
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
ஐந்தாவது கதை
ஒரு நாள் இரவு நமது தீட்சிதர் வீட்டில் ஒரு திருடன் வந்து வாயிலின் ஓர் மூலையிலிருந்த இருட்டறையில் ஒளிந்திருந்தான். இரவு போஜனம் அருந்திவிட்டு, கை கழுவும்படியாக அங்கு வந்த நமது தீட்சிதர் அவனிருப்பதைத் தெரிந்து கொண்டார். அச் சமயம் வீட்டிலிருந்த வேலையாட்களெல்லோரும் கும்பேஸ்வர ஸ்வாமி கோயில் உற்சவம் பார்க்க வெளியிற் போயிருந்தனர். அவரும் அவர் மனைவியும் மாத்திரம் வீட்டிலிருந்த சமயம். நமது தீட்சிதர் திருடனைக் கண்டு கொள்ளாதவர் போலிருந்து, அங்கு வைத்திருந்த கங்காளத்திலிருந்த ஜலத்தை, சொப்பில் மொண்டு, வாயலம்புவது போல் கொப்பளித்து அறையின் பக்கமிருந்த திருடன் மீது வேகமாய் உமிழ ஆரம்பித்தார்.
இப்படி சொம்பு சொம்பாக ஜலத்தை மொண்டு அவன் மீது உமிழ்ந்து கொண்டிருக்க, உள்வையறியாத அவரது மனைவி, இதென்ன இப்படி கங்காளத்திலிருக்கும் ஜலத்தையெல்லாம் வீணாக உமிழ்கிறீரே என்று, அவரிடம் வந்து வினவ, அவள் மீதும் ஒருவாய் ஜலத்தை உமிழ்ந்தார். அதன்பேரில் அந்த அம்மாள் ஏதோ தீட்சிதாவர்களுக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது என்றெண்ணி, வெளியிற் போய் கூக்குரலிட, அக்கம் பக்கத்திலிருந்தவர்களெல்லாரும் ஓடி வந்தனர்.
வந்தவர்கள் மறுபடியும் முன் சொன்னபடியே உமிழ்ந்து கொண்டிருந்த தீட்சிதரைப் பார்த்து, ‘இதென்ன பரித்தியம்?’ என்று வினவ, நமது தீட்சிதர் அவர்கள், “வேறொன்றுமில்லை; என் மனைவியின் மனதைப் பரீட்சித்துப் பார்த்தேன். பதினாயிரம் ரூபாய் செலவழித்து நான் இவளைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு வாய் நீரை உமிழ்ந்தால் இதற்காகக் கோபிக்க லாமா? இதோ பாருங்கள்; இந்த இருட்டறையில் யாரோ பெரிய மனிதர் ஒருவர் வந்திருக்கிறார். அவரை எனக்கு முன்பின் தெரியாது.
பாவம், இந்த கங்காளத்திலிருந்த ஜலத்தையெல்லாம் அவர் மேல் நான் உமிழ்ந்தும் அவர் பொறுத்துக் கொண்டிருக்கிறார். இவள் ஒருவாய் ஜலத்தை பொறுக்கலாகாதா?” என்று சொல்ல, வந்திருந்தவர்களெல்லாரும், தீட்சிதர் உளவையறிந்தவர்களாய் நகைத்துவிட்டு இருட்டறைக்குட்போய், அங்கிருந்து திருடனைப் பிடித்துக் கொண்டு வெளியில் வர, அவனைப் பார்த்து நமது தீட்சிதர், “கறுப்பு சொக்காய் போட்டுக் கொண்டிருக்கிறான் பாபம்! அப்படியே அதெல்லாம் நனைந்து விட்டதே! அப்பா, இனிமேல் இங்கு வருவதானால் சொக்காய் போட்டுக்கொண்டு வராதே! தெரியுமா? ஐயா, இவனைப் போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போகும் போது, மகாமஹக் குளத்தின் வழியாகக் கொண்டு போங்கள். அங்கே ஸ்நானம் செய்து விட்டுப் போகட்டும்! பாபம்!” என்று சொல்லி யனுப்பினார்.



