
மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
5. மனித பலம்
கண்ணாடிப் பரப்பை உடைத்துத் தூள் தூளாக்கி வெறித்தனமாக அள்ளித் தூவுவது போல் வெண்நுரை நுண் துளிகளைச் சிதறி, சடார் சடாரென மோதிப் புரண்டு கொண்டிருந்தன அலைகள். பசுமை நிற நீர்ப்பரப்பின் மீது விம்மல்கள் எழும். அவை உருண்டு திரண்டு உயர்ந்து தலை கூட்டும், படமெடுத்து எவ்வுகின்ற சர்ப்பம் போல. நீர்ச்சுவரென எழுகின்ற பகுதி முன்கவிந்து உள்வாங்கி, திடுமென ஆர்த்து வீழும், மலையருவி போலே. நுரை அள்ளித் தெளித்து முன் பாய்ந்து கரையிலே மோதித் திரும்புகிற இறங்கு அலையோடு முட்டி ஒலி எழுப்பி தேங்காய்ப்பூ போன்ற உதிரித்துளிகளை விட்டெறியும்,
இப்படி நீரம்மானை ஆடிக்கொண்டிருந்த நெடுங்கடல் மீது வெறும் கட்டைகளையும், காற்றைத் தாங்கிச் சமாளிக்கவும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளவும் பயன்படுகிற ஒரு பாய் துணியையும் துடுப்புகளையும், தங்கள் கை பலத்தையும் நம்பி வேட்டையாடித் திரியும் மீனவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். கரை திரும்பும் கட்டு மரங்கள் கடல்பரப்பு நெடுகிலும் அங்குமிங்குமாகச் சிதறி மிதந்தன. கரையிலிருந்து கவனிப்பவர்களுக்கு, தூரத்தில் உள்ள மரக்கலங்கள் சிறிதும் பெரிதுமான விசித்திரப் பறவைகள் போல் காட்சி அளித்தன.
கரையை நெருங்கியதும் கட்டுமரங்களில் இருந்தவர்கள் பாயை அவிழ்த்துச் சுருட்டிக் கலத்தோடு கட்டிவிட்டு, சாடுகிற அலைகளைச் சமாளிக்கத் துடுப்பு வலித்தும், இழுத்துச் செல்லும் அலையோடு இழுபட்டும் ஏற்றுகின்ற அலையின் உதவியால் முன்னேறியும் போராடிக் கொண்டிருந்தார்கள்.
அன்று கரையோரத்தில் அலைகளின் ஆவேசம் கொஞ்சம் அதிகமாகத்தானிருந்தது. குதித்தாடுகிற பேரலைகள் சில ஒன்றிரண்டு கட்டு மரங்களைப் பந்தாடிக் கவிழ்த்து விட்டு வெறிமகிழ்வோடு பெருநீரிலே கலந்து புரண்டன.
அவ்வேளைகளில் நழுவி, கடலில் விழுந்து விடுகிற மனிதர்கள் நீந்தி, கட்டைகளைப் பற்றிக் கொள்வதுடன் அவற்றைத் திருப்பி மிதக்க விடவும் பாடுபட வேண்டி யிருந்தது. கடலின் மடியிலே தவழ்ந்து விளையாடும் அவர்களுக்கு இது கூடச் சிறு விளையாட்டுதான்.
கட்டு மரங்களில் ஒன்று கரையை அணுகிக் கொண்டிருந்தது. அதில் இருந்தவர்கள் இரண்டு பேர். வேகமாக முன்னேறுவதற்காக முழு பலத்தோடும் துடுப்புகளினால் நீரைக் கிழித்து ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள்.
மிடுக்கு மிகுந்த ஒய்யாரி போல் முன்வந்து பூவிளிம்புப் பாவாடையைச் சுழற்றி வீசித் தனி நாட்டியம் பயின்று, குறும்புக்காரச் சிறுமி போல் குதித்து ஓடியது பேரலை ஒன்று. திரும்பிச் சென்ற அலை எவ்விப் பொங்கிய அலை ஒன்றோடு மோதியது. ஒலி எழுந்தது. வெண் ஒளித் துளிகள் தெறித்தன.
அலையோடு மேலெழுந்தது கட்டுமரம். தாழ்ந்தது. உடனடியாகச சுழன்று கவிழ்ந்துவிட்டது. தண்ணீரில் தள்ளுண்டார்கள் இரண்டு பேரும்.
நீரில் மூழ்கி எழுந்தார்கள். கை கால்களை அடித்துக் கட்டையை அணுகினார்கள். திமிங்கிலம் போல் மிதந்த கட்டைகளின் தொகுப்பு மீது கை வீசினான் ஒருவன். அதன் மீது படுத்து, இரு கைகளாலும் அதைத் திருப்பிக் கவிழ்த்து நேராக்க முயன்றான். மற்றவனும் ஒரு முனையைப் பற்றினான். சற்றே புரண்டது. மரம் உருண்டது. அவர்கள் இருவரும் மீண்டும் நீரில் விழுந்து தத்தளித்தார்கள்.
பொங்கி எழுந்த அலையொன்று அவர்களை உயர்த்தித் தாழ்த்தியது. எதிரே வந்து சுழியிட்ட சிற்றலை அவர் களைக் குளிப்பாட்டியது.
அவர்கள் தலை உயர்த்தி தண்ணீர் சிதறும்படி ஆட்டி உலுப்பிக்கொண்டு, கவிழ்ந்த கட்டுமரத்தின் மீது கை வீசினார்கள்.
அவர்களில் ஒருவன் ‘ஓ!’ என்று அலறினான். வேகமாய் காலை ஓங்கி நீரில் உதைத்தான். மற்றவன் பார்த்தான். ‘சுறா…சுறா வருது, நாகா!’ என்று கத்தினான். அலறியவன்.
‘சீக்கிரம் கட்டையை கவுரு’ என்று அம்முயற்சியில் ஈடுபட்டான் அவன். ஜலேந்திரன், கைகளால் கட்டு மரத்தை நிமிர்த்த முயன்றவாறே, கால்களால் ஓங்கி ஓங்கி நீரை அடித்து ஓசைப்படுத்திக் கொண்டிருந்தான் தொடர்ந்து.
வெள்ளி வளைவுபோல் பாய்ந்தது சுறா, மின்னல் கீற்று போல் நெளிந்து புரண்டது. ஒளிக்கோடு போல் நீரை ஊடுருவித் தாவியது. அலைத்துளிகளில் மூழ்கிக் களித்தது. அலையோடு அலையாகி எவ்வித் துள்ளியது. வாலடித்து உற்சாகமாய் அணுகியது. நீரிலே கிடக்கும் மனித உருவம் தனக்கே உரிய இரைச்சி என்று மதித்து விட்டதுபோல, அம்மானை ஆடிய கடலிலே அல்லாடும் மனிதர்களில் ஒருவனோடு ‘கண்ணாமூச்சி’ விளையாட விரும்பியதுபோல் அது நெருங்கியும் விலகியும், தொட்டும் விட்டும் ஒட்டியும் ஓடியும், துள்ளிக் கும்மாளியிட்டது. கூரிய பற்கள் காட்டிச் சிரித்தது கூற்றத் திருஉரு!
அவர்கள் இதயம் திக்திக்கென்று அடித்தது. அவர்கள் பரபரப்போடு கட்டுமரத்தைச் சரிப்படுத்த முயன்றார்கள். நாகன் நழுவி நழுவி விழுந்தான். ஜலேந்திரன் சுறாவை வெருட்டி ஓட்டப்பாடு பட்டான்.
இருவர் முயற்சியாலும் கட்டுமரம் நேராக நிமிர்ந்தது. நாகன் பாய்ந்து ஏறினான் அதன்மேலே. தண்ணீரில், மிதந்த துடுப்புகளை எடுத்து, ஒன்றை கட்டை யில் வைத்துவிட்டு மற்றதைப் பலமாகப் பற்றினான் – சுறா அருகில் வரும்,வீசி அடிக்கலாம் என்ற எண்ணத்தோடு.
கட்டையில் கைகளைப் பதித்து, கால்களை நீரிலே வீசி வீசி நீந்திக்கொண்டிருந்த ஜலேந்திரன் கத்தினான். ‘நாகா, நீ கட்டுமரத்தைக் கவனி: கரைசேர வேண்டியதைச் செய். நான் இதைக் கவனித்துக் கொள்கிறேன்.’
சுறாமீன் வால் சுழற்றிப் பாய்ந்து வந்தது. அவனைக் கவ்விப் பிடித்து இழுப்பதற்காக வாய் பிளந்து வந்தது, எதிரே காத்து நின்ற மாமிசத்தின் ரத்த வாடை மனித சருமத்தையும் ஊடுருவி அதன் புவன்களைத் தாக்கி அதற்கு பசி உணர்வும் ஆசைத்தீயும் உண்டாக்கி இருக்குமோ என்னவோ! அதன் இயக்கத்தில் வேகம் சேர்ந்தது.
தனது தேகத்துச் சதையிலே பதிந்துகிழிக்கத் தயாராய் வருகிற கூறிய கத்தி முனைகள் போன்ற பல்வரிசை ஜலேந்திரனை நடுக்கியது ஒரு கணம். நாகன் தன் கைத் துடுப்பை ஓங்கி அறைந்தான்.
அந்த அடி ஜலத்தின் மீதுதான் பட்டது. நீர் கிழிந்து அம்புபோல் பாய்ந்து விலகிவிட்டது சுறா.
கரை நோக்கி வந்த அலை ஒன்று உயர்ந்து தாழ்ந்தது. அத்துடன் எழுந்து விழுந்தனர் அவர்களும். கட்டுமரம் கொஞ்சம் முன்னேறியது.
ஆனால் கைப்பிடி நழுவித் தண்ணீரில் விழுந்து விட்டான் ஜலேந்திரன். அவனுடன் உறவு கொண்டாடத் துடிப்பது போல் நெருங்கி வந்தது சுறா. கொடிய சக்தியின் வலிய உயிர்ப்பு போல வந்தது அது.
அவன் மனிதன். தரையில் வாழும் பிராணியான அவன் தனக்கு மாறுப்பட்ட சூழ்நிலையில் பிழைப்புக்காக மிதந்து வாழ முயல்பவன். இப்போதுதானே தனது பலமே தனக்குத் துணையாக, தற்காப்புக் கருவியாகத் திகழ, உயிருக்காகப் போராட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருந்தது. ஒவ்வொரு ஜீவனின் இயல்பான உயிராசை அவனுள்ளும் ரத்தத்தோடு ரத்தமாக ஓடிக் கொண்டிருந்தது; ஒவ்வொரு நரம்பிலும் உறைந்து கிடந்தது. அது அவனுக்கு அசாத்தியமான பலத்தைக் கொடுத்தது.
அவன் நீரில் அமிழ்ந்து விடாமலிருக்கப் போராடினான். அவனை அமுக்கிவிட முயல்வன போல் சீறிச் சாடிய அலைகளைச் சமாளிக்கும் வேளையிலேயே, அவனது உடலைக் கடித்துக் குதறிவிடும் துடிப்போடு அப்படியும் இப்படியும் புரண்டு தவித்த சுறாமீனின் பிடியிலே சிக்காமலிருக்கவும் போராடிக் கொண்டிருந்தான்.
நாகன் கட்டுமரத்தை அவனுக்கு மிகவும் சமீபத்தில் கொண்டு வரத் துடிப்பு வலித்தான். வெறிகொண்ட மிருகம் போல் பாய்ந்து வந்த அலை ஒன்று அதை இழுத்துக் கொண்டு கரை நோக்கி முன்னேறியது.
முன்னேறி நீந்தக் கைகளை வீசிப் பாய்ந்தான் ஜலேந்திரன். சுறாவின் வாயில் அகப்படாதிருக்கக் கைகளையும் கால்களையும் ஓங்கி ஓங்கி நீரில் அடித்தபடி சுற்றியும் திரும்பியும் முன்னுக்குப் பாய்ந்தும் மிதந்தான்.
தனது பிடியில் அகப்படுவது போலிருப்பினும் சிக்காது ஏய்ப்புக் காட்டிக் காட்டி விலகிவிடுகிற வேட்டைப்பொருள் வேட்டையாடுகிற சக்திக்கு ஆங்காரமும் ஆத்திரமும் தருவது இயல்புதானே! சுறாமீனுக்கும் ஆவேசம் ஏற்பட் டதுபோல் தோன்றியது. வெகுண்டு துள்ளி வேகமாகப் பாய்ந்தது அவனை நோக்கி.
துரித கதியிலே முன்னேற முயன்றான் அவன் கரை அதோ வந்து விட்டது. இன்னும் கொஞ்ச தூரம்தான். அவன் நம்பிக்கையோடு நீந்தினான்.
நாகன் கூச்சலிட்டும் துடுப்பைத் தண்ணீரில் அறைந்து ஒலியெழுப்பியும் சுறாவை மிரட்டி ஓட்டுவதற்குத் தீவிரமாக முயன்றான். இந்தச் சலசலப்புக் கெல்லாம் அது பயந்து விடுமா என்ன!
சுறா ஜலேந்திரனைத் தொட நெருங்கிவிட்டது. ஒரு பாய்ச்சல், ஒரே கவ்வு! அவன் கால் போயே போய்விடும். அல்லது அவனே தண்ணீருக்குள் இழுப்புண்டு போனாலும் போகலாம்.
தப்பிப் பிழைக்க வேண்டும் என்ற உணர்வு அவனுக்கு அதிகத்தெம்பு கொடுத்தது. அவன் சடாரென்று திரும்பினான் சுறாவின் மூஞ்சியை நோக்கிக் கையினால் ஒரு குத்து விட்டான். அது சற்றே பின்வாங்கியது.
அவன் வேகமாக நீந்திக் கட்டுமரத்தில் தொத்திக் கொண்டான். அவசரம் அவசரமாகக் கலத்தினுள் ஏறிக் குதிக்க முயன்றான். அம்முயற்சியில், வலது கால் மட்டும் பின் தங்கி நீரில் கிடந்தது. அதையும் உள்ளே இழுக்க உயர்த்தினான்.
அதற்குள் சுறா வேகமாக வந்து வாய்பிளந்து தாக்கியது. நாகன் துடுப்பினால் ஓங்கி அடித்தான். வாலடித்து திரும்பியது அது.
அது ஓடிய வழியெல்லாம் புகைச் சுழல்போல் ரத்தம் நீரில் கலந்து கரைந்து கொண்டிருந்தது. கட்டுமரத்தின் அருகில் ரத்தம் நிறையவே படிந்திருந்தது.
ஜலேந்திரன் காலை மேலே இழுத்ததும் விஷயம் புரிந்தது.
செக்கச்செவேரென்று, ரத்தமும் தசையும் ஒரே கோரத் தோற்றமாய்க் காட்சியளித்தன. துண்டுபட்டு விடவில்லை. முழங்காலுக்கு பின்பக்கமுள்ள சதைத் திரட்சியைக் கவ்விக் குதந்து எடுத்துச் சென்றிருந்தது சுறா. அந்த இடத்திலிருந்து ரத்தம் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது.
நாகனும் ஜலேந்திரனும் துணியை வைத்துப் பொதிந்து அந்த இடத்தை மூடிக் கட்டினார்கள். உயிருக்கு வந்த ஆபத்து உடலின் ஒரு பிடிச் சதையோடு போயிற்றே என்ற திருப்தி அவர்களுக்கு.
சாவுடன் போராடத் தெம்பு தந்த பலம் இக்காயத்தைக் குணப்படுத்த உதவும் என்ற நம்பிக்கை ஜலேந்திரனுக்கு இருந்தது. அதனால் கலக்கமோ சோர்வோ கொள்ளளமலிருந்தான் அவன்.
(1950)



