
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
பதினெட்டாவது கதை
ஒரு சமயம் நமது தீட்சிதர் ஏதோ வேலையாகத் தமது மாட்டு வண்டியில், இராச் சாப்பாட்டிற்குப் பின் மாயவரம் போக வேண்டி வந்தது. அச்சமயம் இவரது எதிர் வீட்டுக்காரர் தானும் தன் மாட்டு வண்டியில் புறப்பட்டு, தீட்சிதரிடம் வந்து, “நானும் மாய வரம் போக வேண்டியிருக்கிறது; என் வண்டிக்காரன் கொஞ்சம் தூங்கு மூஞ்சி; ராத்திரியில் சரியாக ஓட்டமாட்டான். ஆகையால் உங்கள் வண்டியின் பின்னால் விடச் சொல்லுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன் ஏதோ ஒரு விஷயமாக இவர்மீது கோபங் கொண்டிருந்த நமது தீட்சிதர், இவரைக் கோட்டா பண்ணவேண்டு மென்று தீர்மானித்து, “அதற்கென்ன ஆட்சேபனை?” என்று பதில் உரைத்தார். உடனே கும்பகோணத்திலிருந்து இரண்டு வண்டிகளும் புறப்பட்டன. தீட்சிதர் மாட்டு வண்டி முன்பாகவும், எதிர் வீட்டுக்காரர் வண்டி பின்பாகவும் பாதிவழி போவதற்குள்ளாகப் பின் வண்டிக்காரனும் அவனது எஜமான்னும் தூங்கிவிட்டார்கள்.
பெரும்பாலும் வண்டி மாடுகளின் சுபானம் என்னவென்றால், முன்னால் ஒரு வண்டி போய்க் கொண்டிருந்தால் பின்வண்டி மாடுகளெல்லாம், வண்டிக்காரர்கள் ஓட்டாமலே அதனுடன் போய்க் கொண்டிருக்கும். நமது தீட்சிதர் இரண்டொரு முறை தன் குரலைக் கொடுத்துப் பார்த்து, எதிர்வீட்டுக்காரரும் அவரது வண்டிக்காரனும் நன்றாய்த் தூங்குகிறார்கள் என்று அறிந்தவராய், தன் வண்டியை நிறுத்தச் சொல்லி, தன் வண்டிக்காரனிடம், பின் வண்டியை வந்த வழியில் திருப்பிக் கும்பகோணம் போய்ச் சேரும்படி மெல்லத் திருப்பிவிடச் சொன்னார்.
அவனும் சந்தடி செய்யாமல், பின் வண்டியை மெல்லக் கும்பகோணம் பக்கம் திருப்பிவிட்டான். அச் சமயம் கும்பகோணத்திற்குப் போகும் ஒரு மாட்டு வண்டிவர, அதன் பின்னால் எதிர் வீட்டுக்காரர் வண்டியைப் போகச் செய்து விட்டு, தன் வண்டியிலேறிக் கொண்டு மாயவரத்திற்கு அதை ஓட் டிச்சென்றான்.
எதிர் வீட்டுக்காரர் வண்டி மெல்லக் கும்பகோணம் போய்ச் சேர்ந்தது. வழியில் அந்த மாட்டு வண்டிக்காரன் விழித்துக்கொண்டு பார்க்க, முன்னால் ஒரு வண்டி போவதைக் கண்டு, “சரிதான்; நாம் இன்னும் சுகமாய்த் தூங்கலாம்” என்று நினைத்து உறங்கி விட்டான். அவன் வண்டி எந்தப் பக்கம் போகிறதென்று தூக்கத்தில் கவனிக்கவில்லை. பொழுது பலபலவென்று விடிந்தது. எதிர் வீட்டுக்காரர், “ஏண்டா, இன்னும் மாயவரம் வந்து சேர வில்லையா ?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து பார்த்தார்.
தன் வண்டி கும்பகோணம் பெரிய வீதி வழியாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்! தன் வண்டிக்காரனைக் கோபித்து எழுப்ப, அவனும் கும்பகோணம் வந்து சேர்ந்திருப்பதைக் கண்டு திகைத் தான்! பிறகு எதிரில் போய்க்கொண்டிருக்கும் வண்டிக்காரனை, என்ன சமாசாரம்?” என்று கேட்க, அவன் மூலமாகத் தீட்சிதர் செய்த சூதை யறிந்தார்.



