
மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
3. மனிதர்கள்
சுகமான படுக்கையில் சோம்பலோடு உருண்டு புரளும் சொகுசுக்காரிபோல, கடலின் நீர்ப்பரப்பு புரண்டு கொண்டிருந்தது. வீறுகொண்டு பொங்கி எழுந்து வெறியோடு பாய்ந்து நுரை சிதற வீழ்ந்து மடியும் பேரலைகள் இல்லை அந்த இடத்தில். எனினும், கடலின் அசைவுகள் பார்வைக்கு இனிய விம்முதல்களையும் வடிதல்களையும் உருவாக்கி, சிறுசிறு அலைகளை நடனமிடச் செய்து கொண்டிருந்தன.
பெரும் அற்புதமாய், மகத்தான வலிமையின் சித்திர மாய், விரிந்து கிடக்கும் ஆழ்கடலின் மீது, மனித உழைப்பின் – ஆற்றலின் – மாண்பின் சின்னங்களின் ஒன்றே போல், அசையாமல் நின்றது ஒரு கப்பல். வாணிபக் கப்பல்.
கொந்தளிக்கும், குமுறும், அலைமோதும் மா கடலின் மீது, இயற்கையின் வலிய சக்திகள்பேரில், மனிதன் அடைந்துள்ள வெற்றியை நிரூபிக்கும் உருவப் பிரமாணங்களில் ஒன்றாய் எங்கெங்கோ சென்று வந்துள்ள அது, இப்போது மெல்லென ஆடி அசையும் தொட்டிலில் நிம்மதியாய் தூங்கும் குழந்தை போல, அலட்சியமாய், அமைதியாய் நின்று கொண்டிருந்தது.
பெரிய கோட்டை போன்ற அந்த அமைப்பிலிருந்து விலகி விலகி, வசீகரமான ஒரு பறவை மாதிரி, ஒய்யாரமாக நீந்திக் கரை நோக்கி முன்னேறியது ஒரு லாஞ்ச்.
அந்தக் கப்பலை வேடிக்கையாகப் பார்க்க வந்து, பின் கரைக்குத் திரும்பும் குழுவினர், கரையிலிருந்து கப்பலுக்கு முக்கியமாக சில சாமான்களை எடுத்துச் சென்ற உழைப் பாளிகள், லாஞ்சைச் சேர்ந்த சிலர் இப்படி பலதரப்பட்டவர்கள் போனது போல் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு புதிதாகச் சேர்ந்திருந்தார்கள் கப்பலிலேயே வசித்துத் தொழில் புரியும் மாலுமிகள் ஐந்துபேர். ஏதோ புரியாத மொழி பேசும் அயல் நாட்டினர்.
அவர்கள் மற்றவர்களுக்கு விந்தையாய் கண்டு நகையாடுவதற்கு ஏற்ற வேடிக்கை உருவங்களாகத்தான் தோற்றம் அளித்தனர். அவர்களது நிறமும், முக அமைப்பும், பேச்சும் செயல் முறைகளும் பிறரின் பார்வைக்கும் பேச்சுக்கும் ஊக்க மூட்டும் விஷயங்களாக இருந்தன.
மேலே எல்லையற்று விரிந்துகிடந்த வானத்தையும், சுற்றிலும் பரந்து வியாபித்திருந்த கடல் நீரையும், தங்கள் கப்பலின் உட்புறத்தையும், தங்களையும் மாத்திரமே வாரக் கணக்கில் கண்டு கண்டு அலுத்திருந்த அக் கடலோடிகள் மண்ணை மிதித்து, மனிதர்கள் மத்தியில் பழகக் கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்ததனால் உள்ளூற ஊற் றெடுத்துப் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளிலே திளைத்திருந்தார்கள்.
உள்ளத்திலே அரும்பி முகிழ்த்த நுண் உணர்வுகளின் மலர்ச்சி அவர்களது முகத்தில் சிலிர்த்துச் சிரித்தது. கரையையே நோக்கித் தாவிய அவர்களது குறுகலான பழுப்பு நிறக் கண்களில் மின்னலிட்டு ஒளிர்ந்தது. ஒருவனது குவிந்த உதடுகளினூடே இனிய சீட்டியாக ஒலி செய்தது; இன்னொருவனின் வாய் வழியே கனத்த குரல் பாட்டாக வெடித்தது. லாஞ்சின் மையப் பகுதி மேல் எழுந்து நின்று கைகளை இறக்கைபோல் ஆட்டிக் கொண்டு தனிநாட்டியம் பயின்ற ஒரு நெட்டையனின் கோமாளித்தனத்தில் குமிண் சிரிப்பாக வெளிச்சம் காட்டியது.
தங்கள் சந்தோஷத்தின் இனிமையை அதிகப்படுத்த ஆசைப்பட்டவர் போல, ஒவ்வொருவரும் தத்தமது கால் சட்டைப் பைக்குள்ளிருந்து கை நிறைய மிட்டாய்களை வெளியே எடுத்தனர். மினுக்குத் தாளை உரித்தெறிந்து விட்டு, இரண்டிரண்டு மிட்டாய்களை வாயில் போட்டுக் குதப்பினர். தங்களையே பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கும் மிட்டாய் தானம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து சிகரெட். நீளமாக அமைந்திருந்த அயல் நாட்டு சிகரெட், ஆளுக்கு ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு அவர்கள் பிறருக்கும் வழங்கினர். இரண்டொருவர் -‘வேண்டாம்’ என்று தலையசைத்து மறுத்தனர். சிலர் சிகரெட்டை வாங்கி அப்போதே பற்ற வைத்தனர். ஒன்றிருவர் அப்புறம், ‘கரையிலே போய் டிபன் சாப்பிட்ட பிறகு உபயோகிக்கலாம்’ என்று சட்டைப் பையில் பத்திரப் படுத்தினர். ஒருவன் பார்த்தியா, நான் ரெண்டு வாங்கிட்டேன். “நெட்டையன் கிட்டே ஒண்ணு. தடியன் கிட்டே ஒண்ணு” என்று பெருமையாகச் சொன்னான்.
‘ஏன் மணி நீ வேண்டாம்னிட்டே?’ என்று வெள்ளைச் சட்டை நபர் தன் நண்பனிடம் கேட்டான்.
‘நான்தான் ஸ்மோக் பண்றதில்லையே!’
‘நீ ஸ்மோக் பண்ணாட்டா என்ன? அதை வாங்கி என்னிடம் தந்திருக்கலாமே. அருமையான ஃபாரின் சிகரெட். ‘சும்மா கிடைப்பதை ஏன் விடணும்?’ என்றான் வெள்ளைச் சட்டை நாகரீகத் தோற்ற ஸ்டைல் மாஸ்டர்.
மணி மனசில் கசந்து கொண்டான். கப்பலைப் பார்க்க வந்தவர்களில் அவனும் ஒருவன். இயற்கையின் வலிமையை யும் வனப்புகளையும், மனித உழைப்பின் உயர்வையும் அளவுகளையும் கண்டு களித்து எண்ணி வியந்து கொண்டிருந்த அவனுக்கு, இப்போதைய நிகழ்ச்சிகள் உறுத்த லாயின. சுவையான உணவை ரசித்து உண்ணும்போது எதிர்பாராத வகையில் சிறு சிறு கற்கள் உணவோடு கலந்து ருசி பேதம் உண்டாக்குவது போலிருந்தது அவனுக்கு.
கூலி வேலை செய்கிறவர்களில் ஒருவன், உருண்டை முகமும் தடி உருவமும் பெற்றிருந்த மாலுமியிடம், எனக்கு ஒரு சிகரட் கொடுத்தாரே, சிகரெட்… சிகரெட் என்று சொற்களாலும், சாடைகளினாலும் தனது விருப்பத்தைத் தெரியப்படுத்தினான்.
சொத்தை விழுந்து, கறுப்பேறிய பற்களைக் காட்டியவாறே அவன் ‘நோ, நோ சிகரெட்ஸ்’ என்று சொல்லி கை விரித்தான்.
ஏமாற்றம் அடைந்த கூலிக்காரன் “பண்ணிப்பய! அவன் மூஞ்சியைப் பாரேன். அசல் பன்னிதான். இல்லேங் கிறான் தேவ்டியா மகன்” என்று தனது ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டான். தொடர்ந்து பெருமையாக, ‘நான் நாலு வச்சிருக்கேன். அப்புடிச்சது வேற. ஸ்டாக் பண்ணி கிட்டா அப்புறமாப் புடிக்கலாம். இல்லேன்னா டீக் கடைக்காரனிடம் கொடுத்தால் டீயும் காசும் தருவான். அதுக்குத் தான்’ என்று பேசினான். அவன் ஏச்சையும் பேச்சையும் ரசித்துச் சிரித்தனர் பலர்.
“இது என்ன பிச்சைக்காரப் புத்தி!” என்று குமைந்தது மணியின் உள்ளம்.
லாஞ்ச் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. கப்பலிலிருந்து கரைக்கு சுமார் எட்டு மைல் தூரம் போக வேண்டும். கரை ஓரத்தில் ஆழம் பற்றாது என்று தொலைவிலேயே கப்பல்கள் நங்கூரமிடப் பெற்று நிற்பது வழக்கம்.
காற்று சிறிது வலுத்திருந்தது. அதனால் நீர்ப்பரப்பில் விம்முதல்களும் வடிதல்களும் உருவில் பெருத்திருந்தன. சிற்றலைகள்கூட அளவில் வலியதாகியிருந்தன. குஷியாக முன்னேறும் குதிரை மாதிரி லாஞ்ச் பாய்ந்து, உயர்ந்து தணிந்து, எவ்வி எவ்விச் சென்றது. அதன் வேகத்திலே பிளந்து புரண்ட நீர்ப்பகுதி சலாரிட்டு லாஞ்சில் மோதிச் சிதறித் தெறித்தது. அவ்வீச்சில் அலையாய் பொங்கிய நீர் சீற்றத்தின் சிறு திவலைகள் லாஞ்சின் மேலே ஜாலியாக அமர்ந்திருந்தவர்களின் கால்களை நனைத்தன. வீடு திரும்பும் வானம் வண்ண சூரியனுக்குப் பிரிவுபசாரம் கூறும் வண்ணக் கலவைகளால் உவகைக் காட்சி விழா நடத்திக் கொண்டிருந்தது.
இவை எல்லாம் மணியின் உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்கின. இந்த இனிமைகளை ரசிப்பது சாத்தியமாகும் வகையில் உழைத்து வசதிகள் செய்துள்ள மனித சாதனைகளை எண்ணி வியந்தது அவன் மனம், கடலோடிகளில் ஒருவன் மணியின் நண்பரிடம் ஏதோ விசாரித்தான். அவன் ஆங்கிலத்தில் தான் கேட்டான். ஆயினும் அவனுடைய ஆங்கிலமும், அதை அவன் உச்சரித்த விதமும் குழப்பமே தந்தன. எதுவும் விளங்கவில்லை.
‘உனக்கு ஏதாவது புரியுதா?’ என்று நண்பன் கேட்டான்.
‘இல்லையே!’ என்றான் மணி.
மாலுமிகளுக்குப் புரியாது என்ற தைரியத்தில், அவர் களைப்பற்றி பச்சையாகவும் கொச்சையாகவும் வசவுகளைக் கலந்து தமிழில் தாராள விமர்சனம் செய்து கொண்டிருந்த ஒருவன், இந்தக் காட்டு மாட்டுப் பயல்களிடம் பேசிப் பழகுறதுக்கே ஒரு நேக் வேணும். நான் பேசுறேன் பாருங்க என்று முன்வந்தான். ஓட்டை உடைசல் இங்கிலீஷில் எப்படி எப்படியோ பேசினான். அவர்கள் கேட்க இவன் சொல்ல, இவன் விசாரிக்க அவர்கள் பேச என்று எவ்வாறோ உரையாடல் நிகழ்ந்தது.
பிறகு அவன் மற்றவர்களிடம் சொன்னான்; அருமையான வாட்ச் வச்சிருக்கானாம். யாருக்கும் வேணுமின்னாத் தருவானாம். விலைக்குத் தான். ஆனா விலை மலிவாத் தானிருக்கும்.கூலிங்கிளாஸ், பவுண்டன் பேனா எல்லாம் கிடைக்கும். எனக்கு ஒரு பேனா தாறேன்னு சொல்லியிருக்கான் இனாமா. நாளைக்கு மத்தியானம் சாமான்கள் கொண்டு வரும்போது. கப்பல்லே அவனை சந்தித்துக் கேட்கும்படி சொல்லியிருக்கான். பன்னித் தேவடியா புள்ளெங்க, சொன்னாச் சொன்னபடி செய்யும்…
வார்த்தைக்கு வார்த்தை சுகமான வசவுகளையும் கெட்ட வார்த்தைகளையும் தாராளமாகக் கலந்து கொண்டிருந்தான் அவன். அப்படிக் கலக்காமல் அவனால் பேச முடியாது என்றே மணிக்குத் தோன்றியது.
நாகரிகமாகவும் நல்ல நிலைமையிலும் இருப்பதாகத் தோற்றம் காட்டிய ஒருவர், ‘ஏ, அந்தத் தடியனிடம் பேசி நமக்கு ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிக் கொடேன். நீ அவன் கிட்டேயிருந்து ஓசியிலே அடிச்சிட்டு வரப்பாரு. நான் உனக்கு ஸம்திங் தந்துடுறேன். கவலைப்படாதே. உன்னை நல்லாவே கவனிப்பேன்’ என்றார்.
அவர்களுடைய பேச்சில் பேராசையும் சின்னத்தனமும் குதி போட்டுக் கும்மாளியிட்டன. பகட்டான புறத் தோற் றத்தினுள்ளே புதைந்து கிடந்த சிறுமைக் குணங்கள் அவர் களது பேச்சின் மூலம் கட்டவிழ்த்துக்கொண்டு விளையாடின.
இயற்கையின் வலிமையும் வனப்பும் சிரித்துக் கொலு விருந்த அந்தச் சூழ்நிலையில், இயற்கையை வென்று தனக்கு ஆட்படுத்திக் கொண்ட மனித உழைப்பின் சாதனை மகத் துவமும் மாண்பும் நிரூபணமாகிக் கொண்டிருந்த களத்தி லேயே மனிதரிடம் இயல்புகளாக ஒட்டிக் கொண்டு வளரும் சிறுமைகளின் தன்மையும் வெளிப்பட்டதைக் கண்டு மணி புழுங்கினான். சீ, என்ன பிழைப்பு இது!’ என்று கொதித்தது அவன் உள்ளம்.
பாஷை தெரியாதவங்களை ஏன் இப்படிக் கேவலமாகக் கருதிப் பேசணும்? மனிதப் பண்பில் நம்பிக்கை வைத்துத் தானே அவங்க எல்லோரிடமும் சகஜமாகப் பழக வாராங்க என்று மணி நண்பனிடம் சொன்னான்.
இநைவிட மோசமா, பயங்கரமா எல்லாம் நடந்து கொள்வாங்க. அவங்க கிட்டே நயமாகப் பேசி, ஷோக்கான பொம்பளைகளிடம் கூட்டிப் போறேன்னு ஆசை காட்டி, எங்காவது இட்டுப் போய் பணத்தைப் பறித்துக்கொண்டு திண்டாட விட்டுடுவாங்க. அப்படிச் செய்றவங்களும் இருக்கிறாங்க. அதுவும் நடக்கத்தான் செய்யுது’ என்றான் அவன்.
‘பேசுகிற பாஷை புரியாமல்…’ என்று மணி ஆரம்பிக் கவும், நண்பன் குறுக்கிட்டான்: ‘இங்கேருந்து பாஷை தெரியாத இடங்களுக்குப் போறவங்களிலும், எத்தனையோ பேரு எத்தர்களிடம் சிக்கி ஏமாந்துதான் போறாங்க. மற்றவங்க பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிப் பிழைக்கிறவங்க எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறாங்க. அவங்களும் மனுஷங்கதானே!
லாஞ்ச் ஒரு குலுக்கலுடன் நின்று விட்டது. இறங்க வேண்டிய இடம் வந்தாயிற்று. எல்லோரும் பரபரப்புடன் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
அன்றைய அனுபவ அதிர்ச்சி உள்ளத்தில் ஏற்படுத்திய ஊமை வேதனையினால் சங்கடப்பட்ட மணி கடலையும் வானையும் செயலற்று நோக்கினான்.
எப்போதும் போல் வலிமையோடும் வனப்போடும் தான் காட்சி அளித்தன இயற்கைச் சக்திகள்.
(1973)



