தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

ஏழாவது கதை

ஒரு முறை சக்ரவர்த்தியானவர் நமது தேசத்திற்கு விஜயம் செய்தபொழுது, டில்லியில் ஒரு பெரிய தர்பார் நடந்தது. அதற்கு நமது இந்திய தேசத்திலுள்ள சகல ராஜாக்களும் வரவழைக்கப் பட்டிருந்தபடியால், சாதாரண ஜனங்கள் உள்ளே உட்காருவதற்கு இடங் கிடைப்பது மிகவும் கடினமாயிருந்தது.நமது தீட்சிதர் அவர் கள் எப்படியாவது உள்ளே போய் அந்த வைபவத்தைக் காணவேண்டுமென்று இச்சை கொண்டவராய், தனக்கு அறிமுகமான சென்னை ராஜதானி மத்திரி ஒருவரிடம் போய், தனக்கு பிரைவேட் டிக்கெட் ஒன்று வாங்கிக்கொடுக்கும்படி மிகவும் மன்றாடிக் கேட்டார்.

அதற்கவர், “எனக்கே ஒரு டிக்கட் கிடைப்பது பகீரதப் பிரயத்னமா யிருந்தது; உங்களுக்கு ஒன்று வாங்கிக் கொடுக்க என்னால் முடியாது” என்று பதில் சொல்லி விட்டார். அதன்பேரில் நமது தீட்சிதர் ஒரு யுக்தி செய்தார். டில்லி தர்பாரில் நடக்க வேண்டிய சங்கீதக் கச்சேரிக்காகச் சென்னையிலிருந்து ஒரு சங்கீத வித்வானும் பக்கவாத்தியமாக ஒரு பிடில் வித்வானும் மிருதங்கக்காரனும் அங்கு அதைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் எல்லோருக்கும் போலீஸ்காரர் மூலமாக ஒவ்வொரு டிக்கெட்டு கொடுக்கப்பட்டிருந்தது; அவர்களுள் மிருதங்கம் வாசிப்பவன் இவருக்குத் தெரிந்தவன்; அவனிடம் போய் ‘உனக்கு நாளை தர்பாரில் மிருதங்கம் வாசிக்க என்ன கொடுக்கபோகிறார்கள்?’ என்று கேட்க, அவர் நூறு ரூபாய் கொடுப்பதாக ஏற்பாடாயிருக்கிறது என்று பதில் சொல்ல, “அந்த நூறு ரூபாய்க்குப் பதிலாக நான் இருநூறு ரூபாய் தருகிறேன்; நான் சொன்னபடி மாத்திரம் நீ செய்யவேண்டும்; இன்றிரவு ஏதோ காய்ச்சல் வந்ததாகப் படுத்துக் கொள்; நாளை சாயங் காலம் வரை படுக்கையை விட்டு எழுந்திராதே; உன் மிருதங்கத்தை என்னிடம் கொடு; நான் அதை எடுத்துக்கொண்டு போய், உனக்குப் பதிலாக வாசித்து விட்டு வருகிறேன்!” என்று சொல்ல, அவனும் வாசிக்கும் கஷ்டமும் மிகுந்தது வரும்படிக்கும் இரட்டிப்பாய் வருகிறது என்று சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டான்.

அன்றிரவு தான் காய்ச்சலாயிருப்பதாயும், தனக்குப் பதிலாக ஒருவர் மிருதங்கம் வாசிப்பதாயும்,சங்கீத வித்வானுக்குச் சொல்லியனுப்பினான். அவரும், அம்மட்டும் எவனாவது பதிலாகக் கிடைத்தானே என்று ஒப்புக்கொண்டு, நமது தீட்சிதரை அழைத்துக்கொண்டு போக, அந்த டிக்கட்டுடன் தர்பாருக்குள் நம்மவர் நுழைந்து தர்பார் ஆரம்பமாகும் சமயத்திற்கு முன்பாக வந்திருந்தவர்களின் மனோ உற்சாகத்திற்காகச் சங்கீதக் கச்சேரியில் சங்கீத வித்வானின் பாட்டிற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார்.நமது தீட்சிதர் பல பயிற்சிகளுடன் மிருதங்கம் வாசிப்பதையும் கற்றிருந்தார்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இவருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுக்க முடியாது என்று கூறிய சென்னை ராஜதானி மந்திரி தர்பாருக்கு வர “ஐயா, மந்திரி அவர்களே! உங்களுக்கு முன்னதாக இதோ வந்திருக்கிறேன்!” என்று அவர் வெட்கும்படிக் கூறிவிட்டு, மிருதங்கம் வாசித்து முடித்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *