு முற்றும் மாயும்; அஞ்ஞான வேர் அறுந்துபடும்; நான் என்பது சாகும்; உள்ளொளி எழும்.

331. அரும்பு மலரானதும் மணம் எழுவதுபோல, மனம் ஒடுங்கியதும் உள்ளொளி எழும்.

332. உள்ளொளியும், புறத்தே தோன்றும் இயற்கை அழகொளியும் ஒன்றும்போது தனித்த இறையின் தொடர்பு விளங்கும். அதற்குமேல் நேர்வது சொல்லுக்கடங்காதது.

333. குருநாதன் துணையின்றி, இயற்கை அன்னையின் அருளால் மிகமிகச் சிலர்க்கே மன உணர்வு கடந்து உள்ளொளி எழும் நிலை நேரே கூடும். பெரும்பான்மையோர்க்கு அந்நிலை எளிதில் நேரே கூடுவதில்லை. அவர்க்குக் குருமாருள் எவரேனும் ஒருவர் துணை செய்வர்.

334. குருநாதன் துணை எளிதில் கிட்டாது. அத்துணைக்கு நிஷ்காமிய நெஞ்சம் தேவை. நிஷ்காமிய நெஞ்சை வழங்க வல்லது இயற்கைத் தியானம். இயற்கைத் தியானத்தால் நிஷ்காமியத்தில் பண்பட்ட நெஞ்சம் உண்டாகும். அதற்குமேல் குருநாதன் துணை கிடைக்கும்.

335. இயற்கைத் தியானத்தால் நெஞ்சைப் பண்படுத்தாது, குருநாதன் துணையை மட்டும் தேடித் திரிவது வீணேயாகும். இவ்வாறு திரிவோர்க்கு மோசக்காரர் துணை கிடைக்கும். அத்துணையால் வாழ்க்கையே கெடும்.

336. இயற்கையிலுள்ள சக்திகள் பல. அவைகளுள் ஒன்று அருட் சக்தி. அச்சக்தி நிலவாத இடம் இல்லை. அது, நிஷ்காமிய நெஞ்சில் நுழையத் துடி துடித்துக் கொண்டிருக்கும். இயற்கைத் தியானத்தால் நெஞ்சம் நிஷ்காமியம் பெறுந்தறுவாயில், அச்சக்தி நெஞ்சில் நுழையும்; நுழைந்து குருநாதன் வருகைக்கு வழிகோலும்.

337. குருநாதன் அருள் கூடாதபோது மனமே குருவாகி வழிகாட்டி மறையும் நிலையும் உண்டு.

338. சிற்சில காரணம்பற்றி இயற்கைத் தியானத்தில் ஈடுபடும் வாய்ப்புக் கூடப்பெறாதார், குருமாரில் தமது கருத்துக்கு இனிய ஒருவரைத் தியானிக்கலாம். அத்தியானமும் இயற்கை ஒலியையும், ஒலிவழி ஒளியையும் வழங்கிப் பிற நிலைகளையும் கூட்டும்.

339. இயற்கை வாயிலாகவும், குரு வாயிலாகவும் உயிர்களின் தியானத்தை ஏற்கும் இறை ஒன்றே.

340. இயற்கைத் தியானத்தின் முதிர்ச்சியால் குரு தரிசனம் பெற்று மேல் நிலையடைவது பெரும்பான்மை. குருதரிசன மின்றி அந்நிலை அடைவது சிறுபான்மை.

341. மன உணர்வு உள்ளவரை இறைவனை இயற்கை வாயிலாகவோ அதன் கூறாகிய குரு வாயிலாகவோ தியானிப்பது சிறப்பு. மன உணர்வு கடந்தபின்னை இறையுடன் தனித்த தொடர்பு கொள்ளும் ஒரு பெரும் நிலை படிப்படியே கூடும்.

342. மன உணர்வு கடந்ததும் கூடுவது அமல யோகம். அது குருவருளால் கூடுவது.

343. யோகம் உருவமுள்ளவரை செல்லும். கடைசி நுண்ணுருவம் நாதம். நாதம் வரை யோகம் நிகழும். நாதத்துக்கு மேற்பட்டது உருவமற்ற நிலை. அது யோகங்கடந்த பெருநிலை. அங்கே சொல் ஏது? பொருள் ஏது? பேசா அநுபூதி.

344. குருவருள் பெற்ற பின்னை உள்ளொளி என்னும் ஆன்மசக்தி அடைந்தோர்க்கு இயற்கைக் கூறுகளெல்லாம் ஏவல் செய்யும். அதுகொண்டு அற்புதச் சித்துகட்கு இரையாதல் கூடாது.

345. அற்புதத்தால் மட்டும் ஒருவரைப் பெரியவரென்று எண்ணுதல் தவறு.

346. அவசியம் நேரும்போது ஒரோவழி ஒவ்வோரிடத்தில் சில பெரியோர் அற்புதஞ் செய்யும் வாய்ப்பு நேரும். அற்புதமே பெரியோர்க்குரிய பணியன்று.

347. மன உணர்வினர்க்கு மிக அரியனவாகத் தோன்றுவன வெல்லாம், உள்ளொளியினர்க்கு மிக எளியனவாகத் தோன்றும். இவர்கள் நிகழ்த்துஞ் சில செயல்கள் மன உணர்வினர்க்குச் செயற்கருஞ் செயல்களாக அதாவது அற்புதங்களாகத் தோன்றும்.

348. உள்ளொளியும் புறவொளியும் ஒன்றித் தனித்த இறையின் தொடர்பை விளக்கி, அதற்கு மேலும் விளங்கும் அநுபூதி நிலையை மன உணர்வினர் ஆராய்ந்து ஆராய்ந்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டுவதில்லை. அரிய காலத்தை அவர்கள் அவ்வழியில் போக்குவது வீண்; அவ்வநுபூதி நிலையை எளிதில் கூட்டவல்ல இயற்கைவழி நிற்க முயல்வது அறிவுடைமை.

349. அநுபூதிமான்கள் வேற்றுமை யுணர்வற்றவர்; உலக சகோதர நேயமுடையவர்.

350. அநுபூதி எது? நரகம் ஓரிடம் – சுவர்க்கம் ஓரிடம் என்னும் உணர்வற்ற ஒரு நிலை. இந்நிலையை மறைத்திருப்பது அஞ்ஞானம். அதனின்றும் விடுதலையடைவது அநுபூதி; வீடுபேறு. இதற்குரியது இயற்கை நெறி.

351. இதுகாறுங் கூறியவாற்றான் சத்தினை உணர்ந்து அடைதற்குரிய மார்க்கமாக நின்று துணைசெய்வது இயற்கை என்பது அறியற்பாலது.

352. இயற்கையே மார்க்கம்; சத்துக்குரிய மார்க்கம்.

353. மார்க்கத்தை விடுத்துச் சத்தைமட்டும் பற்ற முயல்வது வெறும் பாழைப் பற்றுவதாகும்.

354. இயற்கை நெறியே சாலச் சிறந்தது; எளியது; பொருந்தியது. இயற்கைநெறி நின்று உலகம் இன்புறுவதாக.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *