பசி
க. நா. சுப்ரமண்யம்

14

நாராயணையர் மனத்தில் ஏற்பட்டிருந்த கசப்பின் காரணமாக அவ் வருஷமே சாமாவுக்குக் கல்யாணம் செய்து வைத்து விடுவது என்ற பேச்சு ஒரு வழியாக நின்று விட்டது. தம் பிள்ளைக்கு அப்போதிருந்த மனநிலையில் சுந்தாப் பாட்டியால் கூட எதையும் வற்புறுத்திச் சொல்ல முடியாமல் போய்விட்டது. அதுவும் நல்லதுதான் என்று சாமா எண்ணிக் கொண்டான். அடுத்த வருஷம் வரையில்; குறைந்த பக்ஷம் தை மாதம் வரையிலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று சாமா சந்தோஷப்பட்டான். அப்போது அவன் எந்தப் பெண்ணையும் கல்யாணம் செய்துகொள்ளத் தயாராக இல்லை- ராஜியைக் கூடத்தான்.

இப்படியாகப் பரிக்ஷையில் கோட்டை விட்டதில் சாமாவுக்கு இரட்டிப்புத் திருப்தி ஏற்பட்டது. முதல் பலன் எழுத்தில் ஈடுபடத் தூண்டுதல்: இரண்டாவது கல்யாணப் பேச்சு நின்றுவிட்டது.

இவ்வளவு காலம் வீண் விரயமாகிக் கொண்டிருந்த நாழிகைகளை, வினாடிகளை அவன் இப்போது மிகவும் செட்டாக, காசுகளைக் கஞ்சன் ஒன்றன் பின் ஒன்றாக இழுத்துப் பிடித்துச் செலவு செய்வது போல, செலவிட ஆரம்பித்தான். ஒவ்வொரு விநாடியையும் கசக்கிப் பிழிந்து அதிலிருந்து எவ்வளவு நற்பயன் பெற முடியுமோ அவ்வளவையும் பெற்றுவிட முயன்றான். அவனுக்கு எழுத்திலே அளவு கடந்த உத்ஸாகமிருந்தது. ஒரு நாளில் இருபத்தி நாலு மணி நேரமும் உட்கார்ந்து எழுதிக் கொண்டே இருந்தால் கூட நல்லது என்று அவன் எண்ணினான். அப்பொழுது அவனுக்கு எழுத விஷயங்களும் நிறைய இருந்தன. அவன் தன் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி அவற்றிற்கு இன்ப மயமான உருவம் கொடுக்க முயன்று கொண் டிருந்தான். எழுதும் போது அவன் மனத்தில் இருந்த குழப்பங்கள் எல்லாம் தாமாகவே தீர்ந்துவிட்டன. முன்போல இப்பொழுதெல்லாம் ஏக்கங்கள், தீராத பசிகள், முடிவு காண முடியாத அர்த்தமற்ற சிந்தனைகள் அவனைப் பாதிப்பதில்லை. எழுதுவதிலே ஒரு சக்தியையும் ஆனந்தத்தையும் அவன் கண்டு கொண்டான்.

சுருக்கமாகச் சொன்னால் அவன் ஒரு கலைஞனாகி விட முயன்றுகொண் டிருந்தான். அவன் முயற்சிகளில் வெற்றி பெறுவானா எவ்வளவு தூரம் வெற்றி பெறுவான்? என்பதெல்லாம் நாளடைவில் தான் தெரிய வேண்டும். அவனுக்கே எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. அவனுக்கு அளவற்ற தன்னம்பிக்கை இருந்தது. ஆனால் அத்தன்னம்பிக்கைக்குப் போதிய ஆதாரம் இல்லையே!

சென்னைப் பத்திரிகைகள் இரண்டு அவனுடைய கதைகளை வந்தனத்துடன் திருப்பி அனுப்பி விட்டன. அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் அனுப்பியவை இன்னும் திரும்பி வர நாளாகவில்லை போலும் என்று அவன் எண்ணினான். அவையும் திரும்பியே வந்துவிடும் என்றுதான் சாமா எதிர்பார்த்தான். இலக்கிய ஆசிரியனின் வாழ்க்கை சுலபமானதல்ல என்பதை அவன் படித்தறிந்தவன் தான். இருந்தாலும் தன் வழி மட்டும் சுலபமாக இருக்காதா? நியதிகளை எல்லாம் மீறித் தெய்வம் தனக்கென்று கொஞ்சம் சலுகை காட்டாதா என்று ஓர் ஆசையும் அவன் உள்ளத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது. இப்படி நினைப்பது இயற்கை தானே.

எழுதி அலுத்துப் போன நாட்களில் அவன் கும்பகோணம் போவான். சேர்ந்தாற்போல சில நாள் அவனால் எழுத முடியாமலே போய்விடும்; சாம்பமூர்த்திராயருடன் முன் போலத் தத்துவ விசாரம் செய்வான். அல்லது அத்தங்காள் கமலாவுக்கு வரன் தேடப் போவான்.

‘சாமாவின் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு நின்று விட்டதே தவிர, கமலாவின் கல்யாணப் பேச்சு நின்றுவிடவில்லை. எப்படி நிற்க முடியும்?’ அவளுக்கோ வயதாகிக் கொண்டிருந்தது. ஜானம்மாளோ ஓயாமல் குறைப்பட்டுக் கொண்டிருந்தாள். சுந்தாப்பாட்டி “நடக்க வேண்டிய இடத்தில் நடக்க வேண்டிய சமயத்தில் தானே நடக்கும். வேளை வர வேண்டாமா?” என்று வேதாந்தம் பேசினாள். நாராயணையர் நல்ல நாளில் இதைப் பற்றிக் கவனித்திருக்கவே மாட்டார். ஆனால் இப்பொழுது அவருக்குத் தன் மனக்கசப்பை மறக்க, முன் போலப் பழைய நாராயணையராவதற்கு இது ஒரு நல்ல “சாக்காக” இருந்தது. கமலாவுக்கு வரன் தேட முற்பட்டார்.

அவர் செய்யத் தயாராயிருந்த “லௌகிக”த்துக்கு ஒப்புக் கொள்ளும் பிள்ளையாக யாரும் கிடைக்கவில்லை. ஆயிரம், ஜாஸ்தி போனால் ஆயிரத்தைந்நூறுக்கு மேல் செய்ய அவரால் முடியாது. முதல் தாரமாகப் பார்த்த இடங்கள் சரியாக இல்லை; திருப்திகரமாக இல்லை. இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்து விடலாம், நல்ல இடம் கிடைத்தால் என்று அவர் தேடினார்.

கும்பகோணத்திலேயே ஒரு வரன் கிடைத்தது. இரண்டாம் தாரம் தான். முப்பத்தெட்டு வயது இருக்கும். பார்க்கக் கிழவனாக இல்லாமல் முப்பது வயது மதிப்பிடும் படியாக சுமாராக இருந்தான். கையில் ஐந்நூறு ரூபாய் பணமும், பெண்ணுக்கு முந்நூறு ரூபாய் நகையும் ஒரு நாள் கல்யாணச் செலவும் என்று நாராயணையர் பேசினார். குலம் நல்ல குலம். ஆஸ்தி சுமார் லக்ஷம் வரையில் இருந்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். மூத்த மனைவியைப் படாத பாடும் படுத்தி வைத்ததாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

“அப்படிப் பட்டவன் இளையாளிடம் பொட்டிப் பாம்பா அடங்கிக் கிடப்பான்” என்றாள் சுந்தாப் பாட்டி.

பெண்ணைப் பார்த்துப் பிள்ளைக்குப் பிடித்திருந்தால் கல்யாணம் செய்து கொள்ளுவதாகப் பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்கள். அவர் களுக்கு சாத்தனூர் வரச் சௌகரியம் இல்லாமல் போய் விட்டதனால் கமலாவை, கும்பகோணத்தில் ஒரு நண்பர் வீட்டில் பிள்ளை வீட்டார் பார்க்க நாராயணையர் ஏற்பாடு செய்தார்.

கமலாவை சாமா தான் குதிரை வண்டியில் கும்பகோணத்துக்கு அழைத்துக் கொண்டு போக நேர்ந்தது. வழியில் நடுவே நடந்த ஒரு சம்பவம் சாமாவின் மனத்தை விட்டு என்றுமே அகலவில்லை.

வேகமாகப் போய்க் கொண்டிருந்த குதிரை வண்டியைத் தெருவில் போனவர்கள் யாரோ சிலர் “நிறுத்து நிறுத்து” என்று கத்தி நிறுத்தினார்கள். என்னவோ, ஏதோ என்று சாமா அவசரம் அ சரமாக வண்டியை விட்டு இறங்கினான். வண்டியை நிறுத்தியவர்கள் வண்டிக்காரனைக் கூப்பிட்டுக் கடையாணி கழண்டிருக்கு பார்……..” என்று எச்சரித்தனர். கழண்டிருந்த கடையாணியைச் சரிப்படுத்தினான் வண்டிக்காரன். சாமாவும் ஏறி உட்கார்ந்ததும் வண்டி கும்பகோணத்தை நோக்கிக் கிளம்பிற்று.

“ஆச்சரியம்தான். இவ்வளவு தூரம் கடையாணி இல்லாமலே வந்திருக்கு நம்ப வண்டி” என்றான் சாமா, கமலாவைப் பார்த்து.

கமலா உடனே பதில் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய முகபாவத்தைக் கொண்டே அவள் மனத்திலிருந்ததை சாமா ஊகித்துக் கொண்டான். கமலாவும் சிறிது நேரம் கழித்து “இதிலே என்ன ஆச்சரியம்! என் வாழ்க்கை வண்டியே கடையாணி இல்லாமே தானே ஓடிக்கொண் டிருக்கிறது! ” என்றாள். குப்பென்று அவள் கண்கள் நிறைந்து விட்டன; பல பல வென்று கண்ணீர் உதிர்ந்தது

கற்பனையும் அறிவும் சிறிது படைத்திருந்த சாமாவுக்கு உள்ளத்தில் என்னவோ செய்தது. அவன் மனம் நெகிழ்ந்தது.

“அழாதே கமலா! அழாதே!” என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை அவனுக்கு. ஆனால் அவன் சொல்லச் சொல்ல அவள் அழுகை அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. இந்தப் பெண்ணின் அழுகையும் ஏக்கமும் அவன் நெஞ்சைப் பிளந்தன. அவள் பசியைத் தீர்க்கத் தன்னால் ஆகும்; தன்னால்தான் ஆகும் என்பதை அவன் அறிந்தான். அந்த அறிவுடனேயே தோன்றிற்று அதைத் தீர்க்க வேண்டியது தன் கடமை என்ற ஓர் எண்ணமும். சட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக “சாத்தனூருக்குத் திருப்பு வண்டியை. இனிமேல் கும்பகோணத்துக் குப் போக வேண்டாம் ” என்றான் சாமா.

வண்டிக்காரன் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தான். அவசரம் அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் கமலா.. “இது என்ன விந்தை?” என்று, தன் காதுகளை நம்ப மாட்டாமல் அவள் நினைத்தாள். தன் இஷ்டப்படியும் நடந்துவிடுமா? அழுகையிலிருந்து ஆனந்தத்துக்கு மாறிய வேகத்தை அவளால் தாங்க முடியவில்லை. ஆனால் சந்தேகத்தையும் தாள முடியவில்லை.

“உன் இஷ்டப்படியே நடக்கும் கமலா. சந்தேகப்படாதே!” என்று, சாமா அவள் பார்வையில் தெரிந்த சந்தேகத்துக்குத் தீர்மானமாக பதில் அளித்தான்.

மறுபடியும் கமலாவின் கண்களில் நீர் துளித்தது-இந்தத் தடவை துக்கத்தால் அல்ல. நிச்சயமாக துக்கத்தால் அல்ல.

வண்டி திரும்பிச் சாத்தனூரை நோக்கிக் கிளம்பிற்று.

அந்த மூன்று மைல்களையும் எவ்வளவு சீக்கிரத்தில் கடந்துவிட்டது வண்டி என்று கமலாவும் சாமாவும் ஆச்சரியப்பட்டார்கள்.

பெண் பார்க்க வந்து காத்திருந்த மாப்பிள்ளை வீட்டார் கோபமாகக் கல்யாணப் பேச்சை முறித்துக் கொண்டு போய் விட்டார்கள். ஏன் சாமாவும் கமலாவும் வந்து சேரவில்லை என்று விசாரித்துக் கொண்டு நாராயணையர் வந்தார். அவரையும் சுந்தாப்பாட்டியையும் சமாதானம் செய்ய சாமா மிகவும் சிரமப்படவேண்டி இருந்தது. அவ்வளவு சிரமத்தையும் ஆனந்தத்துடனேயே பட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

தன் விருப்பப்படியே சாமாவுக்கு அந்த ஆனி மாதத்திற்குள் கல்யாணம் ஏற்பாடாகி விட்டது பற்றி சுந்தாப் பாட்டிக்கு மிகவும் திருப்தி. ஆனால் பெண்ணைப்பற்றிக் கொஞ்சம் அதிருப்திதான். “உலகில் எல்லாமே நம் இஷ்டப்படி நடந்து விட்டால்……..!’ என்று வேதாந்தம் பேசி அவள் தன் னைத் திருப்தி செய்துகொண்டாள்.

நாராயணையர் வழக்கம்போல மகாலிங்கையர் வீட்டுத் திண்ணையில் வீற்றிருந்தபடியே தன் பிள்ளையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்: “அவனாலே எனக்கிருந்த நிம்மதி எல்லாம் போயிடுத்து! பரிக்ஷையிலே தேறாமல் போனது போறாதுன்னு இப்போ தன் அத்தங்காளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறான். என்ன பண்றது! இதை முன்னேயே சொல்லித் தொலைத் திருந்தாலும் நான் அவளுக்கு வரன் தேடிண்டு இவ்வளவு நாள் வீண் அலைச்சல் அலைந்திருக்க மாட்டேன்.”

“பிள்ளையைப் படைத்த சுகம் அவ்வளவுதாண்டாப்பா!” என்று துக்கம் கொண்டாடினார் மகா லிங்கையர். அவருக்குப் பரமதிருப்தி சாமா தேறாமல் போனதில். அவர் சுபாவம் அப்படி.

ஆனால் நாராயணையருக்குக் கமலாவைப் பற்றிய வரையில் திருப்திதான். அவளிடம் அவர் ஒரு குற்றம் கூடக் கண்டதில்லை அதுவரையில். சுந்தாப் பாட்டியின் வற்புறுத்தலின் பேரில்தான் அவர் வேறு இடத்தில் அவளுக்கு வரன்தேட முற் பட்டதெல்லாம்.

ஜானம்மாளுடைய திருப்தியைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சிலநாள் அவள் தன்னுடைய குணாதிசயங்களைக் கூட வெளியே காட்டாமல் இருக்கத் தீர்மானித்து விட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முகூர்த்தத் தேதி குறிப்பிட்டானதும் ராஜிக்குச் சாமா கடிதம் எழுதினான். அவள் பதில் எழுதவில்லை: தானே நேரில் வந்துவிட்டாள். கல்யாணத்துக்கு ஏழெட்டு நாட்களுக்கு முன்னதாகவே இருந்து கல்யாணத்தை நடத்திவைக்க வந்து விட்டாள். வந்தவுடன் அவள் முதலில் சாமாவைக் கூடச் சந்திக்கவில்லை; சமையலறையில் பாடிக் கொண்டே அடுப்பண்டை காரியம் பார்த்துக் கொண்டிருந்த கமலாவிடம் நேரே போனாள். அவர்கள் என்ன பேசினார்களோ ஈசுவரனுக்குத் தான் வெளிச்சம். ஆனால் ஒன்று. இடையில் தனக்குச் சாமா எழுதிய கடிதத்தைப்பற்றி அவள் பிரஸ்தாபிக்கவே இல்லை.

ராஜி வந்ததை அறிந்து சாமா மாடியிலிருந்து இறங்கிவந்தான். அவனைக் கூடத்தில் சந்தித்ததும் ராஜி “இதுதான் சரி. நடுவில் அசட்டுத்தனமாக……” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் அதை முழுதும் சொல்ல விடாமல் அவளைத் தடுத்து பரஸ்பரம் தங்கள் நண்பர்களைப்பற்றிப் பேச்சைத் திருப்பினான் சாமா.

சாத்தனூர் ஸர்வமானிய அக்கிரஹாரத்திலே ஒரு தலைமுறையில் நடந்த கல்யாணங்களிலே மிகவும் சிறந்த கலியாணம் அதுதான் என்று மகாலிங்கையர் கூட, மனமில்லாவிட்டாலும், ஒப்புக் கொள்ளத்தான் வேண்டி யிருந்தது.

“ என் பிள்ளையின் கல்யாணம் இப்படி இருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு பாடுபட்டேன்” என்றார் நாராயணையர்.

கமலாவின் கழுத்தில் சாமா தாலிகட்டிய அரை மணி நேரத்திற்குள் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அமெரிக்காவிலிருந்து வந்திருந்தது அது. அமெரிக்காவின் சிறந்த பத்திரிகை ஒன்றிலிருந்து அவன் கட்டுரை ஒன்றை அங்கீகரித்து, வந்தனம் செலுத்தி, சன்மானம் அளிப்பதாகவும் தெரிவித்துக் கடிதம் வந்திருந்தது.

விஷயத்தை அறிந்ததும் ஜானம்மாள் “என் பொண்ணின் அதிர்ஷ்டம்” என்றாள்.

சாமாவும் அப்படித்தான் நினைத்தான்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *