
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
ஆறாவது கதை
ஒரு முறை கவர்னர் ஜெனரல் அவர்கள் கும்பகோணத்திற்கு வந்தார். ஒரு நாட்காலை அவர் ஊரைச்சுற்றிப் பார்க்க வேண்டுமென்று அபிப்பிராயப்பட, அதற்காக கலெக்டர் அவர்கள் இன்னின்ன வீதி வழியாக அவர் ஊர்வலம் வரவேண்டியது, அப்படிச் செய்யும் பொழுது இன்னின்ன பெரிய மனிதர்கள் அவருக்கு மாலை மரியாதை செய்யவேண்டியது என்று ஏற்பாடு செய்தார். அப்பொழுது நம்முடைய தீட்சிதரும் தம் வீட்டின் வழியாகப் போகும் பொழுது தாமும் கவர்னர் ஜெனரலுக்கு மாலை மரியாதை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். கலெக்டர் இவர் ஏதாவது குறும்பு செய்ய லாமென்று அஞ்சினவராய், வேண்டாமென்று மறுத்து விட்டார்.
அதன் மீது நமது தீட்சிதர், “சரி இவரால் நமக்கென்ன? நாம் செய்வதைச் செய்வோம்” என்று எண்ணிக்கொண்டு, வீட்டிற்கு வந்து கவர்னர் ஜெனரலுக்காகப் பெரிய சரிகை மாலை முதலியன வெல்லாம் ரகசியமாகச் சித்தம் செய்து வைத்தார். காலை கவர்னர் ஜெனால் ஊர்வலம் வரும்பொழுது, ஆங்காங்கு பெரிய மனிதர்கள் வீட்டிலெல்லாம் மாலை மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு வந்தார். தீட்சிதர் வீட்டெதிரில் நிற்கவேண்டாம் என்று கலெக்டர் கவர்னர் ஜெனரல் வண்டி சாரதிக்குச் சொல்லியிருக்கவே, அங்கு வரும் பொழுது அவன் பெரு நடையாய் வண்டியை விடப்பார்த்தான். நமது தீட்சிதர் இதைக்கண்டு, கவர்னர் ஜெனரல் வண்டி வீட்டண்டை வந்ததும், அதற்கெதிராக, இருபது ரூபாய்க்கு எட்டணா, நாலணா, இரண்டிணாவாக வெள்ளிச் சில்லரையாக மாற்றி, அந்தச் சில்லரையை வண்டியெதிரில் வாரி இறைக்க, அங்கிருந்த ஜனங்களெல்லாம் ஒரேகும்பலாய் ஒருவர் மேல் ஒருவர் வீழ்ந்து அதை பொறுக்க ஆரம்பித்தனர்.
கும்பலில் வண்டியை ஓட்ட முடியாமல் சாரதி வண்டியை நிறுத்தினான். (அக்காலம் தற்காலப் போல் மோட்டார் வண்டிகளில்லை, இரண்டு குதிரைகள் கட்டின குதிரைவண்டி தான் பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டது.)
உடனே வண்டி நிற்கவே, நமது தீட்சிதர் அவர்கள், கவர்னர் ஜெனரலுக்குச் சலாம் செய்து வீட்டு, சரிகை மாலை முதலிய மரியாதைகள் எல்லாம் சாவ காசமாய்ச் செய்தார்! மற்றப் பெரிய மனிதர்கள் வீட்டெதிரிலெல்லாம் அரை நிமிஷம் நின்றால், நமது தீட்சிதர் வீட்டெதிரில் கவர்னர் ஜெனரலின் வண்டி இரண்டு நிமிஷம் நிற்க வேண்டிவந்தது. நடந்த உளவையறியாத கவர்னர் ஜெனரல், நமது தீட்சிதரை, ‘இப்படி ஏன் வெள்ளி நாணயங்களை இறைத்திர்’ என்று கேட்க, பூர்வ காலத்திலெல்லாம்.
இந்து தேசத்திய ராஜாக்கள் வீதிகளில் ஊர் கோலம் வந்தால், திருஷ்டி கழிப்பதற்காகப் பொன் வெள்ளி நாணயங்கள் இறைப்பது வழக்கம். அது போல் எங்கள் பூர்வீக ஹிந்து வழக்கத்தை அனுசரித்தேன் என்று விடை பகர்ந்தார். கவர்னர் ஜெனரல் அதற்காக நமது தீட்சிதருக்கு வந்தனம் அளித்தார். பிறகு வண்டி புறப்படும்பொழுது அவர் பக்கத்தில் உட் கார்ந்து கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கலெக்டருக்கு, ஒரு பெரிய “தீவட்டி சலாம் ” போட, இவர் செய்த சூழ்ச்சியையறிந்த கலெக்டர் நகைத்து விட்டுப் போனார்.



