தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

பதினொன்றாவது கதை

ஒரு முறை ஒரு டிராம் கண்டக்டர் நமது தீட்சிதரிடம் ஒரு செல்லாத இரண்டணாவைக் கொடுத்துவிட்டான். இதைப் பாராது வாங்கிக்கொண்டு அவர், பிறகு பரிசோதித்துப் பார்த்தபொழுது தான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தவராய் “ஆகட்டும், இதற்குப்பதில் செய்ய எனக்குத் தெரியும்” என்று கொண்டு, பாரிஸ்கார்னரில் மற்றொரு டிராம் வண்டியில் ஏறினார்.

ஏறும் பொழுது டிக்கட் விற்கிறவன் எந்தப் பக்கமிருந்து டிக்கட்டுகள் கொடுத்துக்கொண்டு வருகிறான் என்பதை கவனித்து அதற்கு எதிர்ப்புறமாக ஏறினார். டிக்கட் விற்கிறவன் மற்றவர்களுக் கெல்லாம் டிக்கட்டு கொடுத்துக் கொண்டு இவரிடம் வருவதற்குள் பச்சையப்பன் கலாசாலைக்கு டிராம் வந்து விட்டது. பிறகு டிராம் கண்டக்டர் வரை டிக்கட்டுக்குப் பணம் கேட்க, தன்னுடைய பையிலிருந்து சரியான ஒரு இரண்டணாவை எடுத்துக் கொடுத்து “ராயபுரம் ஒரு டிக்கட்” என்று கேட்டார். கண்டக்டர் “ஓவ்! எந்த ஊரய்யா, ராயபுரமா போகிறது இந்த வண்டி? கீலே இறங்குங்களய்யா!” என்றான். உடனே நமது தீட்சிதரும் ஒன்றும் தெரியாதவர்போல் இறங்கி விட்டார். கொஞ்சம் பொறுத்து மயிலரப் பூருக்குப் போகும் மற்றொரு டிராம் வண்டியில் முன்பு குறிப்பிட்ட படியே கவனித்து ஏறிக்கொண்டார்.

இவ்வண்டி மெமோரியல் ஹாலருகில் வரும்பொழுது கண்டக்டர் டிக்கட்டுக் கேட்கவே முன்பு போல ஒரு சரியான இரண்டணாவைக் கொடுத்து “ஒரு டிக்கட் வண்ணாரப் பேட்டை என்று கத்தினார். கொஞ்சமாவது சுளிக்காமலும், சிரிக்காமலும் கேட்டார். வண்டியிலிருந்தவர்களெல்லோரும் நகைத்தனர். “ஏய்! நாட்டுப்புறம்! கீழே இறங்கு,படிக்கத் தெரியாது? போர்டில் என்ன போட்டிருக்கிறது பார்க்கவில்லையா!” என்று கண்டக்டர் அதட்டி, அவருடைய இரண்டணாவை “அவர் கையில் கொடுத்துக் கீழே இறக்கி விட்டான். இதற்குள்ளாக டிராம் வண்டி சென்டிரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது. இம்மாதிரியாகவே வேறு வேறு வண்டிகளிலேறி அவ்வண்டிகள் போகாத இடங்களின் பெயர்களைக் கூறி, துட்டையும் மிகுத்திக்கொண்டு மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தார்! பிறகு மறுநாள் சென்னையில் திருப்பதிக் குடை புறப்படும் வைபவத்தைக் காண வந்து அந்த திருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமாள் உண்டியில் அந்த செல்லாத இரண்டணாவைச் சமர்ப்பித்து விட்டார்.

“இந்தப் பெருமாள் தானே அந்த ராமம் போட்ட கண்டக்டர், எனக்கு நாமம் போடச் செய்தார்! ஆகவே அந்த செல்லாத காசை அவருக்கே கொடுத்து விட டேன்” என்று தன் மனதைத் திர்ப்தி செய்து கொண்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *