தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

இருபத்தி மூன்றாவது கதை

ஒரு சமயம் கோடைகாலத்திற்காக நமது தீட்சிதர் அவர்கள் குற்றாலம் போய் ஒரு மாதம் இருந்து விட்டு கும்பகோணம் திரும்பி வந்தார். வந்தவுடன் தான் வெளியூருக்குப் போயிருந்த சமயத்தில் உள்ளூரில் என்ன விசேஷம் என்று விசாரிக்க, பத்து பதினைந்து நாளாக ககும்பகோணத்தில் மலையாள பகவதி மந்திரக்காரன் பேச்சு தவிர வேறு பேச்சே கிடையாது, எங்கே பார்த்தாலும் மந்திர வித்தையின் பேச்சுதான் என்று கேள்விப்பட்டார்.

இது யாராடா அவன், ஊரெல்லாம் அவனது காபுராவேபெரிதாயிருக்கிறது, என்று மெல்ல விசாரிக்க ஆரம்பித்தார். அதன் பேரில் பலர் அவரிடம் அவனது பெருமையைப் பற்றியும் மந்திர வல்லமையைப் பற்றியும் தெரிவித்தார்கள்.

அவன் ஜாலவித்தை, செப்பிடுவித்தை, யட்சிணி வித்தை, குட்டிசைத்தான் ஏவல்,முதலியவைகளில் மிகவும் பெயர் போனவன் என்று எல்லோரும் மிகவும் ஆச்சரியத்துடன் புகழக் கேட்கவும்,ஜாலவித்தை செப்பிடுவித்தை யெல்லாம் கிடக்கட்டும், மந்திரவித்தையினால் என்ன செய்கிறான் சொல்லுங்கள் என்றுவிசாரித்தார்.

கூரை வீடுகள் திடீரென்று தீப்பற்றச் செய்கிறான், வீட்டில் நான்கு பக்கத்திலிருந்து திடீரென்று அகஸ்மாத்தாய் கற்கள் விழு கின்றன, அவனது மந்திர உச்சாடனத்தால் என்று சிலர் சொல்ல, அதை நானும் செய்வேன் மந்திர உச்சாடனமில்லாமலே, கேவலம் மந்திர பலத்தினால் அவன் என்ன செய்கிறான் என்று வற்புறுத்திக் கேட்க, சில சமயங்களில் வயிற்றினுள் சூரிகத்தியினால் கீறி, குடலை வெளியில் எடுத்து, பிறகு மறுபடியும் இருந்த இடத்தில் வைத்து விட்டு, மூடிவிடுகிறான் ஐந்து நிமிஷங்களுக்குள்ளாக, பிறகு பார்த்தால் அவன் கத்தியினால் குத்தியது கூட கூட தெரியாமல் மறைந்து போகிறது, என்று கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியப்பட்டவராய் இதனுண்மையை நாம் அறியவேண்டுமென்று தீர்மானித்து இதைப் பற்றி கூறிய எல்லா கும்பகோண வாசிகளிடம் போய் விசாரித்தார்.

அதைப்பற்றி பேசியவர்களெல்லாம் அந்த மலையாள பகவதி மாந்திரீகன் இதைச் செய்கிறான் என்று கூறினார்களே யொழிய ஆழ்ந்து விசாரிக்குமிடத்து ஒருவராவது அவன் அப்படிச்செய்ததை நேராகப் பார்த்ததாகச் சொல்லவில்லை; யாரைக்கேட்டபோதிலும் “நான் நேரிற் பார்க்காவிட்டாலும் என் தம்பி பார்த்தான், தமயன் பார்த்தான், மைத்துனன் பார்த்தான்,சிநேகிதன் பார்த்தான் என்று பதில் கூறுகின்றவர்களாயிருந்தார்களேயொழிய கண்ணால் நேரிற் கண்டதாக ஒருவரும் கூறவில்லை.

“கண்டறிந்தாரைக் கேட்டறிந் தோமில்லை” என்று பரமசிவத்தைப்பற்றி ஒரு தொண்டர் கூறியது போலிருக்கிறதே, இதனுண்மையை எப்படியாவது அறிய வேண்டுமென்று ஊக்கம் கொண்டவராய், இன்னும் ஆராயத் தொடங்கினார். கடைசியாக ஒரு சிநேகிதர் தான் நேரிற்பார்த்தேன் என்று சொல்ல, அப்பா! ஒருவராவது நேரிற் பார்த்தவர் கிடைத் தாரே யென்று சந்தோஷித்தவராய், அவரிடம் ஒரு நாள் சாயங் காலமாய் அவகாசமிருக்கும் பொழுது நீ நேரிற் பார்த்ததை சவிஸ்தாரமாகச் சொல்லென்று கேட்டார்.

அதன் பேரில் அந்த நண்பர் பத்து பன்னிரண்டு நாட்களுக்கு முன்னதாக நம்முடைய போர்டர் ஹாலுக்கு எதிரிலுள்ள மைதானத்தில் ஒரு ஆயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள்; என்ன கும்பலாகயிருக்கிறதென்று பார்க்கப் போனேன்; அப்பொழுது இந்த மலையாள பகவதி மாந்திரீகன் ஒவ்வொன்றாக தன் மந்திர வித்தைகளையெல்லாம் காட்டிக்கொண்டு வந்தான், தவிட்டை சர்க்கரையாக்கினான், உமியைப் புஷ்பங்கள் ஆக்கினான், என்று ஒவ்வொன்றாக அவன் ஜாலவித்தையை சொல்லத் தொடங்கினார்.

அதன் பேரில் நமது தீட்சிதர் பொறுக்காமல் “அது கிடக்கட்டும் ஆட்டடா பூசாரி” என்பது போல இதை யெல்லம் விட்டு அவன் வயிற்றில் குத்திக்குடலை எடுத்து மறுபடியும் தைத்து விட்டக்கதையைச் சொல்லுங்கள் என்று கேட்க – கடைசியாக இருட்டுகிற சமயத்தில் அந்த வித்தையையும் காட்டினான்” என்று சொல்ல அப்படி மொத்தமாகச் சொன்னால் எனக்குப் போதாது, சுவிஸ்தாரமாய் நீர் நேரில் கண்ணாரக்கண்டதை மாத்திரம் உண்மையாக ஒன்றும் விடாமல் சொல்லும் என்று வேண்டிக் கொண்டார்.

அதன் மீது அந்த நண்பர் அந்த மாந்திரீகன் கூட்டத்திலிருந்த ஒரு பையனை வரவழைத்து தன் எதிரில் நிற்கச் சொல்லி ஒரு தரம் மந்திரங்கள் எல்லாம் சொல்லி, கடைசியாக சில சமித்துகளைக் கொளுத்தி அக்கரியினின்றும் ஓர் விதமை தயார் செய்து அதனால் அச்சிறுவனுடைய வயிற்றில், குடலைக் குத்தி யெடுக்கப் போகிற இடத்தில் நான்கு பக்கமும் அம்மையினால் ஏதோ மந்திர எழுத்துக்கள் எழுதிவிட்டு, மறுபடியும் ஏதோ மலையாள மந்திரங்களை உச்சாடனம் செய்து தனது சூரிக்கத்தியைக் கையினால் எடுத்துக்கொண்டு, பெருங்குரலாக “இதோ நான் இப்பையனுடைய குடலைக்குத்தி எடுக்கப் போகிறேன் இதைக்கண்டு பயப்படுபவர்கள் யாராவது இங்கிருந்தால், அவர்கள் எல்லாம் உடனே அப்புறம் போகும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்!” என்று கூச்சலிட்டான்.

அதன்பேரில் காத்திருந்த ஜனங்களெல்லாம் “ஐயா! மந்திரவாதி! வேண்டாம் வேண்டாம்” என்று வேண்டிக்கொண்டு அவர் அப்படி செய்யாதிருப்பதற்காக பலர் கால் ரூபாய், அரை ரூபாய் இப்படியாகக் கொடுத்தனர்; அதன்பேரில் மந்திரவாதி மனமிரங்கினவனாய் செய்யாது விட்டு இன்னொருவேளை இந்த வித்தையைக் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு விரித்திருந்த குட்டையில் வீழ்ந்து கிடந்த காசையெல்லாம் கட்டிக்கொண்டு போய் விட்டான்” என்று சொல்லி முடித்தார்.

இதென்னடா! கடைசியில் இதுவும் ஆங்கிலத்திலுள்ள மூன்று காக்கை கதையாக முடிந்ததே ! என்று சொல்லி நகைக்க, இவருக்கு இதைச் சொல்லிய நண்பருக்குக் கோபம் பிறந்து “நான் சொன்னால் நம்பமாட்டேன் என்கிறீர் அந்த மலையாள மாந்திரீகனை நேரில் வரவழைத்து உமக்கு இவ் வித்தையைச் செய்து காண்பிக்கச் சொல்லுகிறேன் – என்ன பந்த யம்?” என்று கேட்டார். அப்படிச் செய்து காட்டுவதானால் அந்த மலையாள பசுவதி மாந்திரீகனுக்கு ஐந்து ரூபாய், உமக்குப் பத்து ரூபாய். அப்படி அவர் செய்து காட்டா விட்டால், இந்தப்பதினைந்து ரூபாயையும் நீர் எனக்குக் கொடுத்து விடவேண்டும்!” என்று நமது தீட்சிதர் பந்தயம் போட்டுக்கொண்டார்.

பிறகு நமது தீட்சிதருடைய நண்பர் அந்த மலையாளத்தானுடன் பேசி ஒருநாள் ஏற்பாடு செய்து கொண்டு அவனை தீட்சிதர் வீட்டிற்கு அழைத்து வந்தார். தீட்சிதர் தனது வீட்டிலுள்ள ஆடவர், குழந்தைகள் முதலிய எல்லோரையும் பக்கத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தான், மலையாள மாந்திரீகன், தனது நண்பர் ஆகமூலருமாக தன் வீட்டின் மேல்மாடிக்குப்போய்ச் சேர்ந்தார். உடனே முன்பே அவர் பேசிவைத்த அவரது மைத்துனனாகிய வைத்திய பரீட்சைக்குப் படிக்கும் 21 வயதுடைய வாலிபன் ஒருவனை தன் பக்களில் வரவழைத்துக் கொண்டார். பிறகு மலையாள மாந்திரீகனை நோக்கி, இந்து பிள்ளையாண்டான் வயிற்றிற்குத்தி அவனது குடலை எடுத்துக் காட்டும் என்று சொன்னார்.

அம்மாந்திரீகனும் அரை மணி சாவகாசம் ஏதோ மந்திர செய்து தீ மூட்டி சமித்துகளைக் கொளுத்தி அந்த கரியைக் கொண்டு, மை செய்து பிள்ளையாண்டான் வயிற்றில் நான்கு புறம் குறிகள் செய்து, தன் இடுப்பில் வைத்திருந்த சூரிகத்தியை எடுத்து பெரிய ஆடம்பரத்துடன் உச்சாடனங்களுடன் குத்துவது போல் குத்தினான்! குத்தினவுடன் பிள்ளையாண்டான் எப்படி யிருக்கிற தெனக்கேட்ட தீட்சிதருக்கு, ஆங்கிலத்தில் ஏதோ கத்தி கொஞ்சம் உள்ளே நுழைந்தது போல் தான் இருக்கிறது என்று பதில் சொன்னான்.

உடனே மலையாளத்தான் “என்ன சொல்லுகிறீர்கள்? நன்றாய் முழுவதும் குத்திக் குடலை எடுப்பதா?” என்று பயமுறுத்திக் கேட்க, தீட்சிதர் கொஞ்சம் சந்தேகப்பட்டவராய் தனக்காக தன் மைத்துனன் ஆனியிற்படுவது தர்மமல்ல வென்றெண்ணி, “வேண்டாம் நிறுத்தும்” என்று சொல்ல மலையாளத்தான் சூரிகத்தியை வாங்கிக்கொள்வதுபோல் வாங்கிக்கொண்டு, அது பட்ட இடத்தில் ஒரு துளி ரத்தம் காண அதைக்கை விரலினால் அமுக்கித் துடைத்து விட்டான்.

உடனே தீட்சிதர் இதைக்கண்டு தன் மைத்துனனை ஆங்கிலத்கில் “கத்தி உள்ளே நுழைந்திருந்தால் ஒரு துளிரத்தம் தானோ வரும்?” என்று வினவ, அவனும் “இதில் ஏதோ சூது இருக்கிறது! இதன் காபுரா செய்து கூச்சலுடன் வயிற்றிற் குத்திய பொழுது ஏதோ அது நுழைந்ததாகத்தான் அட்சணம் எண்ணினேன், இப்பொழுது, இருப்பதைப் பார்த்தால் அது நுழையவேயில்லை யென்று நினைக்கிறேன்,கொஞ்சமாவது நுழைந்திருந்தால் ரத்தம் பெருகியிருக்குமே!” என்று ஆங்கிலத்தில் பதில் உரைக்க, நமது தீட்சிதர் திடசித்தராய், இதை எப்படியாவது தாமே ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று தீர்மானித்தவராய் மலையாளத்தானைப் பார்த்து இந்தா இன்னொரு ஐந்து ரூபாய்,என் வயிற்றிற் குத்தி என் குடலை எடுத்துக்காட்டு என்று சொல்லிவிட்டு, நான் காட்டும் இடத்தில் குத்துவாயா” என்று வினவ அவனும் பொருளாசையால் ஆகா என்று ஒப்புக்கொண்டான்.

உடனே தன்னிருதயம் இருக்குமிடத்தைக்காட்டி அங்கே குத்தி என் குடலை எடு என்றார். “அப்படியே செய்கிறேன் நீங்கள் ஒன்றும் பயப்படே கூடாது” என்று எவ்வளவோ பயமுறுத்திப்பார்த்தான். நமது தீட்சிதர் இதற்கெல்லாம் பயப்படும் ஆசாமியா? இவர் எதற்கும் சலிய மாட்டார் என்று கண்டறிந்தவுடன் மலையாள மாத்திரீகன் இனிந்து ஜெபம் சாயாது என்று கண்டவனாய், உடனே அவர் பாதங்களில் விழுந்து “ஸ்வாமி ஸ்வாமி! என்னை நீங்கள் மன்னித்துக் காப்பாற்ற வேண்டும்! ஏதோ எனக்குத் தெரிந்த சில ஜாலவித்தைகளை வைத்துக்கொண்டு, ஜனங்களை ஏமாற்றி நான் வயிறு வளர்த்து வருகிறேன், என் சமாசாரத்தை வெளியில் இழுத்து விடாதீர்கள், என் மானத்தைக் காப்பாற்றுங்கள்!’ என்று மிகவும் வேண்டிக்கொள்ள நமது தீட்சிதர் மனமிரங்கினவராய் “சரிதான் அப்படியே ஆகட்டும், ஆனால் இனி இந்த ஊரில் பிழைக்கவேண்டாம்! வேறு எந்த ஊருக் காவது போய் பிழை; இங்கு திரும்பி வராதே மறுபடியும்!” என்று சொன்னார்.

அன்றிரவு கும்பகோணத்தை விட்டுப் போனவன் அவன் ஆயுள் பரியந்தம் அந்தப்பக்கம் அவன் திரும்பவேயில்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *