
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
இருபத்தி ஏழாவது கதை
சென்னையில் நமது தீட்சிதருக்கு நாகேஸ்வர முதலியார் என்று ஒரு சிநேகிதர் இருந்தார். அவருக்கு அநேக வருஷங்கள் பிள்ளையில்லாமல் பிறகு ஒரு பிள்ளை பிறந்தது தெய்வகடாட்சத்தினால். உடனே இப்படி அருமையாகப் பெற்ற பிள்ளை மிகவும் காயலாய்க் கிடந்து, பிறகு உயிர் தப்பியது. ஒரு நாள் நமது தீட்சிதர் சென்னைக்கு வந்தபோது சாயங்காலம் கிளப்பில் நாகேஸ்வர முதலியாரைச் சந்தித்து யோகக்ஷேமங்களை விசாரித்தபொழுது முதலியார் தனக்கு ஒரு பிள்ளை பிறந்ததையும் அது மிகவும் அசெளக்கியமாக இருந்து பிறகு உயிர் தப்பினதையும் கூறினார். அதன் பேரில் நமது தீட்சிதர் “சந்தோஷம்! குழந்தைதான் பிழைத்து விட்டதென்கிறீர்களே, உமது முகத்தில் வாட்ட மிருப்பானேன்?” என்று கேட்டார் முதலியார் ஒன்று மில்லையென்று சொல்லியும், தீட்சிதர் ” வழக்கம்போல் உமது முகம் குதூகலமாயில்லை, அதற்கு ஏதாவது காரண மிருக்கவேண்டும்” என்று வற்புறுத்தி, கடைசியில் முதலியார் அவருக்கு அடியில் வருமாறு பதில் உரைத்தார்.
“நீங்கள் சொல்வது உண்மைதான், ஒரு சிறிய சமாசாரம் எனக்கு மிகவும் மனவருத்த முண்டு பண்ணுகிறது. என்னுடைய மாமியார் பெரிய பாளயத்தில் வாழ்ந்து வருகிறார்கள் தெரியுமல்லவா உங்களுக்கு? அந்த அம்மாள் என் கைக்குழந்தை நோயாயிருந்தபொழுது அது அந்த கண்டம் தப்பினால் நானும் என் மனைவியுமாக பெரிய பாளையத்தம்மன் கோயிலில் ஆடிமாசத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வேப்பிலை வஸ்திரமும் புடவையும் தரித்து பிரதட்சிணம் செய்வதாக பிரார்த்தனை செய்து கொண்டார்களாம், இப்பொழுது ஆடி மாசம் வந்து விட்டது.
இந்த நான்காம் ஞாயிற்றுக்கிழமை எப்படியாவது அந்தப் பிரார்த்தனையைச் செலுத்த வேண்டுமென்று நிர்ப்பந்திக்கிறார்கள்.தெய்வம் என்பது எல்லாம் ஒன்றுதான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆயினும் வேப்பிலையைக் கட்டிக்கொண்டு நானும் என் மனைவியும் அக்கோயிலை வலம் வருவதென்றால் என் மனம் ஒப்பவில்லை; என் மாமியாரோ தான் செய்த பிரார்த்தனையை எப்படியும் நிறைவேற்றவேண்டுமென்று நிர்ப்பந்திக்கிறார்கள்.
இந்த தர்ம சங்கடத்திற்கு என்ன செய்வது என்று என்மனம் ஒருவாறாயிருக்கிறது, என்று சொல்லி எப்படியாவது இந்த தர்மசங்கடத்தினின்றும் தப்ப ஒரு மார்க்கம் நீங்கள் தான் சொல்லவேண்டுமென்று நம் தீட்சிதரைக் கேட்க, சரி, பாப்படாதீர்கள் நாளைகாலை உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்.
மறுநாட்காலை நமது தீட்சிதர் முதலியாருக்குக் குழந்தை பிறந்து காயலாயிருந்து தப்பிய சந்தோஷ சமாசாரத்தை விசாரிக்க வருபவர் போல் ஒரு வெள்ளித்தட்டில் தேங்காய் பழம் புஷ்பம் வெற்றிலைபாக்கு மிட்டாய் குழந்தை கழுத்தில் போட ஒரு சவரன், எல்லாம் வைத்து எடுத்துக்கொண்டு முதலியார் வீடு வந்து சேர்ந்தார் . முதலியாரும் அவருடைய குடும்பத்தாரும் நமது தீட்சிதருக்கு அநேக வருஷமாய் அறிமுகமானபடியால் முதலியாருடைய மாமியார் உட்பட எல்லோரும் அவரை நல்வர வழைத்தனர்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு முதலியாருடைய மாமியார் தீட்சிதர் அவர்கள் கும்பகோணத்திலிருந்து இவ்வளவு சிரமப்பட்டு சென்னைக்கு வந்து தன் சிநேகிதன் குழந்தையின் யோகட் சேமத்தை விசாரித்ததற்காக அவருக்கு வந்தனமளிக்க, தீட்சிதர் “ஆமாம். அம்மா, அதெல்லாம் சரிதான், உங்களுக்கெல்லாம் கொஞ்சம் இவ் விஷயத்தில் கஷ்டம் கொடுக்க வேண்டியவனாயிருக்கிறேன்.
முதலியார் அவர்கள், பிறந்த குழந்தை மிகவும் தேக அசௌக்கியமா யிருக்கிறது, பிழைப்பது கஷ்டம் என்று எனக்கு தெரிவித்த பொழுது நான் ஒரு பிரார்த்தனை செய்து கொண்டேன், தெய்வ கடாட்சத்தினால் அக்குழந்தை தப்பிப் பிழைக்குமாயின் ஏன் குல தெய்வமாகிய திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு இவர் வீட்டிலிருப்பவர்களுடைய கூந்தல்களையும் முடிகளையும் பிரார்த்தனையாகச் செலுத்துவதாக; வருகிற புரட்டாசி மாசம் எப்படியாவது நீங்களெல்லாம் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும் “என்றார்.
இதைக்கேட்டவுடன் முதலியாருடைய மாமியாருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது “என்ன ஸ்வாமி! இப்படியும் நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளலாமா? நானும் என் மகளும் எங்கள் நீண்ட கூந்தல்களைப் பிரார்த்தனையாகக் கொடுப்பதாவது? அது ஒரு காலும் முடியாது” என்று சொன்னாள். அந்த அம்மாளுக்கும் அவர்களுடைய பெண்ணாகிய முதலியார் மனைவிக்கும் கூந்தல் மிகவும் அழகாயும் முழங்கால் வரைக்கும் நீண்டதாயும் இருக்கும்; ஆகவே அதைப் பறிகொடுப்பதென்றால் அந்த அம்மாளுக்கு மனம் வரவில்லை; அதன் பேரில் நமது தீட்சிதர் “ஐயோ! நான் பிரார்த்தனை செய்து விட்டேனே! என்ன செய்வது?” என்று துக்கிப்பவர் போல் பாசாங்கு செய்தார்.
அதன் பேரில் மாமியார் அம்மாள் “அப்படி பிரார்த்தனை செலுத்தவேண்டுமென்றிருந்தால் நீங்கள் உங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல, இதுதான் சமயம் என்று பார்த்துக்கொண்டிருந்த தீட்சிதர் “ஆமாம் அம்மா, நீங்கள் சொல்வதும் நியாயம் தானே, அப்படியே இந்த பிரார்த்தனைக்குப் பதிலாக என் முடியை நான் திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு செலுத்துகிறேன்; அதே மாதிரியாக நீங்கள் ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டீர்களாமே பெரியபாளை யத்தம்மன் கோயிலை சுற்றி முதலியாரும் அவாது மனைவியும் வேப்பிலை தரித்துக் கொண்டு சுற்றிவருவதாக, அவர்களுக்கு பதிலாக நீங்கள் வேப்பிலை சேலையைக்கட்டிக்கொண்டு இந்த ஞாயிற்றுக் கிழமை மூன்றுதரம் சுற்றிவந்து விடுங்கள்” என்றார்.
இதைக்கேட்ட வுடன் மாமியார் அம்மாளுக்கு அடங்காச் சிரிப்புவர “ஏனையா தீட்சிதரே! எனக்காக இந்த கதை யெடுத்தீர்களோ!” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்கள். நமது தீட்சிதரும் நகைத்துவிட்டு “இல்லை. அம்மா,நீங்கள் யோசித்துப்பாருங்கள் ஒரு விஷயம், நாம் ஏதாவது ஒரு பிரார்த்தனை செய்து கொண்டால் அதை நாம் செலுத்துவதா அல்லது மற்றவர்களைச் செலுத்தச் சொல்வதா?
நாம் பிரார்த்தனை செய்து கொண்டால் அந்தப் பிரார்த்தனையை நாமே செலுத்தவேண்டும் அல்லவா?” என்று சொல்ல, அந்த அம்மாள் “அதெல்லாம் என்னால் முடியாது, நான் வேப்பிலையைக் கட்டிக்கொண்டு பெரியபாளையம் கோயிலைச் சுற்றிவரமாட்டேன் என்று உறுதியாய் மறுத்தார்கள்.”
ஆனால் நான் சொல்லுகிறபடி கேளுங்கள் அதற்குப் பிராயச்சித்தமாக ஐந்து ரூபாய் கொடுங்கள், பெரியபாளையத்து அம்மாளைவிட பெரிய தெய்வமாகிய திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு அதைக் கொண்டுபோய்ச் செலுத்தி விடுகிறேன். நானும் என் பிரார்த்தனைக்குப் பிராயச்சித்தமாக ஐந்து ரூபாய் செலுத்தவேண்டியிருக்கிறது. ஆகமொத்தம் “வெங்கடேசப் பெருமாளுக்கு 10 ரூபாய் லாபம்” என்று சொல்லி மாமியார் அம்மாளிடமிருந்து ஐந்து ரூபாயைக் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டு போய் அடுத்த புரட்டாசிமாசம் ஒரு சனிக்கிழமை பத்து ரூபாயைக் திருப்பதி உண்டியில் செலுத்தி விட்டார். அன்று முதல் மாமியார் அம்மாள் ஒரு தெய்வத்திற்கும் ஒரு பிரார்த்தனையும் செய்வதேயில்லை.



