தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

பத்தொன்பதாவது கதை

நமது தீட்சிதருக்கு சீட்டாடுவதில் அதிகப் பிரியமுண்டு. சாதாரணமாக ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் தன் வீட்டில் சீட்டுக்கச்சேரி வைப்பார். பத்துப் பன்னிரண்டு சிநேகிதர்கள் மத்தியானத்திற்குமேல் வந்து சாயங்காலம்வரை சீட்டாடிக்காலம் கழிப் பார்கள். அப்படி ஆடும்பொழுது சாதாரணமாகப் பணம் பந்தயம் வைத்தாடுவார்கள்.

இவ்வாறு அழைக்கப்பட்ட தீட்சிதருடைய நண்பர்களுள் இருவர் மாத்திரம் பணம் வைத்துச் சீட்டாடுவதற்கு இசையாது பிரத்யேகமாய் உட்கார்ந்துகொண்டு ‘அவுட்’ என்னும் ஆட்டம் ஆடி வந்தார்கள். காசுவைத்து ஆட்டம் ஆடாமற் போனாற் போகிறது. இவர்களுக்கு இந்த ‘அவுட்’ ஆட்டத்தில் இவ்வளவு பிரீதி என்ன என்று கொஞ்சம் ஆச்சரியப்பட்டவராய் நம் தீட்சிதர் ஒருநாள் அவர்களிருவரும் பிரத்யேகமாய் இந்த ‘அவுட் ஆட்டம் ஆடும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தார். அவ்விருவர்களும் கொஞ்சம் வயதாகி நல்ல ‘சாலேஸ்ரம்’ முதிர்ந்தவர்கள். சமயம் பார்த்து அவ்விருவரும் ஏதோ பராக்காயிருக்கும் பொழுது அவர்கள் ஆடிக் கொண்டிருந்த சீட்டுக் கட்டினின்றும்,ஸ்பேட் ராஜா, டைமன் ராணி, இரண்டையும் மெல்ல எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு வந்து, தன் மற்ற நண்பர்களுடன் உட்கார்ந்து வழக்கம் போல் பிடியாட்டம் ஆட ஆரம்பித்தார்; இவர் இப்படிச் செய்த பிறகும், அவ்விருவரும் இரண்டு மூன்று ஆட்டங்கள் ஆடிக்கொண்டிருந்தனர்!

இதென்னடா விந்தையாயிருக்கிறது! இரண்டு முக்கியமான சீட்டுகள் அதிலும் ஒருராஜா ஒரு ராணி இல்லாமல், இவர்கள் எப்படி அவுட்’ ஆட்டம் ஆடுகிறார்கள்? என்று ஆச்சரியம் கொண்டவராய், தன் கைச்சீட்டை புதிதாக வந்த ஒரு நண்பரிடம் கொடுத்து விட்டு, மறுபடியும் அவர்களிடம் போய் உட்கார்ந்தார். உட்கார்ந்தவர் அவர்கள் அச்சமயம் ஆடிய ஆட்டம் முடிந்தவுடன், தன் ஜேபியில் ஒளித்து வைத்திருந்த ஸ்பேட் ராஜாவையும் டைமன் ராணியையும், வெளியில் எடுத்துக் காட்டி, “இந்த இரண்டு சீட்டுகளும் இல்லாமல், எப்படி நீங்கள் இரண்டு மூன்று ஆட்டங்களாக ஆடி வருகிறீர்கள்?” என்று கேட்டார்!

அதன் பேரில் அவர்களில் ஒருவர், மற்றொருவரைப் பார்த்து, “அப்படியானால் இந்த ஆட்டத்தில் ஸ்பேட் துருப்பாயித்தே அதில் நாற்பது என்னமாகச் சொன்னீர்?” என்று கேட்டார். அவர், இவரைப் பார்த்து, “போன ஆட்டத்தில் டைமன் துருப்பாயிருந்ததே, நீங்கள் என்னாத் டைமன் ராணி யில்லாமற் நாற்பது சொன்னீர்கள்? என்று திருப்பிக் கேட்டார்.

இது தவிர அவுட் ஆட்டத்தில், 108 கணக்காகும் படி, என்னமாக அவ்விரண்டு சீட்டுகளும் இல்லாமல் மூன்று நான்கு ஆட்டங்களில் கணக்கு வைத்தார்களோ, அது ஸ்வாமிக்குத் தான் தெரியும். ஒரு வேளை நமது தீட்சிதருக்குத் தெரியுமோ என்னமோ!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *