
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
இருபத்தி எட்டாவது கதை
நம்முடைய தீட்சிதருக்கு நாச்சியார் கோயிலில் வெங்கட ரமணராயர் என்று ஒரு சிநேகிதர் உண்டு. ஒரு முறை அந்த ராயர் வீட்டிற்கு ஏதோ பிரயோஜனத்திற்காகப் போயிருந்தார். அச்சமயம் ராயர் அவர்கள் ஒரு ஏழை பிராம்மணனுடன் வாதாடிக் கொண்டிருந்தார். இந்த ராயர் பெரும் லோபி, எதாகும் பணம் செலவழிப்பதென்றால் அவருக்கு தன் உடலினின்றும் இரத்தத் கைக்கொடுப்பது போல் அவ்வளவு கஷ்டம்.
அவருக்குப் பிள்ளை யில்லை; கலியாணமாகிப் பத்து பன்னிரண்டு வருஷமாயும் குழந்தை பிறக்கவில்லை; அதன் பேரில் யாரோ சிநேகிதர்கள் அவருக்கு தில்லை ஆலயத்தைப் பிரதட்சிணம் (அரசமரத்தைப் பிரதட்சிணம் செய்தல்) செய்தால் பிள்ளை பிறக்குமென்று சொன்னார்களாம் – அதுவும் 108 தரம் பிரதட்சிணம் (சுற்றிவருதல்)செய்ய வேண்டுமென்று சொன்னார்களாம். நமது ராயரோ பெருத்த தேக முடையவர்; அவரது தொப்பையைத் தூக்கிக் கொண்டு பத்தடி வைப்பதென்றாலும் அவருக்கு பகீரதப் பிரயத்னமாகும்; அப்படிப் பட்டவர் ஒரு பெரிய ஆல மரத்தடியை 108 முறை பிரதட்சிணம் வருவதென்றால் இலேசான விஷயமா? அதற்காக அந்த ஏழை பிராம்மணனை வரவழைத்து தனக்காக அவனை ஆலமரத்தை 108 முறை பிரதட்சிணம் செய்வதற்காக ரூபாய் பேசிக்கொண்டிருந் தார். இந்த சமயம்தான் நமது தீட்சிதர் அங்கு போய்ச்சேர்ந்தார். ராயர் அவர்கள் அரைமணி சாவகாசம் பேரம் செய்தார்.
பிராம்மணன் பத்து ரூபாயிலிருந்து கடைசியாக ஒரு ரூபாயில் வந்து நின்றான், ராயர் ஒரு அணாவில் ஆரம்பித்து கால் ரூபாயில் வந்து கடைசியாகச் சேர்ந்தார்! பேரம் முடிவதாகக் காணோம்! நமது தீட்சிதர் எத்தனை நேரம் இவ்வாக்கு வாதத்தைக் கேட்டுக்கொண்டிருப்ப தென்று, மெல்ல தனக்கு அறிமுகமான அந்த ஏழை பிராம்மணனுக்கு அதை ஒப்புக்கொள்ளும் படியாகக் கண் ஜாடை செய்தார். அதன் பேரில் அந்த பிராம்மணனும் ஒப்புக்கொண்டான். அதன் பேரில் நமது தீட்சிதர் ராயரைப் பார்த்து “ராயர் அவாள், நீர் போய் ஸ்நானம் பண்ணிவிட்டு வாருங்கள், நீங்கள் 108 பிரதட்சிணம் செய்யாவிட்டாலும் பக்கத்திலிருந்து ஐயர் பிரதட்சிணம் செய்வதைப்பார்த்தால் நற்பலனுண்டு” என்று சொல்லி அவரை ஸ்நானத்திற்காக வீட்டின் இரண்டாங்கட்டிற்கு அனுப்பினார்.
ராயர் தலை மறைந்ததும் எழை பிராம்மணன் “என்ன ஐயா ! தீட்சிதரே! நாலணாவக்காக 108 பிரதட்சிணம் செய்ய ஒப்புக்கொள்ளும் படிச் செய்தீரே! என்று வருத்தத்துடன் கேட்க, தீட்சிதர் ” ‘அடே’ பயித்தியமே! உமக்கு சிரமம் கொடுப்பேனா, நான் ஒரு யுக்தி சொல்லித் தருகிறேன் அதன்படி செய்யும்! என்று அவன் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அந்த பிராம்மணனும் சந்தோஷமாகத் தலை யசைத்து விட்டு ராயர் வீட்டிற்கு சமீபத்திலிருந்த ஒரு பெரிய மரத்தருகிற் போய் இரண்டு மூன்று இலைகளையுடையஒரு சிறு காம்பைக் கிள்ளிக்கொண்டு வந்தான்.
இதற்குள்ளாக நமது ராயரும் ஸ்நானம் செய்துவிட்டு உள்ளே இருந்து கூடத்திற்கு வந்து, புறப்படலாமா? என்று பிராம்மணனை விளவினார்; அதற்கு பிராம்மணன் (தீட்சிதர் கற்பித்தபடி) “ராயரே, அந் தப் பிரதட்சிணம் இங்கேயே செய்து விடுகிறேன், உங்களுக்கு அரசமரத்தடி வரையில் நடந்து வரவேண்டிய கஷ்டம் வேண்டாம்!’ என்று சொல்லி மடியில் மறைத்து வ த்திருந்த இரண்டு மூன்று இலைகளடங்கிய அரசங் காம்பை டது கையில் பிடித்துக் கொண்டு வலது கையில் ராயர் கொடுத்த கால் ரூபாயை இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு, ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணி 108 முறை சுற்றினான்.
இதைக்கண்டு ராயர் முதலில் சிரித்தபோதிலும், பிறகு தான் இவ்வாறு ஏமாற்றப்பட்டதற்காகக் கோபங் கொள்ள, நமது தீட்சிதர் “ராயர் அவாள், தட்சிணைக்குத் தக்க பிரதட்சிணம்! இதற்கெல்லாம் கோபங்கொள்ளாதீர்!” என்று சாந்தப்படுத்தினார். பிறகு ராயர் வெட்கப்பட்டவராய் அந்த பிராம்மணனிடம் அவன் கேட்டபடி ஒரு ரூபாயைக் கொடுத்து அச்செடியை 108 முறை சரியாகப் பிரதட்சிணம் செய்யும்படிச் செய்தார்.
முற்றிற்று.
★ ★ ★



