
மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
9. தீ வேலி
இருட்டி விட்டது.
பையப் பையப் பதுங்கி வந்து குபீர் என்று பாய்ந்து விடும் வலிய மிருகம் மாதிரி, கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து திடுமெனத் தனது முழு ஆற்றலோடும் கவிந்து கொண்டது இருள்.
சூரியன் மேல் வானில் வேகமாக விழுந்து கொண்டிருந்த போதே, அடுத்த அந்தி மயக்கம் நிழல் பரப்பிய வேளை யிலும், மனிதருக்கு அச்சம் எழுப்பும் சூழலாக விளங்கிய அந்த மலைப்பிரதேசம் இப்போது மேலும் பீதியும் கலவரமும் உண்டாக்கியது.
மலை அடிவாரத்தை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த பத்துபேர், மலை மீதுள்ள சாத்தாவுக்கு விசேஷ பூஜை செய்வதற்காக, மேலே வந்திருந்தார்கள்.
அவர்கள் சீக்கிரம் உரிய இடத்துக்குப் போய்விட வேண்டும் என்று வேளையோடு தான் கிளம்பினார்கள். மலைப் பாதையில் வேகம் வேகமாக நடந்ததிலும் குறைச்சல் இல்லை.
என்றாலும், ஐந்து மைல் தூரம் என்று கணக்கிடப்பட்டிருந்த பாதை, அடுக்கு அடுக்காக அமைந்திருந்த மலைப் பகுதிகளில் ஏறியும் இறங்கியும், வளைந்தும், சுற்றியும், நெளிந்தும் நேராகவும் கிடந்தது. நடக்க நடக்க வழி வளர்ந்து கொண்டே போவது போலிருந்தது. மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும், பாதைகளினூடும், மலையின் ஓரமாகவும், இடுப்பு வரை உயர்ந்து மண்டி வளர்ந்து கிடந்த புல்களின் மத்தியிலும் பாதை சென்றது. அதில் அவர்கள் மெதுவாகத்தான் நடக்க முடிந்தது.
ஒரு இடத்தில் சிற்றாறு அருவியாய் குதித்து, கவலையற்ற குமரிப்பெண் போல் வீரிட்டுத் துள்ளி ஒடிக் கொண்டிருந்தது.
அங்கே அவர்கள் காலார உட்கார்ந்து, பசிதீரச் சாப்பிட்டார்கள். நடந்து வந்த களைப்பும் உண்ட கிறக்கமும் தூண்டிவிட, சாவகாசமாக இருந்து வம்பளந்தார்கள். பிறகு, நேரமாயிட்டுது’ என்ற உணர்வு தார்க்குச்சி போடவே, எழுந்து நடந்தார்கள். ஆரம்ப வேகம் நடையில் சேரவில்லை.
நின்று நின்று, கீழே தூரத்தில் தென்படும் தோற்றங்களை இனம் காண முயன்று அது இந்த ஊர் — இல்லை அந்த ஊர் என்று வாக்குவாதம் செய்து நேரம் போக்கியவாறே நடந்தார்கள்.
“ஏ, சீக்கிரம் போய்ச் சேரணும், யானை வந்தாலும் வந்திடும்” என்றார் ஒருவர்.
இந்தா வனமா மண்டி வளர்ந்து கிடக்குதே, இது தான் எலிபன்ட் கிராஸ், இங்கே உள்ளவங்க சுக்குநாறிப்புல் என்பாங்க. யானைகளுக்கு ருசிகரமான தீனி. மலைப்பகுதிகளில் இந்தப் புல்லுக வளர்ந்து செழித்ததும், யானைகளின் நடமாட்டமும் அதிகமாயிடும். இந்தப் புல்லைத் தின்ன, தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் யானைகள் திரியும்.”
விஷயம் தெரிந்த ஒருவரின் இந்தப் பேச்சு மற்றவர்களுக்கு பயம் விதைத்தது. அவர்கள் கால்களில் வேகம் கூடியது.
“ஏய், யானை வந்திருக்கு!” என்று ஒருவர் அச்சக் குரல் கொடுத்தார்.
“எங்கே எங்கே?” என்று பதறி அங்குமிங்கும் பார்த்தார்கள் பலர்.
“எப்பவோ வந்து போயிருக்கு. இந்தா பாரு பாதையிலே – லத்தி காஞ்சு கிடக்குது” என்றார் அதை முதலில் கண்டவர்.
“இதோ இங்கே யானை லத்தி.”
..இது ரொம்பவும் காஞ்சு போனது. யானை ஏழெட்டு நாளைக்கு முன்னாடி வந்திருக்கும்”
“இங்கே பச்சையாக் கிடக்கு. நேற்றுப் போட்டதாக இருக்கும்.
யானை லத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்ட பாதசாரிகளின் பேச்சு, யானை வந்துவிட்டால் எப்படித் தப்பி ஓடுவது என்ற பிரச்னையை தொட்டது.
யானையைக் கண்டுவிட்டால் நேராக ஓடக்கூடாது. வளைஞ்சு வளைஞ்சு ஓடணும். அப்பதான் யானையாலே வேகமாப் பின் தொடர முடியாது என்றார் ஒருவர். மரத்து மேலே ஏறிவிடணும் என்று வேறொருவர் சொன்னார்.
“பிரயோசனப்படாது. யானை அலக்கா மரத்தைப் பிடுங்கி எறிஞ்சிடும். பள்ளமா இருக்கிற இடத்திலே குதிச்சால் தப்பிப் பிழைக்கலாம்” என்று இன்னொருவர் கூறினார்.
‘அதுகூட ஆளைக் காப்பாற்றாது. போன வாரம் பாருங்க. இப்படித்தான் ஒருத்தன் யானையைக் கண்டதும் பள்ளத்திலே குதிச்சான், யானை என்ன பண்ணிச்சி தெரியுமா? சரிவிலே சாய்ந்து சர்ருனு வழுக்கி இறங்கி, அவனை பாறையோடு பாறையாக வச்சுக் குத்தி, நசுக்கி ஐயோ, பாவம்! அவன் துவையல் ஆயிட்டான்’ என்று, கூட இருந்து கண்டு களித்தவர் போல், விண்டுரைத்தார் ஒரு அண்ணாச்சி.
– அண்ணாச்சியா பிள்ளே, அப்ப நீங்க எங்கே நின்னு பார்த்துக்கிட்டிருந்தீக? என்று அவரை யாரும் குறுக்கு விசாரணை பண்ணவில்லை. அதிகமாகக் குழப்பமும் கலவரமும்தான் அடைந்தார்கள்.
“சரிசரி, வேகமா நடங்க, சாத்தாவுக்கு பொங்கல் போட்டுவிட்டு, நாம் இருட்டுறதுக்கு முன்னாடி செங்கல் தேரி பங்களாவுக்குப் போயிடணும், ராத்திரி பங்களாவிலே தங்குறதுதான் நல்லது. பாதுகாப்பா இருக்கும். கதவுகளை சிக்குனு சாத்திக்கிட்டு உள்ளே கம்னு இருக்கலாம். எந்த மிருகமும் நம்மை எதுவும் செய்ய முடியாது” என்று வழி வகுத்துக் கொடுத்தார் கோஷ்டியின் தலைவர் மாதிரி செயலாற்றி வந்தவர்.
எந்த உந்துதல் அவர்களைத் தள்ளிச் சென்ற போதிலும், எவ்வளவு வேகமாக அவர்கள் நடந்து முன்னேற முயன்ற போதிலும், சாத்தா இருந்த மேட்டை அடைவதற்கே பிற்பகல் மணி இரண்டு ஆகிவிட்டது.
சாத்தா, இதர தேவதைகள், குதிரை, யானைகள், சப்த கன்னியர் என்று ஏகப்பட்ட சிலைகள் ஒரு மேட்டின் மீது நின்றன.
மேட்டை ஒட்டி சமவெளி, புல்தான் புதர்புதராக மண்டிக் கிடந்தது. சிற்சில குத்துச் செடிகளும் அங்கங்கே காணப் பட்டன. ஓங்கி வளர்ந்த பெரிய மரங்கள் எல்லாம் இந்தப் பகுதியில் இல்லை. சுக்கு நாறிப்புல் ஒரு ஆளின் மார்புக்கு வருகிற அளவு ஓங்கி வளர்ந்து அடர்த்தியாகத் தென்பட்டது. நெடுகிலும், அதனுள் காட்டு மிருகங்கள் பதுங்கி வந்தாலோ மறைந்திருந்தாலோ, எவரும் கண்டுகொள்ள இயலாது.
சற்று தள்ளி – சுமார் ஒரு பர்லாங் தொலைவில் – சிறு – ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரைகளிலும், புறங்களிலும் மரங்கள் செறிந்து வளர்ந்து நின்றன பெரிய பெரிய கற்களினூடே ஓடுவதனாலும், இடைக் கிடை மேடுகளிலிருந்து பள்ளங்களில் வீழ்வதனாலும் ஆறு தனிரக இசை போன்ற ஒரு ஓசையை ஓயாது ஒலி பரப்பியவாறிந்தது.
யானைகள் புல்லைத் தின்ன வரும்… இந்த ஆற்றிலே தண்ணீர் குடிக்க புலி, கரடி எல்லாம் வரும் இப்படி ஆளுக்கு ஆள் ஒன்றைச்சொல்லி, தங்கள் உள்பயத்தை தாங்களே அதிகப்படுத்திக் கொண்டார்கள் “சாத்தா பிரீதி” செய்ய வந்தவர்கள்.
கீழே உள்ள ஊர்களுக்கு மலை விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் அந்த மலைச் சாத்தாதான் காப்பாற்றுகிறார்; காலாகாலத்தில் மலை மீது மழை பெய்ய வைத்து, ஆறுகளில் மிகுதியாக நீர் ஓடும்படி செய்து, தரை மீதுள்ள ஊர்களில் நடைபெறும் விவசாய அலுவல்களுக்கு அவர் தான் உதவி புரிகிறார் என்பதுமலை அடிவார ஊர்மக்களின் நம்பிக்கை. தலைமுறை தத்துவமாகக் கிராமவாசிகளின் உள்ளத்தில் ஊறி வளரும் நம்பிக்கை இது.
சாத்தாவுக்கு நன்றி அறிவிப்பதுபோல், கிராமவாசிகள் தேர்ந்தெடுத்த சில பேரை மலை மீது அனுப்பி, வருஷத்துக்கு ஒரு தடவை சிறப்பாக பூஜை பண்ணி வரும்படி செய்வார்கள். மழை பெய்யாமல் போனாலும், ஊர்களுக்குள் புலி, கரடி, யானை போன்ற மிருகங்கள் புகுந்து சேதம் விளைவித்தாலும், சாத்தாவுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது என்று கருதி விசேஷமாக பூஜை பண்ண முன் வருவார்கள்.
பயத்தின் மீது வளரும் இந்த பக்தி காரணமாக, சாத்தாவுக்கு செய்யப்படும் பூஜை நியதிகளில் எதையும் குறைத்துவிட அவர்கள் துணிவதில்லை.
ஆற்றிலிருந்து குடம் குடமாகத் தண்ணீர் கொண்டு வந்து எல்லாச் சிலைகளையும் குளிரக் குளிர அபிஷேகம் செய்வார்கள்…இளநீர், பால், எண்ணெய் மஞ்சள்பொடி என்று அபிஷேக அயிட்டங்கள் அதிகமாகவே இருக்கும். முடிவில், பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்த அபிஷேகம். மீண்டும் குளிர் நீர்க் குளிப்பாட்டு, அப்புறம் நெவித்தியம்’ (நிவேதனம்) தீபாராதனை எல்லாம் ஏகதடபுடல்தான்.
சாத்தாவுக்கு வடைமாலை சாற்ற வேண்டும். பூம்பருப்பு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் படைக்கவேண்டும். இவற்றை எல்லாம் மலைமீது வந்து தான் தயாரிக்க வேண்டும். இதற்குத் தேவையான சகல பொருள்களையும் மூட்டைகட்டி ஆட்கள் சுமந்து வருவது தான் வழக்கம்.
முதலாவது பெரிய பூசை செய்து முடித்த உடனேயே இரண்டாவதாக ஒரு பூஜையும் செய்யவேண்டும். சிறு அளவில். இதற்கு பாயாசமும் சுண்டலும் நிவேதிக்கப்படும்.
பூஜைகளில் எதைக் குறைத்தாலும், அவசரப்பட்டு எதையாவது செய்யாமல் விட்டு விட்டாலும், “சாத்தா கோபித்துக்கொள்வார், ஊர்களுக்கு தீமை விளையும்” என்று மக்கள் பயப்பட்டார்கள். அதனால், எவ்வளவு நேரம் ஆயினும், இருந்து ஆர அமர ‘சாத்தா ப்ரீதி’ செய்வதுதான் பக்தர்களின் நியதியாக அமைந்திருந்தது.
இப்போதும் குறைவற பூஜைகளை நடத்தினார்கள். “நெவித்தியங்கள்” தயாரிக்கவே மிகுந்த நேரம் ஆயிற்று. அப்புறம் ஆற்றில் குளித்துவிட்டு, நீர் கொண்டு வந்து சிலைகளைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, தீபாராதனை பண்ணி… இல்லையா, ஏகப்பட்ட வேலைகள்? அவை முடிந்ததும், பிரசாத விநியோகம், சாப்பாடு, அதன் பிறகு இரண்டாவது பூஜைக்கு ஆயத்தம்… இப்படிச் சிறுகச் சிறுக நேரம் காலியாயிற்று.
“இருட்டுறதுக்குள்ளே ரெண்டாவது பூசையை முடிச் சுட்டு, செங்கல்தேரி பங்களாவுக்கு போகப் பார்க்கணும்” என்று ஒவ்வொருவரும் அடிக்கடி சொல்லிக் கொண்டாலும், எல்லோரும் பறந்து பறந்து காரியங்களை கவனித்த போதிலும், பூஜை முடிவதற்குள் இருட்டு வந்துவிட்டது. காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தோடுவது போல் தான் தோன்றியது அவர்களுக்கு.
அவர்கள் இருந்த இடத்திலிருந்து பங்களா இரண்டு மைல் தள்ளி இன்னொரு மலைமுகட்டில் அமைந்திருந்தது. சுற்றி வளைத்து இறங்கி ஏறிச் செல்ல வேண்டிய கடின மான நடைவழிதான். இருட்டில் அந்தப் பாதை வழியே போக முடியாது.
இரவு முழுவதும் சாத்தா மேட்டில் தங்கியிருப்பது தவிர வேறு போக்கு கிடையாது, வருவது வரட்டும் என்று துணிந்தார்கள் அவர்கள்.
அவர்களிடம் இரண்டு அரிக்கன் லாந்தர்கள் இருந்தன. மூன்று பேர் ‘பேட்டரி லைட்’ வைத்திருந்தார்கள்.
முன்னிரவில் மிருகங்களின் நடமாட்டம் இராது. இருள் கனக்க கனக்கத்தான் புலிகளும் மற்ற மிருகங்களும் சஞ்சரிக்கத் தொடங்கும். இப்போதைக்கு அரிக்கன் லாம்புகள் போதும். சாத்தா முன்னாலே ஒரு தீப்பந்தம் எரிய விடுவோம். பழைய துணிகள், கிழிந்த கோணிகளை எல்லாம் சுருட்டி, கைவசம் மிச்சமிருக்கிற எண்ணையை ஊற்றி, தீ வைப்போம்’ என்று குழுவின் தலைவர் யோசனை கூறினார்.
உடனடியாக அது அமுல் நடத்தப்பட்டது.
லாந்தர்களின் மங்கலான வெளிச்சம், எங்கும் கவிந்து தொங்கிய இருளின் ஆழத்தை புலப்படுத்தியது. தீப்பந்தத்தில் குதித்தாடி எறிந்த நெருப்பு நாக்கு, சிலைகள் மீதும் சுற்றிலும் விசித்திர நிழல்களைப் பூசியது.
அனைவரும் பூஜை முடிந்ததுமே தத்தமது வயிற்றுப் பாட்டைப் பூர்த்தி செய்து விட்டதால் இப்போது அவர்களுக்கு முக்கிய வேலை எதுவும் இல்லை. துண்டை விரித்து நீட்டி நிமிரலாம். உடம்புக்கு ஓய்வு தேவை. பங்களாவில் இருந்தால் தூக்கம் தானாக வந்து இமைகளை தழுவி அவர்களை சொக்க வைத்திருக்கும். இந்த இடத்தில் தூக்கம் எப்படி வரும்? குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. நேரம் ஆக ஆகக் குளிரும் அதிகரிக்கும். குளிரின் கொடுமையை விட, கொடிய வன மிருகங்களின் பயம் உள்ளத்தையும் உடலையும் அதிகம் நடுங்க வைப்பதாயிருந்தது.
பூஜை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அநேகர் கவனித்துக் கொண்டிருந்தபோதே, சிலர் சுற்று வட்டாரத்திலும் ஆற்றோரத்திலும் அலைந்து திரிந்து சுள்ளிகள் கொம்புகள், சருகுகள், சிறு சிறு கட்டைகள் என்று பலவித மான எரிபொருள்களையும் சேகரம் செய்து குவிந்து வைத் திருந்தார்கள். தேவைப்படுகிற சமயத்தில், தீ மூட்டி, குளிர் காயலாமே என்றுதான்.
பத்துப் பேரும் சாத்தா மேட்டில் உட்கார்ந்து வம்ப ளந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் ஊர்க்கதை, பழங் கதை பேசினார். இன்னெருவர் சுவாரஸ்யமாக யார் எவளோடு போனான், எவள் எவனோடு தொடர்பு கொண்டு ஓடினாள் என்ற தன்மையில் காதல் விவகாரங்களை விவரமாக வர்ணித்தார். திருடன், கொலை, சாவு போன்றவற்றை எடுத்துச் சொல்லி மகிழ்வு கண்டார் ஒருவர். மலை மீது நடந்த வேட்டை, அனுபவங்கள். ஊருக்குள் புகுந்து விட்ட மிருகங்களின் அட்டகாசங்கள் பற்றி வேறொருவர் சொன்னார்.
“சும்மா பேசிக்கொண்டிருப்பதைவிட, சீட்டாடினால் இன்ட்ரஸ்டாக இருக்குமே. தூக்கமும் வராது” என்று ஐடியா கொடுத்து, துணைக்கு மூன்று பேரைச் சேர்த்து ஒரு அரிக்கன் லாந்தரையும் எடுத்துக் கொண்டு தனிக்குழு அமைத்து விட்டார் ஜாலி பிரதர் ஒருவர்.
எல்லாரும் முழிச்சுக் கிட்டிருந்தா எல்லாருக்கும் ஒரே அடியாத் தூக்கம் வந்துடும். டர்ன் வச்சு ஒன்றிரண்டு பேரு தூக்கம் போடுவோம். ரெண்டு மூன்று மணி நேரம் கழிச்சதும், வேறு சில பேரு தூங்கலாம். முதல்லே தூங்கினவங்க முழிச்சுக்கிட்டு உட்கார்ந்து காவல் காக்கலாம் என்று யோசனை சொன்ன ஒருவர் சரியான தூக்கப்பிரியர். இரண்டாமவரின் ‘வழி மொழி’ தலையோ, இதரர்களின் அங்கீகரிப்பையோ எதிர்பாராமல், தனது தீர்மானத்தை உடனடிச் செயலாக்கினார்.
இருட்டு பயங்கரமாக இருந்தது. வானத்திலே ஒளிப் பூக்கள்
கண் சிமிட்டவில்லை. மேகப்படுதா விண்ணின் அற்புதங்களை மூடி மறைத்திருந்தது. குளிர்ந்த காற்று ‘ஊஸ்-ஊஸ்’ எனப் பெருமூச்சுயிர்த்து ஊர்ந்து கொண்டிருந்தது.
“மழை வராது. இந்த நிலையில் மழைவேறு வந்து விட்டால் நம்ப பாடு ரொம்பவும் சிரமந்தான்.” சாத்தா மேட்டில் விழித்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரின் நினைப்பும் இதுவாகவே இருந்தது.
பக்தர் கோஷ்டியின் தலைவராகப் பணியாற்றியவர். ஒரு போர்வையினால் உடலை மூடி, துண்டினால் தலைப் பாகை கட்டிக்கொண்டு, கைகளை குளிருக்கு இதமாகச் சேர்த்து கட்டியவாறு, அப்படியும் இப்படியும் நடந்தார். அவ்வப்போது டார்ச் லைட்டை அடித்து, சுற்றுப்புறம் நெடுகிலும் ஒளி வீசி, கூர்ந்து கவனித்தபடி இருந்தார். எந்தப் பக்கத்திலிருந்து எந்த மிருகம் எப்படி வருமின்னு யாருக்குத் தெரியும் என்று அவர் மனம் முணுமுணுத்தது.
“எதுக்கும் முன்னெச்சரிக்கையா தீயைக் கொளுத்தி போடுவோம். சருகு செத்தை எல்லாம்தான் நிறைய இருக்குதே!” என்று அவர் எண்ணினார்.
இரண்டு ஆட்களை அழைத்து, மேட்டைச் சுற்றிலும் சருகு, சுள்ளி, குச்சி, கொம்பு வகையராவை வேலி மாதிரி பரப்பும்படி ஏவினார்.
சூழ்நிலையில் நிசப்தமே நிலவியது. மரங்கள் மண்டிய மலைப் பகுதிகளில் எப்போதும் நானா விதமான பறவைகளின் கூச்சலும், ரகம் ரகமான வண்டுகளின் ஒலிகளும், மலை அணில்களின் விசித்திரமான கீச்சிடுதலும் எழுந்து பரவும். இரவு நெருங்கும் சமயத்தில் கூச்சல்கள் அதிகரித்துக் கதம்ப ஒலியாய்க் குழம்பும், ராத்திரி நேரத்தில் இரவுப் பறவைகளின் ஒலிகளும் வண்டுகளின் இரைச்சலும் கேட்டுக் கொண்டேயிருக்கும். இவற்றுக்கெல்லாம் பின்னணி இசைபோல் ஆற்று நீரோற்றத்தின் சத்தம் ஓயாது ஒலிக்கும்.
ஆனால், சாத்தா மேட்டுப் பகுதியிலோ எவ்விதமான இரைச்சலும் இல்லை. சற்று தொலைவில் ஓடிய ஆற்று நீரின் ஓசைதான் தனி ரக இசையாக ஒலித்துக் கொண்டிருந்தது. இரவின் ஆழ்ந்த அமைதியினூடே அந்த ஓசை பகல் நேரத்தைவிட கனமேற்று ஒலித்தது. இடையராத அந்தச் சத்தம் சிலருக்கு அச்சம் ஊட்டுவதாகவும் இருந்தது.
பகலில் “இறக்கை கட்டிக்கொண்டு பறப்பதுபோல்” தோன்றிய நேரம், இப்போது வானத்தின் கீழ் இருட்டிலே விழித்திருந்தவர்களுக்கு, நத்தை மாதிரி ஊர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.
“சே, மணி ஒன்பதரைதான் ஆகுது” என்றார் தனது ரிஸ்ட் வாட்சை டார்ச் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்ட ஒருவர்.
‘செங்கல்தேரி பங்களாவிலே இருக்கணும் இந்த நேரத்திலே!” என்று முனகினார் ஒருவர்,
“அதுக்கு ஏன் அண்ணாச்சி, செங்கல்தேரிபங்களான்னு பேரு வந்தது? மலைமேலே கொண்டு போயி யாரு அதைக் கட்டினாங்க?” என்று விசாரித்தார் ஒரு நபர்.
‘அண்ணாச்சி’ என்று எல்லோராலும் அழைக்கப் பட்ட குழுத்தலைவர் பதில் அளிப்பதற்கு முன்னதாக, எல்லா விஷயங்களைப் பற்றியும் கூடவோ குறையவோ தெரிந்து வைத்திருந்த அறிவாளி அவசரமாக விளக்கலானார்:
தேரி என்றால் மேடு என்று அர்த்தம். மலை மேலே உள்ள எஸ்டேட் கட்டிடங்கள் கட்டுவதற்கு அந்த இடத்திலே தான் மண் எடுத்து செங்கல் சூளை போட்டு, செங்கல் தயாரிச்சாங்க. அதுனாலே அந்த மேட்டு நிலத் துக்கு செங்கல் தேரியின்னு பேரு ஏற்பட்டது. அங்கே இருக்கிற பங்களா வெள்ளைக்காரங்க காலத்திலே கட்டப் பட்டது. மலை மேலே காடுகள் எஸ்டேட்டுகளை பரிசோதிக்க வெள்ளைக்கார ஆபீசருக வருவாங்க. அவங்களுக்கு மலைகள், கடல்கள் என்றாலே ரொம்பப் பிரியம். இந்த இடத்திலே தோற்றமும் கிளை மேட்டும் கொடைக்கானல் மாதிரி இருக்கும். ஆகவே இங்கே நாலைஞ்சு நாள் தங்கிப் போகலாமே என்கிற ஆசையோடு அவங்க அருமையான இடத்திலே வசதியாக பங்களா கட்டி வச்சாங்க, இப்போ அது பெரும்பாலான நாட்கள் அடைச்சே கிடக்குது. எப்பவாவது மலைமேலே ஏறி வரக்கூடிய யாராவது பங்களாவிலே தங்க வேணுமின்னா, கீழே உள்ள வனத்துறை அலுவலகத்தில் பணம் கட்டி, அனுமதி பெற்று, சாவியும் வாங்கிக் கொண்டு வரணும். நாம் அப்படி வாங்கி வந்திருக்கோம். இருந்தாலும், அங்கே போக முடியாமல், திறந்த வெளியிலே குளிரிலே கிடந்து அவஸ்தைப் படணுமின்னு ஆயிட்டுது எல்லாம் காலம் செய்கிற வேலை!’
ஒரு மாதிரியாக அவர் பேச்சை நிற்பாட்டியதும், “குளிருக்குப் பாதுகாப்பா தீ மூட்டிக்கிட்டா போச்சு!” என்று கூறி, சுற்றி வரக் குவிக்கப்பட்ட சருகுகள் சுள்ளிகளில் நெருப்பு வைத்தார் அண்ணாச்சி.
தீ சிறுகச் சிறுகப் பற்றியது. அணைந்து விடுவதுபோல் பம்மி, குபீரென்று எவ்விப் படர்ந்தது. புகைக் கக்கியது. ஒளி நாக்குகள் நீட்டி நர்தனமிட்டது. அகப்பட்டதை நக்கி வலிமை பெற்றது. அங்கும் இங்குமாய் தாவிக் குதித்து நெடுகிலும் பாய்ந்து பரவியது. செம்மையாய் சிரித்தது.
மேட்டின் மீதிருந்த மனிதர்களுக்கு உஷ்ணமும் தைரியமும் அளிக்கும் ஒளி வளையமாக தீ வட்டமிட்டு மிளிர்ந்து எரிந்து கொண்டிருந்தது.
“இப்படி எவ்வளவு நேரம் எரியும்? மேலும் மேலும் தீ எரிவதற்குத் தேவைப்படும் கட்டைகள் நம்மிட இல்லையே!” என்று வருத்தப்பட்டார் ஒருவர்.
“எரிகிறவரை எரியட்டுமே, இப்பவே நாம் ஏன் வீணாகக் கவலைப் படணும்?” என்று அண்ணாச்சி சொல்லி வைத்தார்.
நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது.
“டீ அல்லது காப்பி தயாரித்துக் குடித்தால் இந்த நேரத்துக்கு உற்சாகமாக இருக்கும்” என்று ஒருவர் அபிப் பிராயப் பட்டார்.
“தயாரிக்கலாமே!” என்ற அண்ணாச்சி, சமையல் நிபுணரை ஏவுவதில் உற்சாகம் காட்டினார்.
‘சுக்கு வெந்நீர்தான் ஜோராக இருக்கும்’ என்று வேறொருவர் திருத்தம் கொண்டு வந்தார்.
‘கடுங்காப்பி’ (பால்சேராத கறுப்புக் காப்பியே) போதும் என்று மெஜாரிட்டி தீர்மானித்தது.
அது செயலில் நிறைவேறியது.
தூங்கிக் கிடந்த தூக்கப்பிரியர்கூட காப்பி என்ற பேச்சினாலும், அதன் நறுமனத்தினாலும் தாக்கப் பெற்று விழிப்படைந்தார். தமது பங்குக் காப்பியை இழந்துவிட அவர் தயாராக இல்லை.
அவரை பரிகசித்து, உரக்கக் சிரித்து உள்ளாசமாகப் பொழுது போக்கிய வேலையில்தான் அவர்களது கவனம் ஈர்க்கப்பட்டது. எவரேனும் ஒருவரது ஜாக்கிரதை உணர்ச்சியாலோ நெருங்கி வந்த ஆபத்து பலரது உடலில் உள்ளூர ஏற்படுத்திய ஒருவித உணர்வினாலோ, அது தெரிய நேர்ந்திருக்கலாம். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்கள் அவசரமாய் வெடித்தன:
“ஏய், அங்கே என்ன அது என்ன?”
“என்னது, எங்கே?” என்று பலர் பதறினர். பார்வையால் இருட்டைத் துழாவ முயன்றனர்.
“அதோ கருப்பாத் தெரியுதே… தீக் கங்குகள் மாதிரி ரெண்டு மினுமினுக்குதே, அது கண்களாகத்தான் இருக்கணும்… புலியோ என்னவோ…” ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றை சொன்னார்கள்.
சிலர் தீயைக் கிளறி, பிரகாசமாய் எரியும்படித் தூண்டி விட்டார்கள்.
அது நெருங்கி வந்தது. தீயின் சூடு உறைக்கும் எல்லைக்கு வந்து நின்றது. எல்லோருக்கும் தெளிவாகப் புலனாயிற்று புலிதான்.
பெரிதாக எரியும் தீ வளையத்தினுள் பத்திரமாக இருந்தபோதிலும், புலியைக் கண்டதுமே மனிதர்களுக்கு உதரல் எடுத்தது. சிலர் அருகில் இருந்தவர்களோடு ஒட்டி நெருங்கி, தங்கள் பயத்தை சமாளிக்க முயன்றார்கள்.
புலி எரியும் நெருப்பின் அருகே நின்றது. சோம்பல் முரிப்பதுபோல் உடலை நீட்டி நெளித்தது. வேதனைப் படுவது போல் உறுமியது. கொட்டாவி விடுவது மாதிரி வாயை அகலத் திறந்து மூடியது. மீண்டும் திறந்தது. நெருப்பின் பக்கமாக நெருங்கி வாயைப் பிளந்து கொண்டு நின்றது.
அதன் கோரமான கூரிய பற்கள் மனிதரின் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தின.
நடமாடும் கலைக் களஞ்சியம் போன்ற அறிவாளி தனது ஞானத்தை வெளிச்சமிடத் துணிந்தார்.
இந்தப் புலி ஒண்ணும் பண்ணாது.
பொதுவா, புலிகள் எதையும் அடித்துக் கொன்று உடனடியாகத் தின்பதில்லை. கொல்லப்பட்டதை இழுத்துக் கொண்டு போய் ஒரு இடத்தில் வைக்கும். அந்தச் செத்ததின் இறைச்சியை பிறகு சாவகாசமாய்த் தின்னும். அந்த இறைச்சியில் புழு, கிருமிகள் உண்டாகிவிடுவதும் உண்டு. அப்படித் தின்கிற இறைச்சி புலியின் பற்களில் – இடை வெளிகளில் புகுந்து தங்கியிருக்கும். அவற்றில் புழு பூச்சிகள் மிகும். அவை புலிக்கு வேதனை தரும். அந்த நோவு தீர்வதற்தாக புலி நெருப்பு முன் நின்று வாயைப் பிளக்கும். சூடு இதமாக இருக்கும். அது மட்டுமல்ல, அந்தச் சூடு பட்டுப் புழு பூச்சிகள் செத்துப் போவதும் உண்டு. மிருகங்கள் தாமாகவே உணர்ந்து வைத்திருக்கிற இயற்கை வைத்தியம் இது. இந்தப் புலியும் பல்வலியால் ரொம்பவும் சங்கடப் படுவதாகத் தெரிகிறது. அதற்கு சிகிச்சை பெறத்தான் தீயை தேடி வந்திருக்கிறது.”
“இருக்கலாம். ஆனாலும் நமக்கு பயமா இருக்குதே!” என்றார் ஒருவர் – பலருக்கும் நடுக்கம்தான்.
புலியின் உருவமும், அதன் பயங்கர முகமும், கண்களும் பற்களும் பார்த்து ரசிக்கப்பட வேண்டியனவாய் தோன்ற வில்லை அங்கே இருந்தவர்களுக்கு. ‘அது என்ன செய்யுமோ? தீ அணையத் தொடங்கினால், புலி தாவி வந்து தாக்கக் கூடுமே! தீ எவ்வளவு நேரம் எரிந்து கொண்டிருக்கும்?- நெஞ்சில் பயிராகிவிட்ட பயத்தை வளர்க்கும் சத்துக்களால் எத்தனையோ ஐயப்பாடுகள்! ‘
அண்ணாச்சி துணிந்து ஒரு காரியம் செய்தார். எரிந்து கொண்டிருக்கும் கொம்பு ஒன்றை உருவி எடுத்து புலியை நோக்கி விட்டெறிந்தார்.
அவரைப் பின்பற்றி மற்றும் சிலரும் தீக் கொம்புகளை வீசினார்கள்.
புலிமீது ஒன்றும் படவில்லை.
ஆனால், எதிர்பாராதது நடந்தது.
அங்கும் இங்குமாய்ச் சிதறி விழுந்த நெருப்புக்கட்டைகள் புல் புதர்களுக்குத் தீ மூட்டின.
தீ வேகமாய் பொங்கி எரிந்தது. அடர்த்தியாய் மண்டிக் கிடந்த புல்களினூடே உற்சாகமாய் துள்ளி விளையாடத் தாவியது. நெடுகிலும் பரவியது, பாய்ந்து பரவும் தீயைக் கண்டு மிரண்டது புலி. அவ் வேளையில் எவரோ எறிந்த தீக்கொம்பு ஒன்று அதன் உடம்பில் படவும், அது வேதனையால் உறுமியது. முன்னும் பின்னும், அங்கும் இங்குமாக ஒளிவீசிக் குதித்தாடிய தீயைப் பார்த்து உறுமியவாறே, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வோடு, இருட்டின் பக்கம் ஓடியது. ஓடி மறைந்தது.
வனமாக வளர்ந்து கிடந்த புல் புதர்களினூடே ஒய்யார நாட்டியம் பயின்று முன்னேறிச் சென்றது. பெருந் தீயாகக் கிளைத்துத் தாவி உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அழகாகவும், அச்சமூட்டுவதாகவும் இருந்தது அது.
“இனிமேல் பயமில்லை. இந்தத் தீ லேசிலே அணையாது. எந்த மிருகமும் அதைத் தாண்டி நம்ம பக்கம் வந்து விடமுடியாது இனிமேலே” என்று சந்தோஷப்பட்டார் அண்ணாச்சி.
‘சாத்தா கிருபை நமக்கு இருக்கையிலே நாம ஏன் கவலைப்படணும்?” என்று பக்தர்கள் முணுமுணுத்தார்கள்.



