சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்

4. குருமார்

1. குருமார் சத்தெனும் இறையும் அல்லர்; மக்களும் அல்லர்.

2. இறை, வடிவம் இல்லாதது; குருமார் வடிவம் உடையவர். இறைக்கு அவதாரம் இல்லை; குருமார்க்கு அவதாரம் உண்டு.

3. குருமார்க்கு வழங்கப்படும் பெயர்கள் சில, சில இடங்களில் இறைக்கும் வழங்கப்படுகின்றன. அப்பெயர்களைக் கொண்டு கடவுள் அவதாரக் கதைகள் புனையப்பட்டன. நாமரூப மில்லாத பரம்பொருளை எப்பெயரிட்டு அழைத்தா லென்ன? தோற்றக்கேடு இல்லாதது அதன் தன்மை என்பதை மட்டும் மறத்தலாகாது.

4. உலகில் கடவுளைக் கண்ட கதைகள் பல சொல்லப்படு கின்றன. அவைகள் யாவும் குருதரிசனக் கதைகளேயாகும். பரம்பொருள், தனியே ஒரு மாயா உருவந் தாங்கி வருவதன்று; அது நாம ரூபமின்றி, போக்கு வரவின்றி, அசைவின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பது; அஃது இயற்கையை உடலாக் கொண்டு, குருமார் நெஞ்சத்தாமரையில் ஒளிர்ந்து, மேலுங் கடந்து நிற்பது. அது மனஉணர்வு கடந்த நிலையில் அநுபவ மாத்திரையாய் விளங்குவது.

5. குருமாரும் பிறக்கிறார்; மக்களும் பிறக்கிறார்கள். ஆனால் அவர் பிறப்புக்கும் இவர்கள் பிறப்புக்கும் வேற்றுமை உண்டு. குருமார் அவசியம் நேரும்போது பிறப்பவர்; மக்கள் பிறப்பு அத்தகையதன்று. குருமார் ஞான உணர்வுடன் பிறப்பர்; மக்கள் அஞ்ஞானத் தொடக்குடன் பிறப்பார்கள். குருமார் உலக நலங்கருதிப் பிறப்பர்; மக்கள் அவ்வுணர்வுடன் பிறப்பவர் களல்ல. குருமார் வழிகாட்டிகள்; மக்கள், அக்குருமார் வழிபற்றி நடப்பவர்கள். குருமார் எல்லாஞ் செய்ய வல்லவர்; மக்கள் எல்லாஞ் செய்யவல்லவர்களல்ல. இன்னோரன்ன வேற்றுமைகள் பல உண்டு.

6. குருமார் வரலாற்றை ஆராய்ந்து கொண்டிருத்தல் அநாவசியம். அவரைக் காண நேரும்போது அவர்தம் வரலாறு விளங்கும்.

7. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் குருமார் இருத்தல் உண்மை.

8. குருமார் நிலை, புலனறிவு ஆராய்ச்சிக்கு எட்டாதது. அவர்நிலை, தியான முதிர்ச்சியில் மலரும் மாசற்ற மெய்யுணர்வில் விளங்குவது.

9. உணர்வு இருவகைத்து. ஒன்று பொய்யுணர்வு; மற்றொன்று மெய்யுணர்வு.

10. பொய்யுணர்வு நிலையுதலில்லாதது; மாறுவது. மெய்யுணர்வு நிலையுதலுடையது; மாறுதலில்லாதது.

11. மக்கள் மெய்யுணர்வு பெறும்வரை பொய்யுணர்வு கொண்டு ஆராய்ச்சியில் தலைப்படுகிறார்கள். அவ்வாராய்ச்சி யால் நிலைத்த முடிவுகள் ஏற்படுவதில்லை. அவரவர் கல்வி அறிவு அநுபவத்துக்கேற்ற அளவில் ஆராய்ச்சி முடிவுகள் தோன்றும். ஒருவனே ஒருபோது கண்ட முடிவை மற்றொரு போது மாறுபட உணர்ந்து, அதைமறுத்து வேறொரு முடிவு பெறுகிறான். ஆகவே, மெய்யுணர்வு பெறும்வரை நிலைத்த முடிவு புலப்படுதல் அரிது.

12. பொய்யுணர்வு, புலனறிவினின்றும் பிறப்பது. புலனறிவுக்கு எட்டாத நுட்பங்கள் பலவுள்ளன. அவைகள் புலனறிவு ஆராய்ச்சிக்கு எட்டாதன. அவைகளைப் புலனறிவால் ஆராய்ந்து ஏமாறுவது அறிவுடைமை யாகாது.

13. குருமாரின் அருள் மொழிகளிலும், அவரைக் கண்ட ஞானிகளின் உரைகளிலும் உறுதியும் அன்புங் கொண்டு ஒழுகி, உண்மைகாண முயல்வது அறிவுடைமை.

14. குருமார் நுண்ணுடல் உடையவர். அவ்வுடல் மன உணர்வுடன் வாழும் மக்கட்குப் புலனாகாது. இயற்கைத் தியானத்தில் முதிர்ச்சிபெற்ற மக்கட்கு அப்பொன்னுடல் புல னாகும். குருமாரைப்பற்றி முன்னருஞ் சொல்லப்பட்ட உரைகளை நோக்குக.

15. குருமாரெல்லோரும் ஒரே திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்க்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. குருமாரில் உயர்வு தாழ்வு கற்பிப்போருக்கு உண்மை ஞானம் விளங்காது.

16. குருமார் வடிவில் வெவ்வேறு பட்டவர்போல் காணப் படுவர். உணர்வில் அவரெல்லாரும் ஒருமைப்பாடுடையவர். மன உணர்வு கடந்த நிலையில் அவ்வொருமைப்பாடு நன்கு விளங்கும்.

17. குருமார் அனைவரும் நுண்ணிய பொன்னுட லுடையவர். அவர் அந்நிலையில் நின்றே உலகுக்கு நலஞ் செய்து வருகிறார். சிலர் அவசியம் நேரும்போது பருவுடல் தாங்கியும் நலஞ் செய்வர். அப்பொழுதும் அவர்பால் நுண்ணுடல் உணர்வே நிலைத்து நிற்கும்.

18. நுண்ணுடல் நிலையில் குருமார் பெரிதும் மோனத்தால் உண்மையைக் குறிப்பாக உணர்த்துவர். அம்மோனம் இயற்கைத் தியானத்தால் முதிர்ச்சி பெற்றவர்க்குக் காட்சியாகும். அக்காட்சி கண்ட ஞானிகள் அதை உலகுக்கு வெளியிட்டுள்ளார்கள். (குருமார் தொடுதல், மொழிதல் முதலிய வழிகளாலும் உண்மை உணர்த்துவது உண்டு.)

19. பருவுடல் தாங்குங் குருமார் போதனையினாலும் சாதனையினாலும் அவ்வப்போதைய உலகம் விரும்பும் முறையில் சன்மார்க்கத்தை விளக்கிச் செல்வர். அப்போதனை களை அவராகக் கொள்ளுதல் ஒழுங்கு.

20. குருமார் நுண்ணுடல் நிலையில் குறிக்கும் மோனம், மனங்கடந்த ஞானிகட்குக் காட்சியாவதால், அதன்கண் வேற்றுமை தோன்றுவதில்லை. பருவுடல் தாங்கிய நிலையில் குருமார் அருளும் போதனைகளில் வேற்றுமை தோன்றுவதைப் பற்றி உலகம் மலைவதுண்டு.

21. குருமார் போதனைகள், கால தேச வர்த்தமான நிலைமைகட்கேற்ற முறையில் வெளிவருதலால், அவைகளின் தோற்றத்தில் வேற்றுமை காணப்பெறுதல் இயல்பே.

22. மக்கள் பிறப்பு வகையில் ஒருமைப்பட்டவர்களா யிருந்தாலும் அவர்கள் சிறப்புவகையில் ஒருமைப்பட்டவர்களா யில்லை. மக்கள் மனோநிலை, வழக்க ஒழுக்கம், உடை, உணவு முதலியவற்றில் வேற்றுமைப்பட்டிருத்தல் கண்கூடு. இப் பலபட்ட மக்கட்குப் பலபட்ட போதனைகள் தேவை. பலப் பட்ட போதனைகளில் அவரவர் தம்தம் இயல்புக்கேற்ற ஒன்றைக் கொண்டொழுகுதல் நலம்; பிறவற்றை நிந்தித்தல் கூடாது.

23. குருமாரின் போதனைகள் தொடக்கத்தில் வேற்றுமை போலத் தோன்றும். முடிவில் அவ்வேற்றுமை உணர்வு இடம் பெறாதொழியும்.

24. வேற்றுமை, புறத்தின்பாற் பட்டதென்பதும், அகத்தின் பாற் பட்டதன்று என்பதுங் கருதத்தக்கன.

25. குருமார், சன்மார்க்கத்தையே கால தேசவர்த்தமானத் துக்கேற்ற முறையில் விளக்கிப் போதித்துச் செல்வது வழக்கம், அப்போதனைகளில் சன்மார்க்க உயிர் நாடி ஓடிக் கொண்டே யிருக்கும்.

26. பொன்னால் பணிகள் செய்யப்படுகின்றன. அப்பணிகள் கால நிலைக்கேற்ற வண்ணம் செய்யப்படுவது வழக்கம். அவை களின் தோற்றத்தில் எத்துணை மாறுத லிருப்பினும், அவைகள் யாவும் பொன்னால் செய்யப்பட்டவை என்பது உண்மை. புறம், வேற்றுமை யுணர்வை நல்கினும், அகம் அவ் வுணர்வை அகற்றும். புறவேற்றுமை உணர்வு நீண்டநேரம் நிலைத்திருப்ப தில்லை. பொன் போன்றது சன்மார்க்கம்; பணிகள் போன்றவை போதனைகள். சன்மார்க்கமே காலத்துக்கேற்ற முறையில் குருமாரால் போதிக்கப்படுவது. புறத்தோற்றம், வேற்றுமையுறச் செய்வதற்குக் காரணம், அவ்வப்போது மக்கள் மனோ நிலையில் உறும் மாறுதலே யாகும்.

27. பலதிற மனோநிலையுடைய மக்களுக்குப் பயன்படு முறையில் குருமாரின் போதனைகள் அவ்வப்போது வெளி வருவதற்குக் காரணம், அவர் பலதிறப்பட்ட மக்கள்மீதுங் கொண்ட கருணையேயாகும்.

28. ஒருவன் ஒரு குருவின் போதனையில் விருப்பங் கொண்டு, மற்ற குருமார் போதனைகளை நிந்திப்பது, அவன் தன் குருவின் போதனையையே நிந்திப்பதாக முடியும். நிந்தனை யுள்ள இடத்தில் குருதரிசனமே அரிதாகும்.

29. சோலை இன்பம் நுகர, ஒரு சோலையில் நுழைந்து தனக்கினியதென்று தோன்றும் ஒரு மரத்தடியில் அமர்ந்த ஒருவன், தான் அமர்ந்த மரத்தின்மீது கொண்ட விருப்பத்தால், மற்ற மரங்களை வெறுத்து அவைகளை அழிக்கப் புகுவா னாயின், அவன் சோலை இன்பத்தை எங்ஙனம் நுகர்தல் கூடும்? பிற குருமார் போதனைகளை நிந்திப்பவன் கதையும் இத் தன்மைத்தே.

30. ஒரு குருவின் போதனைவழி ஒருவன் நின்று ஒழுகுவா னாயின், அவன் முடிவில் எல்லாக் குருமார் போதனைகளும் தன் குருபோதனையாகவே தோன்றக் காண்பன். ஆகவே, குருமார் போதனைகளெல்லாம் சன்மார்க்கம் என்று கொண்டு, எக் குருவின் போதனையையும் நிந்தியாது, அவரவர் தத்தம் மனத்துக்கியைந்த குருபோதனை வழி நின்றொழுகுவது அறிவுடைமை.

31. குருமார் வழிபாடு மேலே சொல்லப்பட்டது. குருமாரின் போதனைவழி நின்று அவரை வழிபடுதல் வேண்டும். அவர் போதனைவழி நில்லாது அவரைப்போல ஓர் உருவைச் செய்து, அவ்வுருவைமட்டும் வழிபடுவதால் உண்மை விளங்காது. குருமார், போதனைகளாகவே விளங்குகிறார். போதனைகளின் தத்துவ உணர்வற்ற வழிபாடு வெறும் விக்கிரக ஆராதனையாக முடியும்.

32. குருமாரின் வாய்மொழிகள் தெய்வத் திருவருள் மொழிகளாகும். அவ்வருள் மொழிகளிற் சில வேதமாகவும் சில ஆகமமாகவும் நிலவும்.

33. வேதமும் ஆகமமும் முறையே மந்திரம் தந்திரம் என்று சொல்லப்படும். மந்திரம் என்பது நுண்மை; தந்திரம் என்பது பருமை. மந்திரம் எண்ணம்; தந்திரம் செயல். வேதம் விதை போன்றது; ஆகமம் மரம் போன்றது.

34. வேதம் குருமார்வழிப் பிறக்கும்; ஆகமமும் சில சமயங்களில் அவர்தம் வழிப் பிறக்கும்.

35. வேதாகமங்கள் குறிப்பிட்ட மொழியில் பிறக்கும் நூல்களல்ல. வேதாகமங்கள் பல மொழிகளில் பல இடங்களில் பிறந்திருக்கின்றன. அவைகள் யாவும் சன்மார்க்கத்தையே அறிவுறுத்துவன. வேதம் ஆகமம் என்பவற்றிற்கு அவ்வம் மொழியில் தனித்தனிப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

36. வேதாகமம் ஒலி வடிவாயிருப்பது. அது குருமார் வழிப் பலதிற மொழிகளில் இறங்குவது.

37. குருமார் பெயரால் பிரதிநிதிக் கூட்டமென்றும், சம்பிரதாயங்களென்றும், அவைகட்கெனக் கோயில்க ளென்றும், மடங்களென்றும், இன்ன பிறவென்றும் பல கட்டுப்பாடுகள் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கின்றன. அவைகள் பொய்ம்மையின் பரிணாமங்கள். குருமாருக்குப் பிரதிநிதிக் கூட்டங்களோ, சம்பிரதாயங்களோ, அவைகட்கெனக் கோயில்களோ, மடங்களோ, பிறவோ வேண்டுவதில்லை. குருமார் பக்குவர்க்குக் காட்சியளித்து, அவர்க்கு உண்மை ஞானோபதேசஞ் செய்யக் காத்துக்கொண் டிருக்கிறார். அவர்க்கிடையில் மற்ற அஞ்ஞானத் தலை எடுப்புகள் எற்றுக்கு?

38. கோயில் மடம் முதலியன தொடக்கத்தில் ஓவிய காவிய தத்துவ நிலையங்களாகவும், குருமாரின் தெய்வ மொழிகளைப் பயிலும் நிலையங்களாகவுங் காணப்பட்டன. நாளடைவில் பிரதிநிதிகள் என்ற பெயரால் புரோகிதர்கள் அவைகளில் நுழைந்து, அவைகளைத் தங்கட்குரிய வியாபாரக் கடைகளாக மாற்றிக் கொண்டார்கள்.

39. புரோகிதர்கட்குக் காசு கொடுத்து உபதேசம் பெறுவ தால் தெய்வநிலை கூடுமென்று கருதுவது அறியாமை.

40. புரோகிதர் உபதேசம் குருடருக்குக் குருடர் வழிகாட்டு வதைப் போன்றது.

41. குருமார் கருணை, ஞாயிற்றொளி போலப் பொழிந்த வண்ணமிருக்கிறது. அதற்குக் காசோ கட்டுப்பாடோ வேண்டுவ தில்லை. அக்கருணை ஒளிபட வாழ வேண்டுவது மக்கள் கடமை.

42. குருவுக்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப் படுகின்றன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *