
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
இருபதாவது கதை
ஒருமுறை நமது தீட்சிதர் சென்னைக்கு வந்திருந்தார். அச் சமயம் பீபில்ஸ்பார்க் வேடிக்கையில் பந்தல்கள் தீப்பற்றிச் சுமார் 500 பெயர்கள் மாண்டனர். மறுநாள் காலை, சின்னக் கோர்ட்டில் உத்திரியாகமாயிருந்த சிவராமஐயர் என்ற ஒருவர் தீட்சிதர் இறங்கியிருந்தவருடைய வீட்டிற்கு வந்தார். அந்த வீட்டுக்காரர் கோர்ட்டில் ஒரு பெரிய உத்யோகத்திலிருந்தார். அவரிடம் வந்த சிவராம ஐயர், நேற்றுராத்திரி பார்க்கில் தீப்பற்றியதில் சுமார் 500 பெயருக்கு மேல் இறந்து விட்டார்களாமே” என்று கேட்டார். அதற்கு அந்த வீட்டுக்காரர் “ஆமாம், மிகுந்த துக்ககரமான சமாசாரம்” என்று பதில் உரைத்தார்.
உடனே சிவராம ஐயர் தமது மனதில் கொஞ்சு மேனும் வருத்தமென்ப தில்லாதவராய், “அதில் நம்முடைய ஆபிசிலிருப்பவர்களில், எனக்கு மேலான உத்தியோகஸ்தர்கள் யாராவது மாண்டார்களா? உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவி “அதெல்லாம் எனக்குத் தெரியாது; நீங்கள் போய் வாருங்கள் என்று அவருக்கு விடைகொடுத்தனுப்பிவிட்டு, வீட்டுக்காரர் தன் பக்கத்திலிருந்த நமது தீட்சிதரிடம் “இந்த மனிதன் துர்ப் புத்தியைப் பார்த்தீரா! பட்டணத்தில் எத்தனையோ குடும்பங்கள் பந்துக்களை இத்தீயில் பறிகொடுத்துவிட்டு, எங்கு பார்த்தாலும் துக்கித்தவண்ணமிருக்கிறார்கள்.
இவன் என்ன வென்றால், கோர்ட்டில் தனக்கு மேலிருக்கும் உத்யோகஸ்தர்களில் யாராவது மாண்டால் தனக்கு புரொமோஷன் கிடைக்குமே என்று இவ்விடம் வந்து விசாரிக்கிறான். மற்றவர்கள் மடிந்தால் இவனுக்குச் சந்தோஷம் போலும்!” என்று தெரிவித்தார். அதன் பேரில் நமது தீட்சிதர், சரி ஆகட்டும் இம்மனிதனுக்குத் தக்க புத்திமதி போதிக்க வேண்டுமென்று, சிவராமருடைய வீட்டின் நம்பர், தெரு, உத்யோகம் எல்லாவற்றையும் விசாரித்தறிந்து தன் புத்தகத்தில் குறிப் பிட்டுக்கொண்டு, சமயம் பார்த்திருந்தார்.
சில நாட்கள் கழிந்த பிறகு, ஒருசமயம் சிவராம ஐயர் தன் சம்சாரத்துடன் திருநெல்வேலிக்கு ஒரு கலியாணத்திற்காகப் போயிருந்தார். அச்சமயம் அங்கிருந்த தன் சிநேகிதர் ஒருவருக்கு உண்மையை யெல்லாம் எழுதி, அவர் மூலம் சென்னபட்டணத்தில் சிவராம ஐயர் வீட்டிலிருக்கும் அவரது பந்துக்களுக்கு அவர் வாந்திபேதியில் மடிந்ததாக ஒரு தந்தி அனுப்பி வைத்தார். இதைப்பார்த்ததும் அவரது பந்துக்க ளெல்லாம் குய்யோ முறையோ என்று அழத் தொடங்கினர்.
மறு நாட்காலை சிவராம ஐயர் தன் சம்சாரத்துடன் வீடு போய்ச் சேர, அங்கு அவரது பந்துக்களெல்லாம் துக்கித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். என்னவென்று விசாரித்து, வந்த தந்தியைக் கொண்டு வரச்சொல்லி யார் இவ்வாறு கோரமான குறும்பு செய்திருக்கக் கூடும் என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நமது தீட்சிதர் அகஸ்மாத்தாய் அவரைப்போய்ப் பார்ப்பவர் போல் பார்த்தார் . அப்பொழுது சிவராம ஐயர், “பாருங்கள் தீட்சிதர்வாள்! நான் உயிருடனிருக்கும் பொழுதே எனது விரோதிகள் இம்மாதிரிச் செய்திருக்கின்றனர்!” என்று முறையிட்டார்.
அதற்கு நமது தீட்சிதர் “ஐயர்வாள், நீங்கள் யாருடைய சாவையாவது கோரினீர் களோ என்னவே, அதனால் மற்றவர்கள் உங்களுடைய சாவை இவ்வாறு கோரும்படியாக நேரிட்டிருக்கலாம்” என்று கூறி புத்தி புகட்டினர்.



