தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

பதினைந்தாவது கதை

கும்ப கோணத்தில் நமது தீட்சிதருடைய தூர பந்து ஒரு வாலிபன் இருந்தான். அவன் கொஞ்சம் அதனப்பிரசங்கி; அவன் டைப் ரைட்டிங் பரீஷையில் முதலாகத் தேறினதற்கான மிகவும் கர்வம் படைத்திருந்தான். அவனிடம் நமது தீட்சிதர் போய் “நீ டைப் ரைட்டிங்கில் மிகவும் கெட்டிக்கார னென்கிறாயே, நான் சொல்லும் படியான ஒரு வாக்கியத்தைத் தவறில்லாமல், சரியாக அப்படியே டைப் அடிப்பாயா?” என்று கேட்டார். வாலிபன் “கட்டாயமாய் அடிப்பேன்” என்று கூறினான். “நீ நான் சொல்லுகிறபடி எழுதத் தவறினால், ஒரு ரூபாய் எனக்குக் கொடுத்துவிட வேண்டும்” என்றார்.

அவன் அதற்கு, “கான் சரியாகத் தப்பில்லாமல் எழுதினால் நீங்கள் ஒரு ரூபாய் எனக்குக் கொடுத்துவிட வேண்டும்” என்றான். சரியென்று இருவர்களும் பந்தயம் போட்டுக் கொண்ட பின், தீட்சிதர் அவனை அவனது டைப் ரைட்டிங் மெஷினைக் கொண்டுவரச் சொல்லி, ‘இதை டைப் அடித்துக் கொடு’ என்று, “நான் நேற்று – நாய்ச்சியார் கோயிலுக்கு – என் மாட்டு வண்டி யில் போகும்பொழுது-வண்டிக்காரன் – மாடுகள் வேகமாய்ப் போகுமாறு செய்ய(இங்கு மூன்று முறை மாட்டு வண்டிக்காரர்கள் மாடுகளை ஓட்டும்போது செய்யும் ஒலியை வாயினாற் செய்து) என்று சப்தம் செய்ய – மாடுகள் வேகமாய்ப் பறந்தன!” என்று வாக்கியத்தைச் சொல்லி முடித்தார்.

மற்றவைகளை யெல்லாம் பர பர வென்று டைப் செய்துகொண்டு வந்த இளைஞன் அந்த மாட்டு வண்டிக்காரர்கள் செய்யும் சப்தத்தை டைப் செய்ய முடியாமல் திகைத்தான்!” இதை டைப் செய்ய முடியவில்லையே உன்னால், இதற்கு இவ்வளவு வாய் எதற்காக! பந்தயம் வைத்து ரூபாயைக் கொடு”என்று சொல்லி, அவனிடமிருந்து ஒருரூபாயை வாங்கிக் கொண்டு, கொஞ்நேரம் அவனுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, “இனியாவது அதனப்பிரசங்கியா யிராதே அப்பா” என்று அவனுக்குப் புத்தி சொல்லி விட்டுப் போகும்பொழுது அவன் கொடுத்த ரூபாயுடன் தன்னிடமிருந்து ஒரு ரூபாயையும் சேர்த்து இரண்டு ரூபாயாக அவனுக்குப் பரிசு கொடுத்து அனுப்பினார்.

அன்று முதல் அந்த வாலிபன் தான் டைப் அடிக்கும் சக்தியைப்பற்றி அதிகமாகப் பேசுவதில்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *