
மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
1. சத்திய தரிசனம்
சதானந்தத்தை குழப்பம் ஆட்கொண்டு விட்டது! பல ரகமான எண்ணங்கள் அலைமோதின அவர் உள்ளத்திலே. சென்ற சில மணி நேரத்தில் அவரது காதுகள் கிரகித்துத் தந்த பலவித சிந்தனை ஒலிபரப்புகளும் அவருடைய எண்ணங்களோடு குழம்பி அவர் மன அமைதிக்குச் சங்கு ஊதின.
சதானந்தத்துக்கு முக்கியமாக தேவை மன அமைதி. சிந்தனைத் தெளிவு ஏற்படுவது இருக்கட்டும். எண்ணக் குழப்பங்கள் தலைவலியும் உளவேதனையும் தந்துவிடும் போல் தோன்றவே, அவர் தனியாக விலகி நடக்கத் தொடங்கினார். அமைதி பெறுவதற்காகத்தான்.
அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுற்றிருந்தன. அவரை யாரும் தேடப் போவதில்லை. தேடினால்தான் என்ன? அவருடைய ‘இல்லாமை’ பெரும் குறையாக உணரப்பட மாட்டாது. அப்பெருங் குழுவிலே. ‘உயர் குழு’ என்றும் சொல்லலாம்.
அங்கு விசேஷமாகக் குழுமியிருந்த அனைவரும் பெரிய வர்கள், மகாப் பெரியவர்கள்! அப்படி ஒவ்வொருவரும் நம்பி யிருந்தனர். சாதாரண மக்களை அப்பாவிகள் என்றும், அறியாதவர்கள் என்றும், மடையர்கள் என்றும் மதித்து, தங்களைத் தாங்களே மிக உயர்ந்தவர்களாகக் கருதிச் செயல் புரிகிறவர்கள். அவர்கள் பண்பினால் பலப்பலர். தொழிலால் ரகம்ரகமானவர்கள். டாக்டர் பேராசிரியர் வக்கீல் பெரும் வியாபாரி செல்வர், பத்திரிகை முதலாளி – இப்படிப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, வெற்றிகரமாக வாழ்க்கையை அனுபவிக்கிறவர்கள். இம்முறையில் அவர்கள் அந்த இடத்தில் கூடியிருக்கவில்லை. சிந்தனையாளர், வேதாந்தி, தத்துவதரிசி, ஆன்மீகவாதி, ‘இன்டெலக்சுவல்’ என்று ஒருவரை ஒருவர் அறிந்து பழகி வந்த அவர்கள் இருளிலே ஒளியைத் தேடுவது; காலவெள்ளத்தில் நிலைபெறும் வழியை நாடுவது’ என்கிற ஒரே தாகத்தினால் ஈர்க்கப்பட்டு அங்கே வந்து கூடி இருந்தார்கள்.
கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளவும், ஒவ்வொருவரது சிந்தனைச் சிற்றொளி சிதறுகிற மின்வெட்டுகளைத் திரட்டி அறிவுப் பேரொளி கண்டு ஆத்மதீபத்தை அணையாது வளர்க்கவும், வாழ்க்கையின் மெய்ப்பொருள் உணர்ந்து, அதைப் பற்றுக் கோடாகக் கொண்டு மண்ணிலே விண்ணகம் அமைக்கவும் அவாவுற்ற உயர்பண்பினருக்கு ஏற்ற மிக அருமையான சூழ்நிலையாக வாய்த்திருந்தது அந்த இடம்.
அழகான, இனிமையான, குளுமை நிறைந்த, இயற்கை வளம் செறிந்த சூழல்தான். ஜீவந்தி நிறைவோடு நடை பயின்று கொண்டிருந்தது ஒரு பக்கத்தில். கண்ணெட்டும் தூரமெலாம் அது தந்த வளமை பசுமையாய், இனிமையாய், கண்ணுக்கு விருந்தாய் பரந்து கிடந்தது. நெடுந் தொலைவிலே மலைத்தொடர் கருநீலமாய் காட்சி தந்தது. வானம் நீலமாய் விரிந்து கிடந்தது. மரங்களுக்குக் குறைவே கிடையாது. இயற்கை அமைதியாய் கம்பீரமாய் கொலு விருக்கும் சந்நிதியில் நிற்பதுபோல் ஒரு மனநிறைவும் புனித உணர்வும் ஏற்படும் அந்த சூழ்நிலையில்.
அவர்கள் தேர்ந்தெடுத்த இடமும் அத்தன்மையானது. வெயில் எங்கும் சுட்டெரித்துக் கொண்டிருந்தாலும் அதன் கொடுமை தாக்க முடியாது அந்த இடத்தில். அடர்ந்த நிழல் சிந்தும் பெரும் மரங்கள் மிகுந்த தோப்பு அது. சதா குளுகுளு என்றிருக்கும். மென்காற்றும் நிழலும் உடலுக்கு இதமும் உணர்வுக்கு சுகமும் தரும் அந்தச் சூழலில் உள்ளம் கிளுகிளுக்கும். உயர் எண்ணங்களிலே சஞ்சரிக்கும் சுபாவ முள்ள அந்தப் பெரியவர்கள் தங்களைத் தாங்களே வேத் காலத்து மகான்கள் என்றும், ஞானவேள்வி புரியும் தற்கால ரிஷிகள் என்றும் கற்பித்து மகிழ்ந்து போனதில் வியப்பு இல்லைதான்.
வெவ்வேறு ஊர்களில் சிதறிக் கிடந்த அந்த ‘ஞானச் செல்வர்’ பலரையும் அங்கே குழுமச் செய்து வயிற்றுக்கு உணவும், வாய்க்கு வேலையும் செவிக்கு விருந்தும் ஏராளமாகக் கிடைக்கச் செய்த பெருமை திருவாளர் திருமலையப்பர் அவர்களையே சாரும். அவரை ‘ஜனகர் என்றும், ‘மகாஞானி’ என்றும், ‘ஞானச் சுடர் என்றும்
அங்கே கூடிப் பேச்சு மழை பொழிந்த அறிவாளிகள் பாராட்டத் தயங்கவில்லை.
திருமலையப்பர் மகாரசிகர், மாபெரும் ஞானி. அறிவின் கருவூலம், ஞானப்பிழம்பு. இவ்வாறெல்லாம் புகழ்ந்தார்கள் பலரும். அன்றாலின் கீழிருந்து அருள் புரிந்த இறைவனின் இன்றைய உருவம ஐயா அவர்கள் என்றுகூட ஒருவர் சொன்னார். குளிர்தரு நிழலடர்ந்த தோப்பில், மரங்களின் கீழ் ‘இன்டலெக்சுவல்’ களை ஒருங்கு சேர்த்து, ஞான வேட்டையில் ஈடுபடுத்திய அறிவுச் செல்வரின் சொந்த இடம்தான் அது. அக்கிராமமே அவருக்குச் சொந்தம். பக்கத்தில் பல மைல் தூரம் வரை அவருக்குத் தோப்பும் துரவும் உண்டு; நன்செய் புன்செய் உண்டு; வீடு மனைகள் உண்டு; மக்கள் சுற்றம் உண்டு: இருந்தும் அவர் பற்றற்றவர். எனவேதான் அவர் இருபதாம் நூற்றாண்டு ஜனகர்!
ஏதோ அரசாங்க அலுவலில் பெரிய அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் திருமலையப்பர். பதவியிலிருந்த காலத்தில் அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சேர்த்த சொத்துக்கள்தான் இவை எல்லாம். அதைப்பற்றி ‘இன்டலெக்சுவல்கள்’ ஏன் கவலைப்படவேண்டும். முடிவு தான் முக்கியம்; முடிவை எய்தத் துணை புரியும் வழிகள் எப்படியும் இருக்கலாமே! இதுவும் அறிவாளி வகுத்த தத்துவம் தானே? மேலும் திருமலையப்பர் தம்முடைய பொருளாலும் அறிவாலும், வேதாந்த தத்துவ விசாரணைகளினாலும் அறிவாளிகளுக்கெல்லாம் விருந்து அளிக்கவில்லையா என்ன? அறிவொளி சுடர்விட்டுப் பிரகாசிக்க உதவுவது புனிதமான யாகம் வளர்ப்பதற்கு ஈடானது அன்றோ? ஆகவே, ஞானப் பசியர்கள் சிறு விஷயங்கள் பற்றி வீண் கவலை கொள்வதில்லை,
ஆராயப்போனால் அவர்களும் ஒரு கிளைப்பறவைகள்தானே!
பெரும் வியாபாரியின் பாங்குக்கணக்கு ஏறிக்கொண்டே போகிறது. கார், பங்களா, உயர்ரகச் சாப்பாடு – இப்படி வாழ்க்கை வசதிகள் குறைவற் உள்ளன. வாழ்க்கை யில் வெற்றி என்ற ஒருநிறைவு. அவர் கல்விமான். சுயமாகச் சிந்திக்கும் அறிவாளி அவருக்குப் பணம் சேர்வதைக் கண்டு பொறாமைப் படுகிறவர்கள் ‘கருப்புச் சந்தை கள்ள நோட்டு’ என்று முணுமுணுப்பது வழக்கம். அதைக் குறித்து அவர் ஏன் கவலைப்படவேண்டும்? உயர்ந்த சிந்தனைகளில் பறந்து ஞானத்தின் மூலத்தைக் கண்டு பிடித்தாக வேண்டிய கவலையும் கடமையும் அவருக்கு இருக்கிறதே.
டாக்டர்- ரொம்பவும் கைராசிக்காரர். திறமைசாலி. மாதத்தின் முதல் வாரத்தில் அவர் வீட்டுமுன் காத்துக் கிடக்கும் கூட்டமே விளம்பரப்படுத்தும் அவருடைய தொழில் வெற்றியைப் பற்றி. மினுமினுக்கும் பட்டாடைகளும், ஒளிவெட்டும் வைரக்கம்மல்களும், பளபளக்கும் காரில் வந்து இறங்கும். வைத்தியம் செய்து கொள்ளத்தான். டாக்டருக்கு நல்ல வரும்படி. கட்டணம் அதிகம்தான். தங்கமும் வைரமும் பட்டும் சுமக்கும் உல்லாசிகள் டாக்டர் ஃபீஸ் பற்றி ஏன் கவலைப்படுவார்கள்? பெண் வியாதிகளில், “மர்ம நோய்”களில் வேண்டாத விளைவுகளை அகற்றுவதில் அவர் தேர்ந்தவர் என்ற பேச்சு சுற்று வட்டாரத்தில் நிலவியது. இதுதான் இந்த உலகத்தை பீடித்துள்ள கெட்ட வியாதி. வெற்றிகரமாக வாழ்கிறவர்களைப் பார்த்துப் புழுங்கும்! கரியைப் பூச முயலும்! இது குறித்து
‘இன்டெலெக்சுவல்’கள் அலட்டிக்கொள்ளலாமா என்ன?
இந்த விதமாக வக்கீல், பேராசிரியர், பத்திரிகை முதலாளி,நடிப்புக் கலைஞர், கதை வசன கர்த்தா, கீதைப் பிரசங்கி முதலிய ஒவ்வொருவரைப் பற்றியும் – ஞான தாகம் கொண்ட அறிவின் செல்வர்கள் பற்றித்தான் தனித்தனியே என்னென்னவோ சொல்லப்படுவது வழக்கம். எனினும் அவர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். இதற்கெல்லாம் மேம்பட்டவர்கள் நாம். ‘வீ ஆர் எபவ் ஆல் தீஸ் திங்ஸ்!’ என்பது அவர்கள் கோட்பாடு.
இந்தக் கூட்டத்தில் சதானந்தம் சேர நேர்ந்தது சந்தர்ப் யத்தின் விளையாட்டே தான்.
அவர் அறிவுப்பசி கொண்டவர்தான். ஆனால் செல்வர் அல்ல. உலகம் எனும் சர்வகலாசாலையில் வாழ்க்கை என்கிற புத்தகத்தை ஓயாது கவனித்துக் கற்று, அனுபவ ஞானம் பெறும் ஆசை கொண்டவர். ஆனால் வாழ்க்கையை வெற்றிகரமாகக் கழித்தோம் என்று பெருமையுடன் கூறும் நிலைபெறவில்லை அவர். அறிவொளி பெற விரும்பி அவர் நூல்களை படித்துக் கொண்டே இருந்தார். அதையே இன்பமாகக்கொண்டு விட்டதால் வேறுபலவித இன்பங்களையும் பெற்ற நிறைவு அவருக்கு ஏற்பட வழி இல்லாது போயிற்று. அவர் உள்ளம் உறங்கவில்லை. சிந்தனை சோம்பிக் கிடப்பதில்லை. அவர் தன்னை ஒரு ‘இன்டெலக்சுவல்’ என்று கருதுவதுமில்லை. உலகத்தை உணர, மனிதர்களைப் புரிந்து கொள்ள, விரும்புகிற மாணவன் என்றே எண்ணிச் செயல் புரிந்தார்.
“உமக்கு நிறைய விஷயம் கிடைக்குமய்யா. நம்மோடு வாரும்!” என்று அவரையும் அங்கே அழைத்து வந்து விட்டார் கதை வசனகர்த்தா தேவப்ரியன். இவர் ரசமான ஆசாமி நடிப்பைத் தொழிலாகக்கொண்டு வாழ்க்கையையும் நடிப்புக்கு உரிய வாய்ப்பாக மதித்து, நாடகமாடி களிக்கும் நடிப்புக் கலைஞர்களோடு பழகிப் பழகி, இவரும் தினசரி நடிப்புகளில் வெற்றிகரமாக முன்னேறி வருகிறவர்.
இவருக்கு எல்லோரும் நண்பர்கள். அவர்களிடையே விசித்திரப் பண்பினர் பலர். ஆகவே, சதானந்தத்தையும் அவர் நண்பராக அங்கீகரித்து, தாராளமாகப் பழகி வந்ததில் வியப்பு எதுவும் இல்லைதான்.
சதானந்தத்துக்கு எல்லோரும் வியப்புக்கு உரியவர்களாகவும், எல்லாம் வியக்கப்பட வேண்டியவனாகவும்தான் தோன்றின. இந்த ‘மரத்தடி மாநாடு’ம் வேடிக்கையுறக் காண்பதற்கு ஏற்ற ஒரு நாடகம் போல்தான் பட்டது அவருக்கு. அது முதலில், ஆனால் நேரம் ஆக, ஆக விவாதங்களும் விளக்கங்களும் சூடுபிடித்து வளர வளர, அவருடைய உள்ளத்தில் அலைகள் மோதலாயின.
வாழ்க்கையைப் பற்றித்தான் பலரும் பேசினார்கள். ஒவ்வொருவர் பேச்சிலும் மரணம் என்பது முக்கிய இடம் பெற்றது. மரணத்தை வெல்ல வேண்டும்; வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் – இதுவே அங்கு குழுமியிருந்த ‘இன் டலெக்சுவல்’ ஒவ்வொருவரது இதயதாகமாகவும் கவலையாகவும் விளங்கியதை சதானந்தம் உணர முடிந்தது. ஆத்மா என்றும், அமரன் என்றும், வானவன் மண்ணகம் வருவது போவது பற்றியும் அவர்கள் பேசினார்கள் — சிந்தனைகளை உதிர்த்தார்கள்.
ஆற்றங்கரை ஓரமாக, தனித்து, நடந்து கொண்டிருந்த சதானந்தத்தின் சித்தவெளியில் அவை இன்னும் அலை மோதின.
அலைகள்..
மண் ஏக்கத்தின்,தவிப்பின், வேண்டுதலின் நிலைக் களம்.
அதற்கு விண் அருள் புரியத் தவறுவதில்லை. விண்ணின் கருணை மழையாகப் பொழிகிறது. மழை மண்ணின் தாகத்தைத் தணிக்கிறது. அச்செயலில் அது சேறாகிக் குழம்புவதை, களங்கப்படுவதை, பெரிதுபடுத்துவது கிடையாது. மீண்டும் அது புனிதமான ஆவியாக மாறி வானகம் சேர்கிறது. ஆத்மாவும் இப்படித்தான். மனிதர் உடலில் புகுந்து, உணர்ச்சிகளை திருப்திப்படுத்தக் கறைபட்ட போதிலும், களங்கமற்று உயர்வடைகிறது.
-ஆறு ஓடிக் கொண்டேயிருக்கிறது. முடிவற்ற காலத் தின் சித்திரம் அது. வளர்ந்து வரும் உயிர்க் குலத்தின் பிரதிபலிப்பு அது. உணர்ச்சிகள் என்பது கரைகள் மாதிரி. அவை ஆற்றை பாதிக்க முயலுகின்றன. ஆனாலும் ஆறு தான் கரைகளை அரிக்கிறது. தன் போக்கில் ஓடுகிறது.
-உணர்ச்சிகளை திருப்திப்படுத்துவதன் மூலமே, வாழ்க்கையின் நிறைவும், மரணத்தின் மீது ஆதிக்கமும் பெற முடியும். மரணத்தைக் கண்டு பயங்கொள்ளலாகாது,
கடமைகளைச் செய். பலனைக் கருதாதே. கீதையின் போதனையை மறக்கக்கூடாது.
இவையும் இன்னும் பலவும் அறிவாளிகளின் பேச்சில் உருண்டு புரண்டன. மரணத்தை எண்ணி அஞ்சாமல், வாழ்க்கையை நன்றாகச் சுவைத்து, புலன்களின் வேட் கைக்கு நிறையத் தீனி கொடுத்து திருப்திப்படுத்துவதன் மூலமே, ஆத்மா பிறவிப் பயனை நுகர்ந்து, விண்ணின்பம் அடையும் என்ற கருத்து ஒவ்வொருவர் பேச்சிலும் அழுத்த மாக ஒலி செய்தது. இந்திரன், அருணகிரி, புத்தன், கண்ணன் போன்ற பெயர்கள் அதிகமாக அடிபட்டன. அங்கு கூடியிருந்தவர்களின் பெயர்கள் – முக்கியமாக அபிநவ ஜனகர், திருமலையப்பர் நாமம் – புகழ்ச்சியாக உச்சரிக்கப்பட்டன.
மத்தியானம் வயிறார அருமையான சாப்பாடு மாலையில் சிற்றுண்டி ஆகியவற்றுக்கும் குறைவு இல்லை. ஆகவே, எல்லோருக்கும் குதூகலமும் குஷியும்தான்.
மாபெரும் சாதனை ஒன்றை வெற்றிகரமாகச் செய்து முடித்த பெருமகிழ்வு. ஆனால் சதானந்தம் உள்ளம் குறு குறுத்துக் கொண்டே இருந்தது. நாம் இந்தக் கூட்டத் துக்கு லாயக்கே இல்லை. வழி தவறி எங்கோ வந்து சேர்ந்து விட்டோம் என்ற மன உளைச்சல் அவரை அலைக்கழித்தது. அவர் வெறும் ‘கேட்பர்’ ஆக இருந்தாரே தவிர தனது சிந்தனைக் குழப்பங்களை வெளியிடுகிறவராகவோ, தெளிவில் பிறந்த தத்துவங்களை உலுப்புகிறவராகவோ முன் வந்து பேசவில்லை. உண்மையில் அந்த அறிவாளிகளின் உயர்ந்த பேச்சுகளும் அவர்கள் எடுத்து அவசிய மேற்கோள்களும் பிறவும் அவருக்கு எவ்விதமான தெளிவும் ஏற்படுத்தி விடவில்லை. வாழ்க்கை பற்றி அவர்கள் எல்லோரும் தீர்க்கமான உண்மைகளை உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்து விட்டவர்கள் போல் பேசிய போதிலும், அவர்கள் வாழ்க்கையின் முழுத் தன்மையையும் – அதன் சகல பண்புகள், கோணங்கள் உயர்வுகள், தாழ்வுகள் அனைத்தையும் – சிந்தனையில் கொண்டு அபிப்பிராயங்களை உருவாக்க வில்லை என்ற எண்ணமே சதானந்தத்துக்கு உண்டாயிற்று.
சந்தர்ப்ப வசத்தினால், வாழ்வின் மேல்பரப்பில் நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பு பெற்றுவிட்டவர்கள். படிப்பு – பணம் – பதவி முதலியவற்றின் பலத்தினால் தங்களைத் தாங்களே உயர்த்தியவர்கள், வெற்றி வாழ்வு வாழ்கிறவர்கள், நல் வாழ்வு வாழத் தெரிந்தவர்கள் என்று பாராட்டிக் கொள்ளும் போக்கு பெற்றவர்கள் அனைவரும். தாங்களே உலகம் எனக் கருதி, தங்களுக்கு உகந்தனவற்றையே சரியான நீதி என வகுத்துக் கொண்டு, மேலும் மேலும் சுக சௌகரியங்களைத் தேடுவதிலேயே கண்ணாக இருக்கி றார்கள். அதற்காகத்தான் ஆத்மா அமரவாழ்வு, விண் ணவர்பேறு என்றெல்லாம் குழப்புகிறார்கள்…இப்படி அவர் எண்ணினார்.
ஆற்றங்கரை மீது நெளிந்து வளைந்து நீண்டு கிடந்த ஒற்றையடித் தடத்தின் வழியே நடந்து கொண்டிருந்த சதானந்தம் சுற்றுப்புறப் பசுமைக் காட்சிகளை மட்டுமே கண்டார் என்று சொல்ல முடியாது. இதற்கு முன்னர் இப்படி அவர் நடந்து திரிந்து எத்தனை எத்தனையோ யாத்திரா மார்க்கங்களில் அவர் கண்டிருந்த, கேட்டிருந்த, வாழ்க்கைக் காட்சிகளில் அநேகம் இப்போது அவர் எண்ணத்தில் நிழலாடின. மனித வாழ்க்கை பசுமைகளும் இனிமைகளும் மட்டுமே கொண்டதல்ல; கோரங்களும் கொடுமைகளும் மலிந்ததுதான் என்பதை அவருக்கு சதா உணர்த்திக் கொண்டு வரும் உண்மைகள் அவை.
காட்சிகள்..
– பரபரப்பும் பகட்டும் பொய்மையும் போலித்த மும், மேல் மினுமினுப்பும் மண்டிய நகரங்கள். மனிதம் குன்றிய மனிதாபிமானமே இல்லாத மனிதர்கள். அவர்கள் செயல்முறைகள்.
கிராமங்கள். உயிரியக்கம் குறைந்துபோன, வறுமையும் நம்பிக்கை வறட்சியும் மலிந்த, சமூகங்கள், செயலூக்கம் அற்ற மனிதர்களின் சிறுமைப் போக்குகள்.
-நகரங்களிலும், கிராமங்களிலும் எங்கும் எப்போதும் உழைக்கிறவர்கள்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள்; வாழ்க்கையின் வெற்றி, சுக சௌகரியங்கள், நாகரிக வசதிகள் என்றெல்லாம் பெரிதுபடுத்தப்படுகிற வேளையிலும் – சூழ்நிலையிலும் என்னென்னவோ தொழில் செய்து எப்படி எப்படியோ நாளோட்டும் நெருக்கடி நிலை.
– நாகரிகத்துக்கும் மனித குலத்துக்கும் அத்தியாவசியத் தேவைகளான சில தொழில்களைச் செய்ய நேரிடுகிறவர்கள் இன்று இழிவாகக் கருதப்படும் தன்மையே நீடிப்பது. அவர்கள் முழு வயிற்று சாப்பாடு கூடப் பெற முடியாத அவல நிலை. பிரயோசனமில்லாத இல்லாமல் தீராது என்கிற அவசியம் எதுவுமற்ற தொழில்களில் ஈடுபடுகிற வர்கள் பணத்தில் புரண்டு படாடோபமாக உடுத்து அளவுக்கு அதிகமாகத் தின்று, சிறுமைச் செயல்கள் பலவும் புரியும் வசதிகள் பெறுவதற்கு வாய்ப்புகள்.
– நாகரிக மேல்மினுக்கு கொண்ட நகரங்களிலும், பாதாளச் சாக்கடையில், கழுத்தளவு அசுத்த நீர்க் குழம்பில் நின்று தொழில் புரிகிறவர்கள்… கிராமங்களில், சேறும் அசுத்தமும் நிறைந்த வயல்களில் உழவுத் தொழில் புரியும் மக்கள்…இவர்கள் பட்டினி வாழ்வு வாழ்கிற கொடுமை.
இப்படி எவ்வளவோ!
சதானந்தம் பெருமூச்செறிந்தார்.
ஓடும் நதியையே பார்த்தவாறு நின்றார்.
அந்தி நேரம் மேல்வானத்தை அழகும் ஒளி ஜாலமும் நிறைந்த ஓவியக் காட்சியாக மாற்றியது. பதுங்கி வந்த இருள் ஒளியை மெது மெதுவாக விழுங்கலாயிற்று.
ஆத்மீக சர்ச்சைகளில் ஈடுபட்டிருக்கும் உயர்ந்த அறிவாளி களின் குழுவில் கலந்து கொள்ளும் எண்ணத்தை ஒதுக்கிய வராய், சதானந்தம் ஆற்று மணல் பரப்பில் இறங்கி சிறிது தூரம் நடந்தார். மனசுக்குப் பிடித்த இடம் ஒன்றில் அமர்ந்து இயற்கை, நிகழ்த்தும் அற்புதங்களை ரசித்தவாறு இருந்தார்.
ஒளி மாய்ந்து இருள் வேகமாகப் பரவியது. ஒளி எழுந்து உலகைப் பளிச்சென விளக்கி, எங்கும் பரவிப் பாய்கிற செயல் அழகும் அற்புதமும் நிறைந்தது; ரசனைக்கு உரியது. அதேபோல், இருட்டு மெதுமெதுவாக வந்து, பின் லபக்கனப் பாய்ந்து, அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, ஆட்சி புரியத் தொடங்குவதும் ரசனைக்கு உரிய அற்புதமே ஆகும். இப்படி ஒரு எண்ணம் சுழியிட்டது அவருள்.
மணல் இன்னும் வெண்மையாகத்தான் தெரிந்தது. கண் முன்னே ஆறு கருமையாக ஊர்ந்து கொண்டிருந்ததும் அவருக்குள் புலனாயிற்று.
– ஆன்ம உயர்வு வேட்கையில் முனைகிறவர்கள் சொல்லும் உதாரணங்களையே கவனிப்போமே. ஆறு ஓடுகிறது. அது தன்னின்பம் மட்டுமா பெறுகிறது? தன் நிறைவும் தன்னுயர்வும் மாத்திரமா அதன் லட்சியங்கள்? இல்லையே! கால்வாய்களாகவும், குளங்களாகவும், சிறு சிறு வாய்க்கால்களாகவும் அது தன்னைப் பகிர்ந்து கொள்கிறதே. மண்ணை வளம் செய்யத் தன் சக்தியை அளிக்கிறதே. ஜீவ நதியின் பெருமை அதனுடைய உயிரூட்டும் வளம் பெருக்கும், உயர் பணியிலன்றோ கிட்டுகிறது!… மழை பெய்கிறது! மீண்டும் நீராவியாகி வானை அடைகிறது என்பது சரிதான். மண்ணின் வறட்சியைத் தணிக்கும் அமுதமாக, வரும் மழை தன்னையே உலகுக்கு ஈந்து உயிர் ராசிகளுக்கெல்லாம் ஊட்டம் தருகிறதே. தன்னை இழந்து மன்னுயிர்க்கெல்லாம் பணிபுரியும் உத்தமப் பண்பை அல்லவோ அதனிடமிருந்து நாம் கற்றாக வேண்டும்?
மணலில் யாரோ நடந்துவரும் காலடி ஓசை ‘சரக்’ சரக்’ என்று கேட்டது. பேச்சுக் குரலும் வந்தது. உழைத்துவிட்டு, நீராட வருகிறவர்கள் என்பது புரிந்தது.
அவர்கள் சற்றுத் தள்ளியே சென்றதால் இருட்டில் உட்கார்ந்திருந்த ஆளைக் கவனிக்கவில்லை. அங்கே அவ் வேளையில் அப்படி ஒருவர் சிலைபோல் இருப்பார் என்ற நினைப்புகூட அவர்களுக்கு எழ முடியாதுதானே!
அவர்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசினார்கள். உரத்த குரலில் பேசினார்கள். அவர்கள் பேச்சு சதானந்தம் காதுகளில் மிகத் தெளிவாக விழுந்தது.
அன்றாடக் கவலைகள், கஷ்டங்கள் அரிசி கிடைக்காதது, குடும்பத்தில் சீக்கு பற்றி எல்லாம் பல குரல்கள் புலம்பிக் கொண்டன. வசதி உள்ளவர்களின் இரக்கமற்ற தன்மை குறித்தும் பேச்சு எழுந்தது. நெல்லை வீட்டில் நிறைய இருப்பு வைத்துக்கொண்டு, கொள்ளை லாபத்துக்கு விற்றல் அவர் வயல்களில் உழைக்கிறவர்களுக்குக் கூட கடனுக்குஅரிசி கொடுக்க மனமில்லாமை,வியாதி என்று உதவிக்குப் பணம் கேட்டால் ‘அதிகப்பற்று ஆகிவிட்டது; பணம் தர முடியாது’ என மறுத்தல், குழந்தை சாகக் கிடக்கிறது என்று முறையிட்டுப் பணம் கோரியபோது செத்தால் நல்லது தானேடா, ஒரு எண்ணிக்கை குறையும்.நீதான் வத வதன்னு பிள்ளைகளைப் பெற்றுப் போட்டிருக்கியே! என்று பேசும் திமிர்… இப்படிப் பலவிதப் புலப்பங்களோடு சாமியார்களுக்கு மரியாதை, கோயில்களுக்கு நிதி உதவி, தானதருமத் தாராளம் பற்றிய செய்திகளும் கலந்து வந்தன.
அவர்கள் அவ்வட்டாரத்து ‘ஜனகர்’ திருமலையப்பர் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதும் சதானந்தத்துக்குத் தெளிவாக விளங்கிவிட்டது.
அவர் உதடுகளில் சிறு சிரிப்பு நெளிந்து கொடுத்தது.
‘நடமாடும் கோயில்கள்’ ஆகும் மக்களுக்கு உதவுவதே நல்ல திருப்பணி என்று நம்பிச் செயல் புரிந்தவர்கள் வசித்து வந்த நாடு தான் இது. ‘வாடிய பயிர்தனைக் கண்ட போதெல்லாம் நான் உளம் நொந்து வாடினேன், ஏழைகள் துயர் கண்டு நெஞ்சு உருகினேன்’ என்று கூறிய வள்ளலாரும் ஆன்மீக வாதிதான். ஏழை எளியவர், நாட்டின் மக்களுக்கு எல்லாம் நல்வழி காட்ட உயர்ந்த சிந்தனைகளை எடுத்துச் சொன்ன விவேகானந்தரும் ஆன்மீகவாதி தான்… தாங்கள் உய்வுற மண்ணகத்து இன்பமெலாம் நுகர்ந்து விண்ணகத்தை இங்கு நிலைபெறச் செய்வோம் என்று பெரும் பேச்சுப் பேசுகிற மதவாதிகள், சாமியார்கள் ஆன்மீக உயர்வு தேடும் இன்டெலக்சுவல் வகையராக் களும்…
சதானந்தம் உள்ளம் சலனமற்று நின்றது ஒரு கணம். அவர் கண்களை மூடியவாறு உட்கார்ந்திருந்தார் சிறிது நேரம்.
குளித்து முடித்தவர்கள் போய்விட்டார்கள். கொஞ்சம் பருக்கையும் தண்ணியும் கலந்து வயிற்றுப் பசியைத் தணித்துக் கொள்ளத்தான்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். உயிர்க் குலம் வாழவும் வளரவும் வகை செய்யும் உணவுப் பொருள்களைப் பயிரிடுகிறவர்கள், அத்தொழிலில் உழைக்கிறவர்கள் உணவு இல்லாமல் அவதியுறும் நிலைதான் நீடித்து வருகிறது. மனித குல உயர்வுக்குப் பாடுபடுவதாகப் பேசிப் புகழ் நாடும் சுகவாசிச் சாமியார்களும், மதவாதிகளும் உணவுப் பொருள் உற்பத்திக்காக உழைத்தாலாவது புண்ணியம் கிட்டும். அது பயனுள்ள நற்பணியாக அமையும்.
சதானந்தம் மனம் இவ்வாறு குறுகுறுத்தது, அவர் கண் திறந்து நெடுகிலும் பார்த்தார்.
வானம் பூராவும் நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. காணக் காண அலுக்காத காட்சி.
குளிர்ந்த காற்று சிலுசிலுத்தது, உடலுக்கும் உள்ளத்துக்கும் இதமாக இருந்தது.
‘இந்த இடத்திலேயே படுத்துக் கிடக்கலாம் போலிருக் குது’ என்று எண்ணினார் அவர். அப்படியே படுக்கவும் செய்தார்.
அவர் கண்கள் நட்சத்திரக் காட்டில் மேய்ந்து களித்தன. கிருஷ்ணபட்சத்து நிலவு நேரம் கழித்து எட்டிப் பார்த்தது.
அதன் பார்வையால் வானவீதி வெளிறித் தோன்றியது.
அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் பளிச்சிட்டது: ‘மரணம் பற்றி மனிதன் சதா எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மரணத்துக்குப் பிறகு என்ன என்பது குறித்து மனசை அலட்டிக் கொண்டு அமைதி இழக்க வேண்டியதும் இல்லை. வாழ்க்கையின் இயல்பான முடிவு அது. வாழ்க்கை என்பது வாழ்ந்தாகப்பட வேண்டிய உண்மை. ஒவ்வொரும் அனுபவித்தே தீர வேண்டிய உண்மை. அது மாயையோ, மயக்கு வித்தையோ அல்ல. அதை தனக்கு ஒரு தண்டனையாகவும், மற்றவர்களுக்கு சுமையாகவும் வேதனையாகவும் ஆக்கிக் கொண்டிருப்பதை விட, கூடியவரையில் பிறருக்கு நன்மைகள் புரிந்து தானும் நற்பலன் பெறுவதே அறிவுடைமை ஆகும்…’
சிலிர்ப்புற எழுந்து உட்கார்ந்தார் சதானந்தம். அவருக்கு ஒரு தெளிவு ஏற்பட்டு விட்டது.
‘இன்று புதிதாகப் பிறந்தோம் – இனி நல்வாழ்வு வாழ்வோம். மக்கள் மத்தியில் பொது நலப் பணிபல புரிந்து!’ என்று தீர்மானத்தோடு எழுந்து நடக்கலானார்.
ஆற்றங்கரையை ஒட்டி, சிறிது தொலைவில், சிறுசிறு சுடரொளி மினுக்குவது தெரிந்தது. உழைப்பவர்கள் வசிக்கும் சிற்றூராகத்தான் இருக்கும். அதை நோக்கி நடந்தார் அவர்.
சதானந்தத்தின் உள்ளத்தில் கவிந்து கனத்துக் கிடந்த குழப்பம் போயே போய்விட்டது!
(1967)



