
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
இருபத்தைந்தாவது கதை
ஒரு முறை கும்பகோணம் முனிசிபல் கவுன்சிலில் அருகிலுள்ள ஸ்மசானத்தை வேறொரு இடத்திற்கு மாற்றவேண்டுமென்கிற விஷயம் மும்மரமாய் வாதிக்கப்பட்டது. ஒரு கட்சிக்காரர் அதை பட்டணத்திற்கு இரண்டு மயில் தூரத்திலுள்ள ஓர் இடத்திற்கு மாற்ற வேண்டுமென்று வாதித்தனர்; மற்றொரு கட்சிக்காரர் இருந்த விடத்திலேயே இருக்கவேண்டும். அதை மாற்றலாகாது, என்று மன்றாடினர். கும்பகோணவாசிகளில் பெரும்பாலார் இருந்த விடத்தை விட்டு மாற்றக் கூடாதென்னும் அபிப்பிராய முடைய வராயிருந்தனர்;
ஆயினும் கவுன்சிலில், மெம்பர்களாயிருந்த இரண்டு மகம்மதியர்களும் ஒரு ஆங்கில துரையும், மாற்றவேண்டுமென்கிற கட்சியைச் சார்ந்தபடியால் மாற்றவேண்டுமென்னும் அபிப்பிராய முடையவர்கள் பக்கம் தான் ஜெயமாகும்போலிருந்தது.
அதன் பேரில் கும்பகோணவாசிகளெல்லாம் ஒரு பெருங் கூட்டம் போட்டு, அநேக வருஷகாலமாய் ஓரிடத்தில் இருந்த ஸ்மசானத்தை மாற்றக்கூடாதென்று ஆட்சேபிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அதற்கு எதிர்கட்சிக் காரர்களையும் வரவழைத்து அவர்களுடைய நியாயங்களையும் கேட்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அக்கூட்டத்திற்கு நமது தீட்சிதரை வரும்படி மாற்றக்கூடாதென் னும் கட்சிக்காரர்கள் கேட்டுக் கொண்டனர். நமது தீட்சிதரும் ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார். ஒருநாள் பெருங் கூட்ட மொன்று கூடப்பட்டது. ஏராளமாக இரு கட்சிக்காகவும் ஜனங்கள் வந்து சேர்ந்திருந்தனர்.
அக்கிராசனாதிபதியாக ஒரு பெரிய மனிதர் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் கலகம் ஒன்று மில்லாதபடிக்கு, முன்பு மாற்றக்கூடாது என்னும் கட்சியின் சார்பாக மூன்று பெயர் பேசு வேண்டுமென்றும், பிறகு மாற்றவேண்டும் என்னும் கட்சியின் சார்பாக மூன்று பெயர் பேசவேண்டுமென்றும் தீர்மானித்து, கடைசியில் தான் இரண்டு பக்கத்தினுடைய பலா பலன்களைப் பற்றி பேசிய பின்னர், வந்திருந்த பொது ஜனங்கள் ஓட் (Vote) எடுக்க வேண்டுமென்று தீர்மானித்தார். அதன் பேரில், மாற்றக் கூடாதென்னும் கட்சிக்காரர்கள் இருவர் பேசிய பிறகு, மூன்றாவதாக நம்முடைய தீட்சிதரைப் பேசும்படி கேட்டார். நமது தீட்சிதர் அடியிற்கண்டவாறு பேசினார்.
“அக்கிராசனாதிபதியவர்களே, சபையோரே! நான் எடுத்துப் பேசவேண்டுமென்று வைத்திருந்த நியாங்களையெல்லாம் எனக்கு முன்பாகப் பேசிய இரண்டு பெரிய மனிதர்கள் பேசி விட்டார்கள். ஆகவே உங்கள் சாவகாசத்தை நான் எடுத்துக்கொள்ள எனக்கிஷ்டமில்லை. ஆயினும், இனி எதிர்கட்சியில் பேசவேண்டியவர்கள் மூன்று பெயர்கள் இருக்கிறார்கள், செட்டியார் ஒருவர், சாய்பு ஒருவர், தபால் ஆபீஸ் உத்தியோகஸ்தர் வெள்ளைக்காரர் ஒருவர், அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதற்கு உத்தரவளிக்க வேண்டும்” என்றார்.
அதன் மீது அக்கிராசனாதிபதியும் அம்மூவர்களும் அதற்கு உடன் படவே, செட்டியாரை மேடையின் மீது வரச் சொல்லி, தன் ஜேபியிலிருந்து நான்குவிதமான, மிளகாய் வற்றல்களை மேடையின் மீது வைத்து “செட்டியார் அவர்களே, இந்த நான்கு தினுசு மிளகாய் களில் எது முதல் தரமானது என்று தயவுசெய்து சொல்லுங்கள்?” என்று கேட்க, செட்டியார் அவைகளைப் பார்த்து இதுதான் முதல் தரமானது என்று ஒரு தினுசைக் காண்பித்தார்.
பிறகு சாயபு அவர்களை வரவழைத்து, அவரிடம் நான்கு தினுசு தோல்களைக் கொடுத்து அவற்றுள் முதல்தரமானதை பொறுக்கி எடுக்கச் சொன் னார். சாயபும் அவைகளை ஆராய்ந்து பார்த்து ஒன்று முதல் தரமானது என்று குறிப்பித்தார். இதற்குள் வந்திருந்த ஜனங்களுள் மிகுந்த புத்திகூர்மையுடைய சிலர் நகைக்கடை ஆரம்பித்தனர்.
கடைசியாக போஸ்டு ஆபீசு துரையவர்களை வரவழைத்து “ஐயா துரையவர் களே, உங்கள் ஆபீசில் எவ்வளவு பளுவான வஸ்துவானாலும் போஸ்ட் ஸ்டாம் ஒட்டிப் போட்டால் உடனே மேல்விலாசப்படி சேர்த்து விடுவீர்களல்லவா, எவ்வளதூர மாயிருந்தாலும் ?” என்று கேட்க அவரும் நமது தீட்சிதர் சூதையறியாது “எஸ்” (yes) என்று ஒப்புக்கொண்டார்.
உடனே நமது நீட்சிதர் “மஹா ஜனங்களே! நான் உங்களுக்குச் சொல்லவேண்டியது வேறொன்றுமில்லை! மிளகாய் முதலிய பல சரக்குகளைப்பற்றி உங்களுக்கு அபிப்பிராயம் வேண்டுமானால், நமது மளிகைச் செட்டியாரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்; அதில் அவர் மிகவும் தேர்ச்சி பெற்றவர்; தோல் வியாபாரத்தில் மிகவும் கெட்டிக்காரரான சாய்பு அவர்களிடமிருந்து தோல்களைப்பற்றி ஏதாவது தெரியவேண்டுமானால் கேட்டுக்கொள்ளுங்கள்.
முனிசிபல் விஷயங்களைப்பற்றி அவர்களைக் கேட்பதில் என்ன பிரயோஜனம்?-அன்றியும் கும்பகோணத்தில் யாராவது இறந்து போனால் இங்கிருந்து இரண்டு மயிலுக்கப்பால் வைக்க எண்ணி யிருக்கிற ஸ்மாசானத்திற்கு அதைத் தூக்கிக் கொண்டு போவதைவிட, அதற்குரிய பொஸ்ட் ஸ்டாம்புகளை அந்த பிணத்தின் நெற்றியிலோ முதுகிலோ ஒட்டி தபாலாபீசில் சேர்த்து விட்டால் நம்முடைய தபாலாபீஸ் துரையவர்கள் அந்த ஸ்மசானத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்!” என்று கூறி முடித்தார்.
உடனே அங்கிருந்த ஜனங்கள் சிரித்த சிரிப்பினால் அருகிலுள்ள ஆலமரத்து இலைகளெல்லாம் உதிர்ந்து போயிற்று என்று சொல்லுகிறார்கள்; அது எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரியாது, இதுமாத்திரம் உண்மையென எனக்குத் தெரியும். ஸ்மசானத்தின் இடத்தை மாற்றுகிற விஷயம் முனிசிபல் கவுன்சிலில் வந்த பொழுது எல்லோரும் ஒரு மிக்க மாற்றக்கூடாது என்று தீர்மானித்தார்கள்.



