
சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்
4. சமரசமும் சீர்திருத்தமும்
1. சீர்திருத்த முறைகளின் விரிவை முன்னூலிற் காண்க.
2. இந்நூலுக்கேற்பச் சில சீர்திருத்த முறைகளைச் சிறப் பாகக் குறிப்பிடுவது ஒழுங்கு.
3. எச்சீர்திருத்தமும் இயற்கைக்கு அரண்செய்வதா யிருத்தல் வேண்டும். இயற்கைக்கு அரண்செய்யாத சீர்திருத்தம் எதுவும் விரைவில் வீழ்ந்துபடும்.
4. குருமாரின் சமரசம் பரவாதவாறு தடைசெய்து வருவன பல. அவைகளுள் சிறப்பாக இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று புரோகிதம்; மற்றொன்று அரசு.
5. புரோகிதத்தால் சாதிமத வேற்றுமையும், அரசால் முதலாளி தொழிலாளி வேற்றுமையும் நாளுக்கு நாள் பெருகிச் சன்மார்க்கத்துக்கு இடையூறு செய்வதாயின.
6. சீர்திருத்த ஞானிகள் இடையிடைத் தோன்றிக் குருமார் போதனைகளிலுள்ள சமரசம் விளங்குமாறு தெய்வம் ஒன்றே என்பதையும், தெய்வ நெறியும் ஒன்றே என்பதையும் அறி வுறுத்திச் சமரசத்துக்குத் தடைகளாக உள்ள கண்மூடி வழக்க ஒழுக்கங்களை மறுத்துச் சென்றிருக்கிறார்கள். சமீபகாலத்தில் இராமகிருஷ்ணர், இராஜாராம் மோகன்ராய், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் தோன்றிச் சமரசத் துறையில் நின்று, கண்மூடி வழக்க ஒழுக்கங்களை மிக உரமாகக் கண்டித்து, ஒரே தெய்வம், ஒரே நெறி என்பதை வலியுறுத்தினர். இவர்கள் போதனையால் புரோகிதப் புன்மை உலகுக்கு ஒருவாறு விளங்கிச் சாதிமத சமரசம் உலகில் சிற்சில இடங்களில் அரும்பி வருகிறது. அரும்பியும், விளையத்தக்க பயன் விளையாமலிருக் கிறது. காரணம் என்னை? பொருளாதார சமரசம் பரவாமையே யாகும். முன்னைச் சீர்திருத்த ஞானி கட்குப் பொருளாதாரப் பொதுமையை உணர்த்தும் வாய்ப்போ அவசியமோ நேராமற் போயிற்று. அதைப்பற்றி ஆராய வேண்டுவதில்லை.
7. பலதிறச் சமரச போதனைகளுடன் பொருளாதார சமரச போதனையும் சேர்தல் வேண்டும்; சேர்ந்தால் விளையத்தக்க பயன் விளையும்.
8. பொருளாதாரப் பொதுமைக்கென்று இந்நாளில் தோன்றியவர் காரல் மார்க்.
9. சமரசத் துறைகளுக்கெல்லாம் அடிப்படை பொரு ளாதார சமரசம்.
10. பொருண்மை வாழ்வுக்கு இன்றியமையாதது. இன்றி அமையாத அதில் சமரசம் இல்லையெனில், மற்றச் சமரசத் துறைகளால் விளையத்தக்க பயன் எப்படி விளையும்?
11. செயலில் குருமார் போதனைகள் நிறைவேறிச், சன்மார்க்கம் எங்கும் பரவி, மக்களிடைச் சகோதர நேயம் விளங்கவேண்டுமானால், பொருட் பொதுமையை உலகம் பெறுதல் வேண்டும்.
12. பொருட் பேச்சு, சன்மார்க்கத்துக்கு எற்றுக்கு என்னுங் கேள்வி சில இடங்களில் பிறக்கலாம். இக்கேள்வி பிறத்தற்கு அடிப்படையாகச் சில கொள்கைகள் இடை நாளில் முளைத்தன. அவைகளைத் திரட்டி இங்கே மூன்றாகக் குறிக்கலாம். (1) கடவுள் வேறு உலகு வேறு என்பது. (2) உலக இன்பத்தைத் துறத்தல் கடவுள் நெறி என்பது. (3) உலகம் பொய் என்பது. இவைகள் இயற்கைக்கு முரண்பட்டன என்பது, பொதுவாக என்னுடைய நூல்கள் பலவற்றிலும், சிறப்பாகச் சன்மார்க்க போதத்திலும் விளக்கப்பட்டுள்ளது. விரிவு அந்நூல்களிற் பார்க்க.
13. கடவுள் நெறி வேறென்றும், உலகியல் வேறென்றும் நினைப்பது தவறு. கடவுளுக்கு உலகம் தேவை. உலகுக்குக் கடவுள் தேவை. கடவுளின்றி உலகமில்லை; உலகமின்றிக் கடவு ளில்லை. இரண்டையும் பிரித்துக் காட்டல் இயலாது.
14. கடவுளும் உலகமும் பிரிவின்றி ஒன்றுபட்டிருந்தலால், கடவுள் நெறி வேறு; உலகியல் வேறு என்று கொள்வது தவறு. உலக இன்பத்தைத் துறப்பதும், உலகம் பொய் என்று கருதுவதும் முறையே கடவுளின்பத்தைத் துறப்பதும், கடவுளைப் பொய் என்று கருதுவதுமாகும்.
15. கடவுள் நெறியாகிய சன்மார்க்கத்துக்கு உலகம் தேவை. உலகுக்குப் பொருள் தேவை. ஆகவே, சன்மார்க்கத்துக்கு மற்றச் சமரசங்களுடன் பொருளாதார சமரசமும் தேவை. இதை முன்னாளில் விளக்கியவர் திருவள்ளுவர் உள்ளிட்ட சிலர்; இந்நாளில் விஞ்ஞான முறையில் விளக்கியவர் காரல் மார்க்.
16. சாம்ராஜ்யக் கொடுமையால் சன்மார்க்க வளர்ச்சி குலைந்து விட்டது. இக்குலைவைப் போக்க வல்லது மார்க்ஸியம்.
17. மார்க்ஸியத்தால் செல்வம் ஒருபால் பெருகி மற்றொருபால் அருகுதல் ஒழியும்; ஏழ்மை நீங்கும்; ஏழைகள் தொகை பெருகாது; உலகம் செம்மையுறும். உலகச் செம்மை சன்மார்க்க ஆக்கத்துக்குத் தேவை.
18. பொருட் பொதுமைக்குக் கொலைப் புரட்சி வேண்டும் என்பது சில இடங்களில் சொல்லப்படுகிறது. இது சன்மார்க்கத் துக்கு மாறுபட்டது.
19. கொல்லாமை, சன்மார்க்கத்தின் தத்துவங்களுள் சிறந்த ஒன்று.
20. பொருளாதார சமரசத்தாரிடைத் தத்துவத்தில் பெரிதும் மாறுபாடு நிகழ்வதில்லை. தத்துவத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முறையில் அவரிடை மாறுபாடு நிகழ்வது உண்டு.
21. தத்துவத்தை நிறைவேற்றக் கொலைப்புரட்சியைக் கைக்கொள்ளல்வேண்டும் என்னும் நியதியில்லை.
22. நியாயவரம்பில் நின்று, அஹிம்ஸையைக் கடைப்பிடித்து, மக்கள் அறிவு விளங்குமாறு சன்மார்க்கப் பிரசாரஞ்செய்து, பொருட் பொதுமைக்கு ஆக்கந்தேடலாம். இது, சன்மார்க்கத்துக்கு உரிய முறை.
23. சன்மார்க்க போதனையில் சகோதர நேயமிருத்தலால், அது, முதலாளி தொழிலாளிகளுக்குள் சகோதர நேயத்தை எழுப்பிப், பொருட் பொதுமையை நாளடைவில் உண்டு பண்ணும்.
24. பொருட் பொதுமை உணர்வைப் பகைமையால் தனித்தனி மக்களிடை எழுப்புவது தவறு. சகோதர நேயத்தால் பொதுமையில் அவ்வுணர்வை எழுப்புதல் நலம்.
25. பொருளாதார சமரச ஞானிகளில் ஒருவர் கொண்ட முறையையே மற்றவர் கொள்ளல் வேண்டும் என்னுங் கட்டுப்பாடில்லை.
26. முறை, கால தேச வர்த்தமானத்தை ஒட்டித்தானே அரும்புவது. அதில் கருத்துச் செலுத்தி வாதப்போர் நிகழ்த்துவது அநாவசியம்.
27. கடவுள் நெறியாகிய சன்மார்க்கம், பொருட் பொதுமைக்கு மாறுபட்டது என்று அத்துறைவல்லாருள் ஒருசாரார் கூறுதலால், அவர்தம் போதனையைச் சன்மார்க்கர் எப்படி ஏற்பது என்னும் ஐயம் சில இடங்களில் நிகழலாம்.
28. சன்மார்க்கத்துக்கு அரண் செய்யக் கூடிய போதனை களையே சன்மார்க்கர் கொள்வது நலம்.
29. ஒருவர் போதனையிலேயே சன்மார்க்கத்துக்கு அரண் செய்வதும் முரண் செய்வதும் இருக்கலாம். பகுத்தறிவால் அரண் செய்வது எது என்பதை ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும்.
30. பகுத்தறிவு கொண்டு, ஒன்றை ஆராய்ந்துகொள்ளு தற்கோ தள்ளுதற்கோ ஒவ்வொருவர்க்கும் உரிமை உண்டு.
31. பொருட்பொதுமை கருணையை அடிப்படையாகக் கொண்டது.
32. எல்லாரும் பொருளின்பத்தைப் பொதுமையில் நுகர்தல்வேண்டும் என்பது பொருட்பொதுமையின் நுட்பம். இது கருணையன்றோ?
33. ஏழைகள் தொகையைப் பெருக்கிச் சோறிடுவது கருணையாகாது. ஏழ்மையைப் போக்குவது கருணையாகும். விளக்கத்துக்கு முன்னூல் பார்க்க.
34. கருணையுள்ள இடத்தில் சமரசம் இருத்தல் இயல்பு.
35. கருணையுடையார் அனைவரும் சன்மார்க்கரேயாவர்.
36. கருணை, சன்மார்க்கத்தின் உயிர்.
37. சத் என்பது முழு கருணையுடைய ஒன்று.
38. பொருளாதார சமரசத்தார், புரோகித மார்க்கத்தை விரும்புவதில்லை. அதைக்கொண்டு, அவர் சன்மார்க்கத்தை வெறுப்பதாகக் கொள்ளலாகாது. புரோகிதமார்க்கம் வேறு; சன்மார்க்கம் வேறு.
39. புரோகித மார்க்கம் அருக அருகச் சன்மார்க்கம் ஆக்கம்பெறும்.
40. கடவுள் நெறி என்னும் பெயரால் புரோகிதம் நடமாடுகிறது. அது கடவுள் நெறியன்று.
41. குருமார் பெயராலும் புரோகிதம் உலவிவருகிறது. குருமார்க்கும் புரோகிதத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
42. குருமார் போதனைகள் நேரிய முறையில் பரவாதவாறு தடைசெய்து வருவது புரோகிதம். இத்தகைப் புரோகிதத் துக்கும் குருமாருக்கும் எவ்வழியில் தொடர்பு இருத்தல் கூடும்?
43. குருமார் போதனைகளிலும் புரோகிதம் திரிபுகள் செய்திருக்கிறது. அத்திரிபுகளைப் பகுத்தறிவால் உணர்ந்து, அவைகளை ஒதுக்குதல் நல்லது.
44. கல்வி அறிவு ஒழுக்கத்திற் சிறந்து, உண்மை காண எதையும் பகுத்தறிவால் ஆராய்ந்து ஆராய்ந்து பண்பட்ட நெஞ்சிற்கு இது திரிபு? இஃது உண்மை என்பது இனிது விளங்கும்.
45. பண்பட்ட நெஞ்சிற்கு இயற்கை அன்னையின் அருள் கிடைத்தல் இயல்பு.
46. பண்பட்ட நெஞ்சுடைய நன்மக்கள் வழித்தீமையைப் போக்க இயற்கை அன்னை எப்பொழுதும் முனைந்தே நிற்கிறாள். அவள் துணைபெற மக்கள் தங்களைப் பண்படுத்திக் கொள்ளல்வேண்டும்.
47. பண்படாத மனத்துக்கு உண்மை விளங்காது.
48. குருமார் வரலாறுகளும் சரித்திர முறையில் பெரிதும் உலகில் வழங்கவில்லை. புரோகிதப் புனைந்துரைகள் பெரிதும் குருமார் வரலாறுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.
49. ஒரே குரு, ஒரு சாராரால் போற்றப்படுகிறார்; மற்றொரு சாராரால் தூற்றப்படுகிறார். இதற்குக் காரணம் என்னை? மதப்பித்தே யாகும்.
50. மதப்பித்து, புரோகிதத்தின் பிள்ளை.
51. மதப்பித்து ஒரு சார்பில் அளவுகடந்த போற்றலையும், மற்றொரு சார்பில் அளவுகடந்த தூற்றலையும் எழுப்பும்.
52. மதப்பித்து வளர வளரப் புரோகிதமும் வளர்ந்து வரும். மதப்பித்தால் புரோகிதத்தின் வாழ்வு நடந்து வருகிறது.
53. புரோகிதப் புனைந்துரைகளாலாகிய குருமார் வரலாறுகளை நம்புதல் கூடாது. அவைகளை மொழிக்குரிய இலக்கியங்களாகக் கொள்ளலாம்.
54. சன்மார்க்க சங்க நோக்கத்தைப் பிரசாரஞ் செய்யும் போது, அந்நோக்கத்துக்கு மாறுபட்ட அமைப்புகளோ ஆட்சி முறைகளோ பிறவோ ஆங்காங்கே காணப்படின், அவைகளை வன்மையால் தாக்குதல் கூடாது. அமைப்புகளும், ஆட்சி முறைகளும், பிறவும் மக்களல்ல. அவைகள் மக்களால் கோலப்படுவன. மக்கள் சன்மார்க்கத்தில் திரும்பினால், அமைப்பு, ஆட்சிமுறை முதலியனவும் சன்மார்க்கத்தில் திரும்பும். ஆகவே, அன்பார்ந்த சன்மார்க்கப் பிரசாரத்தால், எதையும் ஒழுங்குபடுத்தவே முயலல் வேண்டும். வேறுவித வன்செயலில் புகுதல் கூடாது. அது சன்மார்க்க சங்க முறையாகாது.
55. மூர்க்கநெறி சன்மார்க்கமாகாது. எக்காரணம் பற்றியும் எதன் பொருட்டும் சன்மார்க்க சங்கத்தார் மூர்க்கத் துறையில் இறங்குதலாகாது.
56. சன்மார்க்கப் பிரசாரம் முதலியன அன்புவழியில் நிகழ்தல் வேண்டும்.
57. தீமையைத் தீமையால் போக்க முயலலாகாது. அம்முயற்சி தீமையையே பெருக்கும்.
58. தீமையைப் பிரசாரம் முதலியவற்றால் களைய முயல்வது அறம்.
59. சீர்திருத்தப் பிரசாரகர், முதலாவது தம்மைப் பண்படுத்திக் கொள்ளல்வேண்டும். அவர்கள் நெஞ்சில் இரக்கம் இருத்தல் வேண்டும்; பகைமை இருத்தல் கூடாது.
60. பகைமையறத் தம்மைப் பண்படுத்திக் கொள்ளாதவர் சீர்திருத்தத் தொண்டில் இறங்குதலாகாது.
61. சீர்திருத்தத்துக்குரிய முறைகளுள் சிறந்த ஒன்று நோன்பு. உண்மை நோன்பால் எல்லாம் ஒழுங்குபடும். நோன்புக்கு உள்ள ஆற்றல் பெரிது. நோன்பு முறைகள் முன்னூலில் சொல்லப் பட்டுள்ளன.
62. நாடு, நிறம், மொழி, சாதி, மதம் முதலியவற்றைப் பற்றியெழும் வேற்றுமை யுணர்வு ஒழிவதாக. சகோதர நேயம் பெருகுவதாக. உலக முழுவதும் சன்மார்க்கம் பரவுவதாக.
63. இயற்கையை உடலாக்கொண்டு, என்றும் மாறுதலின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் ஒன்றாய், உண்மையாய், அறிவாய், அன்பாய், இன்பாய், அழகாய் உள்ள இறை வாழ்க.
64. இறைக்கு உடலாய் நின்று, திருவிளையாடல் புரியும் இயற்கை வாழ்க.
65. இயற்கை – இறைவழி நின்று, உலகை நடாத்தி வருங் குருமார் வாழ்க.
66. கால தேச வர்த்தமான நிலைமைக்கு ஏற்றவாறு, அவ்வப்போது குருமார்வழிப் பிறந்த அருள்மொழிகள் வாழ்க.
67. அருள்மொழிகளின் பொருளாயுள்ள சன்மார்க்கம் வாழ்க.
68. சன்மார்க்க சங்கம் வாழ்க.
திருவாரூர் – வி. கலியாணசுந்தரன்
சன்மார்க்க ஊழியன்
முற்றும்.
★ ★ ★



