
மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
10. நிழல்களின் பின்னே…
குளுகுளு என்று தண்ணீர் ஓடி, பாத்திகளில் பரவிப் பாய்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு இடத்தில் உடைப்பு ஏற்படவும், புலவர், ‘மம்மட்டியை எடுத்திட்டு வா. சீக்கிரம் மண்ணை வாரிப் போடு’ என்று பரபரப்போடு சொன்னார் ராமையர்.
புதிதாக அவ்வூருக்கு வந்திருந்த சொக்கலிங்கம் வியப்போடு நிமிர்ந்து பார்த்தார். புலவர் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருப்பது அதிசயமாகப்பட்டது அவருக்கு.
அவருடைய ஆச்சரியம் வளர்ந்து கொண்டே போயிற்று.
புலவரை வீட்டிலே வரச் சொன்னாங்க. கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வரணுமாம்.
‘பசு மாட்டுக்குத் தீவனம் போட்டாச்சா, புலவர்?’
புலவர், தொட்டியிலே தண்ணி இறைச்சு ஊத்து. குளிக்கணும்.
எங்கும் ‘புலவர்’; எதற்கு எடுத்தாலும் ‘புலவர்’.. அன்பர் பணி செய்யத் தன்னையே ஆளாக்கிக் கொண்டவர் போலும் இந்தப் புலவர் என்று தோன்றியது. சின்னவர்களும் பெரியவர்களும் சிறுசிறு வேலைகளுக்கெல்லாம் புலவரையே நாடினார்கள்.
அதிசயித்த சொக்கலிங்கம் நண்பரிடம் கேட்டார், ‘புலவர் என்பது இந்த ஆளின் பெயரா?’ என்று.
‘பெயர்னும் வச்சுக்கிடலாம். இவனை எல்லாரும் புலவர்- புலவர்னுதான் கூப்பிடுறாங்க. நெசமாவே கறுப்பசாமி ஒரு புலவர்னும் சொல்லலாம். இவன் சொந்தமா பாட்டுகளை இட்டுக் கட்டிப் பாடுவான்’ என்று ராமையா கூறினார்.
‘புலவர் தோட்ட வேலையும் சில்லறை வேலைகளும் செய்து வேலைக்காரன் மாதிரி பிழைப்பு நடத்த வேண்டி யிருக்குதே! ஆச்சர்யம்தான்.’ சொக்கலிங்கத்தின் வியப்பு குறைவதாயில்லை.
‘கடவுளே இந்த ஊரில் ஏவலாளாராக இருந்து சகல வேலைகளும் செய்திருக்காரு தெரியுமா? ஒருவன் பேரு கடவுள்னு இருந்தது. எல்லாரும் ஏ கடவுள்னுதான் அவனைக் கூப்பிட்டாங்க. அவன் நிலாக் காலத்திலே பலீன் சடுகுடு ஆட்டத்திலே பிரமாதமா விளையாடுவான். கடவுள், விடாதே! அப் கடவுள், அப் அப்!… கடவுளை அமுக்கிப் புடின்னு உற்சாகிகள் கூச்சல் போடுவாங்க. தமாஷா இருக்கும்’ என் று ராமையா சுவாரஸ்யமாக விவ ரித்தார்.
‘கறுப்பசாமிக்கு புலவர்னு பட்டப் பேரு எப்படி வந்தது? அந்தப் பேரை அவனுக்குச் சூட்டினதே நீங்க தானோ?’ என்று கேட்டார் சொக்கலிங்கம்.
அந்தப் பெருமை என்னைச் சேராது, நண்பரே! அது அவனுக்குக் குலப்பெயராக வந்து சேர்ந்திருக்கு.
‘அவன் அப்பா சுப்பையாவும் புலவர் தான். இவன் தாத்தா கறுப்பண்ணனும் புலவராகத்தான் இருந்தாரு. இப்படி தலை முறை தலைமுறையா வளர்ந்து வரும் புலவர் வமிசத்தின் இன்றையக் குலக் கொழுந்து இந்தக் கறுப்பசாமி.’
ராமையா இந்தக் ‘குலமுறை கிளத்துப் படலத்தோடு நின்று விடவில்லை.
‘புலவர். இங்கே வாய்யா’ என்று கூப்பிட்டார். ‘ஐயா வுக்கு உன் திறமையைக் கொஞ்சம் காட்டேன். நீ கட்டிய பாட்டுகளை அவிழ்த்து விடு’ என்றார்.
புலவர் சாதாரண ஆசாமிதான். வேட்டியை தார் பாய்ச்சிக் கட்டியிருந்தான். துண்டை தலையில் சுற்றியிருந்தான் முண்டாசாக. மெலிந்த தோற்றம். அப்பாவி மாதிரிச் சிரித்தான்.
‘சும்மா பாடு புலவர். ஐயா நல்லா ரசிப்பாங்க. உனக்கு நல்லது செய்வாங்க’ என்று உற்சாகப் படுத்தினார் ராமையா
அவன் உரிய பிகு எல்லாம் பண்ணிவிட்டு, சட்டென்று உரத்த குரலில் பாடினான். அப்படிப் பாடுகிற போது அவன் இடது கை இடப்புறக் காதை பிடித்து மடக்கியவாறு இருந்தது.
அவனுடைய ‘மேனரிசம்’ அது என்று சொக்கலிங்கம் புரிந்து கொண்டார்.
ஆடுமில்லாம மாடுமில்லாமே
ஆலாப் பறக்குதே மோட்டார் வண்டி
காடு மேடெல்லாம் ஓடிஓடி
காத்தாப் பறக்குதே மோட்டார் வண்டி
மூடி மறைக்கும் புழுதி மண்ணு
மேகம் போலே பாய்ஞ்சு பரவுது!
பேஷ் பேஷ்!’ என்றார் ராமையா. ‘டூரிங் சினிமாக் கொட்டகை தீய்புடிச்சு எரிஞ்ச போது பாடினியே அதைச் சொல்லு’ என்று தூண்டினார்.
பத்திக்கிடுச்சே பத்திக்கிடுச்சே
படம் ஓடும் கொட்டாயி – தீ
பத்தி எரிஞ்சிடுச்சே!
அய்யய்யோ அய்யய்யோ
ஆவ்னு வாய் பிளந்து
படம் பார்த்த ஆளுகள்ளாம்
பதறித் தவிச்சாங்க
பாய்ந்தோடத் துடிச்சாங்க.
ஆம்பிளைக பொம்பிளைக
அறியாப் புள்ளைகள்ளாம்
கண்ணு மண்ணு தெரியாம
திக்குத் திசை புரியாம
திண்டாடித் தவிச்சாங்க.
புகை மண்டிப் பரவியதே
தீ எவ்வி எவ்வித் துள்ளியதே.
‘போதும் போதும் காதல் பாட்டாஏதாவது சொல்லு’ என்று ராமையா டைரக்ட் பண்ணினார்.
சின்னஞ் சிறுத்த புள்ளெ
சிங்காரமான புள்ளெ
அலங்கரிச்ச தேருபோல
அசைந்து வரும்
சிவத்தப் புள்ளெ
மின்னலடிச்சதுபோல்
சிரிச்சாளே என்னைப் பார்த்து.
கருப்பசாமி குஷியாகப் பாடினான்.
‘பார்த்தீமா புலவர் திறமையை! எப்டி, எப்டீன்னேன்’ என்று ஜாலி பண்ணினார் ராமையா.
புலவருக்கு உச்சி குளிர்ந்தது. உற்சாகத்தோடு, மேலே மேலே பாட்டுகளை உலுப்பித் தள்ளினார்.
வாய்க்காங் கரையோரம்
அரளிப்பூ சிரிச்சதுபோல்
குலுங்கிச் சிரித்தாளே
குமரிப்பொண்ணு தங்கம்மா
‘போதும் புலவர். நீ போயி வேலையைப் பாரு’ என்று ராமையா அவனை அனுப்பி வைத்தார், ‘இதைப் பத்தி நீங்க என்ன நெனைக்கீக?’ என்று நண்பரைக் கேட்டார்.
‘ஆச்சர்யம்தான். திறமை எங்கெங்கோ இருக்கு. எப்படி எப்படியோ மலருது. பிரகாசமா சிரிச்சுப் பல பேரைக் கவர்ந்தாலும் கவருது ; கவராமலே டிம் அடிச்சுப் போனாலும் போகுது’ என்று சொக்கலிங்கம் சொன்னார் வாய்ப்புக்கள் கிடைத்தால் இந்தக் கறுப்பசாமியும் தக தகன்னு ஜொலிக்கிற ஆசாமியா மாறினாலும் மாறி விடலாம். யாரு எந்த நேரத்திலே எப்படி மாறுவாங்க அல்லது என்ன ஆவாங்கன்னு என்னத்தை உறுதியாச் சொல்ல முடியுது இந்த வாழ்க்கையிலே!’ என்றும் அனுபந்தம் சேர்த்தார்.
சொக்கலிங்கம் மீண்டும் அந்தச் சிற்றூக்கு வருவதற்குள் ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன.
அவர் அங்கே வந்தபோது ஊர் அப்படியேதானிருந்தது பயிர்கள் வழக்கம்போல் பலன் தந்து கொண்டிருந்தன.
‘கிணற்றுநீர் பம்ப் செட் மூலம் மேலே வந்து, வாய்க்கால் வழி ஓடி, பாத்திகளில் ஜிலுஜிலுவென்று பாய்ந்தவண்ணம் இருந்தது. தண்ணீர் கருப்பஞ்சாறு மாதிரி ஜம்னு இருக்கு’ என்று ஒருவர் சொன்னதும்தான் அவருக்கு அவன் நினைவு எழுந்தது.
‘ஆமா, இங்கே வேலை செய்துக்கிட்டிருந்த கறுப்பசாமிப் புலவரை எங்கே காணோம்?’ என்று நண்பரிடம் விசாரித்தார்.
“அவன் என்ன ஆயிருப்பான்னு நீங்க நினைக்கீக?” என்று மறு கேள்வி போட்டார் ராமையா,
எனக்கென்ன தெரியும்!
‘என்ன வேணுமின்னாலும் ஆகியிருக்கலாம். செத்துப் போனாலும் போயிருக்கலாம்’ என்று சொக்கலிங்கம் சொன்னார்.
‘புலவர் சாகலே, ஆனா ஆளு இப்படி அடியோடு மாறிப் போவான்னு யாருமே நினைச்சதில்லே. உங்களாலே கற்பனை கூடப் பண்ண முடியாது’ என்று நண்பர் திடமாகத் தெரிவித்தார்.
“அதுதான் நான் அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்கேனே – யாரு எந்த நேரத்திலே எப்படி மாறுவாங்க அல்லது என்ன ஆவாங்கன்னு எவரும் உறுதியாச் சொல்ல முடியாது…”
‘போன தடவை நீங்க புலவரைப் பார்த்த போது, கடைசியா இப்படித்தான் சொன்னீங்க. இதை நான் மறக்கவேயில்லை, மறக்க முடியலே. புலவர் வாழ்க்கை யிலே ஏற்பட்ட மாற்றம், இந்தப் பேச்சு எவ்வளவு உண்மை யாப் போச்சு பார்த்தியான்னு என்னை அடிக்கடி எண்ணும் படி பண்ணிப் போட்டுது.’
‘ஏன், அவனுக்கு என்ன ஆச்சு?’ என்னென்னவோ ஆயிட்டுது போங்க! என்று இழுத்தார் ராமையா. தொடர்ந்து பெரிய தத்துவதரிசி மாதிரிப் பேசினார்.
பணம் மனுசங்களை எப்படி எல்லாமோ ஆட்டி வைக்குது. வாழ்க்கையிலே கஷ்டப்பட்டுக் கிட்டிருக்கிற ஒருவன் கிட்டே கொஞ்சம் பணம் திடீர்னு கிடைச்சிட்டா, அவன் மனம் ஒரே அடியா மாறிப் போகுது. ரொம்ப நிறையக் கிடைக்கணும்கிற அவசியமே இல்லை. பணத்தை மொத்தமாக் கண்டிராதவன் கிட்டே, எதிர்பாராம ஆயிரம் ரூபா வந்து சேர்ந்தாலும் போதும். உடனே அவன் பெரிய சீமான் ஆயிட்டதா நினைச்சுப் போடுதான். புலவர் விசயமும் இப்படித்தான் ஆச்சு. திடீர்னு அவனுக்கு ஒரு ரெண்டாயிரம் ரூபா கிடைச்சுது…
லாட்டரியிலே பிரைஸ் ஏதாவது கிடைச்சுதா?
இல்லியே. அவனுடைய அத்தை ஒருத்தி மண்டையைப் போட்டா. அவளுக்கு புள்ளை குட்டி கிடையாது.
புலவர் தான் கொள்ளி வச்சான்.
அந்தப் பெரிய மனுஷி சிறுவாடு சேர்த்தும், எது எதுவோ பண்ணியும் ரெண்டாயிரம் ரூபாவரை சேர்த்திருந்தா. அது இவனுக்கு வந்து சேர்ந்தது. அவ்வளவுதான். ஆளைக் கைகொண்டு புடிக்க முடியாதும்பாகளே, அப்படி ஆயிட்டான். அவனுக்கு ரெண்டாயிர ரூபாங்கிறது பெரிய ஐஸ்வரியமாப் பட் டிட்டுது. தனக்கு நிகர் யாருமில்லேன்னு திரிய ஆரம்பிச்சான். நான் பெரிய புலவராக்கும்; நான் சினிமாவுக்குப் பாட்டு எழுதப் போறேனாக்கும்னு புலம்பித்திரிஞ்சான்…’
“அடப் பாவி, கெடுத்தானே கேட்டை! இந்த ஐடியாவை அவனுக்கு யாரு கொடுத்தாங்களோ?”
‘உங்க மாதிரி ஒரு நண்பர்தான். நம்மைப் பார்க்க ஒரு ஃபிரண்டு வந்திருந்தாரு, புலவரு பாட்டைக் கேட்டாரு. ஆகா ஓகோன்னாரு. புலவர், நீரு சினிமாவுக்குப் பாட் டெழுதலாம் வேய்னு’ புலவர் தலையிலே ஐஸ் வச்சாரு.
அப்போ இதுமாதிரி பாட்டுகளுக்குத்தான் சினிமாலே மவுசு அதிகம். இந்தப் புலவர் பாடியிருக்கிறதைவிட சாதாரண மானது, சாரமற்றது, வெறும் வார்த்தை அடுக்குகளால் ஆனதை எல்லாம் இசையோடு சேர்த்து ஜமாய்சிடுறாங்க. அதெல்லாம் பெரிய ஹிட் ஆயிடுது. நம்ம புலவரும் ஏன் சினிமாப் பாட்டுகள் எழுத முடியாதுங்கறேன்? ஏன் எழுதக் கூடாதுன்னு கேட்கேன்; அதிர்ஷ்டம் வேணும் சார். அதிர்ஷ்டம் கொஞ்சம் கண்ணடிச்சா, புலவரும் ஓகோன்னு வந்திடுவாருன்னு ஒரே அடியா தூக்கிட்டாரு. புலவர் தலை கிறுகிறுத்திட்டுதுன்னு தான் சொல்லணும் அது உள்ளார வேலை செஞ்சுக்கிட்டே இருந்திருக்கு. எதிர் பாராம, ரெண்டாயிரம் கெடச்சுதா? அதிர்ஷ்டம் கண்ணடிக்க ஆரம்பிச்சாச்சுன்னு புலவர் நம்பிவிட்டான். படத்துக்குப் பாட்டு எழுதறதுக்கு முன்னாடியே, நான் கவிஞராக்கும் என்று சொல்லி, குடிக்கலானான். பொம்பிளைகளைத் தேடிப் போனான். இந்த பட்டிக்காட்டிலே இருந்தால், உருப்பட முடியாதுன்னு சொல்லிப்போட்டு, ரயிலேறிட்டான்..
“எங்கே போறதுக்கோ?”
“பட்டணத்துக்குதான். வேறே எங்கே? கிராமங்களிலிருந்து மண் வாசனையோடு பாட்டெழுதும் திறமை பெற்றவங்க பட்டணம் போயி பிரமாதமா வளர்ந்திருக் காங்கன்னும் நம்ம ஃபிரண்டு சொல்லி வச்சாரே, அதை புலவர் மறப்பானா? கையிலே காசு இல்லாம ரயிலேறியும், லாரியிலே இடம் புடிச்சும், பட்டணம் வந்து சேர்ந்த சில பேரு பணமும் புகழும் சுகபோக வாழ்க்கையும் பெற முடிஞ்சிருக்குன்னு பத்திரிகை குறிப்புகளிலே அவனும் படிச்சிருந் தானே! இவன் கையிலே ஆயிரத்துச் சொச்சம் ரூபா வேறே இருந்ததே? பின்னே ஏன் உயர முடியாது? அவன் மனம் இப்படித்தான் வேலை செஞ்சிருக்கணும். போயிட்டான்!”
‘அப்புறம்?’
‘நாமறியோம் பராபரமேதான்!’ என்றார் ராமய்யா.
‘என்ன ஆனானோ பாவம்!’ என்று சொக்கலிங்கம் அனுதாபப்பட்டார். ‘அவன் எப்ப போனான்?’
போயி ரெண்டு வருசம் ஆகுது. அவன் என்ன வேணும்னாலும் ஆகியிருக்கலாம். பணத்தை பறிகொடுத்திருக்கலாம். எத்தன் எவன் கூடவாவது சேர்ந்து பணத்தை காலி பண்ணியிருக்கலாம். சோத்துக்குத் திண்டாடி, பிச்சைக்காரன் ஆகியிருக்கலாம். கூலிவேலை செய்யப் போயிருக்கலாம்.
ஓட்டல் எதிலாவது வேலைக்கு சேர்ந்திருக்கலாம். சீக்கிலே விழுந்து ஆஸ்பத்திரியிலே சேர்ந்து என்னவாவது ஆகியிருக்கலாம். ஆக்ஸிடெண்டிலே அடிபட்டிருக்கலாம்
‘நீங்க சொன்னது மெத்தச்சரி- மனுசனுக்கு எந்தநேரத்திலே என்ன நேரும்னு யாருக்குத் தெரியும்? எது வேணும் னாலும் நடக்கலாம்!
பேரு பணம் புகழ் சுகபோகம் எல்லாம் அதிர்ஷடப் பரிசு மாதிரி வந்து சேர்ந்திரும்னு ஊரைவிட்டுப் போன புலவருக்கு என்ன நேர்ந்ததோ? அவனே திரும்பி வந்து சொன்னால்தான் நமக்குத் தெரியும்’ என்று முடித்தார் ராமையா.
(1969)



