தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

இருபத்தொன்றாவது கதை

கும்பகோணத்தின் பக்கத்தில் கொட்டையூர் என்னும் ஓர் கிராமம் உண்டு. அவ்விடத்தில் நமது தீட்சிதருடைய சிநேகிதர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் ஆ. பாதவராயர், ஆனால் ஆமவடை ராயர் என்று தீட்சிதர் அவருக்குக் காரணப் பெயர் வைத்திருந்தனர். அதற்குக் காரணம் இதை வாசிப்பவர்களுக்கு எழுதாமலே தெரியலாம்; அந்த ராயருக்கு ஆமவடையின் மீது அவ்வளவு பிரியம்.

சிறுவயது முதல் அந்தப் பட்சணத்தை அதிகமாய்ப் புசித்துப் புசித்து, மிகுந்த ஸ்தூல சரீரமுடையவரானார். அவருடைய இடுப்பிற்கு பெல்ட் வாங்க வேண்டுமென்றால், சாதாரணமாகக் கடைகளில் கிடைக்களது; சொல்லித்தான் புதியதாய்ச் செய்ய வேண்டும். இந்த ராயர் அதிகத் திண்டியினால், தேகம் அதிக ஸ்தூலமாகியம், திண்டியை குறைத்தவரன்று. இவருக் கெப்படியாவது ஒரு முறை புத்தி வரும்படிச் செய்ய வேண்டு மென்று கருத்தினவராய் தீட்சிதர் ஒரு சமயம் தன் வீட்டில் தன் குமாரனுக்கு ஆண்டு நிறைவு வந்த சமயம், தனது நண்பர்களை யெல்லாம் விருந்திற்கு அழைத்தார். மற்றவர்களுடன் ராயர் அவர்களும் கொட்டையூரிலிருந்த அவருக்கென்று செய்யப்பட்ட இரட்டை இருசு வண்டியிலேறி, கும்பகோணத்தில் தீட்சிதர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

காலையில் ஆயுஷ் ஹோமம் நடக்கும் பொழுதே, தனது விருந்தாளிகளிடமெல்லாம் ஆமவடை செய்வதில் கைதேர்ந்த சென்னபட்டணத்து சுயம்பாகி ஒருவனை வர வழைத்திருப்பதாயும், அந்தப்பட்சணம் செய்வதில் அவனுக்கு மேம்பட்டவர்கள் சென்னை ராஜதானியிலேயே இல்லையென்றும் தெரிவித்தார். இதைக் கேட்கக் கேட்க ராயர் அவர்களுக்கு நாவில் ஜலம் ஊற ஆரம்பித்து விட்டது. சாப்பாட்டிற்கு இலை போட இன்னும் ஒருமணி சாவகாசம் இருக்கும் பொழுது தீட்சிதர், ராயர் மற்றுமுள்ள சிநேகிதர்கள் எல்லாரும் உட்கார்ந்து வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நமது தீட்சிதர் உரக்க தன் வேலையாளைக் கூப்பிட்டு, “அடே நேற்று வயித்தியர் கொண்டுவந்து கொடுத்தாரே அந்த மாத்திரை புட்டியைக் கொண்டுவா” என்று உத்திரவு செய்தார்.

வேலைக்காரனும் மாத்திரை நிறைந்த ஒரு புட்டியைக் கொண்டுவந்து கொடுக்க, அதிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து வாயிற் போட்டுக் கொண்டு கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டு அதை விழுங்கி விட்டார். வந்திருந்த சிநேகிதர்கள் அது என்ன மாத்திரை என்று வினவ, ‘இதில் ஒரு மாத்திரை சாப்பிட்டால் அதன் பிறகு எவ்வளவு உணவை வேண்டுமென்றாலும் புசித்து ஜீரணித்து விடலாம்’ என்று பதில் உரைத்தார். அதன்பேரில் அங்கிருந்த போஜனப் பிரியர்கள் ஆளுக்கொரு மாத்திரை வாங்கிச் சாப்பிட்டார்கள்.

நம்முடைய ராயர், விருந்தில் ஆமவடைகளை அதிகமாய்ச் சாப்பிடவேண்டு மென்னும் அவாவினால் தனக்கு இரண்டு மாத்திரை கொடுக்கும்படி வேண்டினர். “உங்களுக்கு இரண்டு மாத்திரை கொடுத்தால் என்னால் உங்களுக்கு சாப்பாடு போட்டு முடியாது, வேண்டுமென்றால், இருக்கும் மாத்திரைகளுக்குள் பெரியதாயிருப்பதைக் கொடுக்கிறேன்” என்று சொல்லி இவருக்குக் கொடுக்கவென்று முன்னதாகவே ஏற்பாடு செய்து அப்புட்டியில் வைத்திருந்த ஒரு பெரிய நேர்வாள மாத்திரையைக் கொடுத்தார், ராயரும் இச்சூதினை அறியாது அதை வாங்கி விழுங்கிவிட்டார்.

ஒரு மணி நேரத்திற்கெல்லாம் அந்த நேர்வாள மாத்திரை தன் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்து விட் டது. சாப்பாட்டிற்கு இலை போடுவதற்குள், ஐந்தாறு முறை ராயர் அவர்கள் புறக்கடைக்குப் போகவேண்டி வந்து விட்டது. பந்தி போஜனத்திற்கு மற்றவர்களெல்லாம் கை கழுவிக் கொண்டு உட்காரப் போனபோது ராயர் அவர்கள், பேதியினால் களைத்துப் போய் ஒரு அறையில் படுத்துவிட்டார்.

இதை அறிந்த நமது தீட்சிதர், ஒன்றும் தெரியாதவர் போல் அவரிடம் சென்று, “ஏன், ராயரே, சாப்பிட வரவில்லையோ? அந்த சுயம்பாகி அந்த ஆமவடையை என்ன சொகுசாகப் பண்ணியிருக்கிறான் தெரியுமோ? கொஞ்சம் மாதிரி பார்த்தேன், அடடா! இதுவரையில் என் ஜன்மத்தில் அதை போலச் சாப்பிட்டதேயில்லை, இனிமேல் சாப்பிடப் போகிறது மில்லை யென்று நினைக்கிறேன். வாருங்கள் ராயரவாள் ஜமாய்த்து விடலாம்! எழுந்திருங்கள்!” என்று தட்டி எழுப்பினார்.

“ராயர் என்ன செய்வார் பாபம்!” தீட்சிதரவாள் என்னைக் கொஞ்சம் மன்னிக்கவேண்டும்! இன்று நான் அந்த ஆமவடைகளைச் சாப்பிடும் பாக்கியம் கிட்டவில்லை; ஏதோ அஜீர்ணமாயிருக்கிறது. எனக்கு மிகவும் களைப்பாயிருக்கிறது. என்னை என் வண்டியிற் போட்டு என் ஊருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள். இன்னொரு முறை வந்து உங்கள் வீட்டில் விருந்து சாப்பிடுகிறேன்!” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு தன் வீடுபோய்ச் சேர்ந்தார். அவர் உடம்பு சுவஸ்தமாக மூன்று தினங்கள் பிடித்தது.

அதுவரையில் அவர் பட்டினி கிடக்க வேண்டி வந்தது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *