
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
இருபத்திரண்டாவது கதை
சென்னையில் வைகுண்டவாத்தியார் வீதியென்று ஒருவீதி யிருக்கிறது. அது சென்னை வாசிகளுக்கெல்லாம் நன்றாய்த் தெரியும், ஆயினும் அவ்வீதிக்கு பெயர் வைகுண்டவாத்தியார் வீதி யென்று ஏற்பட்டது என்பது மாத்திரம் ஆயிரத்திலொருவருக்குக் கூடத்தெரியாது.
நமது தீட்சிதர் காலத்தில் அந்த வீதியில் ஒரு வயதான பிராம்மணர் இருந்தார். அவருக்கு ஜீவனம் எப்படி யென்றால், யாராவது இறந்து போனால், உடனே அய்யருக்கு இறந்த வருடைய பந்துக்கள் தெரிவித்தால், அவர்களிடம் நான்கணா வாங்கிக்கொண்டு, இறந்தவர் பெயரை ஒரு ஓலையில் எழுதி அதன் கீழ் இவரை வைகுண்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எழுதிக் கொடுத்து விடுவார். இதை நம்பும் ஜனங்களால், முக்கியமாக வைஷ்ணவர்களால், இவருக்கு ஜீவனோபாயம் கிடைத்து வந் தது; அதுவும் ஆடிமாசத்தில் அதிகலாபம் நமது வைகுண்ட வாத்தியாருக்கு.
இதை சென்னையில் வந்திருந்த பொழுது ஒரு முறையறிந்த நமது தீட்சிதர் “இறந்துபோனவர் எவ்வளவு பாபம் செய்திருந்த போதிலும் நாலணா கொடுத்து வைகுண்டத்தில் ஒரு இடம் பெறுவதென்றால் என்ன மூடத்தனமாயிருக்கிறது. இந்த மூட புத்தியை எப்படியாவது அகற்ற வேண்டு மென்று எண்ணினவராய் ஒரு நாள் மார்கழி மாதம் காலை தான் துவாதச நாமம் பூண்டவராய், தனது சிநேகிதர் சிலரையும் அப்படியே பூணும்படிச் செய்து திருவெண்பாவை பாடிக்கொண்டு, பெருங்கோஷ்டியாய் இந்த வைகுண்ட வாத்தியார் வீட்டிற்கு வந்து “வாத்தியார் அவர்கள் உள்ளே யிருக்கிறாளோ?” என்று வினவினார் பஜனை கோஷ்டி இங்கு நிற்கவே, பெருங்கூட்டமும் கூடியது.
வைகுண்ட வாத்தியார் யாரோ தன்னைக் காண வந்திருக்கிறார்களென்று பரபரப்புடன் வெளியில் வர நமது தீட்சிதர் “தாங்கள் தானே வைகுண்ட வாத்தியார்?” என்று வினவி அவர் ஆம் என்று ஒப்புக்கொள்ள “தங்களுக்கு, ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து ஒரு திருமுகம் வந்திருக்கிறது! அதைப் பெற்றுக்கொள்ள வேண்டு” மென்று சொல்லி, பட்டு வஸ்திரத்தில் மடித்து வைத்திருந்த ஓர் மஞ்சள் பூசிய ஓலைச் சுருளை எடுத்து அவர் கையில் மிகவும் விநயத்துடன் கொடுத்தார்.
வைகுண்ட வாத்தியாரும் இதென்னடா ஆச்சரியமாக யிருக்கிறது! என்று அதை மரியாதையுடன் வாங்கிக்கொண்டு, கண்களில் ஒத்திக்கொண்டு, பெற்றார். பாபம்! எழுபது வயதுக்கு மேற்பட்டவரானபடியால் படிக்க முடியாது திகைக்க, நமது தீட்சிதர் “வாத்தியார் அவாள், உங்களுக்கு சிரமம் வேண்டாம் நான் படித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லி அச்சுருளைப் பிரித்து அடியில் வருமாறு படித்தார்.
“நமது பக்த கிரோமணியாகிய வைகுண்ட வாத்தியார் அவர்களுக்கு நமது கிருபையால் சகல மனோபீஷ்டங்களும் நிறைவேறுமாக!இப்பவும் இதனால் உமக்குத் தெரிவிப்பதென்னவென்றால் தற்காலம் வைகுண்டத்தில் ஜீவகோடிகள் அதிகமாய் நிறைந்திருக்கிறபடியால் மிகவும் நெருக்கமாயிருக்கிறது. இனிமேல் உங்கள் ஆயுள் பர்யந்தம் வைகுண்டத்திற்கு ஒருவரையும் அனுப்பாமலிருக்கும்படி உத்திரவு செய்கிறோம். இனிமேல் ஒருவருக்கும் வைகுண்டத்திற்கு நீங்கள் சிட்டு கொடுக்காமலிருக்க வேண்டும்!” என்று உரக்கப்படிக்க இதைக் கேட்ட யாவரும் கொல்லென்று நகைத்து விட்டனர்.
வைகுண்ட வாத்தியார் நடந்ததை யறிந்தவராய் சரேலென்று தன் வீட்டிற்குள் நுழைந்து தெருக்கதவைச் சாத்திக் கொண்டனர். பஜனை கோஷ்டி யும் கும்பலாய்ச் சேர்ந்த ஜனங்களும் கலைந்தனர். அதன் பிறகு வைகுண்ட வாத்தியார் வைகுண்டத்திற்கு சீட்டு கொடுப்பதையும் விட்டனர்.



