
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
மூன்றாவது கதை
ஒரு முறை நமது தீட்சிதர் ரெயில் பிரயாணம் போகும் பொழுது கும்பகோணம் ஸ்டேஷனிலிருந்து முதல் வகுப்பில் போகவேண்டி வந்தது. ரெயில்வண்டி ஸ்டேஷனில் வந்து நின்றவுடன் இவருடைய ஆள் இவரது பெட்டிகள் சாமான்கள் முதலியவற்றை முதல் வகுப்பில் வைத்தான். அந்த ஊர் கலெக்டர் மிஸ்டர் பார்டி என்பவரும் அதே ரெயிலில் போக வேண்டி வந்ததால், அவருடைய டபேதார் அவருடைய சாமான்களை யெல்லாம் கொண்டு வந்து முதல் வகுப்பு வண்டியில் ஏற்றினான். அப்பொழுது தீட்சிதர் சாமான்கள் அங்கு இருப்பதைக்கண்டு, தான் கலெக்டர் டபேதார் என்னும் ஹோதாவினால், தீட்சிதர் சாமான்களையெல்லாம் ஸ்டேஷன் பிளாட்பாரம் பக்கம் எடுத்துப் போட்டுவிட்டு, கலெக்டர் சாமான்களை யெல்லாம் கம்பார்ட்மெண்டில் அடுக்கிக் கொண்டிருந்தான்.
இதைக் கண்ட தீட்சிதருடைய ஆள், தீட்சிதரிடம் போய் முறையிட, தீட்சிதர் வந்து பார்த்து தன் ஆளிடம் கலெக் டர் சாமான்களையெல்லாம், அக்கம்பார்ட்மெண்டிலிருந்து பிளாட் பாரத்திற்கு எதிர்புறமுள்ள ரெயில் பாதையில் போடும்படி உத்திரவு செய்தார்; அவனும் அப்படியே செய்ய கலெக்டர் டபேதார், தீட்சிதர் ஆளாகிய மகம்மதிய ஜவானை எதிர்க்க அஞ்சினவனாய், கலெக்டரிடம் போய் முறையிட்டான். கலெக்டர் வந்து பார்த்து கோபத்துடன் தீட்சிதரை “ஏன் என் சாமான்களை இப்படி எறிந்தாய்?” என்று கேட்க, தீட்சிதர் சாந்தமாய், “உங்கள் ஆள் என் சாமான்களை ஏன் வெளியில் எறிந்தான் என்று முன்பு கேளுங்கள்” என்று கூறினார்.
அதன் பேரில் நற்குணம் வாய்ந்த அந்த கலெக்டர், முதல் தப்பு தன் டபேதாருடையது என்பதை அறிந்தவராய் அவனைக் கண்டித்துவிட்டு, தன் சாமான்களை எல்லாம் போர்ட்டர்களைக் கொண்டுவரச் சொல்லி கம்பார்ட்மெண்டில் ஏற்றிக்கொண் டார். இதற்குள் நமது தீட்சிதர் தன் சாமான்களைச் பிளாட்பாரத்திலிருந்து சுலபமாக ஏற்றிக்கொண்டார்.
ரெயில் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டவுடன், கலெக்டர் சுருட்டுப் பிடிக்க ஆரம்பித்தார்; சுருட்டுப் பிடிக்கும்பொழுது அடிக்கடி எச்சிலை அவர் துப்பவேண்டி வந்தது. கம்பார்ட்மெண்டில் அந்த எச்சிலை அவர் துப்ப, இரண்டு மூன்று முறை இதைப் பொறுத்துக் கொண்டிருந்த நமது தீட்சிதர், “இப்படியேன் ஆபாசம் செய்கிறீர்கள்.” என்று ஆட்சேபிக்க, கலெக்டர், “இது எங்கள் பழக்கம்!” என்று பதில் உரைத்தார்.
சரிதான் என்று பொறுத்துக்கொண்டிருந்து, அடுத்த ஸ்டேஷனில் ரெயில் நின்றவுடன், நாலணாவுக்கு, வெற்றிலை புகையிலை முதலியவற்றை பிளாட்பாரத்தில் விற்பவனிடமிருந்து வாங்கிக்கொண்டு, ரெயில் புறப்பட்டவுடன், அவற்றை வாயில் போட்டு மென்று மென்று கம்பார்ட் மெண்டில் துப்ப ஆரம்பித்தார்; இதைக் கண்டவுடன் கலெக்டர் கோபங்கொண்டவராய், “இப்படி ஏன் ஆபாசம் செய்கிறீர்?” என்று கேட்க, நமது தீட்சிதர், “இது எங்கள் வழக்கம்!” என்று பதில் உரைத்தார். அதன் மீது கலெக்டர் “நீர் யார்?” என்று தீட்சிதரைக் கேட்க, தீட்சிதர் ‘நீர் யார்’ என்று தானும் அவரைக் கேட்டார்.
அதன் பேரில் கலெக்டர் “நான் பார்டி என்று” பதில் உரைக்க தீட்சிதர், ‘நான் பிப்டி!’ என்று அதற்கு விடை கொடுத்தார். (நான் ‘பார்டி’ என்றால், எனக்கு நாற்பது வயது என்றும் ‘நான் பிப்டி என்றால் எனக்கு ஐம்பது வயது என்றும் அர்த்தம் கொடுக்கிறதைக் கவனிக்கவும்.)
கலெக்டர் இப்பதிலைப் பொறுக்காதவராய் “உஸ்! என்றார். உடனே நமது தீட்சிதர் ‘டப்!’ என்று கூறினார். இதைக் கேட்ட கலெக்டர் இதற்கு அர்த்தம் தெரியாதவராய், “என்ன டப்! என்கிறீர்?” என்று கேட்க, தீட்சிதர் “வேறொன்றுமில்லை. நீர் உஸ்! என்று ஆராச பாணத்தை ஆரம்பித்தீர்; நான் டப்! என்று அதை முடித்தேன். என்று விடை பகர்ந்தார்; (ஆகாசபாணமானது புஸ், என்று ஆகாயத்திற்போய் டப்! என்று முடிவதைக் கவனிக்க).
இதைக்கேட்ட தும் கலெக்டர் தீட்சிதரின் புத்தி சாதுர்யத்தை மெச்சி குலுங்க நகைத்தவராய் அவருடன் சிநேகமாகி, தான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரையில் அவருடன் வேடிக்கையாய்ப் பேசிக்கொண் டிருந்து விட்டு, தன் ஸ்டேஷனாகிய தஞ்சாவூருக்கு எப்பொழுது வந்தாலும் தன்னை வந்து தாராளமாய்க் காணும்படி கேட்டுக் கொண்டு போனார்.



