
சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்
6. சங்கம்
1. சன்மார்க்க சங்கம், சமரச சங்கம் என்றும், சமரச சன்மார்க்க சங்கம் என்றும், மார்க்க சங்கம் என்றும் அழைக்கப் பெறலாம்.
2. சன்மார்க்க சங்கம், கால தேச வர்த்தமானத்துக்கேற்ற முறையில் அவ்வப்போது ஒவ்வொருவிதப் பெயர் பெற்று வருகிறது.
3. சன்மார்க்க சங்கம் ஒருபோது ஒருவரால் காணப்பட்ட தன்று; அஃது என்றும் இருப்பது.
4. சன்மார்க்க சங்கத்தின் நுட்பம் ஒவ்வொருபோது ஒவ்வொருவரால் விளக்கஞ் செய்யப்படும்.
5. சன்மார்க்க சங்கம் இறை முதல் எல்லா உயிர்களையும் அங்கமாகக் கொண்டது.
6. சங்கத்தின் தலைமை – இறை; அமைச்சு – இயற்கை; நிர்வாகக் கூட்டம் – குருமார் திருக்கூட்டம்; உறுப்புக்கள் – எல்லா உயிர்களும்; சந்தா – இரக்கம்.
7. உறுப்புக்களாகிய உயிர்களிற் சிறந்தவர்கள் மக்கள்.
8. அம்மக்கள் நான்கு வகைப்படுவார்கள்.
9. முதல் இனத்தவர், இயற்கை வாழ்வு நடாத்தி, இயற்கைத் தியானத்தில் முதிர்ந்து, குருதரிசனம் பெற்று இறையொளி கண்டு, தங்களுக்கென ஒன்றுமின்றி, மற்றவர் பொருட்டு உடல் தாங்கிக் குருமாருடன் உறவுகொண்டு வாழ்வோர்; இரண்டாம் இனத்தவர், இயற்கை வாழ்வில் நின்று, இயற்கைத் தியானத்தில் அமர்ந்து, உயிர்கட்குச் சேவை செய்வோர்; மூன்றாம் இனத்தவர், சன்மார்க்கத்தை அறிவால் உணர்ந்து, உணர்ந்த வாறு நடக்க முயல்வோர்; நான்காம் இனத்தவர், சன்மார்க்க ஒருமை உணர்வின்றிப் பன்மை உணர்வுடன் வாழும் மற்றவர்.
10. இவ்வினத்தவரைப் படிப்படியாக உயர்த்தி மேம்படுத்த வல்லது தொண்டு.
11. தொண்டு என்பது முனைப்பில்லாத இடத்தில் நிகழ்வது. முனைப்புள்ள இடத்தில் நிகழ்வது போலித்தொண்டே யாகும். தன்னலச் செயல் தொண்டாகாது. அதுவும் போலியின்பாற் பட்டதே. பயன்கருதாப் பணியே சிறந்த தொண்டாகும்.
12. தொண்டு, உயிர்களின் அறியாமைக் கட்டை அவிழ்த்து அவிழ்த்து, அறிவை விளக்கஞ் செய்து செய்து, இயற்கை அன்னை உயிர் வளர்ச்சி நாடிப் பொழியுங் கருணையை, உயிர்கள் பெறத் துணைசெய்வது.
13. உயிர் நலனுக்கும் வளர்ச்சிக்கும் தொண்டு இன்றியமை யாதது.
14. தொண்டில்லா இடத்தில் இயற்கை அன்னையின் கருணை பாய்வதில்லை.
15. முதல் இனத்தவர் குருமாருடன் உறவு கொண்டவ ராதலின், அவரைப்பற்றி இங்கு ஒன்றும் விரித்துக்கூற வேண்டுவ தில்லை.
16. இரண்டாம் இனத்தவர், முதல் இனத்தவராதற்கு முயல்வது இயல்பு. அம்முயற்சி ஆக்கம் பெறுதற்குத் தமக்குரிய தியானம் முதலியவற்றுடன் தமக்குக் கீழுள்ளவரைத் தமது நிலைக்குக் கொணரத் தொண்டு செய்தல் வேண்டும். அத் தொண்டு அவரை மேன்மைப் படுத்தும்.
17. மூன்றாம் இனத்தவரும் தாம் மேல் நிலை எய்துதற்குத் தமக்குக் கீழுள்ள மக்களைத் தமது நிலைக்குக் கொண்டுவர, அம்மக்கள் நலங் கருதி உழைத்தல் வேண்டும். அவ்வுழைப்பு அவரைத் தானே உயர்த்தும்.
18. நான்காம் இனத்தவர் ஒருமைச் சன்மார்க்க உணர்வு பெறாதவராதலானும், தொண்டின் திறத்தை அறியாதவ ராதலானும், அவர் சிறக்கச் சன்மார்க்க வாயிலாகத் தொண்டு செய்து, தொண்டின் இயலை அவர்க்கு அறிவுறுத்த வேண்டுவது மற்றவர்கடமை. அவர் நலங்கருதித் தொண்டு செய்யாதவர் சன்மார்க்கராகார்.
19. மக்கள், தங்களுக்குக் கீழ்ப்பட்டுள்ள அஃறிணை உயிர்களின் வளர்ச்சிக்குந் துணை நிற்றல் வேண்டும். இஃது இயற்கை அறம்.
20. அஃறிணை உயிர்களும் படிப்படியாக வளர்ந்து பகுத்தறிவுடைய மக்களாதல் வேண்டும். அவைகளை வளர ஒண்ணாதவாறு அவைகட்கு இடையூறு செய்தல் பெரும் பாவம்.
21. அஃறிணை உயிர்களின் வளர்ச்சிக்குக் கேடு சூழ் வோரின் வளர்ச்சியும் தடைபடுதல் இயல்பு.
22. ஓருயிர்க்குத் தீங்கு செய்வது, தன்னுயிர்க்குத் தானே தீங்கு செய்வதாகும்.
23. எல்லா உயிர்களையும் தன்னைப்போல் கருதி வாழ்வது சிறந்த இயற்கை வாழ்வாகும்.
24. மேலே கூறப்பெற்ற நான்கு இனத்தவர்கட்கும் அமைப்பு வேண்டுமா வேண்டாமா என்பது ஒரு கேள்வி.
25. முதல் இனத்தவர் குருமாருடன் தொடர்பு கொண்டு வாழ்தலின், அவரைப்பற்றி ஒன்றுங் கூற வேண்டுவதில்லை.
26. குருமாருடன் தொடர்பு கொண்டவர் இன்னார் என்று எப்படி உணர்வது? குருமாருடன் தொடர்பு கொண்டவரிடம் சிற்சில சிறப்பியல்புகள் அமைந்திருக்கும். அவைகளை முற்றும் விரித்தல் இயலாது. சிலவற்றை மட்டும் சொல்லுதல் கூடும். அவை, தமக்கென ஒன்றின்மை, பிறர்க்கென வாழ்தல், பெரிதும் மலையில் வதிதல், சூரிய ஒளியிலுள்ள பிராண சக்தியைக் காற்று வாயிலாக எளிதில் பருகி நாடி நரம்புக் கேற்றல், நரை திரை மூப்பு அணுகாமை, பிறர் நோய்களைத் தியானத்தாலோ, நோக்காலோ, பரிசத்தாலோ போக்கல், இன்ன பிற. இவ்வியல் புடையவர் குருமாருடன் தொடர்பு கொண்டவர் என்று உணர்தல் வேண்டும்.
27. அமைப்புகள் பலவிதம். அவைகளைப் பணிக்குரிய அமைப்புகளென்றும், தியானத்துக்குரிய அமைப்புகளென்றும் இருகூறுபடுத்திக் கொள்ளலாம்.
28. பணி அமைப்புகள் பின் மூன்றினத்தார்க்கும் பொது. அவைகள் வாயிலாக உயிர்த் தொண்டு நிகழ்ந்து வரும்.
29. பணி அமைப்புகளாவன : பள்ளிக்கூடம், தொழிற்சாலை, மருத்துவச்சாலை முதலிய அறச்சாலைகள்.
30. தியான அமைப்பு முறையில் மூவருள்ளும் வேற்றுமையுண்டு.
31. இரண்டாம் இனத்தவர்க்குரிய தியான அமைப்புகள் இயற்கையின் கோலங்கள்.
32. மூன்றாம் இனத்தவர்க்குத் தியான அமைப்புகள் கலைகள்.
33. நான்காம் இனத்தவர்க்கு வேறுவித அமைப்புகள் தேவை. அவை கோயில், மடம், சபை போன்றன.
34. இந்நான்காம் இனத்தவர் சமரச சன்மார்க்க உணர்வு அரும்பப் பெறாதவராதலின், இவர் நெஞ்சில் பன்மை உணர்வு மிகுந்து விளங்குதல் இயல்பு. இவரது பன்மை உணர்வைப் படிப்படியாக ஒருமைப்படுத்த மற்றவர் முயலுதல் வேண்டும்.
35. இவ்வினத்தவர், தம் பன்மை உணர்வுக் கேற்றவாறு பலதிறக் கொள்கை உடையவராயிருப்பர். இவர் வழியே சென்று இவரைத் திருத்துவது மற்றவர் கடமை.
36. இவர், தம் கொள்கைக்கு (மதத்துக்கு) ஏற்றவாறு அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்வர். தொடக்கத்தில் எவர் எவர் எந்த எந்தக் கொள்கையில் பற்றுள்ளங் கொள்கிறாரோ அவர் அவர் அந்த அந்தக் கொள்கைக்குரிய அமைப்பில் சேர்ந்து ஒழுகலாம.
37. ஒருவர் அமைப்புமீது மற்றொருவர் பகைமை கொள்ளா திருக்குமாறு அவர்க்குப் படிப்படியே அறிவு கொளுத்த வேண்டுவது சன்மார்க்கத் தெளிவுடையார் கடன்.
38. பின்னே ஒருவர் கொள்கையை மற்றொருவர் கொள்கை யுடன் நடுநிலையில் நின்று சீர்தூக்கிப் பார்க்குமாறு அவர்க்குப் போதித்தல் வேண்டும்.
39. நாளடைவில் தங் கொள்கையே மற்றவர் கொள்கை யாய்ப் பரிணமித்திருப்பதுபோல அவர்க்குத் தோன்றும். அவ்வேளையில் அவரிடம் பன்மை உணர்வு மாய்தற்கும், ஒருமை உணர்வு அரும்புதற்கும் இயற்கை அன்னை அருள் செய்வாள்.
40. சன்மார்க்கத் தெளிவுடையார், நான்காம் இனத்தவரிடம் பலதிறப்பட்ட அமைப்புகளிலும் ஈடுபட்டுக் காட்டுதல் ஜீவ காருண்யமாகும். இவ்வீடுபாடு, எல்லாக் கொள்கைகளும் சன்மார்க்கம் ஒன்றையே குறிக்கொண்டு நிற்பன என்பதை, ஒருமை உணர்வு இல்லாதவர்க்கு அறிவுறுத்தும்.
41. நான்காம் இனத்தவர் அமைப்புகளின் பெயர்கள் பலபடத் திகழ்கின்றன. அப்பெயர்களை மாற்றவேண்டுவது அநாவசியம். வெறும் பெயர் மாற்றத்தால் ஒன்றும் விளையாது. உள்ள பெயராலேயே அவ்வவ்வமைப்பு நடைபெற்று வரலாம். ஆனால், அவைகளில் சமரச சன்மார்க்கக் கொள்கை படிப்படியே இடம்பெற அறிஞர் முயலுதல் வேண்டும். உடல் எதுவாயினுமாக. அதனுள் சன்மார்க்க உயிர் நிலவுதல் அவசியம்.
42. எவ்வமைப்பும் இல்லாத இடத்தில் புதிதாகச் சன்மார்க்கப் பெயரால் ஓர் அமைப்பு உண்டாக்கலாம். அதற் கென நிதியுஞ் சேர்க்கலாம். செலவு போக மிகுதி யுள்ளதைப் பணி அமைப்புக்கு உதவிவிடுதல் வேண்டும்.
43. நான்காம் இனத்தவர்க்கு, ஆடல், பாடல், கூத்து, உலா, விழா முதலியவற்றில் வேட்கை நிகழ்தல் இயல்பு. அவைகளை மறுத்தல் கூடாது. மறுப்பால் நலன் விளையாது. சமரச சன்மார்க்க சங்கத் தத்துவம் அமையும் முறையில் அவைகளை நடாத்திக் காட்டவேண்டுவது அறிஞர் கடமை.
44. நான்காம் இனத்தவர் வழியே சென்று, அவரை நல் வழியில் திருத்தல்வேண்டும்; அவர் எளிதில் எதற்கும் இணங்கி வரும் இயல்புடையவர்.
45. நான்காம் இனத்தவரின் தியான அமைப்புகள் மிக எச்சரிக்கையாக நடத்தப்பெறல் வேண்டும். அவைகளில் பிணக்கு பிளவு முதலியன நிகழ்தல் ஆகாது.
46. பிணக்கு பிளவுகளைத் தோற்றுவிக்கும் பேய்கள் பல உண்டு. அவைகளில் சிறப்பாகக் குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று தேர்தல்; மற்றொன்று நிதி.
47. பிளவு பிணக்குகள் நிகழாத முறையில் தேர்தல் நடைபெறின் ஒழுக்கத்துக்கு இழுக்கு நேராது. அவைகள் நிகழ்வதாயின், தேர்தல் முறையை அறவே விட்டுவிடுதல் நல்லது. நம்பிக்கைக்குரிய சிலரால் அமைப்புகள் நடைபெற்று வருதல் சிறப்பு.
48. நிதியுள்ள இடத்தில் பெரிதும் நீதி இருப்பதில்லை.
49. தியான அமைப்புகட்கு நிதி அநாவசியம். அவசியம் நேரின், வேண்டும் அளவில் நிதி திரட்டலாம். குறிப்பிட்ட ஒன்றற்குப் பயன்பட்டதுபோக, மிகுந்து நிற்பதைப் பணி அமைப்புகட்கு உதவுதல் ஒழுங்கு.
50. தியான அமைப்புகள் தூய்மைக்கும் ஒழுக்கத்துக்கும் நிலைக்களனாக இருத்தல் வேண்டும். இவைகட்குக் கேடு நிகழும்போதெல்லாம் அமைப்புகள் சீர்திருத்தஞ் செய்யப் பெறல் வேண்டும்.
51. பிளவு பிணக்குகள் நிகழும் வேளைகளில் அவைகளை மேலும் மேலும் வளர்க்க முயல்வது தவறு. தியானத்தில் அமர்ந்தால் எல்லாம் ஒழுங்குபட்டுவிடும். இயற்கை – இறையைத் தியானித்தல் நலனே செய்யுந் தன்மையது.
52. ஒவ்வொருவரும் தம்தம் குறைபாடுகளை உணர்ந்து, இயற்கை – இறையைத் தியானிப்பது முறைமை.
53. குறைபாடுகளை நினைந்து நினைந்து, கசிந்து கசிந்து, உருகி உருகி அழுவது, இயற்கை – இறையின் அருளைப் பெறுதற்கு வழி தேடுவதாகும்.
54. குறைகளை உணர்ந்து, அவைகளைப் போக்க முயல்கிறவன், சன்மார்க்கத்தில் நிற்க முயல்பவனாவன்.
55. தன் குற்றத்தை உணர்கிறவன், பிறர் குற்றத்தை நாடான்.
56. பிறர் தமது குற்றத்தை உணர்ந்து வருந்தும் போது, அக்குற்றத்தை மன்னிக்கும் மனம் பெறுதல் வேண்டும். அம்மனம் சன்மார்க்கத்தில் ஈடுபடுவதாகும்.
57. தொகையில் நான்காம் இனத்தவரே பெருகியிருக்கிறார். இவர் தொகை சுருங்கி, மற்றவர் தொகை பெருகின், உலகில் பலதிறத் துன்பங்கள் நீங்கும். இது சன்மார்க்கரின் தொண்டைப் பொறுத்திருக்கிறது.
58. சன்மார்க்கத் தொண்டர், சன்மார்க்க சங்க நோக்கங் களைப் பரப்ப முயன்றவண்ணம் இருப்பாராக.
59. சன்மார்க்கம் அறத்தொண்டை அடிப்படையாகக் கொண்டது.
60. சன்மார்க்க ஊழியர்க்குப் பயன் கருதாத் தொண்டே வீடுபேறாகத் தோன்றும்.
61. ஒவ்வொரு குடும்பமும் சன்மார்க்க சங்கமாய்த் திகழ அறிஞர் முயல்வது அழகு. இதற்குச் சன்மார்க்கக் கல்விச்சாலைகள் பெருகுதல் வேண்டும்.
62. ஒவ்வொரு குடும்பமும் சன்மார்க்க சங்கமானால், பெரிய குடும்பமாகிய உலகம் சன்மார்க்க சங்கமாகும். அந்நாளே அகங்கார அரசு வீழும் நாள்; உலக விடுதலை நாள்; நன்னாள்.



