
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
ஒன்பதாவது கதை
ஒரு முறை நமது தீட்சிதர் கும்பகோணம் ஸ்டேஷனுக்கு மதுரையிலிருந்து வந்த தன் சிநேகிதரை வரவேற்கப் போயிருந்தார். அந்தச் சிநேகிதருடன் ஒரு ராயர் கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கினார். அந்த ராயருக்கு ‘சாலேசரம்’. ரெயில் வண்டியிலிருந்து இறங்கினவுடன் யரோ அவருக்கு ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து கொடுக்க, அவர் தன் மூக்குக் கண்ணாடியைக் கூட்ஸ் வண்டியிலிருந்த பெட்டியில் வைத்து விட்டதால் அக்கடிதத்தைப் படிக்க முடியாதவராய், சுற்றிப் பார்த்து நமது தீட்சிதர் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து,”ஐயா, உங்கள் மூக்குக் கண்ணாடியை ஒரு நிமிஷம் கொடுங்கள்” என்று கேட்க தீட்சிதர், “இந்தக் கண்ணாடி சாலேசரத்திற்கு உபயோகப்படாது. கண்களுக்குக் குளிர்ச்சியாயிருப்பதற்காகப் போட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிப்பார்த்தார்.
இதைக் கேளாது ராயர் அதைக் கொடுக்கும்படி வற்புறுத்த, “சரி, ஆனால் உங்கள் இஷ்டம்” என்று சொல்லிக் கழற்றிக்கொடுத்தார்.ராயர் அதை தன் மூக்கில் போட்டுக்கொண்டு பார்த்து படிக்கத்தெரியாதவராய், கழற்றிக் கொடுக்கும்பொழுது அஜாக்கிரதையினாலோ, சாலேசரத்தினாலோ, கை நழுவி விட, அக்கண்ணாடி கீழே விழுந்து துண்டு துண்டாய் உடைந்து விட்டது. இதைக்கண்டு நமது தீட்சிதர், கோபமடைந்த போதிலும் அதை அடக்கிக்கொண்டு, “ராயரவாள்! தங்கள் பெயர் என்னவோ?” என்று விநயமாய்க் கேட்டார். அதற்கு ராயர், “ஹதுமந்த ராயர்’ என்று பதில் உரைத்தார்.
அதன் பேரில், “தக்கள் தாய் தந்தையர்கள் ஜிவந்தர்களாயிருக்கிறார்களோ?” என்று வினவ, ராயர் “இல்லை காலமாய் விட்டனர்; ” என்று விடை பகர்ந்தார். உடனே நமது தீட்சிதர் ரெயில் பிளாட்பாரத்தில், தெற்கு முகமாய்த் திரும்பி மேல் உத்தரீயத்தை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு, மூன்று முறை சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தார். அங்கிருந்தவர்களெல்லாம், ‘இதென்ன ஆச்சரியம்?’ என்று கும்பல் கூடினர்.
அவர்களுள் ஒருவர், “தீட்சிதரே! இதென்ன இப்படி நமஸ்காரம் செய்கிறீர்களே? யாருக்குச் செய்கிறீர்கள் ? ” என்று கேட்க, தீட்சிதர், ‘இதோ ஹனுமந்த ராயர் இருக்கிறாரே, இவருடைய காலஞ்சென்ற தாய் தந்தையர்களுக்கு! அவர்கள் எவ்வளவு புத்தி சாலித்தனாள் இவர் பிறந்தவுடனே இவருடைய சுபாவத்தை அறிந்து ஓருருமந்தராயர் என்று பெயர் கொடுத்தனர்!
இந்த சூட்சுமம் தெரியாதபடியால்,என் மூக்குக் கண்ணாடி போயிற்று. இதைமுன்பே அறிந்திருந்தால், எனக்கு மூக்குக் கண்ணாடி நஷ்டமாயிராதே? ஆயினும், எல்லோரும் ஜாக்கர தையாயிருங்கள் என்று இவருக்கு இப்பெயர்வைத்த இவருடைய தாய் தந்தையரின் புத்தி சாதுர்யமே சாதுர்யம்! அவர்களுக்கு நான் நமஸ்காரம் செய்ய வேண்டாமா?” என்று பதில் உரைத்தார். அங்கிருந்தவர் களுள் ராயர் உள்பட நகைக்காதவர்கள் ஒருவருமில்லை.



