

தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
[கும்பகோணத்தில் கௌரவம் வாய்ந்த தனவந்தர் குடும்பத்தைச் சேர்ந்த குப்புசாமி தீட்சிதர் என்ற ஒருவர் இருந்தார். அவர் சிறு வயது முதல் தன் புத்தியையெல்லாம் குறும்பு செய்வதிலேயே உபயோகித்து, அதில் மிகவும் நிபுணரானார். அவர் இறந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாயிற்று. அவரது குறும்புகளை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். அவைகளுள் சிலவற்றை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இனி இக்கதைகளிலெல்லாம் நம்மவரைத் தீட்சிதர் என்றே அழைப்போம்.]
நம்முடைய தீட்சிதர் அவர்கள் ஒரு முறை திருவிடைமருதூரில் ஓர் மிராசுதாருடைய வீட்டுக் கலியாணத்திற்குப் போயிருந்தார். அக்கலியாணத்திற்காக அம்மிராசுதார் ஒரு சிறந்த நாகசுர வாத்தியக்காரனை ஏற்பாடு செய்திருந்தார். அந்நாகசுரக்காரன் கொஞ்சம் கர்வி. கலியாணத்திற்கு வந்திருந்த சில பெரிய மனிதர்களை வணங்கினவன் நம்முடைய தீட்சிதர் அவர்களை வணங்காமல் வாசித்துக் கொண்டிருந்தான்.
இதை கவனித்த நமது தீட்சிதர் அவர்கள், ‘ஆகட்டும் இவன் கர்வத்தையடக்க வேண்டு மென்று தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். சீக்கிரத்தில் தருணம் வாய்த்தது. நாக்சுரக்காரன் மிகவும் அற்புதமாய் கல்யாணி ராகம் வாசித்துக் கொஞ்சம் நிறுத்த, சபைக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் ‘சபாஷ் சபாஷ்,’ என்று மெச்சினார்கள். நமது தீட்சிதர் மாத் திரம் சும்மா இருக்கவே, மிராசுதார், அவரைப்பார்த்து, “ஏன் தீட்சிதர்வாள்! சங்கீதம் எப்படியிருக்கிறது?” என வினவ “அற்புதம்! மகா அற்புதம்!” என்று பதில் உரைத்துவிட்டு, தன் பக்கலில் நின்று விசிறிக்கொண்டிருந்த ஒரு வேலையாளிடம், “அடே! கடைத் தெரு விற்கு ஓடிப்போய் இந்த இருபது ரூபாய்க்கு ஒரு சரிகை அங்கவஸ்திரம் வாங்கிக் கொண்டு வா!” என்று கூறி, அவனிடம் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார்.
நாகசுரக்காரன் தனக்குத்தான் சன்மானம் செய்யப்போகிறாரென்று நம்பி சந்தோஷித்து, ஒரு பல்லவி எடுத்துக் கொண்டு சண்டமாருதமாய் வாசிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வேலைக்காரன் கடைத் தெருவிற்குப் போய் சரிகை அங்கவஸ்திரம் ஒன்று கொண்டு வந்து நமது தீட்சிதரிடம் கொடுக்க, நாகசுரக்காரன் பல்லவியைப் பன்முறை சுரம்பாடி முடிக்க அவனை நோக்கிச் சென்று அவன் பக்கத்தில் துத்தி வாசித்துக் கொண்டிருந்தவன் கழுத்தில் அந்த அங்கவஸ்திரத்தைப் பிரித்துப் போட்டார்!
சபையிலுள்ளவர்களெல்லாம் இதென்னவென்று ஆச்சரியப்பட்டனர், மிராசுதார் தீட்சிதரை, ‘நாகசுரம் வாசித்தவனுக்கு மரியாதை செய்யாமல், துத்தி வாசித்தவனுக்கு ஏன் மரியாதை செய்தீர்கள் ? என்று, வினவ, நம் தீட்சிதர் “நாகசுரம் வாசிப்பது என்ன கஷ்டம்? நின்று நின்றுதானே வாசித்தான்! துத்தி வாசித்தவனைப் பாருங்கள்!அப்பொழுது முதல் ஒரே மூச்சாய் விடாது வாசித்துக் கொண்டிருக் கிறான்! இவனுக்குத் தான் அதிக சிரமம்!” என்று கூறச் சபையிலுள்ளவர்களெல்லாரும் ‘கொல்’லென்று நகைத்தனர்! நாகசுரக்காரன், வெட்கத்தால் தலையை வணங்கிக் கொண்டான்.
மறுநாள் காலை அந்த நாகசுரக்காரன், நமது தீட்சிதர் வீட்டிற்கு வந்து அவரைச் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்து தான் செய்த பிழையை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ள, அவர் அவனை மன்னித்து, அவனுக்கும் ஒரு விலையுயர்ந்த அங்கவஸ்திரம் வரவழைத்துச் சன்மானம் செய்தனுப்பினார்.



