தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

பதினேழாவது கதை

ஒரு முறை நமது தீட்சிதர் ஒரு சவுகாரிடம் கடன் வாங்கும் படி நேரிட்டது. சொன்ன தவணைப்படி கடனைத் தீர்க்கமுடியாமற் போனபடியால், சவுக்கார், கொடுத்த கடனுக்கு இரட்டிப்பாகப் பத்திரம் எழுதிக்கொடுத்தால் பொறுப்பதாகக் கூற, அதற்கு நமது தீட்சிதர் இசையவில்லை. அதன்மீது அந்த சவுகார் கோர்ட்டில் தாவா செய்ய, நமது தீட்சிதர், ‘கொஞ்சம் பொறுத்துக்கொள்; உன் கடனைப் பைசல் செய்து விடுகிறேன்’ என்று சொல்லியும் கேளாதவனாய், டிக்கி வாங்க, தீட்சிதர் அவன் மீது கோபம் கொண்டு “ஆகட்டும்! இவனை இழுத்தடிக்கவேண்டும்!” என்று தீர்மானித்து அப்பொழுதும் பணம் கொடாமலிருக்க சவுகார் அவரை வாரண்டில் பிடித்து சிவில் ஜெயிலில் அடைத்து வைத்தான். அப்பொழுதும் தீட்சிதர் சளைக்கவில்லை.

அதன்மீது சவுகார் மறுநாள் அவரை ஜெயிலில் போய்ப் பார்த்து, “என்னா சாமி! உங்கள்கு கஷ்டம், நம்பள்கு நஷ்டம் வைக்கிறீங்கோ. இப்பவாவது குடுத்தூடுங்கோ!” என்று வேண்டினான். அதன் பேரில் தீட்சிதர் மனமிரங்கினவர் போல் பாவித்து, “சவுகார்! ஒன்றுக்கும் பயப்படாதீர்கள்! இப் பொழுது ஒரு யோசனை செய்திருக்கிறேன். அதனால் உமக்கும் லாபம், எனக்கும் நல்லது!” என்று சொல்ல, சவுகார் மனம் மாறினவனாய், தனக்கு ரூபாய் கிடைத்துவிடும் என்றெண்ணி மிகவும் சந்தோஷத்துடன், “ரொம்ப சந்தோசம் சாமி! அத்தெ சொல்லுங்க’ என்று கேட்டான்.

அதன் பேரில் நமது தீட்சிதர், “இதோ பார் சவுகார், இப்பொழுது என் சாப்பாட்டிற்காக தினம் எட்டணா கொடுத்துக்கொண்டு வருகிறாயல்லவா? என்னை வெளியே விட்டு விடு; மாதம் பதினைந்து ரூபாய் உனக்கு மிகுதியாகிவிடும். அதில் பாதி ரூபாய் உன் கடனுக்குச் செல்லு வைத்துக்கொள்: பாதி ரூபாயைக் எனக்குக் கொடுத்துவிடு. இல்லை; வேண்டு மென்றால், பத்து ரூபாய் கடனுக்குச் செல்லு வைத்துக்கொள், எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவிடு.

“இப்படி மாத மாதம் செய்துகொண்டே வந்தால், உன் கடனும் தீர்ந்து விடுகிறது; எனக்கும் மாதம் ஐந்து ரூபாய் லாபம் கிடைக்கிறது.” என்று கூறினார். இதைக் கேட்டவுடன் ஒரு பக்கம் மிகுந்த ஆத்திரம் ஏற்பட, சவுகாருக்கு அடங்காச் சிரிப்பும் வந்தது. அவன் சிரிப்பதைப் பார்த்து நமது தீட்சிதர், “ஏன் சவுகார் சிரிக்கமாட்டாய்! உன் கடனை வசூலிக்கும் மார்க் கத்தை அறிந்து கொண்டாயல்லவா?” என்று கூறித்தானும் நகைத்தார்!

பிறகு சவுகார் இதேது அடங்காப் பிடாரி,என்று, “சாமி! என் பேர்லே கோபம் வாணாம். உங்களை ஜெயிலிலிருந்து விட்டுடச் சொல்றேன்; எப்படியாவது பெரிய மனசு பண்ணி என் பாக்கியே கொடுத்தூடுங்க!” என்று வேண்ட, “சரிதான். இதை முன்பே செய்கிறதுதானே!” என்று அவனிடம் சொன்னார். சவுகார் அதிகாரிகளுக்குச்சொல்லி, அவரை ஜெயிலிலிருந்து விட்டு விடும்படிச் செய்தான். பிறகு நமது தீட்சிதரும் அவன் கடனைத் தீர்த்துவிட்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *