
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
பதின்மூன்றாவது கதை
ஒரு நாள் நமது திட்சிதர் வீட்டில் சமாராதனை வந்தது. அதற்கு நான்னைத்து தினங்களுக்கு முன்பாகக் கும்பகோணத்திலுள்ள வைதீகப் பிராமணர்க ளெல்லாம். இவர் ஏதாவது குறுப்பு செய்து கொண்டேயிருக்கிறார், இவர் வீட்டுச் சுமாராத னைக்கு நாம் ஒருவரும் போகக்கூடாது என்று கட்டுப்பாடு செய்து கொண்டார்கள்.
இந்தச் சமாசாரம் நமது தீட்சிதர் செவிக் கெட்ட இவர் களுக்கெல்லாம் தக்கபடிப் புத்தி புகட்ட வேண்டுமென்று தீர்மானித்தவராய், உடனே கடைத் தெருவிற்குப் போய் ஐம்பது வெள்ளிப் பஞ்சபாத்திரங்களும் உத்தரணிகளும் செய்ய உத்தரவு கொடுத்து, அக்கடைக்காரனிடம் ‘இவைகளெல்லாம் இந்தச் சனிக் கிழமை காலைக்குள் செய்து எங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்; அன்றைத் தினம் என் வீட்டில் சமாராதனை, அன்று வராமற்போனால் எனக்கு வேண்டாம்; பத்திரம் என்று கட்டளையிட்டு, “இதை ஒருவருக்கும் வெளியிடாதே! ரகஸ்யமாய் வைத்துக் கொள்! இல்லா விட்டால் இவ்வூரிலுள்ள வைதீகப் பிராமணர்களெல்லாம் என்னைப் பிய்த்து விடுவார்கள்” என்றும் சொல்லி வைத்தார்.
ரகஸ்யம் என்று சொல்லி வைத்தால்தான் இவன் இதை முக்கியமான எல்லோருக்கும் வெளியாக்குவான் என்பது நம்முடைய தீட்சிதர் கருத்து. அதன்படியே அந்தக் கடைக்காரன் வைதீகப் பிராமமணர்கள் ஒவ்வொருவருக்கும் இதைத் தெரிவித்து, ‘இது ரகசியம் ஒருவருக்கும் தெரிவிக்காதீர்கள்!’ என்று சொல்லி வைத்தான்.
தீட்சிதர் வீட்டுச் சமாராதனை தினம் காலை ஊரிலுள்ள வைதீகப் பிராம்மணர்களெல்லாம், நல்ல சாப்பாட்டுடன் இம்முறை நமக்கு வெள்ளிப் பஞ்சபாத்திரமும் உத்தரணியும் கூடக் கிடைக்கப் போகிறது என்னும் பேராசையால், நான் நீ என்று ஒருவர் மேல் ஒருவர் விழுந்துகொண்டு வந்து சேர்ந்தனர். தீட்சிதர் தன் எண் ணம் கைகூடிற்றென்று எண்ணியவராய் முன்பு இவர் வீட்டிற்குப் போகக் கூடாதென்று தீர்மானித்துக்கொண்ட வைதீகர்களை பாத்திரம் பொறுக்கி எடுத்துக் கொண்டு, ஏனையோரை “இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம்; இப்பொழுது மன்னியுங்கள்” என்று நல்லார்த்தை சொல்லியனுப்பி விட்டார்.
பிறகு சமாராதனை நடந்தது. போஜனத்திற்கு வந்த வைதீகர்களெல்லாம் உடகார்ந்த பொழுது, வெள்ளிப் பஞ்சபாத்திரங்களையும் உத்தரணிளையும் கொண்டுவந்து ஆளுக்கு ஒன்றாக, அவர்கள் இலையின் பக்கம் வைத்தார், வைதீகர்களெல்லாம் தாங்கள் எண்ணியபடிக் கிடைத்தது என்று சந்தோஷப்பட்டு அவருக்கு வழக்கத்தைவிட அதிகமாக ஆசீர் வாதம் செய்து விட்டுப் போஜனங்கொண்டனர்.
போஜனம் முடிந்தவுடன் அவைகளைச் சாப்பிட்ட கூடத்திலேயே வைத்துவிட்டு, புறக் கடைக்குக் கையலம்பச் சென்றனர். அவர்கள் அப்படிப் போனதும் தீட்சிதர் தன் ஆள் ஒருவனைவிட்டு அப்பாத்திரங்களையும் உத்தரணிகளையும் சேகரித்து அடுத்த ஓர் அறையில் வைக்கச் சொல்லி, அந்த அறைக்குக் காவலாக மகம்மதிய ஜவான் ஒருவனை ஏற்பாடு செய்து விட்டு, விரைந்து சித்தமாயிருந்த தன் வண்டியிலேறித் திருவிடை மருதூருக்குப் போய் விட்டார். வைதீகப் பிராம்மணர்களெல்லாம் கைகால்களைச் சுத்தி செய்து கொண்டு வந்து பார்க்க, பஞ்சபாத்திரங்களையும் உந்தாணிகளையும் வைத்த இடத்திற் காணோம். பிறகு அங்குமிங்கும் தேடிப்பார்க்க, பக்கத்தறையில் வரிசையாக வைத்திருப்பதைக் கண்டனர்.
அறைக்குக் காவலாகக் குறுக்கே கையில் தடியொன்றை வைத்துக்கொண்டு உலாவிக் கொண்டிருக்கும் தாடி ஜவானையும் கண்டனர். அவனை மீறிக்கொண்டு எப்படி அறைக்குள் நுழைவது என்று பயந்தனர். பிறகு அவர்களுள் திடச்சித்த முடையவர் ஒருவர், ‘ஐயா, சாயபு, கொஞ்சம் ஒதுங்கு, உள்ளே போய் என் பஞ்சபாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்க, “ரெ!பொம்மன்!நம்ப எஜமான் உந்தரவு பண்ணியிருக்க ரான்! ஒருத்தரும் உள்ளே உடக்கூடா திண்ணு! உள்ளே யாரானாலும் போனா கால் ஒடச்சிப்பூடராம் நம்பள்!” என்று பயமுறுத்தினான்.
அதன்பேரில் அத்தனை பெயரும் தீட்சிதரிடம் போய்ச் சொல்லிப் பார்க்கலாமென்று தீட்சிதரைத் தேட அவர் வண்டியேறி எங்கோ போய்விட்டதாகக் கேள்விப்பட்டனர். பிறகு கொஞ்ச நேரம் இருந்து பார்த்துப் பிரயோஜனமில்லை யென்று கண்டு தங்களுக்கெல்லாம் இப்படி நாமம் போட்டதற்காகத் தீட்சிதரை வைது கொண்டு வீடு போய்ச் சேர்ந்தனர். பிறகு இரண்டு மூன்று நாள் பொறுத்துத் தீட்சிதர் கும்பகோணம் வந்து சேர, அவரைக் கண்டு வைதீகப் பிராம்மணர்கள், “எங்களை யெல்லாம் இப்படி மோசம் செய்யலாமா? என்று முறையிட, நமது தீட்சிதர் “நீங்கள் மாத்திரம் என் வீட்டிற்கு வருவதில்லை என்று தீர்மானிக்கலாமா? இனியாவது சரியாக நான் கூப்பிடும் போதெல்லாம் வருகிறீர்களா?’ என்று கேட்டு, அவர்களிடம் அப்படியே எப்பொழுது கூப்பிட்டாலும் வருவதாக வாக்கு வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு அந்தப் பஞ்சபாத்திரங் களையும் உத்தரணிகளைகளையும் கொடுத்தனுப்பினார்.



