
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
இருபத்தியாறாவது கதை
நமது தீட்சிதர் ஒரு சமயம் சென்னைக்கு வந்திருந்தார். அக் காலம் சென்னையில் பழைய ஜட்காவண்டிகள் துடிக்கொண்டிருந்த சமயம். ஒரு நாள் சாயங்காலம் ஏதோ குஜிலி கடையில் சிலசாமான்களை வாங்கிக் கொண்டு, அங்கு அருகாமையில் இருந்த ஒரு ஜட்கா வண்டியில் ஏறிக்கொண்டு, ஜட்கா வண்டிக்கார சாயபுனை, திருவல்லிக் கேணிக்கு ஓட்டும்படி கேட்டார். அந்த சாயபு ஏதோ நாட்டுப்புறத் தான், வாடகை பேசாமல் ஏறிக்கொண்டான் என்று சந்தோஷப் பட்டவனாய் “சாமி, திருமல் கேடிகி பொவ எட்டணா கொடுக்கணும்’ என்றான். நமது தீட்சிதர் “என்ன சாயபு? சாதாரணமாய்க் கொடுக்க வேண்டிய சத்தம் 4 அணா தானே, 4 அணா கொடுக்கிறேன் ஓட்டு” என்றார்.
அதற்கு அந்த சாயபு “அதெல்லாம் ஒதவாது சாமி, நாலணா சார்ஜெல்லாம். உங்க பாட்டென் காலத்திலே யிருந்துது, இப்போ இல்லே, எட்டணா குடுத்தா நம்பொ ஒட்ராங்கோ, இல்லாப்போனா நீ கியெ ஏறங்கறான்” என்றான். அதைக்கேட்டவுடன் நமது தீட்சிதருக்குக் கோபம் வந்தும் இவனுக்கு நல்ல புத்தி வரும் படி செய்யவேண்டுமென்று தீர்மானித்தவராய், கோபத்தை அடக்கிக்கொண்டு மௌனமாயிருந்தார்.
ஜட்காவண்டி சாய்பு ஒரு முறை இரண்டு முறை கீழே இறங்கும்படி அதட்டியும், இவர் ஒன்றும் பதில் சொல்லாமல் நான்கு பக்கமும் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பேரில் அந்த சாயபுக்குக் கோபம் வந்து “அரே நாட்டுப் பொறித்து பாப்பான்! செவுதி இருக்கிறான்! கியே எறங்க சொல் நான், நீ சும்மா இருக்கிறான்!” என்று திட்டிப்பார்த்தான்.
அதற்கும் நமது தீட்சிதர் ஒன்றும் சளையவில்லை,மெளனமாயிருந்தார். அதன் பேரில் அந்த துலுக்கனுக்கு அடங்காக் கோபம் உண்டாகி ‘”அரே! பொம்மன்! நீ எரங்காபோனா நம்பொ போலீஸ் சார்ஜ் பண்ணுவான்!” என்று கூவிப்பார்த்தான். அதற்கும் நமது தீட்சிதர் பதில் ஒன்றும் சொல்லாதவராய் தன் மடியிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து மெல்ல போட்டுக்கொள்ள ஆரம்பித்தார் வண்டிக்குள் இருந்தபடியே. அதன்மீது சாயபு குதிரையின் லகானைப் பிடித்து வண்டியை அருகிலுள்ள போலீஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டுபோய் அங்கிருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இடம் கம்பிளேயின்ட் பண்ணினான்.
அதன் மீது அந்த சப் இன்ஸ்பெக்டர் வெளியில் வந்து ஜட்காவண்டியின் அருகிற் போய் “ஒய்! அய்யரே! ஏன் வண்டியை விட்டு இறங்கமாட்டேன் என்கிறீர்?” என்று கேட்டார்; நமது தீட்சிதர் வெற்றிலை பாக்கை மென்றுகொண்டே “இன்ஸ்பெக்டர் அவாள், சாயபுவையே கேட்டுப்பாருங்கள்” என்றார். அதைக்கேட்ட சாயபு மிகவும் கோபத்துடன் “இன்ஸ்பெக்டர் சாமி! இந்த பொம்மன் என்னா செய்தான், நான் இஸ்டாண்டில் (Stand) என் வண்டியை நிறுத்தி வைச்சிகினுயிருந்தா பாடிகே பேசாதே என்காடிகுள்ளே ஏறிகினா, திருமல்கேடிக்கு ஓட்ட சொன்னாள், நம்போ 8 அணா கொடுத்தா ஒட்ரோம் சொன்னேன், அப்போ நாலணாதான் கொடுப்பேன் ஓட்டு இண்ணா, நம்பொ அதுக்கு ஒத்து கிலே அப்புறம் எறங்கைய்யா இண்ணா,மாட்டேன் சொல்லி மக்கார் பண்ரா இந்த நாட்டு பொறத்து பொம்மன்!” என்று சொன்னதின் பேரில் “இன்ஸ்பெக்டர் அவாள், கேட்டீர்களோ இல்லையோ அவன் சொன்னது? அவன் சொன்ன வாக்குமூலத்தின் பேரிலேயே அவன் பேரில் வாடகை வண்டி சட்டப்பிரகாரம் நியமித்த வாடகைக்கு திருவல்லிக்கேணிக்கு ஓட்டமாட்டேன் என்று சொன்னதற்காக அவன் மீது நான் சார்ஜ் செய்கிறேன்! எழுதிக்கொள்ளுங்கள்” என்று சாவகாசமாய்த் தெரிவிக்க, இன்ஸ்பெக்டர் உளவு அறிந்தவராய், கொல் என்று நகைத்து “டேய்! சாயப் நன்றாய் ஆகப் பட்டுக் கொண்டாய் உன் வாயினாலேயே! குறியாக, நாலணாவுக்கு ஓட்டுகிறாயா இல்லாவிட்டால் வாடகை வண்டி சட்டப்பிரகாரம் உன் பேரில் சார்ஜ் பண்ணுவதா?” என்று கேட்க சாயபுக்கு அதிக கோபமும் துக்கமும் வர “என்னா சாமி! நம்போ இந்த பொம்மன் பேர்லெ சார்ஜ் பண்ணா,நம்பொபோலே நீங்க சார்ஜ் பண்ணரைங்க!” என்று மொழிய “மடையா! வாடகை வண்டி சட்டப்பிரகாரம் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தால் யார் வந்து ஏறிக்கொண்டு எங்கே போகச்சொன்னாலும் உங்களுக்கு அச்சிட்டுக் கொடுத்திருக்கும் உத்தரவின்படி வாடகைக்கு நீ ஓட்டித்தான் தீரவேண்டும்! மாட்டேன் என்று சொல்லக் கூடாது, அதிகமாகவும் கேட்கக்கூடாது! ஆகவே ஐயரை திருவல்லிக்கேணிக்குக் கொண்டு போய் விட்டு நாலணா வாங்கிக்கொள்’ என்று புத்தி சொல்லியனுப்ப, சாயபு அவன் தாடியை விட நீண்ட கோபமுடையவனாய், வழியெல்லாம் முணு முணு என்று முணுப்பிக்கொண்டே நமது தீட்சிதரை திரு வல்லிக்கேணி கொண்டுபோய்ச் சேர்த்து 4 அணா பெற்றுக்கொண்டு போனான்.



