
மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
12. தோல்வியில் வெற்றி
யார் யாரோ எது எதற்காக வெல்லாமோ எழுதுகிறார்கள்; எழுதுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள் கதைஞர் ரத்னவேலு அப்படி எல்லாம் சொல்வதில்லை. ஆனாலும், அவர் காதலுக்காகத்தான் கதைகள் எழுதுகிறார். அவருடைய கதைகளே இதை எக்காளமிட்டுச் சொல்லும்.
‘காதலினால் மானிடருக்கு இன்பம் உண்டாம்..அது உண்டாம் – இது உண்டாம், ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!’ என்று ஒரு கவிஞன் புலம்பிவிட்டுப் போனானே, அதைப் பின்பற்றி நாமும் காதல் வளர்க்கக் கதைப் பணிபுரிவோம் என்று ரத்னவேலு கருத்தில் கொண்டு எழுதி வருகிறார் போலும்’ என்று எண்ணு கிறவர்கள் ஏமாற்றம் அடையவே நேரிடும்.
காதல் ரசம் நனி சொட்டச் சொட்ட அவர் சிறுகதை நெடுங்கதை, குறுநாவல், முழுநீள நாவல், வருஷக் கணக்கில் வளர்ந்து கொண்டே போகும் தொடர் நவீனம் எல்லாம் எழுதுகிறார் என்பது உண்மை. ‘காதல் மன்னன்’ என்ற பெயரை சினிமா உலகில் யாரோ பற்றிக்கொண் டிருப்பதனால்தான், ரத்ன வேலுவின் ரசிகமணிகள் அவருக்கு அந்தப் பட்டத்தைக் கொடுக்க முன்வரவில்லை என்பது ‘சொல்லாமலே பெறப்பட வேண்டிய சங்கதி. இதிலிருந்து, அவருக்கு ரசிக மாணிக்கங்களும் ரசிகரத்தினங்களும், வைர வைடூரியங்களும் மிக நிறைய நிறையவே இருக்கிறார்கள் என்பது ஊகித்துக்கொள்ளத்தக்கதாகும்.
அவருடைய ரசிக மாணிக்கங்கள் “எட்ஸட்ரா எட்ஸட்ரா” காதல் கதைகளை விழுந்து விழுந்து படிக்கும் பண்பினர்; பிறகு சுவையான கனவுகளை வளர்க்கும் இயல்பினர். அப்புறம் அவருடைய காதல் படைப்புகளை எல்லாம் தொகுத்து பைண்டு செய்து வைத்துக்கொண்டு, தலை யணையாக்கி, இன்ப உலகில் சஞ்சரிக்கும் சுபாவம் உடைய வர்கள் என்பதை ரத்தினவேலு நன்கறிவார். அவர்களை மாற்றக் கூடாது என்றுதான் அவர் ஒன்றைஒன்று விஞ்சும் விதத்திலே காதல் கதை ஓவியங்களைச் சுவையோடு எழுதிக் கொண்டிருந்தார்.
இப்படி, ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கும் பராபரம்’ ஆகத் தம்மை மாற்றிக்கொண்டு, காதல் கதை வளர்க்கும் ரத்னவேலுவுக்கு வாழ்வில் ஒரு ஏமாற்றம் துணையாக இருந்து வந்தது.
கதைஞர் ரத்னவேலு காதலுக்காகக் கதைகள் எழுது கிறார் என்பதன் உள்ளுறை பொருள் சற்றே விளக்கப்பட வேண்டிய ஒன்று ஆகும்.
கதைகள் வகையறா விடாது எழுதிக்கொண்டே இருந்தால் புகழ் வரும், பணம் கிடைத்தாலும் கிடைக்கும். பலரும் மதிப்பு வைத்து நம்மை பாராட்டுவார்கள். இப்படி ரொம்பக் காலம் எழுதிக்கொண்டே போனால் என்றைக் காவது எவராவது நிதி வசூலித்து நமக்குப் பொன் முடிப்பு வழங்குவார்கள். நாம் இருக்கும்போது மறந்து போனாலும் செத்த பின்னர் சிலை வைத்துக் கௌரவிப்பார்கள்- இன்னோரன்ன எண்ணங்கள் எழுதுகிற சுப்பர்களின் மன ஆழத்தில் புரண்டு அவர்களைப் பாடாய் படுத்துகின்றன. இதே போல ‘இன்னொரு ஆசைப்பற்றி’ கதை எழுதுவோரும் உளர். நம் எழுத்தில் மயங்கி, பலப்பல பெண்கள் நமக்குக் கடிதம் எழுதுவார்கள்; எத்தனையோபேர் நம்மைக் காதலிப்பார்கள்; ந மக்குக் காதலிகள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள் எனும் ஆசைதான் அது.
இப்படி ஒரு ஆசை பற்றி அலைகழிக்கத் தொடங்கிய தனாலேதான் கதைஞர் ரத்னவேலு காதல் கதைகள் எழுத ஆரம்பித்தார்; எழுதுகிறார்; இந்த நம்பிக்கையோடுதான் எழுதிக்கொண்டே இருக்கிறார்.
ஏதேதோ எண்ணங்களோடும் நம்பிக்கைகளோடும் எழுதத் தொடங்கியவர்களுக்கெல்லாம் அவர்களுடைய எண்ணங்களில் “நாலிலே ஒன்றிரண்டு” பலித்திருக்கலாம்; அல்லது பலிக்காமல் போய் அவர்களை விரக்தியின் திரு உருவங்களாய் மாற்றி விட்டிருக்கலாம். ஆனால் ரத்ன வேலுவுக்கு ஏமாற்றம்தான் துணையிரூந்தது. என்றாலும் அவர் நம்பிக்கையை இழந்து விடாமல் அற்புதமான காதல் படைப்புகளை உருவாக்கி வருகிறார்.
அவருக்கு பாராட்டுக்கள் நிறையவே கிடைத்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது ஒருசில பெண்களும் கடிதம் எழுதத்தான் செய்தார்கள். அவர் அவருடைய கதாநாயகிகளைத் துன்பம் எனும் இரும்புச் சட்டியில் அதிகம் போட்டு வாட்டி வதக்கி, நெருக்கடியான கட்டங்கள் எனும் கடுகு உளுத்தம் பருப்பெல்லாம் போட்டுத் தாளித்துக்கொட்டி வைக்கிறார்; என்றாலும், கதை முடிவிலே எப்போதும் இன்பம் தான் என்ற ருசியை ஏற்படுத்திச் சுவை மிக்கதாகப் படைக்கும் ஆற்றல் அவரிடம் இருக் கிறது. இந்த ரீதியில் ஒரு ரசிகை எழுதியிருந்தாள் என்று ரத்னவேலு அடிக்கடி கூறி மகிழ்வது வழக்கம்.
சில பெண்மணிகளை அவர் நேராகச்சந்திக்க வாய்ப்புகள் கிட்டியது உண்டு. அதெல்லாம் ஓடும் மேகங்கள் மாதிரி, தோன்றி மறைந்த சிறு நிகழ்ச்சிகள்தான். அவர் வீதியோடு போய்க்கொண்டிருப்பார். அவரை அறிந்த நண்பர்கள் மனைவியோடு, அல்லது மகள்களோடு எதிர்ப்படுவார்கள். அவர்கள் ‘இவரைத் தெரியுமோ? இவர்தான் பேமஸ் ரத்னவேலு அற்புதமான கதைகள், நாவல்கள் எல்லாம் எழுதியிருக்கிறாரே, அந்த கற்பனைக் களஞ்சியம் இவரே தான்’ என்று எதையாவது தங்களோடு வரும் பெண்களிடம் சொல்லி வைப்பார்கள். அவ்வேளைகளில் அப்பெண்களின் முகத்தில் பிறக்கும் மலர்ச்சியையும், கண்களில் சுடரும் விசேஷ ஒளியையும் அவர் கண்டு மகிழத் தயங்குவதே யில்லை. சிலர் நாங்கள் படித்திருக்கிறோம். ஸார் எழுதுகிற கதைகளை நான் படிக்காமல் விடுவதே கிடையாது. எத்தனையோ தொடர்கதைகளைச் சேர்த்து வைத்திருக் கிறேனே’ என்று குறிப்பிடுவார்கள். அப்போது அவர் உள்ளத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கி நிறையும்.
இதற்குமேல், அவர் எதிர்பார்ப்பது அல்லது எதிர்ப் பாராதது எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அவர் எதிரே வருகிற பெண்களைப் பார்த்துப் பார்த்து, இவளைப் போல்- அல்லது அவளைப் போல எவள் எவளையோ போல எல்லாம்- தமது காதலி இருக்கலாம் என்று எண்ணுவதும் நிற்கவில்லை.
எண்ணிக்கொண்டே இருந்தால் என்றாவது அந்த எண்ணம் எண்ணியவிதமே செயலாகப் பரிணமித்து விடும் என்ற நம்பிக்கை ரத்ன வேலுவுக்கு உண்டு. அது அவ்விதமே நிகழ ஆரம்பித்துவிட்டது என்று அவர் மகிழ்ந்து போனார், அவர் பாதையில் சாந்தா குறுக்கிட்டபோது.
ரத்னவேலுவுக்குப் புதிதாக அறிமுகமான ஒருவரின் மகள் சாந்தா. எஸ். எஸ். எல்.சி. படித்து முடித்துவிட்டு, சோம்பேறியாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் புத்தகங்கள் பெரிதும் உதவின. ரத்னவேலுக்கு அவளை அறிமுகப்படுத்திய தந்தை அவளுக்கு நிறைய புத்தகங்கள் கொடுத்து உதவும்படி நண்பரிடம் சிபாரிசு செய்தார். ‘ஆகா, அதுக்கென்ன!’ என்று தலையாட்டினார் கதைஞர். அதுமுதல் அவள் அடிக்கடி அவர் வீடு தேடி வரத்தொடங்கினாள். மணிக்கணக்கில் உட்கார்ந்து வம்பளப்பதில் உற்சாகம் கண்டாள். அவர் எழுதிய கதை களைப் பற்றியும், அவள் படித்த வேறு பல புத்தகங்கள் பற்றியும் அவள் தாராளமாக உரையாடினாள்.
சாந்தா கலகலப்பாகப் பேசிப் பழகும் சுபாவம் பெற் றிருந்தாள். சங்கோஜம் இல்லாமல் அவர் முன்னிலையில் நடந்து கொண்டாள். தனது வீட்டில் பழகுவது போலவே நாற்காலியில் சரிந்து கிடந்தும், தரையில் படுத்தும் புரண்டும். வாசல்படியில் சாய்ந்து நின்றும், கண்ணாடி முன் நின்று ஒப்பனைகள் செய்து களித்தும் – அவ்வாறு செய்யும்போதே அவருடன் வாயாடியும், பொழுது போக்கினாள்.
அவள் அவ்விதம் பேசுவது வெறும் தொணதொணப் பாகவும், அவள் அங்கிருந்து நேரம் போக்குவது வீண் காலக் கொலையாகவும் அவருக்குத் தோன்றவே இல்லை. மாறாக, மனசுக்கும் கண்ணுக்கும் இனிய குளுகுளு விருந்தாகவே அவர் அவற்றைக் கருதினார். ரசித்தார்.
திடீரென்று ஒரு நாள் சாந்தா அறிவித்தாள் ‘நான் கவிதை எழுதுகிறேன்’ என்று.
‘வந்ததடா விபத்து!’ என்று அவர் எண்ணி முடிப்பதற் குள்ளேயே, “இதோ இருக்கு நான் எழுதிய கவிதைகள் படிச்சுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க!” என்று அவள் உத்தரவிட்டாள்.
வளைகள் அணியாமல் வெறும் “ரிஸ்ட்வாட்ச் மட்டுமே கட்டிய கரம்தான் என்றாலும், அது ஆணைகாட்டும் போது மறுத்துரைக்கும் வலிமையை அவர் பெற்றிருக்கவில்லை. உடனடியாகவே படித்துப் பார்த்தார். பேஷ் பேஷ்! நன்றாகத்தான் எழுதியிருக்கிறாய்… அருமையாக இருக்குதே…அட, ஜோராக இருக்கே!… பிரமாதம்” என்று வியப்புரைகளை உதிர்த்தார்.
“சாந்தா, நீ ஒரு கவிஞி. இப்படி உணர்ச்சிகளை எழுதிக் கொண்டே இரு. பெரிய கவிஞி ஆகி விடுவாய்” என்று அவர் பாராட்டினார்.
சாந்தா கலகலவெனச் சிரித்தாள். ‘பெரிய கவிஞி என்ன? மகா கவிஞி ஆகும் எண்ணம் எனக்கு உண்டு. தமிழில் மகா கவிகள் பலர் இருந்திருக்கிறார்கன். ஆனால் கவிஞி இருந்ததாக யாரும் இதுவரை குறிப்பிடக் காணோம். நான் அந்தக் குறையைப் போக்குவதற்காகவே கவிதை எழுத ஆரம்பித்தேன்’ என்றாள்.
‘பளா! பளா!வாழ்க நீ வெல்க!’ என்று வாழ்த்தினார் கதைஞர். தொடர்ந்து சொன்னார். ‘நல்லவேளை, நீ எனக்குப் போட்டியாக வரவில்லை. நீயும் கதை எழுதுகிறேன். நாவல் எழுதுகிறேன் என்று கிளம்பிவிட்டால், என்பாடு ஆபத்தாகிவிடுமே!’ என்று.
அவள் வசீகரப் புன்னகை பூத்து, அவரை நோக்கினாள். கவர்ச்சிகரமாக மை பூசப்பெற்றிருந்த அழகிய பெரிய கண்களின் பொல்லாத பார்வை அது.
கிறங்கிப் போனார் கதைஞர். தமக்கு அவள்மீது காதல் பிறந்து வளர்ந்து வருகிறது எனும் உண்மையை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அதிலிருந்து அவர் சதா சாந்தாவை நினைப்பதிலும், அவள் தன்முன் இருக்கும் போது அவளையே பார்த்து, அவள் பேச்சைக் கேட்டு, சொக்கிக் கிடப்பதிலும் சுகானுபவம் பெற்றார்.
கவிதை உள்ளம் பெற்றிருந்த சாந்தாவுக்குக் கதைஞரான தம்மீது காதல் உண்டா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவேண்டும் வன்று தவியாய்த் தவித்தார். தமது உள்ளக் கிடக்கையை அவளிடம் வெளிப்படையாக அறி விக்கவோ தயக்கம். சங்கோஜமும் கூட. அவள் என்ன சொல்வாளோ, எப்படி நடந்து கொள்வாளோ என்ற குழப்பம் வேறு. ஆகவே, தமது ஆசையை அவளுக்குத் தெரியப்படுத்தாமலே – என்றாவது ஒருநாள் எப்படியாவது அதை அவளிடம் அறிவித்து விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டே காலத்தை ஏலத்தில்விட்டு வந்தார் ரத்னவேலு.
‘இன்று சாந்தா வந்ததும் அவளிடம் சொல்லிவிட வேண்டியதுதான்’ என்று உறுதிகொண்டு காத்திருந்தார் அவர். அன்று அவள் விசேஷமான ஒரு கவிதைபோல் வந்து சேர்ந்தாள்.அவள் தோற்றத்தில் வியப்படைந்து விழித்துக் கொண்டிருந்தார் அவர்.
அன்று அவள் என்றுமில்லாத சந்தோஷத்துடன் விளங்குவதாகத் தெரிந்தது. எதையோ எண்ணி எண்ணிக் குறுநகை பூத்தாள். ஏதோ ஒரு பாட்டை மென்குரலில் இழையவிட்டாள், அவரைப் பார்த்துச் சிரித்தாள். கண்ணாடி முன் நின்று தன்னை அழகு பார்த்துக்கொண் டாள்.
உள்ளத்தின் குதூகலம் இப்படி மேனி முழுவதும் பொங்கி வழியும்படி பொங்கிப் பொங்கி வழியும்படி, என்ன விசேஷம் நிகழ்ந்து விட்டது?’ என்று கேட்கத் துடித்தார் அவர். ஆயினும் தயங்கிக் கொண்டிருந்தார்.
அவள் அவர் முன்னே வந்து மேஜை மீது குனிந்து, முழங்கைகளை ஊன்றிக்கொண்டு அவரை உற்று நோக்கினாள். ஒரு விஷயம்… என்று தொடங்கினாள்.
ரத்னவேலுவின் மனம் இன்பச் சிறகு விரித்து இனிய கற்பனை வானில் மிதக்கலாயிற்று. அவளும் என்னைப் போலவே தவித்துக் கொண்டிருக்கிறாளா? என்னிடம் எப்படிச் சொல்வது என்று கூச்சம் கொண்டிருந்தாளா? இன்று சொல்லி விடுவது என்று துணிந்து விட்டாள் போலும்! என்ன அருமையான மன ஒற்றுமை!
அவள் அர்த்தமில்லாமல் சிரித்தாள். ஸார் வந்து… நீங்க தவறாக எண்ணிவிடக் கூடாது.
கலகலவென்று தயக்கமோ சங்கோஜமோ இல்லாமல் பேசிப் பழகும் சுபாவம் கொண்ட பெண்ணைக்கூட காதல் உணர்வு எவ்வளவு நாணம் உடையவளாக மாற்றிவிடு கிறது! அவர் உள்ளம் கிளுகிளுத்தது. ‘ஊம்ங்?’ என்று அவள் முகத்திலேயே பார்வை பதித்தார்.
அவர் பார்வையை எதிரேற்கத் திராணியற்றனவாய் அஞ்சனம் தோய்ந்த அழகு விழிகள் தாழ்ந்தன. அந்நிலையில் சொக்கினார் அவளது நீளிமைகளின் அழகிலே கதைஞர். நமக்கு முந்தி, தன் அன்பை, ஆசையை, அவள் நம்மிடம் தெரிவிக்கப் போகிறாள் என்று குதூகலித்தது அவர் உள்ளம்.
‘ஸார், ஒருவரை இங்கே வரச்சொல்லியிருக்கிறேன். வழியில் தற்செயலாய்ப் பார்த்தேன். இந்த நேரத்தில் எங்கே போவது? நீங்கள் என் நல்ல நண்பர். இல்லியா? தப்பிதமா எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று அவரை இங்கேயே வரச்சொல்லி விட்டேன்…’
அவள் மடமடவென்து பேசினாள். அவருடைய உடலினுள் – உள்ளத்திலோ எங்கோ-பல கோட்டைகள் இடிந்து பொல பொலவெனச் சரிவது போலிருந்தது அவருக்கு. திடீரென அளவிட இயலா அசதியும் பலவீனமும் அவர் மீது கவிந்து விட்டதுபோல் தோன்றியது. அவருள் ஊற்றெடுத் துப் பொங்கிய உவகைப் பெருக்கும் உணர்வுக் கிளுகிளுப்பும் சட்டென வற்றி மாய்ந்தன. அவர் மௌனச் சிலையாக உட்கார்ந்திருந்தார்.
அவர் நிலையைக் கவனிக்கும் நிலையில் இல்லை அவள். தனது குதூகல ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.
‘இங்கே தான் இருக்கியா?’ என்று கேட்டபடி வந்து சேர்ந்தான் ஒரு இளைஞன், புது வெயிலில் மினுமினுக்கும் இயற்கை அழகுகள் போல் ஒளிக் கவர்ச்சியோடு மிளிர்ந் தாள் சாந்தா. அவனை அவள் பார்த்த பார்வை; அதில் நீந்திய பொருள்; அவள் கண்களில், முகத்தில், எழிலிட்ட காந்தச் சுடரொளி- எல்லாமே புதுமையாக இருந்தன ரத்னவேலுவுக்கு.
தம்மோடு பேசிப் பழகிய எத்தனை எத்தனையோ நாட்களில்-தம்முன் நின்று சிரித்து விளையாடி இன்ப உளறல்களாய்ச் சொற்கள் உதிர்த்துப் பொழுது போக்கிய கணக்கற்ற வேளைகளில் – ஒருநாள் ஒரு பொழுதேனும் அவளுடைய பார்வை இந்தவிதப் பொருள் பொதிந்து பாய்ந்த தில்லை; அவள் கருவிழிகள் இவ்வித இன்பக்கனலேற்று மிளிர்ந்ததில்லை; அவளே இத்தகைய எழிலோடு விளங்கிய தில்லை. அவளுடைய ஆசை, அன்பு, ஆர்வம் எல்லாம் அவள் பார்வையிலும் பேச்சிலும் செயல்களிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. அவளுக்கு ஆனந்த உதயம்.
அவருக்கு ஆசையின், நம்பிக்கையின், அஸ்தமனம்தான். அவருடைய உணர்ச்சிகளை அவருள் அவரே கொன்று புதைத்து விட வேண்டியதுதான். அக உலகமும் புற உலகமும் இருண்டு விட்டதாக எண்ணினார் அவர்.
தன்னைத் தேடி வந்தவனோடு, உற்சாகப் பெருக்கோடும் மகிழ்ச்சித் துள்ளலோடும், கிளம்பினாள் சாந்தா. ‘வரேன், ஸார்!’ என்று கூவிவிட்டு, திரும்பிப் பாராமலே நடந்தாள்.
ஏமாற்றம் நெஞ்சை அழுத்த, நெடுமூச்செறிந்தார் ரத்னவேலு, சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரம்தான்.
திடுமென்று விழித்தெழுந்தவர் போல் நிமிர்ந்து உட்கார்ந்தார் ரத்னவேலு. ‘சந்தேகமில்லை; புதுச்சக்தி தோன்றும்’ என மந்திரம் போல் உச்சரித்தார். பேனாவை எடுத்தார். வேகமாக எழுதத் தொடங்கினார்.
‘காதல் தூங்குக. காதலி தொலைக. என் வாழ்க்கையில் இவை அஸ்தமித்துப் போனால் என்ன? அதற்காக நான் மனமிடிந்து போவதா?’ எனக்குக் கதைகள், நாவல்கள், குறுநாவல்கள், தொடர்கதைகள் எழுதும் ஆற்றல் இருக்கிறது. அவற்றிலே காதலையும் காதலர்களையும் இஷ்டம் போல் விளையாட விடுவேன். அது தனி உலகம். எனது இன்ப உலகம். அங்கு எனக்கு எப்போதும் வெற்றி. அந்த சுகமே தனி!” என்று அவர் மனம் மிடுக்குடன் கீதம் இசைக்க, ரத்னவேலு எழுதிக்கொண்டே இருந்தார்.
(1968)



