
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
இரண்டாவது கதை
ஒருமுறை நம்முடைய தீட்சிதர் அவர்கள் கும்பகோணத்தி லிருந்து தஞ்சாவூருக்கு ரெயில் மார்க்கமாய் அவசரமாய்ப் போக வேண்டி வந்தது. அப்பொழுது கலியாண காலமாகையால், இரண்டாவது வகுப்பில் ஜனநெருக்கம் அதிகமாயிருந்தது. ஆகவே, தான் இரண்டாவது வகுப்பு டிக்கட்டு வாங்கினபோதிலும்,மூன்றாவது வகுப்பில் தட்டித் தடுமாறி ஏறிக்கொண்டு, மூலையில் ஓர் இடுக்கில் தான் இடங்கிடைக்க அங்கு போய் உட்கார்ந்துகொண்டார். அந்த வண்டி நிரம்ப ஜனங்கள் உட்கார்ந்திருந்தனர்.
தீட்சிதர் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிர்ப்புற மூலையில் பத்து பன்னிரண்டு வயதுடைய ஒரு சிறுவன் உட்கார்ந் திருந்தான். ரெயில் வண்டியானது மிகவும் செழிப்பாயுள்ள சில வயல்களைக் கடந்து போகும்போது, அச்சிறுவன்,”ஆஹா! இந்த மாதிரி நிலத்தில் ஒரு ஏக்கர் நிலம் யாராவது எனக்குக் கொடுத்தால்!’ என்று உரக்கச் சொல்லி, அந்நிலங்களை வியந்து கொண் டிருந்தான்.
அந்தப் பிள்ளை யாண்டான் நமது தீட்சிதருக்குக் கொஞ்சம் அறிமுகமானவன். அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டதும், தீட்சிதர் அவர்கள் தானிருந்த மூலையை விட்டு விட்டு, நடுவில் இருந்த ஜனங்களை யெல்லாம் தள்ளிக்கொண்டுபோய் அப் பையனது வலது கன்னத்தில் ஒரு அறை அறைந்து விட்டு, ஒன்றும் பேசாமல் மறுபடியும் தானிருந்த விடத்திற்கு வந்து உட்கார்ந்து கொண்டார். வண்டியிலிருந்த ஜனங்களெல்லாம் ஆண் பெண் உட்படத் திகைத்தனர்.
அப்பையனும் தன்னை அடித்ததற்குக் காரணம் அறியாதவனாய் விழித்தனன். பத்து வினாடி வண்டியில் நிசப்தமாயிருந்தது. பிறகு வண்டியிலிருந்த, தீட்சிதருக்குப் பரிசயமான ஒருவர், கொஞ்சம் மனதைத் தைரியம் செய்து கொண்டு, “தீட்சிதரவாள்! என்னை மன்னிக்கவேண்டும். அந்தப் பையனை ஏன் அடித்தீர்கள் என்று நான் தங்களைக் கேட்கலாமோ?” என்று வினவினார்.
நமது தீட்சிதர். அதிக கோபங்கொண்டவர் போல் “பாருங்கள் சார்! இந்தப் பயலை எனக்குப் பிறந்தது முதல் தெரியும்! எப்பொழுது பார்த்தாலும் அற்ப புத்தியா! இவ்வயதிலேயே இவ்வளவு அற்ப புத்தியுடையவனா பிருக்கிறவன், பெரியவ னானால் எப்படி இருப்பான்? எப்பொழுதும் பெருந்தன்மை வாய்ந் தவனாயிருக்கவேண்டாமா இவ்வுலகத்தில்? பாருங்கள், இந்தப் பயல், ஒரு ஏகரா நிலம் கேட்டானே, யாராவது சிறிதளவு நிலமாவது கொடுக்கப்போகிறார்களா இவனுக்கு? அதொன்றுமில்லை. அப்படியிருக்க, பத்து வேலி வேண்டும் என்று கேட்கிறதுதானே! இதிலும் கூடவா அற்பத்தனம்!என் சிநேகிதர் ஒருவர் கும்ப கோணத்திலிருக்கிறார்; எளியவர் பாபம்;
அவர் தினம் பூஜை செய்யும்போது மானச பூஜைதான்; அந்த மானச பூஜையில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்வது பயத்தம் பருப்பு! ஏன்? மானச பூஜை தானே! தட்டுத்தட்டாக, சோமாசி, ஜிலேபி, பாதம் ஹல்லா, போளி, அதிரசம் என்று மனஸுக்குத் தோன்றியதையெல்லாம், நிவேதனம் செய்கிறது தானே! ஒரு காசு செலவா என்ன? மானச் பூஜையிலும் பயத்தம் பருப்பு நிவேதனமா? அப்படிப்பட்ட லோபித் தனம் என்ன? அந்தமாதிரி இந்தப்பயலுக்கு, அற்பமனது இருக்கக் கூடாது என்று தெரிவிப்பதற்காகவே இவனை அறைந்தேன் என்று பதில் உரைத்தார். வண்டியிலிருந்தவர்களெல்லாம் வயிறு குலுங்கச் சிரித்தனர்! அடிபட்ட பையனும் அடியை மறந்து மற்றவர்களுடன் கலந்துகொண்டு சிரித்தான்.
நமது தீட்சிதர் அடித்ததற்குப் பரிதாபமாக, அடுத்த ஸ்டேஷனில், ஐந்து பலம் முந்திரிப் பருப்பு வாங்கிப் பையனிடம் கொடுத்து, “தின்னுடா பையா!இனி மேல் ஜாக்கிரதையாயிரு!எப்பொழுதும் பெரிய மனதுடையவனாரு ; கேட்பதிலும் தாராளமாய்க் கேள்!” என்று தட்டிக்கொடுத்தார்.



