தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

இருபத்தி நான்காவது கதை

கும்பகோணத்திற்கு அருகாமையில் திருவிடைமருதூர் என்கிற திவ்ய சேஷத்திரமொன்றிருக்கிறது. அவ்வூரில் தாதலிங்க முதலியார் என்று ஒரு சிறு மிராசுதார் இருந்தார். அவர் கலியாணமாகி தன் மனைவியுடன் வாழ்ந்து வரும் நாளில், அவர் தமக்கையாகிய துர்க்காம்பாள் என்கிற ஸ்திரீ துர்ப்பாக்கியத்தினால் கணவனை இழந்து விதவையாகி, இவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

தாதலிங்க முதலியார் மனைவி புத்திசாலியான பெண், தன் கணவன் வரவுக்குத் தக்கபடி சிலவு செய்து சம்சாரத்தை நடத்திவரும் குணமுடையவளாயிருந்தாள்; இந்த துர்க்கம்பாளுக்கு இது சம்மத மில்லை, எந்நேரமும் அபரிமிதமாய் செலவழித்து தின்று வயிறு வளர்க்க வேண்டுமென்று மெண்ணமுடையவர்கள்.

இதற்கு தாதலிங்க முதலியார் மனைவி இணங்காததால் இருவருக்கும் எந்நேரமும் பெரும் போராட்டமேற்பட்டது. தாதலிங்க முதலியார் என்ன செய்வார் பாபம்! ஒரு பக்கம் மனைவி, மற்றொரு பக்கம் விதவையான தன் சொந்த தமக்கை; யார் பக்கம் பேசினாலும் மற்றவர்களுக்கு கோபம். ஆகவே இப்போராட்டத்தில் தலையை நுழைத்துக் கொள்ளாதிருந்தார். துர்க்காம்பாள் திடீரென்று ஒரு நாள் பிசாசுபிடித்தது போல் ஆட ஆரம்பித்தாள்!

வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் பயந்து போனார்கள்; இந்த பிசாசு என்ன செய்வதென்றால் ஒரு சிறு துடப்பத்தை எடுத்துக்கொண்டு பக்கத்திலிருப்பவர்களை யெல்லாம் அடிப்பது போல் அமர்ந்து “எனக்கு என் சரியாப் பூசை போடுவதில்லை! சரியாகப் போடுகிறீர்களா இல்லையா?” என்று பயமுறுத்தும். பிசாசு அடிக்கிற அடியானது பெரும்பாலும் தாதலிங்க முதலியார் மனைவி மேல்விழும் தாதலிங்க முதலியாரும் அவரது மற்றபந்துக்களும் இதைக்கண்டு பயந்துபோய், இந்தப் பிசாசை, “நீ யாரம்மா?” என்று வணக்கத்துடன் கேட்க “நான் யார் என்று தெரியாதா உங்களுக்கு? நான் தான் லோகாம்பாள்! லோகாம்பாள்!” என்று கத்தியது.

லோகம்பாள் என்பது தாதலிங்க முதலியார் தாயாரின் பெயர். அதன் பேரில் மறு அமாவாசை தினம் அந்த பிசாசுக்கு பெரும் படையல் எல்லாம் போட்டு பொங்கலிட்டு வடை பட்சணங்கள் எல்லாம் செய்து பூஜைபோட்டார்கள். அதை யெல்லாம் நமது பிசாசு பிடித்த துர்க்காம்பாள் வயிறு நிரம்ப சாப்பிட்டு வந்தார்கள். இவ்வாறு மாதத்திற்கு கொருதரம் இரண்டு மாதத்திற்கு ஒரு தரம் இந்த பிசாசு வரும். மறுநாள் படையல் போட்டவுடன் பிசாசு தணிந்து விடும். எத்தனை நாள் இந்த ஹிம்சையை தாதலிங்க முதலியார் மனைவி பொறுத்துக் கொண்டிருப்பாள்!

மெல்ல தனக்கிருக்கும் சந்தேகத்தை தன் கணவனிடம் கூற, அவரும் சந்தேகப் பட்டவராய், அவர் இதற்கு என்ன செய்வது என்று தோன்றாதவராய், தன் நண்பராகிய நமது தீட்சிதர் இடம் போய் முறையிட்டார். தீட்சிதர் ஒரு முறை அந்தப் பிசாசு துர்க்காம்பாள் மீது ஆவேசம் வந்தபொழுது கவனித்துப் பார்த்து இதெல்லாம் சூது என்று அறிந்தவராய் இதைத் தடுக்க வேண்டுமென்று யோசித்தார்.மெல்ல தாதலிங்க முதலியாரிடமிருந்து அவரது தகப்பனார் பெயர் அகத் தீஸ்வர முதலியார் என்பதைக் கேட்டுக்கொண்டார். மறு முறை அந்த பிசாசு ஆவேசம் வந்த க்ஷணம் தனக்குத் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு தன்வீடு போய்ச் சேர்ந்தார்.

அப்படியே மறுமுறை துர் க்காப்பாள் பேரில் ‘லோகம்பாள்’ பிசாசு வந்தவுடன் சைட்காருள்ள ஒரு மோட்டார் சைகிலை அனுப்பி தாகலிங்க முதலியார் நமது தீட்சிதர் அவர்களை வேகமாய் தன் வீட்டிற்கு வரவழைத்தார். முதலியாருடைய வீட்டின் வாயிலில் நுழையும் பொழுதே நமது தீட்சிதர் தலை மயிரை விரித்து போட்டுக்கொண்டு தன் சொக்காயைக் கிழித்துக்கொண்டு “ஆ! ஹா ஹா ஹா! எங்கே எங்கே லோகாம்பாள்! லோகாம்பாள்?’ என்கிற பயங்கர தொனியுடன் தானும் ஓர் பிசாசு பிடித்தவர் போல் ஆடிக்கொண்டு வந்தார். துர்க்காம்பாள் உடபட விட்டிலிருந்தவர்களெல்லாம் இவரைக் கண்டு நடுங்கிப் போயினார்.

உடனே அங்கிருந்த ஒரு ஒட்டடைக் கொம்பைக் கையி லெடுத்துக்கொண்டு “ஆஹா! லோகாம்பாள்! லோகாம்பாள்! முதல் திவசத்தின் போது, எனக்கு நைவேத்யமாவதற்குள் வடை முதலிய பணியாரங்களை யெல்லாம் ருசிபார்த்தாயல்லவா!” என்று அக்கொம்பினால் தோளின் பேரில் இரண்டடி வைத்தார்! “இல்லை! இனி மேல் செய்யவில்லை” என்று லோகாம்பாள் பிசாசு கத்திற்று.

அதன்பேரில் கொஞ்சம் ஆவேசம் தணியவே, அங்கிருந்தவர்களெல்லாம் கர்ப்பூரத்தை யேற்றி இவருக்கு நமஸ்காரம் செய்து “நீங்கள் யார் தெரிவிக்கவேண்டும்” என்று வேண்ட, “ஆஹா! இன்னும் உங்களுக்கு நான் இன்னார் என்று தெரியவில்லையா? நான் தான் அகத்தீஸ்வார்!” என்று முதலியாரின் தகப்பனார் பெயரைச் சொல்ல, அங்கிருந்தவர்களெல்லாம் (துர்க்காம்பாள் உட்பட) அவர் பாதத்தில் நமஸ்கரிக்க, துர்க்காம்பாளைப் பார்த்து “லோகாம்பாள்! ஞாபகமிருக் கட்டும்! இனி என்னுடைய உத்திரவில்லாமல் இந்த வீட்டில் அடியெடுத்து வைக்காதே!” என்று பயங்கரமான குரலுடன் சொன்னார்.

துர்க்காம்பாளும் “இல்லை!இல்லை! இனி! இங்கு வரு வதேயில்லை” என்று கூறினாள். கொஞ்சம் பொறுத்து நமது தீட்சிதர், தன்னைப் பிடித்திருந்த பிசாசு விட்டதுபோல் பாசாங்கு செய்து, மூர்ச்சையாகிக் கீழே விழுந்தவர் போல் விழுந்து, சற்று நேரத்திற்கெல்லாம் கண் விழித்துப் பார்த்து “ஆ நான் எங்கிருக்கிறேன்?- கும்பகோணத்திலிருந்து இங்கு எப்பொழுது வந்தேன்?” என்று தன் சொந்த குரலுடன் நடந்த தொன்றும் தெரியாதவர் போல் கேட்டார். அங்கிருந்தவர்கள் நடந்ததைத் தெரிவிக்க, “அப்படியா! எனக்கொன்றும் ஞாபகமில்லை. உம்- என்ன ஆச்சரியம்!” என்று சொல்லிவிட்டு கோழித்திருடி கூடக்குலாவினான்” என்பது போல் அங்கிருந்தவர்களுடன் கலந்து கொண்டார்.

இது நடந்த பிறகு சில வருஷங்கள் வரையில் அந்த ஊரில் யாருக்கும் பிசாசு வர வில்லை யென்று கேள்வி. பிறகு பன்முறை நமது தீட்சிதர் தாத லிங்க முதலியாரைப் பார்க்கும் பொழுதெல்லாம் “என்ன முதலியார், உங்கள் வீட்டு லோகாம்பாள் பிசாசு எப்படி யிருக்கிறது?” என்று வினவுவது வழக்கம். அவர் அதற்கு “அகத்தீஸ்வர முதலியார் பிசாசு கொடுத்த பூசையில் அது இனி என் திரும்பிப்பார்க் கிறது!” என்று பதில் சொல்வது வழக்கம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *