தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

எட்டாவது கதை

ஒரு முறை நமது தீட்சிதர் கும்பகோணத்திலிருந்து சென் னைக்கு வரும்படி நேர்ந்தது. சென்னைக்கு இரண்டாவது வகுப்பு டிக்கட் ஒன்று வாங்கிக்கொண்டு ரெயிலில் ஏறினார். அவருடைய சிநேகிதர் ஒருவரும் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு இரண் டாவது வகுப்பு டிக்கட்டு வாங்கிக்கொண்டு ஏறினார். அந்தச் சிநேகிதர் ஏதோ அஜாக்கிரதையினால் தன் டிக்கட்டைத் தொலைத்து விட்டார்.

அதன் பேரில், அவர் “ஐயோ!டிக்கட்டு எங்கேயோ தொலைத்து போய்விட்டதே டிக்கட்டு தொலைந்து போய்விட்டதென் றால் ரெயில் அதிகாரிகள் நம்பமாட்டார்களே! என்ன செய்வது?” என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது நமது தீட்சிதர், “நீங்கள் ஒன்றுக்கும் பயப்படவேண்டாம்; என் டிக்கட்டை வைத்துக்கொள்ளுங்கள்; நான் எப்படியாவது சமாளித்துக் கொள்ளுகிறேன்.” என்று சொல்லித் தன் டிக்கட்டை அவரிடம் கொடுத்து விட்டார். இரவில் இருவரும் ரெயிலில் மற்றவர்களுடன் உறங்கிக் கழிக்க, மறுநாட்காலை சேத்துப்பட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். தீட்சிதர் சேத்துப்பட்டில் இறங்கி பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.

டிக்கட் பரிசோதகர் எல்லாருடைய டிக்கட்டுகளையும் வாங்கிக்கொண்டு வந்தார். பிறகு ரெயில் புறப்படும் சமயத்தில் தீட்சிதர் இரண்டாவது வகுப்பிற்குள் ஏறவே, இவர் தன்னை ஏமாற்றினதாக டிக்கட்டு கலெக்டர் எண்ணி, “எங்கே உங்கள் டிக்கட்டி என்று கேட்டார். அதற்கு நமது தீட்சிதர், “முன்பே கொடுத்து விட்டேனே உம்மிடம்!’ என்று பதில் உரைக்க, அவர் கொடுக்கவில்லை என்று மறுத்தார். இப்படி இருவரும் வாதாடிக் கொண்டிருக்கும் பொழுது ரெயில் புறப்பட்டு விட்டது. உடனே சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன் அந்த டிக்கட் பரிசோதகர் நமது தீட்சிதரை அதிகாரிகளிடம் அழைத்துக்கொண்டுபோய், இவர் டிக்கட் இல்லாமல் ரெயிலில் பிரயாணம் செய்திருக்கிறார் என்று குற்றஞ் சாற்றினார்.

அதிகாரிகள் இவரை விசாரிக்க “நான் அப்படிச் செய்யவில்லை; என் டிக்கட்டை இவர் வாங்கிக்கொண்டு, ஏதோ ஞாபகமறதியாய் தவறாக என் மீது குற்றஞ் சாட்டுகிறார். வேண்டுமென்றால் இவர் சேகரித்துக் கையில் வைத்திருக்கும் டிக்கட்டுகளைப் பரிசோதித்துப் பாருங்கள். நான் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வாங்கின இரண்டாவது வகுப்பு டிக்கட்டின் நம்பர் இது, என்று சொல்லித் தன் கேபியிலிருந்து ஒரு சிறு குறிப்புப் புஸ்தகத்தை எடுத்துத் தான் வாங்கின டிக்கட்டின் நம்பர் குறித்திருந்ததை எடுத்துக் காட்டினார் (இம்மாதிரி தான் வாங்கும் டிக்கட்டுகளின் எண்ணைக் குறித்து வைப்பது நமது தீட்சிதருக்கு வழக்கம்) உடனே அதிகாரிகள் அந்த டிக்கட் பரிசோதகர் கையிலிருந்த டிக்கட்டுகளை வாங்கிப் பார்க்க, அதில் நமது தீட்சிதர் குறித்த நம்பருடைய டிக்கட் கிடைத்தது. டிக்கட் பரிசோதர் திகைத்து நின்று விட்டார்.

அதிகாரிகள் இப்படித்தவறாக ஒரு பெரிய மனிதன் மீது நீ குற்றஞ் சாற்றலாமா என்று அவரைக் கோபித்துக்கொண்டனர். அதன் பேரில் நமது தீட்சிதர் “பாவம்!ஏதோ வாலிபர்! தெரியாமல் சொல்லி விட்டார். எனக்கொன்றும் கோபமில்லை; நீங்களும் மன்னித்து விடுங்கள்!” என்று சொல்லித் தப்பித்துக்கொண்டு வந்து விட்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *