
மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
13. எங்கே சேர்க்குமோ?
உள்ளத்தில் எண்ண அலைகள் மோதிக் கொண்டிருக்க அமைதி இழந்து தவித்த சதானந்தத்தை அன்றைய அனுபவங்கள் தீர்மானமாக ஒரு முடிவு எடுக்கும்படி தூண்டின.
‘போதும் இந்த நகர வாழ்க்கை!’ என்று பெறு மூச் செறிந்தார் அவர்.
சில மாதங்களாகவே அவருக்குப் பட்டணத்து வாழ்க்கை மீது வெறுப்பு வளர்ந்து வந்தது.
– வீட்டை விட்டு வெளியே போனால், மனுசன் உருப்படியாக வீடு திரும்ப முடியும் என்று நம்புவதற்கில்லை. தெருவுக்குத் தெரு திடீர் விபத்துகள். ஒரு ரோடைக் கடந்து மறுபக்கம் போக வேண்டுமானால், பத்து பதினைந்து நிமிடங்கள் காத்து நிற்க வேண்டியிருக்கு. ஆட்டோக்களும் சைக்கிள்களும் மோட்டார் பைக்குகளும் கண்மூடித் தனமாக ஓடுகின்றன. நடந்து போறவங்கதான் கண்ணைத் திறந்து மிகுந்த விழிப்பு உணர்வுடன் போக வேண்டியிருக்கு.
இப்படி அவர் மனம் குமைந்தது.
-வரவர நகரம் நரகமாக வளர்ந்து கொண்டிருக்கு. ஏகப்பட்ட கும்பல், பரபரப்பு, நெருக்கடி… அசுத்தங்கள், அழுக்குகள், ஆரோக்கியக் குறைவுகள்… இவற்றுக்கு எல்லாம் மேலாக, எப்போது எங்கே என்ன வெடிக்கும், வசதிக் குறைவுகளையும் தொல்லைகளையும் ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாத நிலைமைகள்.
அன்று அப்படித்தான் நடந்தது. சதானந்தம் பணம் எடுக்கவேண்டும் என்று பாங்குக்குப் போனார்.
அங்கே போனதும்தான், ‘திடீர் வேலை நிறுத்தம்’ எனத் தெரிந்தது.
அகில இந்திய ரீதியில் ஒரு பொது நிறுவனம் போனஸ் தேவை போன்ற சில உரிமைக்கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்துகொண்டிருந்தது. அப்படி ஸ்டிரைக் செய்தவர்களுக்கு ஆதரவு காட்டும் விதத்தில் பாங்குகளும் ‘ஒரு நாள் அனுதாப வேலை நிறுத்தம்’ என்று ஸ்டிரைக் செய்திருந்தது.
சதானந்தம் செயலற்றவரானார். பஸ் ஸ்டாப்பில் காத்து நின்று, சிரமப்பட்டு ஒரு பஸ்சில் ஏறி, இடித்து நெருக்கி உட்புகுந்து, நின்றுகொண்டே பயணம் செய்தார்.
ஓடிக்கொண்டிருந்த ஒரு பஸ் திடீரென நின்றது- நிறுத்தப்பட்டது.
ஒரு கல்லூரியின் மாணவர்கள், போகிற வருகிறபஸ்களை மறித்து நிறுத்தினார்கள்.
ஏதோ ஒரு கல்லூரியை சேர்ந்தவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து, ஸ்டிரைக் செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு அனுதாபம் காட்டும் முறையில் வேறு மூன்று நான்கு கல்லூரிகளின் மாணவர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டார்கள். பஸ்களில் தொத்திக்கொண்டும் தொங்கிக் கொண்டும் பிரயாணம் செய்தார்கள் பல பேர். கண்டக்ட ருக்கும் மாணவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் நிகழ்ந்தது. அதனால் மாணவர்கள் பஸ்களை மறித்து மறித்து நிறுத்தினார்கள். சில பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
சதானந்தம் சென்ற பஸ்சுக்கும் அந்தக் கதி நேர்ந்தது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள்.
சதானந்தமும் இறங்கினார். அங்கே காணப்பட்ட சூழ்நிலை அவருடைய மனக் குமைதலை அதிகப்படுத்தியது. இப்போதைக்கு நிலைமை ஒன்றும் சீர்படாது என்று தோன்றவே அவர் நடக்கலானார். நடந்து வீடுபோய் சேர்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஆனாலும் வேறு வழியில்லை.
அப்போது அவர் உள்ளத்தில் அந்தத் தீர்மானம் உறுதிப்பட்டது. பட்டணம் இனி நமக்குச் சரிப்படாது. ஆரோக்கிய நிலைமை சீர்கெட்டு வருகிறது. வசதிக் குறை வுகள் அதிகரிக்கின்றன. இதற்கெல்லாம் இங்குள்ள மனிதர் களின் போக்குகள் தான் காரணம். உழைக்காமலே உல்லா சங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறவர்கள் பெருத்துப் போனார்கள். கடமைகளை செய்ய மனம் இல்லாமல் உரிமைகளை அதிகம் அதிகமாகக் கோருவதும், அவற்றுக் காகப் போராடுவதும், சுயநலத்தோடு மற்றவர்களையும் போராடும்படி தூண்டுவதும் வளர்ந்து கொண்டே போகிறது.
மனிதர்கள் சந்தோஷமாக வாழவேண்டும். அமைதி வளர்க்க வேண்டும். அவரவர் காரியங்களை ஒழுங்காகச் செய்து வாழவேண்டும். வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட் டுள்ள தற்கால சமூக வாழ்வில், இருக்கிற வசதிகளையும் உரிய வகையில் அனுபவித்து அமைதியாக வாழவிடாமல் கெடுக்கிறபோக்குதான் வெறியாட்டம் போடுகிறது. இது சதானந்தத்தின் அபிப்பிராயம்.
அவர் பெரும் வசதிகள் படைத்தவர் இல்லை. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற நன்மைகளை செய்பவர். நல்லது செய்ய முடியாவிட்டா லும் பிறருக்கு தீமைகள் புரியாமல் இருப்பது நல்லது; சமூக வாழ்வில் சீர்குலைவுகளையும் சீர்கேடுகளையும் உண்டாக்காமல் வாழ்வது நல்லது என்ற கருத்து உடையவர்.
கால ஓட்டத்தில் சகஜமாக நிகழ்ந்து கொண்டிருந்த சம்பவங்கள் அவருக்கு எரிச்சல் தந்தன. நகரத்தில்தான் அரசியலும் அரசியல்வாதிகளும் அதிகமாகி, அமைதியான வாழ்வுக்கு ஊறு செய்வதாக சதானந்தம் கருதினார். கிராமங்களில் அமைதியும் ஆனந்தமும் நிலைபெற்றிருக்கும் என்று அவர் நினைத்தார்.
எனவே, ஒருநாள் அவர் ரயிலில் பயணமானார். உரிய இடத்துக்கு உரிய காலத்தில் போய் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையோடுதான் அவர் புறப்பட்டார்.
ஆனால், முக்கியமான ஒரு உரிமைப் போராட்டம் காரணமாக, ரயில்கள் மதுரை ஸ்டேஷனிலேயே நிறுத்தப் பட்டு விட்டன. மதுரைக்குத் தெற்கே ஒரு ரயிலும் போகாது என்ற உண்மை அங்கே போன பிறகுதான் அவ ருக்கும் அவரைப் போன்ற பயணிகளுக்கும் புரியவந்தது.
மதுரையில் பிரயாணிகள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தது.சதானந்தமும் தொல்லைகள் அனுபவித்தார். வெகுநேரம் காத்துக் கிடந்தார். கும்பலோடு கும்பலாய் முண்டியடித்து, ஏதோ ஒரு பஸ்சில் இடம் பிடித்து எப்படியோ ஊர் போய்ச் சேர்ந்தார்.
அவருடைய ஊரான சிவபுரம் அமைதி தவழும் அழகான கிராமம். ஒரு நகரத்தின் அருகாமையில் இருந்தது. ‘டவுன்பஸ்’ அடிக்கடி போய் வந்தது. ஆகவே கிராமத்தின் சுகங்கள் அலுத்துப் போகிறபோது – அல்லது, நகரத்தின் நாகரீக வாடை தேவைப்படுகிறபோது – சில காசுகள் செலவில் நகருக்குப்போய், பொழுது போக்கிவிட்டு, திரும்பி விடலாம்.
கிராமத்தில் பொதுவான குடிநீர் வசதி, மின்விளக்குகள், பஞ்சாயத்து ரேடியோ எல்லாம் இருந்தன.
சதானந்தம் திருப்தி அடைந்தார்.
ஆனால், அது ‘அல்பாயுசு திருப்தி’ தான்.
அவர் வீட்டில் அடி பம்பு இருந்தது. அதில் வந்த தண்ணீர் சிறிது கடுத்திருக்கும். குடி தண்ணீருக்கும் சமையலுக்கும் தெருவில் உள்ள பொதுக் குழாய் நீரைத்தான் பயன்படுத்துவார்கள்.
ஒருநாள், பைப்பில் தண்ணீர் பிடித்து வரச்சென்ற வேலைக்காரி திரும்பி வருவதற்கு நேரமாயிற்று. அப்படியும் வெறும் குடத்துடன்தான் வந்தாள். உடனடியாக கூட ஒரு கதையும் கொண்டு வந்தாள்.
– தண்ணீர் பிடிப்பதில் பெண்களுக்குள் தகராறு. ஒருத்தியே ஆறேழு பெரிய பாத்திரங்களில் பிடிப்பதில் முனைந்து நின்றாள். அடுத்தவளுக்கு இடம் விடாது தகராறு பண்ணினாள். ஒவ்வொரு வீட்டுக்காரியும் இப்படியே செய்தாள். இதனால் சண்டை விளைந்தது. அவசர மாக ஒரு குடம் தண்ணீர் பிடிக்க முந்திய ஒருத்தியை மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளினார்கள். அவள் ஆத்திரத்தோடு திட்டியவாறு திரும்பிப் போனாள். அவள் புருஷன் வந்தான், கடப்பாறையும் கையுமாக. இது பொதுக் குழாய்! எனக்கும் என் பொண்டாட்டிக்கும் தண்ணீர் கிடையாதுன்னு சொன்னா, ஊர்காரனுங்களுக்கும் இந்த பைப்பு முலம் தண்ணீர் கிடைக்கக் கூடாது என்று கத்தினான். குழாயையும் அதை இணைக்கும் பைப்புகளையும் கடப்பாறையால் தகர்த்து நொறுக்கினான். ‘கரும்புச் சாறு போன்ற அருமையான தண்ணீர்’ தெருவிலே பெருக் கெடுத்து ஓடியது.
தொடர்ந்து ஓடலாயிற்று. குழாயை ரிப்பேர் பண்ண எவரும் முயற்சி எடுக்கவில்லை. முரட்டுத்தனமாக ஒருவன் தன்னகங்காரத்தோடும் மிருக பலத்தோடும் செயலாற்றத் துணிந்தபோது அவனைத் தடுக்க சக்தியற்றுப்போயிருந்தது. அந்த ஊர்.
‘மனிதர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? கிராம சமு தாயத்துக்கு என்ன வந்து விட்டது?’ என்று எண்ணிப் பெரு மூச்செறிந்தார் சதானந்தம்.
மறுமொரு பொது நிகழ்ச்சி அவரது உள்ளக் குமை தலை அதிகப்படுத்தியது.
எதிர் டவுனுக்குப் போவதற்காக பஸ்சின் வரவை பார்த்து பலர் காத்து நின்றார்கள். அவர்களில் சதானந்தமும் ஒருவர். வெகுநேரம் ஆகியும் பஸ் வரவில்லை.
அது வராது என்று புரிந்தது.
ஒருவன் குடித்துவிட்டு பஸ்சில் ரகளை செய்தானாம். கண்டக்டரை முறைத்தானாம். டிரைவரை ஏசிப்பேசினா னாம். “ஸ்டாப்” இல்லாத இடத்தில் அவன் இறங்க வேண்டும் என்று பஸ்ஸை நிறுத்தும்படி சொல்லியிருக்கிறான். பஸ் நிறுத்தப்பட வில்லை. அதனால் கோபம் கொண்ட அவன் டிரைவரை அடித்தான். பஸ் நிறுத்தப் பட்டது ஒரே அடியாக. இதர பஸ்களும் ஊருக்குள் வரா. என்ற நிலைமை ஏற்பட்டது.
‘கலைட்னிங் ஸ்ட்ரைக்’ ! இது பல நாட்கள் நீடித்தது. வெளியூர் போக வேண்டியவர்கள் திண்டாடினார்கள்.
-இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? மனிதர்களுக்கு நாடு நெடுகிலும் – நகரங்களிலும் கிராமங் களிலும் – என்ன ஏற்பட்டுவிட்டது? ஏன் இத்தகைய செயல்கள் பரவலாக அதிகரித்துக்கொண்டே போகின்றன?
எண்ண அலைகள் அவர் உள்ளத்தில் புரண்டன.
இப்படிப்பட்ட சிறிதும் பெரிதுமான பல செயல்கள் அவருக்கு உறுத்தல் தந்தது. அவர் மனம் சூடுற்றது.
-சுதந்திரமாகச் செயல்படுகிற ஆசை பலரையும் பிடித்தாட்டுகிறது. தன்னலப் போக்கும், தான் எனும் அகந்தையும் மிகுந்து விட்டன. பேசுகிற உரிமை, போராடு கிற உரிமை, சண்டைபிடித்து உரிமையை நிலைநாட்டுகிறப் தன்மை, எல்லாவற்றையும் விளையாட்டுபோல- பொறுப் பற்ற நிலையில், கையாள்கிற இயல்பு வளர்கிறது. உரிமைகள் கோரிக்கைகள் எனும் அக்கினிக்குஞ்சுகளை நெடு கிலும் இஷ்டம்போல வீசி எறிகிறார்கள் பலப்பல பேர்.
அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டு அதை ஒரு மரப்பொந்தினில் வைத்த பித்தன், காடு முழுவதுமே வெந்து தணிவதைப் பார்த்தானாம். நாடு பூராவும், எங்கெங்கு பார்த்தாலும் விதைக்கப்படுகிற அநாவசியமான கிளர்ச்சிகள்- திட்டமில்லாத போராட்டங்கள் – கயநலத்தினால் தூண்டப்படுகிற எழுச்சிகள் எல்லாம் எங்கே கொண்டு போய் சேர்க்குமோ இந்த நாட்டை?
சதானந்தம் உள்ளம் அமைதி அடைய முடியாத நிலையில் தத்தளித்தது.
(1991)
★ ★ ★



