
மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
2. கந்தையா வளர்த்த கலை
கந்தையா உறுதி பூண்டு விட்டான். எப்படியும் நாடகக் கலையை வளர்த்தே தீருவது என்று
நாடகக் கலையின் ‘ஜாதக விசேஷம்’, அதை யார் யார் எல்லாமோ வளர்த்தே தீருவது என்று திடமாகத் தீர் மானம் செய்துகொண்டு, ‘ உடல் பொருள் வாக்கு முழுவதையும் அதற்காக செலவு செய்வதையே தங்கள் வாழ்க்கை லட்சியமாக, அல்லது பிழைக்கும் வழியாக, அல்லது ஜாலி இனிமைகளுக்கு ஏற்ற பொழுதுபோக்கு ஆகக் கொண்டு விடுகிறார்கள்.
உயர்தர உத்தியோகஸ்தர்கள், சாதாரணக் குமாஸ்தாக்கள், ஓட்டல் தொழிலாளிகள், வேலை எதுவுமின்றி வீண்பொழுது போக்குகிறவர்கள், பணம் படைத்தவர்கள், பிறர் பணத்தை நம்பிச் செயல் திட்டம் தீட்டுகிறவர்கள். பெரிய இடத்துப் படித்த பெண்கள், அதலபாதாளத்தைச் சேர்ந்த அப்பாவிப் பெண்கள் — இப்படிப் பலதரப்பட்டவர்களின் கண்வீச்சும். வாயடியும், கைத்திறனும் மேலே விழுந்து மொய்த்துக் கொண்டிருந்த போதிலும், இந்தத் திமிர் பிடித்த’ நாடகக்கலை’ முன்னேறி வளராமலும் பின்னேறிச் சாகாமலும் சண்டித்தனம் பண்ணுவதைப், பார்த்துத்தான் கந்தையாவும் தன்னால் இயன்ற திருப்பணியைச் செய்ய முன் வந்தான் என்று கருத இடம் இருக்கிறது.
இந்த ஆசை ஒரு தொத்து நோய் மாதிரி; ‘ஸீசனல் ஃபாஷன்’ போல; வேலையில்லாதவர்களின் வீணத்தனம்; ‘ஜல்சாப்பண்ண’ சௌகரியமான வழி இந்த விதமாகவும் இன்னும் பலவிதமாகவும், அநேகர் சொல்லெறியத்தான் செய்தார்கள். ஆனால், கந்தையா கவலைப்படுவானா? அவர்களுக்கு ஐயோ! அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அவர்களே புரிந்து கொள்வதில்லை!” என் பெரிய ஞானி போல் சொல்லி ஒதுக்கிவிட்டான்.
‘பல மரம் கண்ட தச்சன்’, ‘உருண்டு புரண்டு ஓடும் கல்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார்களே, அந்த இனத்தில் சேர்க்கப்பட வேண்டியவன் கந்தையா. அவன் கடைசி வரையில் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. கடைகளில் வேலை, வக்கீல் குமாஸ்தா உத்தியோகம் என்று விதம் விதமான தொழில் முறைகளையும் தொட்டுப் பார்த்துவிட்டு, சும்மா இருப்பதே சுகம் என்று உணர்ந்திருந்தான்.
அவனது விசாலப் பார்வையும், கூட்டாளிகளின் உபதேசமும், நாகரிக நகர நடவடிக்கைகளும் சேர்ந்து அவனை நாடகக் கலை மீது அனுதாபமும் ஆர்வமும் கொள்ளத் தூண்டின.
அந்தப் பேட்டையின் சபா, இந்த வட்டாரத்தின் சபை, இன்னொரு பாக்கத்தின் கலைக்குழு என்று மூலைக்கு மூலை நாடகக் கலை வளர்ப்பு வேலைகள் தீவிரமாக நடை பெறுகிறது. நம்ம பேட்டை மட்டும் ஏன் தூங்கிக் கிடக் கணும்? நாமும் ஒரு கலைக் குழுவைத் துவக்குவோம்… என்று கந்தையா நினைத்தான்.
‘பளா! பளா! அருமையான ஐடியா!’ என்று அவனுடைய நண்பர்கள் ஆரவாரமாக ஆமோதித்தார்கள்.
அவன் வீட்டில் ஒரு அறை கலைக் குழுவின் அலுவலகம் ஆகிவிட்டது. எப்போதும் அங்கே நாலைந்து பேர் கூடி யிருந்து, நாடகக் கதை பற்றியும், நடிகர் தேர்வு குறித்தும் சினிமா சான்ஸ்’ பற்றியும் மனம் போல் பேசி மகிழ்ந்தார்கள்.
கந்தையாவுக்கு ஓரளவு வசதி இருந்தது, அவனுக்குச் சொந்தமான வீடுதான் அது. அதன் சில பகுதிகளை வாடகைக்கு விட்டிருந்ததன் மூலம், மாதந்தோறும் பணம் வந்து கொண்டிருந்தது. மொட்டை மாடியில், தேவைக்கு வேண்டிய பந்தல்போட்டு, அதை ‘நண்பர் கலைக்குழு’வின் நாடக ஒத்திகைகளுக்கு ஏற்ற இடமாக மாற்றிவிட்டான் அவன்.
‘ஓட்டல் தொழிலாளர்கள் பலர் நாடகங்கள் எழுதி, நடிக்கவும் முன்வந்து விடுகிறார்கள். அப்படியிருக்கையில் நாம் என்ன மட்டமா? நம்மால் நாடகம் எழுத முடியாதா? டைரெக்ட் செய்ய முடியாதா?’ என்று கந்தையா எண்ணினான். ‘துணிந்து செய் வாத்தியாரே!’ என்று நண்பர்கள் தூபம் போட்டார்கள்.
கந்தையா எப்படியோ ஒரு நாடகம் எழுதிவிட்டான். எப்படியோ சில நூறு ரூபாய் சேர்த்தான். நாடக அரங் கேற்றத்திற்குத் தேதியும் குறித்து முடித்தான். ஆகவே, ‘நண்பர் கலைக் குழு’ ஜாம் ஜாமென்று செயல் புரியத் தொடங்கியது.
‘நாடக ஆசிரியர் இயக்குநர்’ கந்தையாவுக்கு, நாடகக் கலையை வளர்ப்பதற்காக ஈடுபட்டுள்ள சொஸைட்டி ‘வண்ணப் பறவைகள்’, ‘ஃபாஷன் யுவதிகள் எவரையும் தெரியாத காரணத்தினாலே, இந்த விதமான நாடகங்களையும், நாடகத் தயாரிப்பாளர்களையும் நம்பி வாழ்கிற இளம் பெண்களின் துணையை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
‘நானாச்சு வாத்தியாரே! இதுக்காகவே எத்தனையோ பேரு காத்திருக்காங்க. ஒரு நாடகத்துக்கு முப்பது ரூபா கொடுத்தால் போதும்’ என்று உதவி புரிய முன்வந்தான் முத்துசாமி. இவன் ‘ஆர்மோனியஸ்ட்’டும் கூட.
‘வெறும் முப்பது ரூபாதானா? ஒத்திகைகள், நாடகம் எல்லாத்துக்குமே?’ என்று ஆச்சர்யமாக விசாரித்தான் கந்தையா.
பின்னே, இவளுக இருக்கிற லெச்சனத்துக்கும், இவளுகளிடம் இருக்கிற கலைத் திறமைக்கும் நூறு நூறாகவா அள்ளிக்கொடுப்பாங்க?இந்த முப்பது ரூபாகூட கிடைக்காமல் எத்தனைபேரு லோல் படுறாங்க தெரியுமா?’ என்று அனுபவ ஞானத்தைக் கடைபரப்பினான் மற்றவன்.
‘ஒரு நாடகம் நடக்க இரண்டு மூணுமாதங்களாவது ஆகும். எத்தனையோ தடவைகள் ஒத்திகை நடக்கும். இதுக்கெல்லாம் சேர்த்து முப்பதே முப்பது ரூபாதான் அவங்களுக்கு என்பது ரொம்பக் குறைச்சல்தான்’ என்று இளகிய மனம் படைத்த கந்தையா உருகிப் போனான்.
கவலைப்படாதே வாத்தியாரே! அந்தப் பெண்களே இதுபற்றிக் கவலைப்படுவது கிடையாது. நீ ஏன் வீணாக அலட்டிக்கிறே? மேலும், இந்த ஏற்பாட்டினாலே அந்தப் பொண்ணுகளுக்கு வேறு பல லாபங்கள் இருக்கின்றன. ஒத்திகைகளின் போது வயிறு நிறைய டிபன் – காபி கிடைக்கும். நடிக பிரதர்களின் கவனிப்பைக் கவர்ந்து அன்பளிப்புகள் பெற முடியும். நாடகக்கலை ரோமியோக்களின் ஆசையைத் தூண்டி, அவர்களோடு உறவு கொண்டு, அவ்வப் போது பணம் பெறவும் முடிகிறது. உலகம் இருக்குதே, வாத்தியாரே, அது ரொம்பப் பெரிய விஷயம். ஒவ்வொரு துறையும் ஒரு பெரிய விஷயம்தான். ஒவ்வொன்றிலும் வெளிப்படையாகத் தோன்றுவது போக, ஆழ்ந்து ஆராய்ந் தால் மட்டுமே புலனாகக்கூடிய, அற்புத உண்மைகள் நிறையவே உண்டு என்று லெக்சரடித்தான் முத்துசாமி, அவன் ஒரு படா போர் !
புத்ததேவனுக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டதுபோல இந்த ‘போர்’ முன்னிலையில் கந்தையா வுக்கு ஞானம் உதயமாயிற்று. ‘ஓகோ! இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?’ என்று தலையை ஆட்டிவைத்தான். “கலைக் காவலன் ஆகத் திட்டமிட்டிருக்கும் நாம் கலைஞர்களின் பாதுகாவலன் ஆக வேண்டியதும் அவசியம் என்று அந்த நிமிடமே அவன் இரண்டாவது உறுதியையும் மேற்கொண்டு விட்டான். ஆனால் இதை அவன் வாய் விட்டுச் சொல்லவில்லை.”
முத்துசாமி முதல் நாடகத்துக்காக மூன்று பெண்களை அழைத்து வந்தான். குமாரி தேவகி, பேபி நளினி, சாவித்திரி என்று அறிமுகப்படுத்தினான். ‘ஒரிஜனல் பெயர்களை ஒதுக்கிவிட்டு அழகான பெயர்களை அணிந்து கொள்வது சினிமா, வட்டாரத்திய ஃபாஷன் அல்லது தொழில்முறை மட்டுமல்ல; உதிரிகள் நாடகத்துறையிலும் சகஜமாகிவிட்ட ஒரு வழக்கம்தான்.
இவர்களில் தேவகியைக் கந்தையாவுக்கு மிகுதியும் பிடித்துவிட்டது.
‘உயரம் கம்மியான, சதைப் பிடிப்பு உள்ள, பெண்களை நமக்டி அதிகம் பிடிக்கும்’ என்று அவன் அடிக்கடி சொல்வது உண்டு. அவனுக்குப் பிடித்த பெண் இலக்கணத் திற்குரிய இலக்கியமாக இருந்தாள் தேவகி.
ஒத்திகைகள் அமர்க்களமாக நடைபெற்றன. ஒவ்வொரு ஒத்திகையுமே ஒரு விசேஷ நாடகம் போலிருந்தது அரங்கேறப் போகிற நாடகத்துக்கான முன் தயாரிப்பு என் கிற வெளிச்சத்தின் பின்னே, மூன்று பெண்களையுமே கதாநாயகிகளாகக் கொண்டு, சுவாரஸ்யமான காட்சிகள் உயிர்த்துடிப்போடும் உணர்ச்சிப் பெருக்கோடும் நடிக்கப் பெற்றன. ஜிலு ஜிலுப்புக்கும் சிரிப்பின் கலீரிடல்களுக்கும் குறைவே இல்லை.
ஒருநாள் இரவு, ஒத்திகை முடிவதற்கு இரண்டு மணி ஆகிவிட்டது. அன்று குமாரி தேவகி கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து, கலகலவென சிரிப்பைக் கொட்டி, வசியப் போஸ்கள் காட்டி, அற்புதமாக விளங்கினாள். வாத்தியார் கந்தையா அவளிடம் மனம் பறிகொடுத்தான். ‘இத்தனை நேரத்துக்குப் பிறகு ரொம்ப தூரம் நடந்து போவானேன் தேவகி? இங்கேயே படுத்துக்கொள்ளேன்!’ என்று அன்பும் பரிவும் கலந்து கனிவுடன் கூறினான்.
‘அவன் பார்வையையும் பேச்சின் பொருளையும் பாந்து கொண்ட தேவகி. ஒயிலாக நின்று, ஒய்யாரமாக நோக்கி அர்த்தம் பொதிந்த மோகனப் புன்னகை பூத்தாள். அவ்வளவுதான். சொக்கிவிட்டான் பையன்!’
அன்று முதல் குமாரி தேவகி அந்த வீட்டிலேயே தங்கி விட்டாள்.
“பாவம்! கஷ்டப்படுகிற கலைமகள் ஒருத்திக்கு நம்மால் ஆன உபகாரம் செய்யலாமே என்ற நல்லெண்ண தான் காரணம்” என்று அளந்தான் ‘கலைக்காவலன்’ கந்தையா
‘ஆகா,உமது பரந்த நோக்கத்தையும் அன்பு உள்ளத்தையும் நாங்கள் அறியாமலா இருக்கோம்!’ என்றார்கள் அவனுடைய நண்பர்கள்.
‘நண்பர் கலைக்குழு’வின் முதல் நாடகம் வெற்றிகரமாக நடைபெற்றது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ரொம்ப திருப்தி. கந்தையாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவனுடைய கலை முயற்சி வெற்றி பெற்று விட்டது; அவனுக்கு ஒரு கலைத் துணைவி கிடைத்து விட்டாள் என்பதனால்!
சில மாதங்கள் கழிந்தன. என்ன நண்பர் கலைக்குழு அவ்வளவுதானா! என்று சிலர் கேலி பேசலாயினர்; கந்தையா சும்மா இருந்து விடுவானா? எழுதினான் அடுத்த நாடகத்தை. ஏற்பாடுகள் செய்தான் ஒத்திகைக்கு.
இப்போது மிஸ் புஷ்பா என்ற பெண்மீது அவனுக்கு மோகம் பிறந்தது. அதன் விளைவாக, தேவகி இடத்தை காலி செய்து தரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதற்காக அவளோ, கந்தையாவோ வருத்தப்படவில்லை
‘கஷ்டப்படுகிற பெண்ணுக்கு நம்மாலான உதவியை அவள் வாழ்க்கை பூராவும் வைத்துக் காப் பாற்ற முடியுமா?’ என்றான் அவன்.
“கரெக்ட், வாத்தியாரே!” என்று ஆமோதித்தான் நண்பன் முத்துசாமி.
கந்தையா ஒரு பாலிசி வகுத்துக்கொண்டான் என்பது நாளடைவில் அவன் நண்பர்களுக்குப் புரிந்துவிட்டது.
கந்தையா ஒரு புது நாடகம் எழுதிவிட்டான் என்றால் ஒரு புதிய ஜோடிக்கு திட்டம் போட்டு விட்டான் என்று அவர்கள் கணிக்க முடிந்தது. ஒரு நாடக ஒத்திகையின் போது கூடிய பெண்மீது கந்தையாவுக்கு அலுப்பு ஏற்பட ஆரம்பித்து விட்டது என்பதற்கு அடையாளம்தான், ‘நான் அடுத்த நாடகத்துக்கு ஐடியாப் பண்ணியாச்சு. எழுதவும் ஆரம்பித்தாச்சு’ எனும் அவனது அறிவிப்பு என்றும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
இது குறித்து அவர்கள் குறை கூறவும் இல்லை. ‘உலகம் ரொம்பப் பெரிய விஷயம். அதில் எல்லாம் நடக்கும். எல்லாத்துக்கும் இடமிருக்கு!’ என்று முத்துசாமி சொல்வது வழக்கம். இந்தக் கணிப்பு கலைக் குழு நண்பர்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.
‘நான் நாடகக் கலைக்குப் பணி புரிகிறேன். அத்துடன் கஷ்டப்படும் கலைப் பெண்களுக்கும் நம்மாலான உபகாரம் பண்ணலாமே என்ற நினைப்பு. ஒரே பெண்ணுக்குத்தான் உதவி பண்ணவேண்டும் என்று என்ன கட்டாயம்? நமது அன்பும் உதவியும் நல்லெண்ணமும் பலருக்கும் பயன் படட்டுமே என்றுதான் இப்படிச் செய்கிறேன்’ என்று கந்தையா சொல்லலானான்.
‘வாத்தியார் கந்தையா வாழ்க! அவர் தயவால் நாடகக் கலையும் வாழும்; மன்மதக் கலையும் வளரும்!’ என்று ஆரவாரித்தான் முத்துசாமி.
(1967)



