பசி
க. நா. சுப்ரமண்யம்

9

பெண்மை என்னும் புதிரை விடுவிப்பது அதைப் படைத்த பிரும்மதேவனாலும் ஒரு சில அமானுஷ்யமான கவிகளாலும் தான் முடியும் என்று தோன்றுகிறது.

பெண்களுடைய பலம்தான் என்ன? அவர்களுடைய பலஹீனம்தான் என்ன ? அவர்களுடைய அறிவுதான் என்ன, அறிவின்மைதான் என்ன ? பல இலக்கிய ஆசிரியர்களும் கவிகளும் சொல்லுவது போல அவர்கள் உண்மையிலேயே கோயிலில் வைத்துப் பூஜிக்கத் தகுந்தவர்கள் தானா அல்லது நடமாடும் ராக்ஷஸ கணங்களா ? என்ன விந்தை, என்ன அற்புதம்! ஏதாவது ஒரு கணக்கில் அகப்பட்டால் அன்றோ எதுவும் நிச்சயமாகச் சொல்ல முடியும்!

உதாரணமாக கமலாவை எடுத்துக் கொள்ளுவோம். அவள் மிகவும் சாதாரணமான பெண் மணிதான். இன்னும் உலக அனுபவங்கள் அதிகமாகப் பெறாதவள் தான். படித்தவளும் அல்ல.. கல்யாணம் என்கிற மிகமிகச் சாதாரண அனுபவம் கூட அவளுக்கு இன்னும் ஏற்பட்டபாடில்லை. எனினும் அவள் உள்ளத்திலேதான் விடுபடாத விடுவிக்க முடியாத சிக்கல்கள் எத்தனை இருந்தன!

சாமாவின் ஏக்கங்களையும் துடிப்புக்களையும் பற்றி ஏதோ ஒரு வகையில் எழுத முடிகிறது ; எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே காண்பிக்க முடியாவிட்டாலும் ஓர் அளவு காண்பிக்கலாம். ஆனால் இந்தச் சிறுமி கமலாவின் மனத்தைத் திறந்து பார்ப்பதென்பது நம்மால் இயலாத காரியமாக அன்றோ இருக்கிறது!

பாம்புப் பிடாரன் சர்ப்பங்களை வெகு லாகவமாகவே பிடித்து தன் பெட்டிக்குள் அடைத்து விடுகிறான். உள்ளே அவை வெகு ஆத்திரத்துடன் சீறிக்கொண்டு கிடக்கின்றன. அந்தப் பாம்புப் பிடாரன் அந்தப் பெட்டியை நம் காலடியில் வைத்துவிட்டுப் போய்விட்டான் ; எங்கேயோ காணோம், மறைந்து விட்டான். அந்தப் பாம்புப் பிடாரனுக்குக் கூடத் தன் பெட்டியைத் திறந்து உள்ளே பார்க்கத் தைரியம் இனி வருமா என்பது சந்தேகம் தான். அப்படி இருக்கையில் பெட்டியைத் திறந்து வேறு யார் தான் பார்த்துவிட முடியும்? வேண்டுமானால் தைரியத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, ஒரு கையால் பெட்டியின் மூடியை அழுத்திக்கொண்டு பெட்டிக்கருகே காதை வைத்து உள்ளே கொந்தளிக்கும் விஷச் சீறல்களையும் குழப்பங்களையும் நடுங்கும் உள்ளத்துடன் கவனிக்கலாம்.

தன் மனம் என்னும் பாம்புப் பெட்டியைத் திறந்து பார்க்க கமலாவுக்கே தைரியம் வரவில்லை. தன் மனத்தின் ஆழத்தில் அழுந்திக் கிடந்தது என்ன என்பது அவளுக்கே தெளிவாகத் தெரியவில்லை. அவள் மாமாவும் பாட்டியும் அன்று மாலை சாமாவுக்குப் பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிடவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தது அகஸ்மாத்தாக அவள் காதில் விழுந்தது முதல் அவள் மனம் விஷ சர்ப்பமாகச் சீறிக் கொண் டிருந்தது; அவள் உள்ளம் புயலால் மோதுண்ட கடல் போலக் கொந்தளித்துக் குமுறிக்கொண் டிருந்தது. ஏன்? எதை எண்ணி ? அவள் எதிர்பார்த்து நம்பியிருந்தது தான் என்ன? அவள் உள்ளமும் உடலும் எதை வேண்டி இப்படி ஏங்கித் துடித்தன ? இந்தக் கேள்விகளை அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். ஆனால் அந்தரங்கத்தில் கூட அவற்றிற்கு உரிய பதில்களை அளிக்கத் தயங்கினாள்.

தன் அம்மான் சேய்க்குக் கல்யாணம் என்று அறிந்து சந்தோஷப்பட வேண்டியது தன் கடமை என்பதைக் கமலா தனக்குத் தானே நிமிஷத்துக்கு நிமிஷம் ஞாபகப்படுத்திக் கொண்டாள். ஆனால் அவளுடைய மனம் கடமை என்கிற கடினமான பாதையை விட்டு விலகி விட்டது. சாமாவுக்குக் கல்யாணமாம் சாமாவுக்குக் கல்யாணமாம் என்று பல தடவை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் ராமனுடைய பட்டாபிஷேகத்தை உன்னி உன்னி மூண்ட கூனியைப் போல…….. சே! அவள் கூனியா என்ன? இல்லவே இல்லை. சாமாவுக்குத் தீமையை அவள் தேடவில்லை ; தனக்கு நன்மையை நாடி னாள்—அவ்வளவுதான்.

இவ்வளவு நாளாக அவளுடைய மனத்தில் எங்கேயோ ஒரு மூலையில், தலைகாட்டக்கூட வெட்கப்பட்டுக்கொண்டு அடங்கிக் கிடந்த ஓர் ஆசை, கால சர்ப்பமாகப் படமெடுத்து ஆடிச் சீறிக்கொண்டு அரங்குக்கு வந்திருந்தது. இவ்வளவு நாளாக அவள் எண்ணிப் பார்க்கக்கூடத் துணியாத எண்ணங்கள் எல்லாம் அவள் மனத்தில் இப்பொழுது எழுந்து கோர தாண்டவம் ஆடின. தன்னுடைய எண்ணங்களின் உண்மைச் சொரூபத்தைக் கண்டு அவளே மிகவும் பயந்து போனாள்…….

தன் மாமாவுக்கும் பாட்டிக்கும் எதிரே இருந்த விஷயங்கள் கூடத் தெரியாமல் கண்கள் அவிந்து விட்டனவா என்று எண்ணிப் புழுங்கினாள் அவள். உண்மையில் தெரியத்தான் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் அவளை ஒதுக்கி விடுவதே மேல் என்று ஒதுக்கி விட்டார்களா? யோசித்து விட்டு ஒதுக்கி இருந்தார்களானால் தான் நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது என்று கமலாவுக்குத் தெரியும். அவள் மாமா பிடிவாதக்காரர். ஒரு காரியத்தில் மனம் வைத்து விட்டா ரானால் அவரை அசைப்பதென்பது முடியாது; எவ்விதமான தடைகளையும் லக்ஷியம் பண்ணாமல் செய்து முடிப்பார். அவர் ஒருதரம் சிந்தித்துப் பார்த்து வேண்டாம் என்று ஒதுக்கி இருப்பாரே யானால் அவளுக்குக் கதிமோக்ஷம் ஏது? இவ்வளவு நாள் ….! சை! சிந்தனையிலும் தான் இவ்வளவு வெட்கம் கெட்டவளாகி விடுவாள் என்று கமலா நினைத்ததே இல்லை. தன் மனத்தைக் கட்டுப்படுத்த அவள் வெகுவாக முயன்றாள் ; சிரமப்பட்டு முயன்றாள். ஆனால் அவள் மனம் கட்டுப்பட மறுத்தது. தன் இஷ்டப்படி சிந்தித்து ஆசைப் புயலை மேல் மேலும் தூண்டிவிட முயன்றுகொண் டிருந்தது.

சாமா படித்தவன்; எல்லா விஷயங்களையும் அறிந்தவன், மேதை. அவன் கண்ணுக்குத் தெரியாதது, அவன் மனத்துக்கு எட்டாதது என்று ஒன்றுமே இருக்காது என்றுதான் கமலா எண்ணியிருந்தாள். தனக்கே தெரியாமல் தன் மனத்தில் இவ்வளவு நாள் ஒண்டிக்கொண்டிருந்த இந்த சிந்தனை அவனுக்குத் தெரிந்திருக்குமா? அவனும் முன் போல் இல்லை. இதனால் தானோ? இதைச் சிந்தித்துப் பார்க்கும் போதே அவளுக்கு வெட்கம் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம்போல் இருந்தது. மனத்தில் இந்தமாதிரி எண்ணங்களை ஒளித்து வைத்துக் கொண்டு முன்போல அவனுடன் தாராளமாகப் பழகுவது எப்படி? பேசுவதுதான் எப்படி ?……… ஆனால் மறுபடியும் சிந்தித்துப் பார்த்தபோது அவனுக்குத் தெரிந்திருந்தாலும் நல்லதுதான் என்ற முடிவுக்கு வந்தாள் கமலா. அவனும் அவனுடைய அப்பாவைப் போலத்தான்; பிடிவாதக்காரர். காரியத்தைச் சாதிக்க மனம் வைத்தால் சாதித்து விடுவார்…..

பாரதக் கதைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் ஸ்வயம்வரங்களைப் பற்றிக் கமலாவும் படித்திருந்தாள். தனக்குப் பிடித்த இஷ்டமான ராஜ குமாரன் கழுத்தில் ராஜகுமாரி மாலையைப் போட்டு விடுவாளாம். கமலாவும் அதேபோல இன்று ஸ்வயம்வரம் நடத்தித் தனக்கு உகந்த மணவாளன் கழுத்தில் மாலையைப் போட்டுவிட்டாள். பூஜைகளில் மான ஸீகப் பூஜைதானே சிறந்தது என்று சொல்லுவார்கள்! அவளுடைய மானஸீக மாலையைத் தாங்கிய கழுத்தும் ஒரு ராஜகுமாரனுடையது தான்; சந்தேக மில்லை. ஆனால் அவள்தான் ராஜகுமாரி அல்லவே ! மானஸீகமாகக் கூடத் தன்னை ஒரு ராஜகுமாரியாக அவளால் பிரவனை செய்து பார்த்துக் கொள்ள முடியவில்லை….என்ன செய்வாள், பாவம்!

காரியம் ஆவதாக இருந்தால், அவள் தன் வெட்கத்தையும் தியாகம் செய்துவிடத் தயாராகவே இருந்தாள். அப்படியானாலும் அவள் அவ்வீட்டில் யாருடைய உதவியைக் கோர முடியும்? சுந்தாப் பாட்டிக்கோவெனில் அவள் பேரனிடம் அளவற்ற பிரேமையும் மதிப்பும் இருந்தது. இதில் லவலேசம் கூட அவளுக்குக் கமலாவிடம் கிடையாது.

கமலா எவ்விதத்திலும் தன் பேரனுக்கு ஈடல்ல என்றுதான் அவள் நினைத்தாள். வேறுவிதமாக நினைத்திருந்தால் அவள் தானாகவே தன் பிள்ளையிடம் அதைப் பற்றிப் பிரஸ்தாபித்திருக்க மாட்டாளா? அவள் உதவியைக் கமலா நிச்சயமாக நாட முடியாது: நாடினாலும் “பேஷ்! சாமாவுக்கு ஜானகியின் பொண்ணா! பேஷ்!” என்று நகைப்பாளே தவிர உதவி செய்யமாட்டாள். நினைத்துப் பார்க்கப் பார்க்கத் தன் தாயாரிடம் கமலாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. தன் தாயின் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால் அவள் சாமாவை மணப்பதென்பது அசாத்தியமான காரியமாக அவளுக்குப் பட்டது.

ஆனால் ஜானம்மாளுக்கும் தன் பெண் சாமாவை மணந்து கொண்டு இன்ப வாழ்க்கை நடத்தவேண்டும் என்றுதான் உள்ளூர ஆசை. அதை இரண்டொரு தரம் குறிப்பாக வெளியிட்டும் பார்த்து விட்டாள்; ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. கவனித்தாலும் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. மனம்விட்டு சொல்லித் தன் தாயின் உதவியை நாடுவதிலும் லாபம் இராது என்று கமலாவுக்குத் தெரியும். அவள் தாய் ஒரு வக்கிரம். எல்லாவற்றையும் அம்பலத்துக்கு இழுத்து மானபங்கப் படுத்தி விடுவாள்.

லஜ்ஜையை விட்டுவிட்டு அவள் சாமாவின் காலிலேயே விழுந்துவிடலாம். அவனிடமே ஒன்றையும் ஒளிக்காமல் தன் மனத்திலிருந்ததை எல்லாம் சொல்லிவிடலாம். பயன் என்ன ஆகுமோ, கடவுள் சித்தம். இப்படி நினைக்கும் போதே கமலாவுக்கு மயிர்க்குச் செறிந்தது; உடம்பு சிலிர்த்தது; மனம் திகைத்தது. தன்னுடைய அதிதைரியமான சிந்தனையைக் கண்டு அவளே திகைத்துப் போனாள். ஆனால் திகைப்பானேன்? அவள் படித்த நாவல்களில் கதாநாயகிகள் செய்யவில்லையா?

அவர்களைப் போலவே தானும் ஏன் அந்த மாதிரி ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்யக் கூடாது என்று அவள் யோசித்தாள். பயம் அறியாத குழந்தைகள் பயங்கரமான வஸ்துக்களை வைத்துக் கொண்டு விளையாடுவது போல இருந்தது அவளுடைய சிந்தனை.

சாமாவுக்கு வேறு இடத்தில் விவாகமாய் விட்டால் தன்னால் உயிர் வாழ முடியாது. உயிரைவிட்டு விட வேண்டியதுதான் என்று எண்ணினாள் கமலா.

இவை எல்லாம் அறிவீனமான சிந்தனைகள் என்று அவளுக்கே தெரியாமல் இல்லை. நடக்காத விஷயங்கள். உள்ளத்தைப் புண்ணாக்கிக் கொள்ளுவது ஒன்றுதான் இம்மாதிரியான சிந்தனைகளின் பலன் என்று அவளும் அறிவாள். விதி விட்ட வழி விடட்டும். அது நல்லவழியே விடும் என்று நம்புவதைத் தவிர வேறு கதி ஏது? இந்தக் காரி யத்தைத் தெய்வம் பார்த்து முடித்து வைத்தால் தான் உண்டு. கமலா முன்னிலும் அதிகமாகவே தெய்வத்திடம் அன்பையும், நம்பிக்கையையும் காணிக்கையாகச் செலுத்தி வரம் கேட்க ஆரம்பித்தாள்.

ஒரு வெள்ளிக்கிழமை இருக்கும். காலை, மணி எட்டு ஸ்நானம் செய்துவிட்டு அள்ளிச் சொருகிய கூந்தலுடனும் பழம் புடைவையுடனும் நெற்றியில் குங்குமம் பளபளக்க பூஜை அலமாறிக் கெதிரே கையைக் கூப்பிக்கொண்டு கமலா நின் றாள். அவள் கண்கள் மூடியிருந்தன. ஒரு ஸ்லோகத்தை அவள் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவளுடைய சிந்தனைகள் கனவு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.

வழக்கமாக தபால் பார்க்கத் தபாலாபீஸ் போய்விட்டு வரும் சாமா கையில் ஒரு கடிதத்துடன் உள்ளே வந்து அவளை இந்நிலையில் கண்டான். அவள் முகத்தில் படர்ந்திருந்த பாவத்தைக் கண்டு அவன் துணுக்குற்றான். அவளுடைய அஞ்சலியையும் பரவசத்தையும் கலைக்காமல், சந்தடி செய்யாமல் அவள் அருகிலே போய் நின்றான். கமலா கனவு லோகத்திலிருந்து திரும்பித் தன் சுய உணர்வு பெற்றுக் கண்ணைத் திறந்தபோது அவள் திருஷ்டியில் முதலில் பட்டது சாமாவின் உருவம் தான். தன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்த்து விட்டார்: அதன் சூசகம்தான் இது என்று அவள் எண்ணி அகமகிழ்ந்தாள். அவள் மகிழ்ச்சி முகத்திலும் ஜ்வலித்தது. தன் அத்தங்காள் உண்மையிலேயே அழகிதான் என்று அந்த வினாடியில் சாமாவுக்குத் தோன்றிற்று.

ஆனால் கமலா, சுபாவமாக உள்ள ஒரு நாணத்துடன் தன் மனத்திலுள்ளதை மறைக்கவே விரும்பினாள். முகத்தைச் சற்றே திருப்பிக் கொண்டாள். அவள் முகம் சிவந்தது. தன் அம்மான்சேய் இதையெல்லாம் கவனிக்காமல் இருக்க வேண்டுமே என்று சமையல் அறையில் அவசர காரியம் இருப்பது போல நகர்ந்துவிட முயன்றாள்.

“என்ன கமலா? ” என்றான் சாமா. “நல்ல ஆம்படையானாகச் சீக்கிரம் வரணும் என்றுதானே பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாய்? வந்து விடுவான், பயப்படாதே!”

“போ சாமா!” என்று கமலாவின் உதடுகள் முணுமுணுத்தன. அவள் இரக்கத்துடனும், அளவு கடந்த அன்புடனும் அவனைச் சிறிது நேரம் பார்த்தாள்.

இடையில் குறுக்கிட்டது தெய்வம். குறுக்கிட் டது தெய்வமாகத்தான் இருக்க வேண்டுமென்று பட்டது கமலாவுக்கு. அந்தத் தெய்வம் நாராயணையர் வீட்டு வேலைக்காரி கோவிந்தம்மாளின் உருவத்தில் அவளுக்கு உதவி செய்ய முன் வந்தது. ‘புருஷனைத் தேடிக்கிட்டு எங்கே போவணும்? வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கி யாராவது எங்கேயாவது அழுவாங்களா ? ராசாவும் ராணியுமாட்டமா ரெண்டு பேரும் இருக்கச்சே ஜோடி தேடிக்கிட்டு எங்கே போவணும்?’ என்றாள் கோவிந்தம்மாள்.

இதைத் தெய்வத்தின் குரலாகவே எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தாள் கமலா. திரும்பிக் கோவிந்தம்மாளைப் பார்த்தாள்.அடுத்த வினாடி சாமாவின் கண்கள் தன்னையே உற்றுநோக்கிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். சட்டென்று மனத்தில் கொந்தளித்தது எல்லாவற்றையும் ஒருவிதமாக அடக்கிக் கொண்டு “வேலை கிடக்கு. நான் போறேன் ” என்று சமையலறையை நோக்கி நடந் தாள். அவள் முகத்தைத் திருப்பி மறைத்துக் கொண்டாளே தவிர, குரலில் தொனித்த எக்களிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை.

கோவிந்தம்மாளின் வார்த்தைகள் சாமாவின் மனத்தில் எந்த விதமான எதிரொலியையும் எழுப்பவில்லை. அவன் மனத்திலே எவ்விதமான அலைகளையும் கிளப்பவில்லை. கமலாவின் மனத்தில் இருந்தது போல அவன் மனத்திலும் ஏதாவது இருந்திருக்குமேயானால் கோவிந்தம்மாளின் குரல் தெய்விகமான அசரீரியாக அவன் காதிலும் விழுந் திருக்கும்.

“கோவிந்தம்மா சொல்றதைக் கேட்டயா கமலா! என்னைவிட நல்ல மாப்பிள்ளையாக உனக்குக் கிடைக்க மாட்டான் என்று கோவிந்தம்மாள் நினைப்புப் போலிருக்கு. அதில்லாமே அண்ணனும் தங்கையும் போல இவ்வளவு நாள்……..”

சாமாவின் வார்த்தைகளுள் மற்றவைகள் எல்லாம் கமலாவின் காதில் விழவே இல்லை. விழுந்த வரையில் போதும், போதும், போதும் என்று இருந்தது அவளுக்கு. அவள் முகபாவத்தை சாமா அப்போது பார்த்திருந்தானேயானால் உண்மையிலேயே பீதி அடைந்திருப்பான். நல்லவேளை; சமையலறையில் யாரும் இல்லை என்று சந்தோஷப்பட்டாள் கமலா. தன் கண்களில் திடீரென்று துளித்த நீரைத் துடைத்துக் கொண்டாள். நிர்மலமான வானத்தினின்றும் முழங்கியதே இப்பேரிடி ! நெஞ்சை வந்து ஏதோ கொட்டைப் பாக்கு அடைப்பது போலிருந்தது அவளுக்கு.

கூடத்திலிருந்தபடியே சாமா “உன்கிட்டே ஒரு சமாசாரம் சொல்லணும்னு வந்தேன். போய்ட்டயே !” என்றான்.

குரலை ஒருவிதமாகச் சமாளித்துக் தன் கொண்டு கமலா “நீ சொல்லேன், கைக்காரியமா யிருக்கேன் ” என்றாள்.

சமையலறை வாசல்படி வரையில் வந்தான் சாமா. பிறகு தன் கையிலிருந்த கடிதத்தைப் பார்த் துக் கொண்டே அன்னிக்குப் போட்டோவிலே பார்த்தயே ஒரு பெண், என்னோடே படிச்சான்னு சொன்னேனே! ஞாபகமிருக்கா? அவள் நாளைக் கார்த்தாலை மெயிலில் வரதாக எழுதியிருக்காள். விடியகாலம்பற நான் கும்பகோணம் ஸ்டேஷனுக்குப் போய் அவளை அழைச்சிண்டு வரணும்” என்றான்.

“வாயேன்” என்றாள் கமலா. அதாவது வாயேன் என்று சொன்னதாக நினைத்துக் கொண்டாள்: அவ்வளவுதான். அவளுடைய உதடுகள் அசைந்தனவே தவிர வார்த்தை வெளிவரவில்லை. வீட்டில் அவளுக்கிருந்த விரோதிகள் போதாதென்று வெளியே இருந்தும் ஒரு விரோதி வந்து கொண்டிருந்தாள் ?

சாமா சமாசாரத்தைச் சொல்லிவிட்டுப் போய் விட்டான். தன் வார்த்தைகளால் கமலாவின் உள்ளத்தில் எழுந்து குமுறிய புயலை அவன் அறி வில்லை. இப்படி எழுந்த அப்புயல் எப்படி அடித்து ஓய்ந்தது என்று சொல்ல வேண்டாமா? பெண்களுக்கு உள்ளது ஒரே ஒரு கூர்மையான, எல்லையற்ற சக்திபடைத்த ஆயுதம் தான் ; அவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் உள்ள ஆறுதலும் அதுவே தான். கமலாவின் உள்ளத்தில் எழுந்த புயல் கண்ணீர் மாரியாக மாறியது.

கமலாவின் தாயார் இடுப்பில் ஈரப் புடைவையைச் சுற்றிக்கொண்டு, குடத்தில் மடி ஜலத்துடன் உள்ளே வந்தாள். தன் பெண்ணைப் பார்த்தவுடன் திடுக்கிட்டு “என்னடீ அது ? வெள்ளிக்கிழமையும் அதுவுமா, அடுப்பங் கரையிலே உட்கார்ந்து அழறே?” என்று கேட்டாள்.

“அழல்லே……..” என்றாள் கமலா. ‘புகை…. கண்ணிலே ஜலம் வந்துடுத்து” என்றாள். கண்ணைத் துடைத்துக்கொண்டாள். மனத்தைத் தேற்றிக்கொள்ள முயன்றாள்.

ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள் ஜானம்மாள். “பொய்யாப் பாத்துப் பொருந்தும்படியாச் சொல்லு. அடுப்பு இன்னும் மூட்டவே இல்லை. அதுக்குள்ளே புகை வந்துட்டதாம், புகை. பேஷ்! ஆம்படையானை நினைச்சுண்டு அழ ஆரம்பிச்சிட் டயோ?” என்று சற்றுக் கொடூரமாகவே கேட்டாள்.

“ஆமாம்! ஆம்படையானுக்குத்தான் இப்போ அழறேன்?” என்று வெடுக்கென்று உண்மையையே சொல்லிவிட்டு கமலா தெய்வமே துணை என்று மறுபடியும் பூஜை அலமாறியண்டை போய்விட்டாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *