தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

பதினான்காவது கதை

ஒரு சமயம் தஞ்சாவூர் ஜில்லாவில் ரெயில் பாதையில் ஒரு புதிய ஸ்டேஷன் ஏற்படுத்தினார்கள். அதற்கு ஒருவரை ஸ்டேஷன் மாஸ்டராக ஏற்படுத்தினார்கள். புதிதாய் ஏற்படுத்தப்பட்ட ஸ்டேஷனாகையால், ஸ்டேஷன் மாஸ்டர் தான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இப்படிப்பட்ட ஸ்டேஷன்களுக்குக் கொடி ஸ்டேஷன் என்று பெயர்; அதற்குத் காரணம் யாராவது அந்த ஸ்டேஷனில் ஏறுவதென்றாலும் இறங்குவ தென்றாலும், கொடியைக் காட்டி, வண்டித் தொடரை நிறுத்த வேண்டும்.

புதிய ஸ்டேஷன் மாஸ்டர், மேற்சொன்னபடிக் கொடியைக் காட்டி ரெயிலை நிறுத்தினார்; ஒருவரும் வண்டியில் ஏறவுமில்லை, இறங்கவுமில்லை. அச்சமயம் ரெயிலில் பிரயாணம் செய்துகொண்டிருந்த நம்முடைய தீட்சதர், ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, “என் வண்டியை நிறுத்தினீர்கள்” என்று கேட்க, அவர் வருத்தத்துடன், மேற்குறித்த வழக்கத்தைச் சொல்லி, “யாராவது ஏறவாவது இறங்கவாவது செய்வார்களா என்று ரெயிலை நிறுத்திப் பார்த்தேன். ஒருவரையும் காணோம்!” என்று சொன்னார் உடனே தீட்சிதர் தான் ரெயிலிலிருந்து இறங்கி, ஸ்டேஷன் மாஸ்டரைத் தானிருந்த வண்டிக்குள் ஏறச்சொன்னார்.

அவரும் ஏறினார். உடனே இறங்கச் சொன்னார். அவரும் இறங்கினார், இம்மாதிரி ஐந்தாறு முறை ஏறி இறங்கச் சொல்ல, ஸ்டேஷன் மாஸ்டர் சலித் துப்போனவராய், “எனையா இப்படி என்னை ஏறி இறங்கச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்க, நமது தீட்சிதர் “என்னையா ஸ்டேஷன் மாஸ்டர்! இது தெரியவில்லையா? மாதக்கடைசியில் உங்கள் அதிகாரிகளுக்கு இந்த ஸ்டேஷனைப்பற்றி அறிக்கை செய்து கொள்ளும் பொழுது, இந்த ஸ்டேஷனில், இம்மாதம் அநேகம் பெயர், இரண்டாவது வகுப்பில் ஏறி இறங்கி யிருக்கிறார்கள் என்று பொய் பேசாமல் உண்மையாய் நீங்கள் தெரிவிக்கலாமே!” என்று பதில் உரைத்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *