மனிதர்கள் – வல்லிக்கண்ணன்

4. விபரீத உணர்வுகள்


“ஆங், யாரது?”

உளறிக்கொண்டே திடுக்கிட்டுக் கண் விழித்தார் புன்னைவனம். அவர் பார்வை அண்டிமிங்கும் புரண்டு சுவர்களில் சாளரத்தில் கதவுகளில் எல்லாம் மோதி மேஜைக்கே திரும்பி வந்தது.

விளக்கு எரிந்து கொண்டுதானிருந்தது. கதவுகள் தாழிடப் பெற்றிருந்தன. அறைக்குள் யாரும் இல்லை. எவரும் வரவும் முடியாது.

அப்போதுதான் அவர் உணர்வில் குத்தியது – படித்துக் கொண்டே யிருந்த நாம் நம்மை அறியாமலே தூங்கி விட்டோமே! விளக்கைக்கூட அணைக்காமல்! எழுந்து போய் படுக்கையில் படுக்காமல்!

குழிவான, உட்காருவதற்கும் சாய்வதற்கும் சௌகரியமான பிரம்பு நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார் புன்னைவனம். அசதியும் தூக்கமும் கிறக்கி விடவே அவர் தம்மை அறியாமல் தூக்கத்தில் ஆழ்ந் துள்ளார். ஏதோ சத்தம் கேட்டது போலிருந்தது. யாரோ கூப்பிடுவதுபோல. அவர் காதருகில் வந்து தெளிவில்லாக் குரலில் என்னவோ கத்துவது போலும் கேட்டது. கேட்டதாக ஒரு உணர்வு உறுத்தவே தான் அவர் திடுக்கிட்டார். கண் விழித்தார்.

கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு, முகத்தைத் துடைத்தபடியே அவர் நினைத்தார், ‘சே, என்ன அசட்டுத் தனம்! இந்த அறைக்குள் இந்த வேளையில் யார் எப்படி வரமுடியும்?’ என்று.

மேஜைமீது, சுவரோரத்தின் மூலையில், நின்ற சிறு சிலையை அவர் கண்கள் குளுமையாய் தடவின. இளமை பூரிக்க நின்ற அழகுக் கன்னி அவரை நோக்கிக் குறும்புப் புன்னகை பூத்தாள்.

‘அருமையான வேலைப்பாடு. அற்புதமான சிலை, அழகு விளையாடுது.அருள் கொஞ்சுது. இதோ வாய்திறந்து பேசிவிடுவேன் என்பதுபோல் அல்லவா பார்க்கிறாள்!’ என்று அவர் எண்ணினார். ஒன்றரை அடி உயரக் கல்லில் உணர்ச்சியை ஓட விட்டிருக்கிறான். அவன் அல்லவா கலைஞன்! உயிர் இல்லைதான். என்றாலும் ஜீவன் தளும்புகிறது இந்தச் சிலையில்’ என்றும் அவர் உள்ளம் பேசியது. அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சிறிது நேரம்.

இப்போ மணி என்ன இருக்கும் என்ற உணர்வின் அறிப்பு அவரைக் கடியாரம் பக்கம் பார்வை ஏவும்படி தூண்டியது.

மணி 10-40.

‘இவ்வளவுதானா? இன்னும் கொஞ்சம் நேரம் படிக்க லாமே!’ என்று எண்ணி, அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். மேஜைமீது அவருக்கு முன்னே விரிந்து கிடந்த பெரிய புத்தகத்தின் மேல் கண்கள் படிந்தன.

ஆனால், கவனம் படியவில்லை. அவர் உள்ளத்தில் அமைதியில்லை. பழைய நினைவுகளும் புதிய எண்ணங் களும் முட்டி மோதி முரண்டிக் கொண்டிருந்தன; அவர் பார்வை மீண்டும் சிலை அழகியைக் கொஞ்ச ஓடியது.

‘சில நாட்களுக்கு முன்னே இது காட்டுக்கோயில் பிரகாரத்தில் மண்ணோடு மண்ணாகக் கிடந்தது. கவனிப் பாரற்றுக் கிடந்தது. இங்கே வந்த பிறகு ஜம்மென்று கொலு இருக்கிறாள் சுத்தரி…’

புன்னைவனம் சிரித்துக்கொண்டார். சிலையும் அவரைப் பார்த்து பதிலுக்குக் குறுநகை புரிவது போலிருந் தது.

அவர் ரசிகர். கலையின் காதலர். அழகு நிறைந்த ஓவியங்களையும், அற்புதமான சித்திரங்களையும், நயம் மிகுந்த இலக்கியங்களையும் அனுபவித்து மகிழும் சுபாவம் அவருக்கு இருந்தது. நல்ல நல்ல புத்தகங்களை வாங்கிக் குவித்தது போலவே, சித்திரங்களையும் கலைப் படைப்பு களையும் வாங்கி, தமது வீட்டில் அணிபெற வைத்து, தினம் கண்டு கண்டு களிப்புற்றார். அவரும் அவரொத்த நண்பர் களும் கலைச் சிறப்புகள் உள்ள இடங்களுக்கு அடிக்கடி போய், அங்குள்ள பொக்கிஷங்களைக் கண்டு ரசித்து மகிழ்தைப் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு சென்றிருந்த உல்லாச உலா ஒன்றின்போது தான் இந்த சிங்காரச் சிலை அவர் கையில் சிக்கியது. சிற்றூர் ஒன்றிலிருந்து முக்கால் மைல் தூரம் தள்ளியிருந்த காட்டுக் கோயிலில் அற்புதமான சிலைகள் இருக்கின்றன என்று அறிந்த கலை அன்பர்கள் அங்கே போனார்கள்.

பழங்கால மன்னன் எவனோ கட்டுவித்த பெரிய கோயில்தான். அக்காலத்தில் ஒளியும் ஒலியும் பக்தியும் பாடலும், பூஜையும் ஆடலும் நிறைந்து ஜேஜே என் றிருந்திருக்கும். கால ஓட்டத்தில் அந்த இடம் தன் பெருமையை, உயர்வை, உயிரையே இழந்துவிட்டது. வெறுமையாய், வறண்ட சூழலாய், வெறும் கற்களாய், ஜீவனற்று சோபை குன்றி நின்றது கோயில்.

ஆயினும், அதனுள் தூண்களிலும் மண்டபக கற்களிலும் விக்கிரகங் களிலும் கலை ஒளி குன்றாது, உணர்வுத் துடிப்புடன், விதம் விதமான உருவங்களில் வாழ்ந்து கொண்டிருந்தது.

போனவர்கள் பார்த்தார்கள். வியந்தார்கள். ரசித்தார்கள். புகழ்ந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை, நல்ல கலை விருந்து அவர்களுக்கு. ஒவ்வொள்றையும் விடாது ஆராய்ந்தார்கள்.

பிரகாரத்தில் எது எதையோ பார்த்து வியந்து வந்த புன்னைவனம் “ஆகா!’ என்று உவகைப் பெருக்கோடு கூவினார். மற்றவர்களும் கூவினார்கள்.

அவர் சிறு சிலை ஒன்றை அன்போடும் ஆதரவோடும் பற்றிக் கொண்டிருந்தார். மண்ணில் கிடந்து தூக்கி யெடுத்த சிலையைத் துண்டால் துடைத்துக் கொண்டிருந்தார். அழகியின் அற்புத நயங்கள் எடுப்பாக மிளிர்ந்தன. “ஆகா, என்ன அழகு! என்ன அழகு!” எnறு கொஞ்சும் குரலில் கூறிக்கொண்டிருந்தார் அவர்.

‘புன்னைவனத்துக்கு ஒரு காதலி கிடைத்துவிட்டாள்!’ என்று கிண்டல் பண்ணினார் ஒருவர்.

‘இவள்தான் அழகி. இவள் ரதி’ என்றார் இன்னொருவர்.

‘மோகினி சிலையாக இருக்கும்’ என்றார் வேறொரு நண்பர்.

‘யாராக இருந்தால் என்ன? சொக்கழகு சுந்தரி இவள்’ என்று புன்னைவனம் சொன்னார்.

‘ஓகோ,கண்டதும் காதலா? இவளை நீர்விட மாட்டீர் போலிருக்கே?’ என்று முதல் நண்பர் பரிகாசம் பேசினார்.

‘பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதை புறம் கொண்டு போன அர்ஜுனன் மாதிரி, இவர் இந்த மோகினியை தன்னோடு தூக்கிக் கொண்டு போவார் என்கிறீர்களோ?’ என்று ஒருவர் பேச, ‘ஏன் செய்யக் கூடாது? பேஷாகச் செய்யலாமே?’ என்று இன்னொருவர் அங்கீகரித்தார்.

தமாஷாகத் தொடங்கிய எண்ணம் செயலாக முடிந்து விட்டது. ஒரு பைக்குள் திணித்து, துணிகளில் அடக்கம் செய்து, அச்சிறு சிலையை வீடுகொண்டு சேர்த்தார்கள் நண்பர்கள். புன்னைவனம் ளீட்டிலேயே அது இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அவர் எதையும் ஆட் சேபிக்கவில்லை.

அன்று முதல் அவர் அதிகமான உற்சாகம் கொண்டவராகவே தோன்றினார். அவருள் ஒரு பரவசம் புகுந்து விட்டது போலிருந்தது. உள்ளக் கிளுகிளுப்பும் உணர்ச்சிப் பரவசமும் கொண்டவராய், அவர் சதா மோகினி சிலையைப் பார்த்து மகிழ்ந்து போனார். இரவு வேளைகளில் விழித்தெழுந்தால், ஸ்விட்சைத் தட்டி விளக்கில் ஒளிவரச் செய்து, வெளிச்சத்தில் குளித்து நிற்கும் மோகினியைக் கண்குளிரக் கண்டு விட்டுத்தான் மீண்டும் தூங்க முயல்வார். உடனேயே தூக்கம் வந்து விடுமா? சுந்தரிகளுக்கெனச் சிரிப்பது போல் கூட அவர் உணர்வு அவரை ஏமாற்றும் பிரமைதான்.

இப்போதும் அப்படி ஒரு பிரமைதான் அவரோடு விளை யாடியிருக்கிறது! இதை எண்ணவும் அவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

சோம்பலும் சுகவிருப்பமும் அவரை நாற்காலியில் சௌகரியமாகச் சாய்ந்து, படுத்துக்கிடப்பது போல் ஒடுக்க முறத் தூண்டின. சிலையை பார்த்தவாறு சாய்ந்து கிடந்தார் அவர்.

விழிப்பின் பிரக்ஞையும் தூக்கக் கிறக்கமும் தழுவிக் குழம்பி மயக்கம் உண்டாக்கும் நிலை. நினைவின் நிழல்கள் போலும் கனவின் சாயைகள் போலும் கண்ணுக்குள் உரு வங்கள் அசைந்தாடும் நிலை. எங்கோ எழும் ஒலிகளின் தேய்ந்த அலைகள் போலவும், கனவில் கேட்கும் குரல்கள் போலவும் காதருகில் ஏதேதோ குழம்புகின்ற நிலை………

பெண் ஒருத்தி பெரும் சிரிப்பு சிரித்தது போல் தோன்றியது. ‘என்ன, அதுக்குள்ளே தூக்கமா?’ என்று மெல்லிய குரலில் கேட்பது போலவும் இருந்தது. பாதசரம் இசையொலி எழுப்ப, காலைத் தரைமீது எடுத்து வைத்து அசைவது போலவும் பட்டது.

புன்னைவனம் மறுபடியும் திடுக்கிட்டு, நிமிர்ந்து உட்கார்ந்தார். சிலை சிலையாகத்தான் நின்றது. அதே குறும்புச் சிரிப்புடன்; விஷமப் பார்வையோடு.

‘சே! என் உணர்வுகள் என்னோடு கிச்சுக் கிச்சு விளை யாடுகின்றன!’ என்று அவர் நினைத்தார். எழுந்து அந்த அறையில் அப்படியும் இப்படியும் நடந்தார்.

மணி பதினொன்றுதான் ஆகியிருந்தது. ஏனோ அவர் மனம் படுக்கையை நாடவில்லை. படுத்தாலும் தூக்கம் வராது என்றே தோன்றியது. படிக்கவும் பிடிக்கவில்லை. உள்ளத்தில் அலைமோதல்கள் – உணர்ச்சிகளின் கொதிப்பு. எண்ணங்களின் குறுகுறுப்பு.

ஒரு ஜன்னல் அருகே நின்று வெளியே பார்வையை ஓடவிட்டார் அவர். ‘ஆகா’ என்று சொக்கிப் போனார்.

வெளி உலகம் அசைவற்று, அமைதியுற்று, ஆழ்துயில் பயின்று கொண்டிருந்தது. இயற்கை வெண்மய நிலவுப் போர்வையால் உலகைப் போர்த்தியிருந்தது. அவ்வொளிப் பூச்சு எல்லா இடங்களையும், எல்லாப் பொருள்களையும் மண்ணையும் மரங்களையும், கட்டிடங்களையும் வெறும் வெளியையும், அனைத்தையுமே – மோகனக் காட்சிகளாய் – எடுத்துக் காட்டியது. அமைதி நிறைந்த அழகுமயமான இக் காட்சியைக் கண்டு ரசிக்க மனமில்லாமல் – வியந்து இன்புறத் தெரியாமல் – எல்லோரும் தூங்கிக் கிடக்கிறார்களே என்ற அனுதாப உணர்வு புன்னைவனத்திடம் பிறந்தது.

‘இன்று பௌர்ணமி’ என்று சொன்னது அவர் அறிவு. “அதுதான் நிலவின் சௌந்தர்யம் இன்று இவ்வளவு அற்புத மாசு இருக்கிறது” என்று அவர் எண்ணிக் கொண்டார்.

பால் ஒளி சித்திரிக்கும் பேரழகை நன்றாக ரசிக்கலாமே என்று ஆசை தூண்டியது. அவர் அறையின் விளக்கை அணைத்தார். உள்ளே இருள் கவிந்தது. வெளிப்புறத்தின் ஒளி வெள்ளம் பிரகாசமாய் உறுத்தியது. அதுவே குளுமையாய், எழிலாய் மலர்ந்த அற்புதமாய் விளங்கியது.

அந்த அமுத இனிமையில் அவர் தன்னை மறந்து நின்றார். இனம் கண்டு கொள்ளமுடியாத பூச்சிகளின் விதம் விதமான சத்தங்கள் விடாது ஒலித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு மரத்தில் ஆந்தை அலறியது. வௌவால் ஒன்று சிறகடித்துச் சுற்றிச் சுழன்று ஜன்னல் பக்கமும் வந்து போனது. அறையினுள் வண்டோ, பறக்கும் பூச்சி எதுவோ சுவரில் மோதி, டக்கெனக் கீழே விழுந்தது. காகிதங்களினூடே கரப்பான் பூச்சி ஊர்வதுபோல் ஓசை எழுந்தது. அவர் முதுகை யாரோ தொட்டதுபோல், கழுத்தில் மூச்சுக் காற்று பட்டதுபோல், காதருகே கிசு கிசுத்தது போல் அவருக்கு உணர்வு உண்டாகவும், புன்னைவனம் அவசரமாகத் திரும்பிப் பார்த்தார். அவர் உடம்பு புல்லரித்தது. ரோமங்கள் சிலிர்த்தன.

உள்ளே இருட்டுத்தான் அவர் கண்களைத் தாக்கியது. வெளி உலகின் ஒளிப்பிரவாகம் காரணமாக, அறைக்குள் இருட்டு கன்னக் கனிந்ததாய் கனத்துத் தொங்காமல் வெளிறியிருப்பதை அவர் உணர முடிந்தது. வேறு எதுவும் புலனாகவில்லை.

‘சரி. நாற்காலியில் உட்காரலாம்’ என்று நடந்தார். அவர் முகத்தில் மென்மையான பட்டுத்துணி படிந்தது போலிருந்தது. ஒரு கணம் அவருக்கு எதுவுமே புலனாக வில்லை. சிறு மயக்கமும் தலைச்சுற்றலும் ஏற்படுவது போலிருந்தது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு நாற்காலி யில் வந்து விழுந்தார். ஆமாம். விழுவதுபோல் தானிருந்தது அவர் உட்கார்ந்தது.

மனம் விசித்திரமானது. உணர்ச்சிகள் விபரீதமானவை. இவை மனிதனை எப்படி எப்படி எல்லாமோ ஆட்டிப் படைக்கின்றன; அலைக்கழித்து பாடாய்ப் படுத்துகின்றன. எந் நேரத்தில் இவை ஒருவனை காலை வாரிவிடும், பித்தனாக்கும் அல்லது பேயனாக மாற்றும் என்று நிர்ணயிப்பதற்கு இல்லை.

புன்னைவனத்தின் மனம் ஒரு நிலைப்படவில்லை. அவருடைய உணர்ச்சிகள் தறிகெட்டுக் குழம்பி நின்றன; அவரைக் குழப்பத்தில் தள்ளின.

அதிகமான உழைப்பு. சரியான போஷாக்கு இல்லாமை. ஓய்வு இல்லாதது. போதிய தூக்கமின்மை- இவை எல்லாம் சேர்ந்து, என் நரம்புகளை பாதித்து விட்டன. ஏதாவது டானிக் வாங்கிச் சாப்பிடணும். நிறைய ஓய்வு பெற்று, அருமையாகத் தூங்கவேண்டும். என்று அவர் தனக்கே உபதேசித்துக் கொண்டார். சிறிது கண்களை மூடினார்.

தூக்கத்தில் காணும் கனவு என்றும் சொல்ல முடியாது. நினைவு நிழலாடவிடும் உருவம் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்று!

ஒரு அழகி. இருட்டுக்கும் ஒளியூட்டும் நிலவுக்கதிர் யுவதி. வெண் ணொளிப் பகட்டாடை அணிந்து, புன்னகை ஒளி பரப்பி வந்தாள். அவளது காலணிகள் கிணுகிணுத்தன. அவள் நெஞ்சில் நிறைந்து உணர்வைக் கிளறிவிடும்படியான மணம் எழுப்பும் மலர்களைச் சூடியிருந்தாள். அவள் நின்ற இடம் எங்கும் அவ்வாசனை சூழ்ந்துவிட்டது. அவருக்கு அந் நறுமணம் மிகவும் பிடித்திருந்தது.

கண்ணைத் திறந்து நன்றாகப் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டாயிற்று. ஆனால் இமைகளைத் திறக்க முடியவில்லை. ‘நீ யார்?’ என்று கேட்க முயன்றார். ஏதோ ஊமைக் குரல்தான் எழுந்தது அவரிடமிருந்து. கலீர் சிரிப்பொலியை அவர் காதுகள் நன்றாகக் கிரகித்தன. அவர் நிமிர்ந்து உட்கார முயற்சித்தார். இரண்டு மென் கரங்கள் அவர் தோள்களை அழுத்துவது போலிருந்தது.

சுகந்தம் இழையோடிய மென்மூச்சு அவர் முகத்தில் படுவதாக ஒரு உணர்வு பிறந்தது.

புன்னைவனம் திமிறினார். திடுக்கிட்டு, உடம்பைத் திருகி முறுக்கிக் கொண்டு நிமிர்ந்தார். பசை கொண்டு ஒட்டியது போல் மூடிக்கிடந்த இமைகளைத் திறந்து, கண்களைக் கசக்கிக்கொண்டு விழித்தார். பழக்கமான சூழ்நிலைதான் காட்சி தந்தது. புதுமை என்று சொல்லும்படியாக எதுவும் பார்வைப் புலனில் தாக்கவில்லை.

ஒரே அடியாக இவ்விதம் முடிவு கட்டுவதற்கு இல்லை என்று குறுகுறுத்தது அவர் மனம். இது புதுமைதானே என்று உட்குரல் பேசியது-

சுவரில், உயரத்தில், காற்றோட்டத்திற்காக இடம் பெற்றிருந்த ஒரு வட்டவடிவத் துவாரத்தின் வழியாக நிலவொளி வந்து, கணக்காக சிலை அழகியை ஒளியுறுத்திக் கொண்டிருந்தது. அந்த ஒளி சிலை மோகினியின் அழகையும் வசீகரத்தையும் மேலும் எடுப்பாகக் காட்டியது. அந்தக் கன்னி குறும்புத் தனமாகச் சிரிப்பது முன்னையவிடவும் பளிச்சென்று பட்டது. அவரைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டுவதுபோல்கூட அவருக்குத் தோன்றியது.

‘பெரிய கள்ளி இவள்! குறும்புக்காரி!’ என்று அவர் மனம் பேசியது.

கிளுகிளுக்கும் சிரிப்பொலி

நிஜமாகவே அவர் செவி மடுத்தாரா? அல்லது பிரமை தானா? வெளியே இரவுப் பறவை ஏதேனும் எழுப்பிய விசித்திர ஒலியாக இருக்குமோ?

அவருக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. அது சிறு பூச்சி போல் முதுகந்தண்டில் ஊர்வது போலிருந்தது. தேகம் நளுக்கிக் கொடுத்தது.

புன்னைவனம் எழுந்து அறைக்குள் உலாவ ஆரம்பித்தார். அவருள் ஒரு பீதி வேலை செய்தது. இது என்ன இழவுச் சிலையோ! மோகினி கீகினி என்றெல்லாம் சொன்னாங்க. விளையாட்டுப் போலே இதை எடுத்து வந்து விட்டோம். அப்பவே சிலபேர் சொன்னாங்க: இது மாதிரிச் சிலையை, அதிலும் காட்டுக்கோயிலில் கிடந்ததை, வீட்டிலே வைப்பது கூடாது. மந்திரம் மாயம் பேய் பிசாசுகளிலே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். ஆனால் அறிவு பூர்வமாக, விஞ்ஞான ரீதியான சிந்தனை வழியாக, விளக்க முடியாத விபத்துக்களும் சம்பவங்களும் எத்தனையோ நடந்துள்ளன. இப்பவும் நடக்காமலில்லை! இப்படி எல்லாம் சொன்னாங்க. நாம்தான் சட்டை செய்யவில்லை. யோசிக்கப் போனால், இந்தச் சிலை வந்ததிலிருந்து நமக்கு என்னென்னவோ நடந்து கொண்டு தானிருக்கு. அநேக சமயங்களில், உயிர் தப்பினதே தம்பிரான் புண்ணியம் என்கிற மாதிரி நெருக்கடியான கட்டங்கள் குறுக்கிட்டுள்ளன. நிதானமாக நினைத்துப் பார்க்கையில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்ம கவனத்தை இந்த அழகி மாதிரியான ஒரு உருவம் சுண்டி இழுத்ததும், அப்போ பார்த்து காரோ, மாடோ நெருங்கி வந்து விபத்துக்கு வழி வகுத்ததும் ஞாபகத்துக்கு வருது. இது கெட்ட சக்தி நிலை பெற்றுள்ள சிலைதான். இது வந்ததிலிருந்து சரியானபடி தூக்கமுமில்லை. திடீர் திடீர்னு அழகான பொம்பிளை தட்டி எழுப்புகிறது போலவும், பக்கத்திலே நின்று சிரிப்பது போலவும் உருவெளித் தோற்றங்கள் என்னை பரிகசிக்கின்றன. எல்லாம் அந்தக் கெட்ட ஆவியின் வேலைதான். வேறு என்ன?’ அவர் மனம் நெளிந்து கொண்டிருந்தது.

மோகினி சிலையை நிலாவொளி இன்னும் அழகு படுத்திக் கொண்டுதான் இருந்தது. அதன் காந்தக் கவர்ச்சி புன்னைவனத்தின் உணர்வுகளைச் சுண்டி இழுத்தது.

ஸ்விட்ச்சைப் போட்டு, லைட்டை ஏற்றிப் பார்த்தார் அவர். விளக்கொளியில் அந்த அறை மர்மமான அழகு ஒன்றை இழந்துவிட்டதாகவே தோன்றியது. சிலையும் தனிச் சிறப்பு எதுவுமில்லாத பழைய கல் உருவமாகத்தான் காட்சி தந்தது.

மணி பதினொன்றரைக்கு மேல் ஆகியிருந்தது. தூக்கம் வருதோ இல்லையோ, படுக்கையில் படுத்து விட வேண்டி யதுதான். கண்ணை மூடிக் கொண்டு கிடந்தால், தூக்கம் தானாக வந்துவிடும் என்று அவர் எண்ணினார். அவ்வாறே செய்தார்.

விளக்கொளி அவிந்ததும், மறுபடியும் நிலவு தன்மாய வேலையைக் காட்டியது. அதில் குளித்து நின்ற சிலை அவரை ஆசை காட்டி அழைப்பது போலிருந்தது,

இந்த அழகி இங்கேயே இருந்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்றே நினைக்கிறேன். நாளைக்கு முதல் காரியமாக இதை அப்புறப்படுத்த வேண்டும். பாழுங் கிணற்றித் போட்டுவிடலாம். அதுதான் சரி என்று அவர் தீர்மானித்தார்.

அவரை அறியாமலே தூக்கம் அவரை ஆட்கொண்டு விட்டது. ஆனால் அதன் ஆட்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. துர்சொப்பனம் கண்டவர் போல் அவர் உளறினார். உடல் நெலிந்து புரண்டது. பிறரால் புரிந்துகொள்ள முடி யாத அவலக்குரல் எழுப்பியவாறே எழுந்து உட்கார்ந்தார். தேகத்தில் ஒரு படபடப்பு, காரணம்…

அழகி அவரை நெருங்கி அவர் முகத்தில் முகம் பதித்தாள். பிறகு முகத்தைத் தாழ்த்தி அவர் கழுத்தில் முத்த மிட்டாள். அவள் உதடுகள் பதிந்த இடத்தில் குறுகுறுப்பு ஏற்பட்டது. அவள் அங்கு பல்லால் கடிப்பது போலிருந்தது. லேசாக வலித்தது. அங்கு சூடாக ரத்தம் பொங்கி வழிவது போல் தோன்றியது. அவள் சிரித்தாள், சிரிப்புதானா அது?

அவர் தேகத்தைக் குத்தி, எலும்புக் குறுத்துக்குள்ளும் புகுந்து சிலிர்ப்பு உண்டாக்கியது அக்கிளுகிளுப்பு. அப்போது தான் அவர் பதறி அடித்து எழுந்தார்.

அவர் கை தானாகவே கழுத்தைத் தடவியது. அங்கு கடிவாயும் இல்லை, ரத்தமும் இல்லை.

‘எல்லாம் மோகினி வேலைதான். இன்று பௌர்ணமி இல்லையா! பௌர்ணமி அன்று மோகினியின் சக்தி விளையாடும் என்று சொல்வார்களே’ என்று அவர் மனம் நினைவுறுத்தியது.

இப்போது நிலவொளி வட்டம் சிறிது மேலேறியிருந்தது. அவட்டத்தினுள் சிலையின் முகமும் மார்புப் பகுதியும் தான் பளிச்செனத் துலங்கின.

விம்மி நின்ற மார்பகமும் சிரிக்கும் உதடுகளும், பார்வையால் கொல்லும் கண்களும் அவரைக் கொத்தின குழப்பின.

‘இந்த முகம்தான். இதே உதடுகள்தான்…சரியான ஆட்கொல்லி இவள். இவள் இங்கே இருக்கக் கூடாது. என்று பதறினார் அவர். மேஜை மீதிருந்து அதை எடுத்து, பார்வையில் படாதவாறு மூலையில் வைத்துவிட்டு, விடிந்ததும் தூக்கிக்கொண்டு போய் கிணற்றில் விட்டெறிய வேண்டும் என்ற எண்ணம் அவரை உறுத்தியது.

கண்மூடித்தனமான ஆத்திரத்தோடு, ஆவேசமாய் அவர் எழுந்தார். விளக்கைப் போட்டுக்கொள்ளவில்லை. வேகமாகப் பாய்ந்தார். போர்வை காலில் சிக்கியது. அதை இழுத்து அகற்றக் கை விரைந்தது. ஆனால் அது நழுவிக் கால்களில் சுற்றியது. அதைப் பிடித்துக் கொண்டு அவர் குதிப்பது போல் முன் செல்லவும், இடுப்புத் துணி அவிழ்ந்து விரல்களில் சிக்கி அவரை தடுமாற வைத்தது. கீழே கிடந்த பொருள் எதுவோ தடுக்கிவிட்டது. அவர் தள்ளாடி விழுந்தார். மேஜைமீது மண்டை இடித்தது. பலமான அடி.

‘ஐயோ அம்மா’ என்று அலறிக்கொண்டு அவர் கீழே விழுந்தார். அவர் கைகள் மேஜையை பலமாகப் பற்ற முயன்றன. அம்முயற்சியில் மேஜை ஆட்டம் கொடுத்து சாய்ந்தது. அதன் மீதிருந்த சாமான்கள் பலவும் அவர் தலையிலேயே விழுந்தன.

மோகினி சிலையும் உருண்டது. கீழே விழுந்து விட்ட புன்னைவனத்தின் தலைமீது, சரியான இடத்தில், பலமாக விழுந்தது அது. ‘அம்மா!’ என்று முனகல் மட்டுமே அவரிட மிருந்து வந்தது.

அப்போது இரவு மணி பன்னிரண்டு. ஒரு மரத்திலிருந்த இரண்டு ஆந்தைகள் விகாரமாகக் கத்தின.

புன்னைவனம் விழிக்கவே இல்லை. அவர் தலை அருகே உருண்டு விழுந்த சிலையின் முகம் அவர் கழுத்தில் பதிந்து விட்டது. மண்டையிலிருந்து பெருகி வழிந்த ரத்தம் அவ் வழியே வடிந்து அம் முகத்தை நனைத்துக் கொண்டிருந்தது.

(1968)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *