
பசி
க. நா. சுப்ரமண்யம்
10
ஒரு மாதத்திற்குள் இரண்டாவது தடவையாக ஸ்ரீனிவாஸனின் மோட்டார் கார் சாத்தனூர் ஸர்வமானிய அக்கிரஹாரத்தின் அமைதியைக் கெடுத்துக்கொண்டு, ‘பூம் பூம்’ என்று ஊதிக் கொண்டு வந்து சாமாவின் வீட்டிற்குமுன் நின்றது. இந்தத் தடவை சாமாவையும் ஸ்ரீனிவாஸனையும் தவிர அந்தக் காரில் இன்னும் இருவர் – பெண் மணிகள் – இருந்தனர். அதில் ஒருத்தி சாமாவின் கல்லூரி போட்டோ மூலம் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவள். ஜட்ஜ் வீட்டுப் பெண் ; ராஜி என்ற பெயருடையவள் ; சாமாவுடன் பீ.ஏ. வகுப்பில் படித்தவள்; போட்டோவில் சரிசமானமாக அவனுடன் உட்கார்ந்திருந்தவள். அவளுடன் வந்தவள் அவளுடைய அத்தை : ஜட்ஜின் சகோதரி: விதவை. சாத்தனூர்க் கோயிலில் முடி இறக்கிப் பிரார்த்தனை செலுத்த ஒரு குழந்தையையும் உடன் அழைத்து வந்திருந்தாள். அவர்களுடைய வருகைக்கு முக்கிய காரணம் அதுதான். ராஜி தன் நண்பனைக் காண வருவதாகச் சொல்லியிருந்தபடி சந்தர்ப்பம் கிடைத்த போது வந்திருந்தாள்.
கல்லூரியில் படித்துப் பட்டம்பெற்ற மாணவிகளைப் பார்க்காத வாசகர்கள் இந்தக் காலத்தில் இருப்பது துர்லபம். அதனால் ராஜியைப் பற்றி அதிகமாக வர்ணிக்காமல் விட்டுவிடுவதே மேல் என்று நமக்குத் தோன்றுகிறது. எல்லோரும் அறிந்த விஷயத்தை வர்ணித்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை அல்லவா! ஆனால் ஒன்று. ராஜி உண்மையிலேயே அழகி.
ராஜியின் வருகையால் நாராயணையர் வீட்டில் மட்டுமல்ல, ஸர்வமான்ய அக்கிரஹாரம் முழுவதிலுமே ஒரு பரபரப்பு ஏற்பட்டிருந்தது. தெரு வாசிகளில் முக்கால்வாசிப் பேர்வழிகள் பாரதியார் சொல்லுவதுபோல “விந்தை மனிதர்கள்.” பெண்கள் என்றால் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு அடங்கிக் கிடக்க வேண்டியவர்கள் என்ற கொள்கையை உடையவர்கள். வாழ்க்கையில் தினசரி நடைமுறையில் முழுவதும் சாத்தியமில்லாவிட்டா லும், பெயரளவில், இலைமறைவு காய்மறைவில், கொள்கையைப் பற்றிய வரையில் அப்படித்தான். நாகரிகத்தில் முற்றிப் பழுத்த பெண்மணிகளை அவர்கள் அதுவரையில் தூரத்திலிருந்தும் காணக் கிடைக்கப் பெறாதவர்கள். திடீரென்று இப்படி நெருங்கிப் பார்க்க இப்பொழுது சந்தர்ப்பங் கிடைத்தவுடன் திடுக்கிட்டுப் போய் விட்டார்கள். ஆனால் அந்த சந்தர்ப்பத்தைப் பூராவும் பயன்படுத்திக்கொள்ளத் தெருவில் யாரும் முற்படவில்லை.
தெருவில் ஸ்திரீ ஜனங்களிடையே ராஜியைப் பற்றி இரண்டாவது அபிப்பிராயமே கிடையாது. விசாரணை எதுவும் இல்லாமலே அவள் எல்லாவிதத்திலும் முழுதும் கெட்டவள் என்று தீர்மானித்து விட்டார்கள். ஏதோ கொடிய விஷ ஜந்துவைப் பார்ப்பது போல அவளைப் பார்த்தார்கள். தங்களைப் போல ஒரு பெண்ணாக அவளை அங்கீகரிக்க அவர்களால் முடியவில்லை. உடலைப்பற்றிய வரையில் அவளும் ஒரு ஸ்திரீயைப் போலத்தான் இருந்தாள்..
எனினும் தங்களுக்கு இருந்தது போலவே அவளுக்கும் உணர்ச்சிகள், ஆசைகள், பாசங்கள் இருக்குமே என்ற சந்தேகம் கூட அவர்களுக்கு உதிக்க வில்லை. அவள் பேச்சு பெண்கள் பேச்சுப் போலத் தான் இருந்தது; ஆனால் முகத்தைப் போல அதுவும் பவுடர் பூச்சாகவே இருக்கலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். நாராயணையராத்து ஜானம்மாள் ராஜியைப் பற்றிய வரையில் இந்த கோஷ்டியைச் சேர்ந்தவள் தான். சாமாவுக்காக ஒன்றும் சொல்லாமல் தன்னாலான வரையில் வாயைக் கட்டிக் கொண்டு ஒதுங்கிப் போய்விட்டாள். ராஜியைக் கண்டாலே அவளுக்குக் கட்டோடு பிடிக்க வில்லை. அந்தப் பெண் தன் மருமகனுடனும், அண்ணாவுடனும் சரிசமானமாக (ஆங்கிலத்திலும் கூட) வார்த்தையாடுவதைக் காணக் காண அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.
சுந்தாப் பாட்டியைப் பற்றிய வரையில் இந்தச் சங்கடம் இல்லை. அவள் தன்னுடைய சின்னப் பிள்ளைகளுடன் சிலகாலம் கல்கத்தாவில் வசித்திருந்தாள். படித்த நாகரிகமான பெரிய மனிதர் வீட்டுப் பெண்களைக் கண்டு பேசிப் பழகி அறிந்தவள் அவள். ராஜியைக் கண்டவுடனேயே அவள் நாகரிக ஏணியில் அதிகப் படிகள் ஏறாதவள் என்பது சுந்தாப் பாட்டிக்குத் தெரிந்துவிட்டது அவள் கல்கத்தாவில் அறிந்திருந்த பல பெண்களைப் போல ராஜி நாகரிகத்தில் முற்றிப் பழுத்து அழுகியவள் அல்ல. சுந்தாப் பாட்டிக்கு ஆங்கிலம்தான் சரியாகத் தெரியாதே தவிர மற்றபடி அவள் அறிவிலும் விவேகத்திலும் குணங்களிலும் யாருக்கும் தாழ்ந்தவளல்ல. அவளுடன் கால்மணி நேரம் பேசுவதற்குள்ளாகவே இது ராஜிக்கும் தெரிந்து விட்டது.
வந்த அன்று மத்தியான்னம் சுந்தாப் பாட்டியிடம் ராஜி “சுவாமிநாதன் படிப்பில் ஏன் இவ்வளவு கெட்டிக்காரனாக இருக்கிறான் என்று இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது” என்றாள்.
“ஏன்?”
“இப்படிப்பட்ட பாட்டியைப் படைத்தவன் கெட்டிக் காரனாக இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் ?”
“போடி போக்கிரி” என்றாள் சுந்தாப்பாட்டி. அப்படிப் பார்த்தால் உன் பாட்டியும் கெட்டிக் காரியாகத்தான் இருக்கணும்.”
ராஜி வரப்போகிறாள் என்று சாமா சொல்லிச் சுந்தாப் பாட்டி அறிந்தபோது அவளுக்கு ஒரு சந்தேகம் தட்டிற்று. அந்த சந்தேகத்தை அவள் தன் பிள்ளையிடமும் சொன்னாள். கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதிப்பானோ மாட்டானோ என்று அவர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கையிலே அவன் தானாகவே இந்த ராஜி என்ற பெண்ணை மணம் செய்து கொள்ளுவது என்று மீனம் வைத்து வரித்து விட்டானோ என்னவோ என்று அவள் எண்ணினாள். பெண்ணின் குலம், கோத்திரம், ஸ்திதி, எல்லாம், சாமா சொன்னபடி, திருப்திகரமாகவே இருந்தன. எதிர்பார்த்ததற்குமேல் சற்று அதிகமாகவே இருந்தன என்று தான் சொல்லவேண்டும். மற்றபடி அவள் எப்படி. இருப்பாளோ? நல்லவளோ கெட்டவளோ, சாமாவுக்கு ஏற்றவளோ, ஏற்காதவளோ என்ற கவலை சுந்தாப் பாட்டியையும் நாராயணையரையும் வாட்டிற்று. படித்தவன்தான்; கெட்டிக்காரன்தான். எனினும், சாமா குழந்தைதானே. அவன் வெகுளி ; அவனை ஏமாற்றுவது சுலபம். அதுவும் கூடப் படித்த பெண்ணுக்கு மிகவும் சுலபம் என்று சுந்தாப் பாட்டி எண்ணினாள்.
ராஜியைக் கண்டபின் இக்கவலை அகன்று விட்டது. சாமாவுக்கு எல்லா விதங்களிலும் ஏற்ற பெண்தான் அவள் என்று சுந்தாப் பாட்டி தீர்மானித்துவிட்டாள். ஏற்ற பெண் என்று சொல்லி விட்டால் மட்டும் போதுமா? ஏற்காதவள் என்று கூடத்தான் அதே மூச்சில் சொல்ல வேண்டி யிருந்தது. இருவருடைய ஸ்திதியிலும் விசேஷ வித்தியாசம் இருந்தது. சாமாவுக்கு ராஜி கிட்டாதவள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி எண்ணிய சுந்தாப் பாட்டி இது பற்றிச் சிறிதும் வருத்தப்படவில்லை. சாமாவுக்குப் படித்த பெண், நாகரிகமான பெண் மனைவியாக வாய்க்காதிருப்பதே நல்லது என்று சுந்தாப் பாட்டி எண்ணினாள். சாமாவின் அறிவில் ஒரு பகுதி சரியாக வளர்க்கப்படாமலே மழுங்கிக் கிடந்தது. அதை ஈடுகட்ட குடித்தனப்பாங்கான ஒரு பெண் வந்தால்தான் சரிப்படும் என்பது சுந்தாப் பாட்டியின் அந்தரங்க எண்ணம். சாமாவும் ராஜியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பியவனாகத் தோன்றவில்லை. அவர்களுடைய சம்பாஷணையில் தோழமை தொனித்ததே தவிர காதல் தொனிக்கவில்லை. அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான் என்று சுந்தாப் பாட்டியும் நாராயணையரும் முடிவு கட்டிக் கொண்டார்கள்.
ராஜி வரப்போகிறாள் என்ற செய்தி கேட்டவுடன் அவளை ஒரு விரோதியாகப் பாவித்து அப்படியே அவளை வரவேற்கவும் கமலா தயாராக இருந்தாள் என்று ஏற்கெனவே சொன்னோம் அல்லவா? அந்த விரோதபாவம், ராஜி வந்ததும் அவளுடன் அரைமணி நேரம் பேசுவதற்குள்ளேயே மறைந்து விட்டது. அவள் விரோதி அல்ல. அவள் தன் அம்மான் சேயைக் காதலனாகவோ கணவனாகவோ கருதவில்லை என்று கமலா, பெண்களுக்கே உரிய ஒரு நுண்ணறிவுடன் அறிந்து கொண்டு விட்டாள். வேறு விதமாகச் சாதிக்க முடியாததாகத் தோன்றிய தன் ஆசையை அவள் மூலம் சாதித்துக் கொள்ள முடியுமா என்று ஆலோசனை செய்து திட்டங்கள் கூடப் போடத் தயாராகி விட்டாள். கமலாவுடன் இருபது வார்த்தைகள் முழுசாகப் பேசும் முன்னரே ராஜியும் விஷயத்தை ஒருவாறு ஊகித்தறிந்தாள். பெண்மை என்ற பாசத்தினால் பிணைபட்டவளாக அவள் கமலாவுக் குத் தன்னாலான உதவியையும் செய்யத் தயாராகவே இருந்தாள்.
ஒரு சந்தர்ப்பமும் கூடிய சீக்கிரமே – அதாவது ராஜி வந்த மூன்றாவது நாளே – வாய்த்தது. சுந்தாப் பாட்டியும் ராஜியும் இந்த மூன்று நாட்களில் மிகவும் அந்நியோன்னியமாகி விட்டார்கள். லோகா பிராமமாக ஏதேதோ வழக்கம் போலப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் தனியாக இருந்தார்கள். முந்திய இரவு வெகு நேரம் கண் விழித்துப் படித்த சிரமத்தால் சாமா மாடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். மணி நாலரை யாகியும் இன்னும் எழுந்திருக்கவில்லை. போட்டு வைத்திருந்த காப்பியைச் சாப்பிடக்கூட இறங்கி வரவில்லை. கமலா கொல்லையில் காப்பிப் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்தாள். ராஜியின் அத்தை குழந்தையுடன் காமரா உள்ளில் தூங்கிக் கொண்டிருந்தாள். சாமாவின் அத்தை ஜானம்மாள் வழக்கம் போல வம்பளக்க பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தாள். நாராயணையரின் குரல் மகாலிங்கையர் வீட்டுத் திண்ணையிலிருந்து தெரு முழுதும் கேட்கும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
சுந்தாப் பாட்டி மற்ற விஷயங்களுக்கிடையே தன் பேரனின் கல்யாண விஷயத்தைப் பற்றியும் பிரஸ்தாபித்தாள். தனக்கு வயது ஆகிக் கொண்டிருந்தது என்றும் வீட்டிற்குரிய ஸ்திரீ இல்லாமல் குடும்பம் வீணாகிக் கொண் டிருந்தது என்றும் சாமாவுக்குக் கல்யாணம் செய்து பார்த்து விட்டால் தான் நிம்மதியாக இருக்கலாமென்றும் அவள் சொன்னாள். வயதில் சிறியவள், அன்னிய குடும்பத்தவள் எனினும் அவளிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று சுந்தாப் பாட்டியின் உள்ளத்தில் ஏதோ ஒன்று தூண்டிற்று. இந்தத் தூண்டுதல் சரியாக உருவகமாகாத ஓர் ஆசையின் விளைவு என்பது அவளுக்கே தெரியவில்லை.
ராஜி எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, வீட்டிலிருந்த பெண்ணைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள்.
“கமலாவையா?” என்று சுந்தாப் பாட்டி கேட்டாள். அதைப்பற்றிப் பேசுவதில் பயன் இல்லை என்று அவளுடைய குரலினாலேயே ராஜிக்குத் தெரிந்துவிட்டது. ஆனாலும் அவ்வளவு சீக்கிரமாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு விடக்கூடாது என்று கமலாவைப் பற்றி மேலும் சொன்னாள்: “ஏன்? கமலாவுக்கென்ன? எனக்குத் தெரிந்த வரையில் அவள் சாமாவுக்கு முற்றிலும் ஏற்றவளாகத்தான் தோன்றுகிறது!”
“அவளையும் அவள் அப்பா அம்மாவையும் எனக்குத் தெரிஞ்ச அளவு உனக்குத் தெரியாது. அதான் நீ இப்படிச் சொல்றே! தெரிஞ்சாச் சொல்லமாட்டே……..” என்றாள் சுந்தாப் பாட்டி. அவள் மனசிலேயும் சாமாவைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை…….’
” ஆசைக் கென்ன. எல்லாருக்குந்தான் ஆசை அளவு கடந்து இருக்கு? ஆசைமட்டும் இருந்தால் போதுமா?”
“அப்படியானா அவளுக்கு வேறே இடம் பார்க்க வேண்டியது தானாக்கும் ?”
“ஆமாம்.”
“கூடிய சீக்கிரம் ஏதாவது ஏற்பாடாக வேண்டாமா?”
“ஆகணும், ஆகணும். ஏதாவது பாத்துச் செஞ்சுட வேண்டியதுதான். எங்கே அவளுக்குன்னு எழுதியிருக்கோ அங்கே தானாகவே நடக்கும்……. என்றாள்” சுந்தாப்பாட்டி.
தன் புதுத் தோழியின் கட்சியை ஆதரிக்க அதற்கு மேல் ஒன்றும் சொல்ல வழி இல்லை என்று ராஜி சும்மா இருந்து விட்டாள்.
சுந்தாப் பாட்டி “பிறத்தியாருடைய கல்யாணத்தை யெல்லாம் பத்தி நீ பேசறயே, நூத்துக் கிழவியாட்டமா ? உனக்குக் கல்யாணம் எப்போ?” என்று கேட்டாள்.
“எனக்குக் கல்யாணமே ஆகாது. நான் ஆயுஸு பூராவும் இப்படியே தான் இருக்கப் போறேன்” என்றாள் ராஜி.
“ரொம்பப் பேர் அப்படிச் சொன்னவாளை எனக்குத் தெரியுமே!” என்றாள் சுந்தாப்பாட்டி.
“பாருங்களேன் ” என்றாள் ராஜி.
அவள் குரல் திடமாகத்தான் இருந்தது. ஆனால் அவள் அதைச் சொன்ன போது இருந்த முகபாவமும் கண்களும் அவளைக் காட்டிக் கொடுத்து விட்டன. சுந்தாப் பாட்டி ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள். அடுத்த வினாடி அவளுடைய ஆச்சரியம் இரக்கமாக மாறியது. காதிலும் மூக்கிலும் ஜ்வலித்தது போன்ற ஒரு நட்சத்திரம் அவள் கண்ணிலும் ஜ்வலிக்க ஆரம்பித்ததைக் கண்டாள்.
ஏதோ துக்ககரமான விஷயம்; அதைத் தான் கேட்டு விட்டது தவறு என்று உணர்ந்தாள் சுந்தாப் பாட்டி. ராஜியைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் கண்ணில் துளித்திருந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள். சுந்தாப் பாட்டி அப்போது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி யிருந்தாளானால் ராஜி மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு ஒன்றுமே சொல்லாமல் முன் போலவே இருந்திருப்பாள். ஆனால் சுந்தாப் பாட்டி வாயைத் திறக்கவே இல்லை. தன் ரகசியத்தைத் தன் தாய் போன்ற அவளிடம் சொல்ல வேண்டும் என்று ராஜிக்குத் தோன்றியது; சொல்லியே விட்டாள்.
“எனக்கு எல்லாம் ஆகி முடிந்து விட்டது பாட்டி” என்றாள். அதற்கு மேல் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. சுந்தாப்பாட்டியின் மாரில் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழ ஆரம் பித்து விட்டாள்.
அவர்களுடைய சம்பாஷணையின் கடைசிப் பகுதியைக் கேட்டுக் கொண்டே மாடிப்படி இறங்கி வந்த சாமா இந்தச் செய்கையைப் பார்த்தவுடன் திடுக்கிட்டு ஒரு நிமிஷம் தயங்கி நின்றான். பிறகு சப்தம் செய்யாமல் திரும்பிப் படி ஏறி மாடிக்குப் போய் விட்டான். அன்று அவனுக்கு மணிக்கு ஆறின காபி தான் கிடைத்தது.



