
மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
11. மனமூட்டம்
வானம் இருண்டு விட்டது.
இருளோ சமுத்திரமோ என்று, சூலுண்ட மேகங்கள் திரண்டு கவிந்து கனத்துத் தொங்குவதனாலே, எங்கும் கருங்கும் என்றாகி விட்டது.
இப்போது மணி நான்கு பத்துதான். ஆனாலும் ஆறு ஆறரை மணி இருக்கும் என்று மயங்க வைக்கிறது சூழ்நிலை.
இதுபோன்ற நேரங்களிலே என் மனம் சிறகுகளை ஒடுக்கிக்கொண்டு பொந்தினுள் ஒண்டிக்கொள்கிற சிறு பறவை ஆகிவிடுகிறது. இனம் புரியாத ஒரு குழப்பம் காரணமற்ற ஒரு சோகம்- உள்ளத்தில் குறுகுறுக்கிறது. படுக்கையில் குப்புற விழுந்து விம்மி விம்மி அழ வேண்டும் போல் தோன்றுகிறது.
மணலுக்குள் புதைக்கப் புதைக்க முண்டியடித்துத் தலை தூக்கி வெளியே வந்து குடுகுடு என ஓடுகிற கருவண்டு போல, உள்ளத்தில் புதையுண்டு கிடந்த நினைவுகள் சம்பந்தம் இல்லாமல்- தேவை இல்லாமல் — மேலெழுந்து படர்கின்றன. என்றோ நிகழ்ந்தனவும், எப்பவோ எங்கோ கண்டனவும், இது போன்ற சமயங்களில் ஏனோ நிழலாட்டம் போடுகின்றன…
கறுப்பு அங்கி போட்டுத் தலைமுதல் கால்வரை மூடிக் கொண்டு, பூச்சாண்டி போல் தள்ளாடித் தள்ளாடி நடந்து வரும் கோஷாக் கிழவி ஒருத்தி குபுக்கென்று முளைக்கிறாள், பள்ளம் பள்ளமாய் கோடுகள் கீறிய முகமும், கோணிய உதடுகளும், பொடி தேய்த்துக் கறுப்பேறிய விகாரப் பற்களும் காட்டி அவள் பரிதாபமாகச் சிரிப்பது கோரமாக அச்சுறுத்துகிறது. அவளை நான் எனது பள்ளிப் பருவத்தில், வழியில் சந்தித்த நினைவு…
நீண்ட கறுப்புக் கோட்டு அணிந்த கருடமூக்குக் கணக்கு வாத்தியார், கண்கள் சிவக்க ஆங்காரமாக, எல்லாப் பையன்களையும் கையில் பிரம்பினால் வெளுத்து வாங்கியது வருகிறது. பள்ளிக்கூடம் முடிந்ததும், ‘வயித்திலிங்க வாத்தியார் சாகாரா; எங்கள் வயித்தெரிச்சல் தீராதா?’ என்று நாங்கள் எல்லோரும் கூச்சல் போட்டதும், அந்த வருடத்திலேயே அவர் பிளவை கண்டு அறுவை சிகிச்சையில் ஒப்பேறாமல் செத்துப் போகவும் எங்கள் வயிற்றெரிச்சலின் விளைவுதான் அது என்று வருந்தி நாங்கள் கண்ணீர் விட்டதும் மேலெழுந்து உள்ளம் கனக்கிறது…அழுதா லென்ன? இப்போதும் அழுதால் என்ன?
நான் ஆசையுடன் வளர்த்த காசித் தும்பைச் செடியில், முதல் பூ அடுக்கு அடுக்கான இதழ்களுடன் செக்கச் சிவந்து பூத்திருந்த அழகை அப்படியே செடியிலிருக்கவிட்டு நாள் முழுவதும் கண்டு மகிழ வேண்டும் என விரும்பியதும், பக்கத்து வீட்டுக் கன்னி வேகமாக வந்து வெடுக்கென அதைக் கிள்ளி எடுத்துக் கொண்டு அதே சுருக்கில் மறைந்து போனதும், என் நெஞ்சில் ஏற்பட்ட வடுவும்… என் கனவுகளை ஆசைகளை எல்லாம் காலக் கன்னி கொய்து கசக்கி வீசி விடுவாள் என்பதன் “ஸிம்பல்” தானோ அது என்று என் உள்ளம் அடிக்கடி எழுப்பிய கேள்விக் குறியும்… இதோ, இதோ என் மனசில் அலை தெறிக்கின்றன…
பள்ளிக்கூடத்தில் வருடாந்தரப் போட்டி விளையாட்டு நாள். ‘ஸ்போர்ட்ஸ் டே.’ நானும் என் தம்பியும் சிநேகிதர்களும் ஆனந்தமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந் தோம். உவகைக் கூச்சலுக்குக் குறைவே இல்லை. திடீரென்று வானம் இருண்டது. பெருமழை பிடித்து விளாசியது. மின்னலும் இடியும் பேயாட்டம் போட்டன. விளையாட்டுக் குழப்பத்தில் முடிந்தது. எல்லோரும் நனைந்து கொண்டு, இருட்டில் தடுமாறியபடி ஓடலாயினர்.
நாங்களும் மழையில் குளித்தவாறு வீடு திரும்பினோம். நடக்க வேண்டிய தூரமோ நெடுந்தொலை. துணையற்ற வழி நெஞ்சிலே பயம். ‘நான் எங்க வீட்டுக்குத் தலைப்பிள்ளை. இடி தலைச்சன் தலையைத் தேடிவந்து விழுமாமே?’ என்று ஒருவன் பயந்து எங்கள் பயத்தையும் அதிகப்படுத்தினான். “அர்ச்சுனன் பேரைச் சொல்லு, அர்ச்சுனா, பார்த்தா, காண்டீபா…” என்று முணு முணுத்தான் இன்னொருவன். என் தம்பி – ‘அர்ச்சுனன் பேர் பத்து, அர்ச்சுனன் பேர் பத்து’ என்று புலம்பிக் கொண்டு வந்தான். பாதி தூரம்தான் வந்திருப்போம். சட்டுச் சடசடத்துக் கொட்டி முழக்கிய இடி தடால் என்று விழுந்தது. மின்னல் ஒளி வெள்ளமாய்ப் பாய்ந்தது. ஐயோ அம்மா என்று அலறிக்கொண்டு ஓடினார்கள் சிறுவர்கள். இடி எங்கோ விழுந்திருக்கிறது என்று புரிந்தது. ஊருக்கு மேற்கேயுள்ள மாதா கோயிலின் ஊசிக் கோபுரத்தில் இடி விழுந்து சிறிது சேதம் ஏற்பட்ட விஷயம் மறுநாள் தெரிய வந்தது. பயத்தாலும் குளிராலும் நடுங்கிக்கொண்டு நானும் தம்பியும் வீடு சேர்ந்தபோது இரவில் வெகுநேரம் ஆகியிருக்கும் என்று தோன்றியது. சூடான காப்பியும் சுடச்சுட தோசையும் கிடைத்தால் நல்லது என்று மனம் ஆசைப்பட்டது; வயிறு கேட்டது. ஆனால்… சூடாக, சுடச்சுட, முதுகிலே கிடைத்தது – அடி மேல் அடி.
‘எங்கள் அம்மா பத்திரகாளி ஆக மாறி எங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். ஏ சின்னச் சவங்களா? கரி முடிஞ்சு போற மூதிகளா? இந்த மழையிலே எங்கே தொலைஞ்சு போனீங்க? இப்ப ஏன் இப்படி சொட்டச் சொட்ட நனைஞ்சுக்கிட்டு வர்றீங்க?’ என்று சொல்லுக்குச் சொல் அறை கொடுத்துத் தன் ஆங்காரத்தைத் தணித்துக் கொண்டாள். நாங்கள் அழுதோம்; குளிரும் பசியும் அறையின் சூடும் தந்த வேதனையால் குமுறிக் குமைந்து கண்ணீர் வடித்தோம். அப்போது மணி ஏழுதான்.
அது இப்பொழுது பசுமையாய் நினைவில் பூத்து நிற் கிறது. வாழ்வின் கொடுமையும் கசப்பும் சூழலும் எழுப்பி விடுகிற உணர்ச்சிக் கொதிப்பையும் உளப் புழுக்கத்தையும் சகிக்க முடியாமல் பெரியவர்கள் எறிகிற வாய்வீச்சுகளையும்
வேண்டிய கை வீச்சுகளையும் தாங்கிக்கொள்ள தவிர்க்க இயலாத, நிலையில் இருக்கிற சிறு பிள்ளைகளின் வாழ்க்கையை எண்ணவும் எனக்குத் துயரம் அதிகரிக்கிறது.
‘நான் ஆற்றங்கரையில் நிற்கிறேன். அதுவரை பெய்திருந்த பெருமழையின் பயனாக ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தனது கொடிய எண்ணங்களை உள்ளடக்கிக் கொண்டு மெதுவாக மிடுக்கு நடைபோடும் வன விலங்கு மாதிரி, நாசவேலை நினைப்பையும் அழிக்கும் ஆற்றலையும் வெளிப்படுத்தாமல் கவர்ச்சிகரமான காம்பீர்ய எழிலோடும் முன்னேறிச் செல்கிற ஒரு அணிவகுப்புப் போல, ஆறு நகர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு நேரம் நின்று கவனித்தாலும் அலுப்பு ஏற்படுத்தாத இயற்கை வனப்பு. என்னய்யா இங்கே நிக்கிறீக?’ கேட்டது யார் என்று பார்த்தால், சொர்ணம் பண்டிதர். நாட்டு வைத் தியர். ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். வெள்ளம் அதிகமா யிருக்கே?’ என்றேன். ‘இருந்தா என்ன! போய் வந்து பழக்கம்தான். என்று அலட்சியமாகக் கூறி நீரில் பாய்ந்தார்.
பாதி ஆறு வரை போய்விட்டார். அப்புறம் சமாளிக்க முடியாது திணறினார். கால்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டது போலும். சுழித்தோடும் நீரின் இழுப்பு சக்தி அதிகமிருந்தது போலும். அவருடைய காலம் முடிந்துவிட்டது தான் முக்கிய காரணமே போலும், முங்கி முங்கி எழுந்தது தலை. சொர்ணம் பண்டிதர் ஒரே அடியாகப் போய்விட்டார். அவரின் மரணத் தவிப்பை, கரையில் நின்ற நான் செயலற்ற வனாய் – எதுவும் செய்ய முடியாதவனாய் – கூப்பாடு கூடப் போடாமல், அப்படிக் கூச்சல் போட்டாலும் ஆள் நட மாட்டம் இல்லாத அந்த இடத்தில் எவ்விதப் பயனும் ஏற்படாது என்று உணர்ந்தவனாய், நெஞ்சு பதைக்க, தொண்டைக் குழியில் துயரம் அடைக்க, ‘ஐயோ பாவம், ஐயோ பாவம்’ என்று மனக்குரல் புலம்பக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
சில வருஷங்களுக்கு முன் நிகழ்ந்த அது இப்போதுதான் நடப்பதுபோல் பளிச்சிடுகிறது. மனிதனின் மரணத் தவிப்பை, உயிர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டாத இயற்கையின் போக்கை, நினைத்து என் உள்ளம் கனக்கிறது. எனக்கு அழுகை முட்டி வருவது அதற்காகத்தானா?
ஒருநாள் கடலோரத்தில் நின்றேன் ஒரு நண்பனுடன். மேகங்கள் கறுத்துப் புரண்டு நெடுகிலும் பரவி வந்தது வேடிக்கைக் காட்சியாக இருந்தது. இருண்டு, மழை இறங்கி விடும் போல் தோன்றியது. போகலாம், போய்விடலாம் என்று நண்பன் துடித்தான். பதட்டம் காட்டினான். மழையில் நனைவது சுகமாக இருக்கும் என்று நான் நகரவில்லை. பலர் ஓடினார்கள். என்னை விட்டுவிட்டு ஓட அவனுக்கு மனம் வரவில்லை. பெரும் தூற்றல் விழுந்தது. நாமும் ஓடலாமே என்றான் அவன் பரிதாபகரமாக. மழை வலுத்தது,
மண்ணை, மரங்களை, எங்களை நன்கு குளிப் பாட்டியது, அதை அவனால் அனுபவிக்க முடியவில்லை. என் போக்கை ரசிக்க இயலவில்லை. ‘வரும்போதுதான் சலவைச் சட்டை போட்டு வந்தேன். வீணாப் போச்சு’ சலவைச் சட்டை பாழாயிட்டுது’ என்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
அனுதாபத்துக்குரிய அவன் தோற்றம் ஏனோ என் நினைவில் எழுகிறது…
இருண்டு, மேகம் கவிந்து கிடந்த ஒரு பொழுதிலே, மனிதர் எவருமற்ற வேளையில், காற்றுச் சீறிச் சுழன்று கொண்டிருந்த போது, அலைகள் ஆரவாரித்துப் பொங்கி எழுந்து மோதிப் புரண்டு நுரைக் குமிழ்களாய்ச் சிதறி நிலம் தடவி உள் வாங்கிக் கொண்டிருக்கையில், கடலி னுள்ளிருந்து ஒரு ஆமை- பென்னம் பெரியது – வெளியே வருகிறது. மேலேறி முன்னேறுகிறது. மணல் பரப்பில் மெது மெதுவா ஊர்ந்து செல்கிறது. சிரமப்பட்டு நடந்து சிறிது சிறிதாக முன்செல்லும் அது என் நினைவில் அசைகிறது. எதற்காக நீரினுள்ளிருந்து இது வெளியே வந்து இப்படிச் சிரமப்படுகிறது என்று நான் நினைத்ததையும் எண்ணிக் கொள்கிறேன்.
மறுநாள் தெற்குக்கடற்கரை ரஸ்தாவில், ஒரு ஓரத்தில் செத்துக் கிடந்தது அந்த ஆமை. சாவதற்காகத்தான் அது கரைக்கு வந்தது போலும். லாரியோ எதுவோ அதை கொன்றிருக்கக் கூடும். மனிதர்கள் எவரேனும் சாகடித் திருக்கவும் கூடும். அல்லது இயற்கை மரணமாகவே இருத் தலும் கூடும். எப்படியோ உயிர்போய், உணர்வற்று இயக்க மற்று, அருவருப்புத் தரும் தோற்றமாய்க் கிடந்தது அந்த ஆமை என்னுள் சோகத்தை புகுத்தியது.
அதே உணர்வு இப்போதும் பொங்கி வருகிறது.
கிராமத்துக்குப் போக பஸ் கிடைக்காததனால் நான் நடக்கலானேன். ஆறுமைல் ஒரு பெரிய தூரமல்ல. ஆனால் நடுவழியில் மழை வந்து விட்டது. ஒரு ஆலமரத்தின் கீழ் ஒதுங்கினேன். குடையெனக் கவிந்து நின்ற அம்மரம் எனக்குக் குளுமையான நினைவை உண்டாக்க வில்லை. முன்னொரு சமயம், ஆலமரக் கிளை ஒன்றில் நாணிட்டுத் தொங்கிய கிழவன் ஒருவனின் உருவமும், அதை வேடிக்கை பார்க்கக் குழுமிய கூட்டமும் நினைவில் எழுந்தன. அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும், இல்லை யாரோ அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை எனத் தோன்றும்படி இவ்வாறு கட்டித்தொங்க விட்டிருக்கி றார்கள் என்றும் விதவிதமாகப் பேச்சு எழுந்ததும் நினைவுக்கு வந்தது.
இதுவெல்லாம் இப்போதும் என் நினைவில் எழுவானேன்.
மழை பெய்து முடித்த பிறகு, மரமல்லிகை மரத்தின் அடியில் உதிர்ந்து கிடக்கும் ‘பன்னீர்’ப் பூக்கள்…அதிகாலையில் மரங்களின் அடியில் விழுந்து நனைந்து கிடக்கும் பாதிரி பூக்கள்… ஓடையில் ஓடுகின்ற மழை நீரில் தாறுமாறாகக் கோலங்கள் கிறுக்கி ஆடும் பூச்சிகள் – சம்பந்தம் இல்லாமல் நினைவுக் குமிழ்களாக வெடிக்கின்றன…
அன்று ஏதோ விசேஷ நாள். அண்டை அயல்களில் குஷியும் கும்மாளியும். இயற்கை அழுதுகொண்டிருந்தது அடைமழை. நான் வெளியே எங்கும் போக முடியாத நிலைமை. காப்பி சாப்பிடக் கூடப் போக இயலவில்லை. கதவை அடைத்துக்கொண்டு அறைக்குள் ஒடுங்கிக் கிடந்தேன்- இப்போது மாதிரித்தான்.
என் உள்ளத்தில் சோகம் கப்பிக் கிடந்தது. காரணமில்லாமல் அழுகை பொங்கி வந்தது, வெளியாரின் விழா குதூகலத்தை அனுபவிக்க முடியாமல்- அனுபவிக்க மனமில்லாமல் அழுமூஞ்சித்தனமாக அறையினுள் கிடப்பதற்காகவும் நான் அழுதேன். யாருமற்ற தனியனாய் இப்பரந்த உலகத்திலே விடப்பட்டவன் போல, செய்யும் வகை அறியாது செல்லும் வழி தெரியாது திக்குத் திகாந்திரமற்ற பெருவெளியிலே தனித்து நிற்கும் ஒரு நாடோடிபோல, வெறுமை நிலையை உணர்ந்து அழுதேன், வெகுநேரம் வரை.
இப்போதும் அப்படித்தான்.
வெளியே மழை சினுங்கத் தொடங்கிவிட்டது. மணி ஆறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மழை இருட்டுடன், விரைந்து வரும் இரவின் கருமையும் கூடிக்கொண்டது.
எங்கும் கன்னங் கனிந்த கருக்கிருட்டு……
சட்டென்று ஒரு நினைவு நிழல்.
திடீரெனச் சாடுகிறது மழை. மோதுகிறது காற்று. மழைக் கம்பிகள் வகுப்பு அறையினுள் பாய்கின்றன. எங்கள் சரித்திர ஆசிரியர் ஃபாதர் கோமஸ்- பிரிட்டிஷ் ஹிஸ்டரிப் புத்தகத்தில் உள்ள எட்டாவது என்ரியின் படம் போன்ற உருவம் பெற்றவர். பெரும் உடல் குறுந்தாடிச் சாமியார் – வாசலின் இரட்டைக் கதவுகளை மூடி அடைக்க முயல்கிறார். மோதும் காற்று அவரை உள்ளே தள்ளு கிறது. அவர் முழு பலத்தோடு போராடி, கதவுகளை ஒரு மாதிரியாக அடைத்துவிட்டபோது, வேகமாகச் சாடிய காற்று கதவுகளை வீசி அடித்து, அந்தத் தடி உடல் மனிதனை அப்பால் தள்ளி விடுகிறது. மழை வெறிகொண்டு கம்பிகளை உள்ளே வீசி அடித்துக் களிக்கிறது.
நிகழ் காலத்திலே பிரத்யட்சமாய் நடப்பதுபோல் தோன்றுகிறது அந்தப் போராட்டக் காட்சி.
இயற்கையின் வெறிகொண்ட சன்னிதியில் மனிதன் செயல்திறன் இழந்து திணற நேர்வதை எண்ணவும் என் சோகம் மேலும் வலுப் பெறுகிறது. என் அழுகை பெருகு கிறது,
வாழத் தெரிந்தவர்கள் நடுவிலே – வாழத் துணிந்தவர்கள் மத்தியிலே – வாழ முடியாமல், பலரைப் போல் வாழ்வதற்குத் திராணி இல்லாமல், செயலூக்கத்தைக் கொன்றுவிடும் சோகத்தால் அலைக்கழிக்கப்படுகின்ற என்னைப் போன்ற அப்பாவிகளை எண்ணி அழுகிறேன். நான் ஒரு அழுகுணிச் சித்தன்.
இருட்டைப் போர்த்துக்கொண்டு இயற்கையும் அழுகிறது. ஏனோ?
(1969)



