
பசி
க. நா. சுப்ரமண்யம்
6
இவ்வளவு விரிவாக ஊரையும் ஊர்க்காரர்களையும் பற்றி எழுதியபின், நாராயணையரையும் அவர் குடும்பத்தையும் பற்றி இரண்டொரு பக்கங்கள் எழுதுவது மிகையாகாது என்றே தோன்றுகிறது. அப்படி எழுதுவது ஒருவிதத்தில் அவசியம் என்றுகூடச் சொல்லலாம்.
நாரயணையர் நல்ல வம்சத்தில் உதித்தவர். அவர்களுடைய முன்னோர்களில் பலர் வித்துவான்களாகவும் மந்திரிகளாகவும் இருந்து அரச சபைகளை அலங்கரித்தவர்கள். நாயக்கர்கள் தஞ்சையில் ஆள வந்தபொழுது நாராயணையருடைய முன்னோர்களில் ஒருவரும் செவ்வப்ப நாயக்கனுடன் வந்தார். நாயக்கர்களின் ஆட்சியிலும் அவர்களுக்குப் பின் வந்த மராட்டியர்களின் ஆட்சியிலும் அந்தக் குடும்பத்தின் பெருமை ஓங்கி வளர்ந்தது. பல யாகங்கள் செய்து புண்ணியமும் சுய அறிவினால் புகழும் சம்பாதித்திருந்த நாராயண தீக்ஷிதருக்கு அவர் காலத்திய மராட்டிய அரசன் மாயூரத்துக்கு அருகில் காவேரிக் கரையில் ஒரு கிராமத்தை மானியமாகத் தந்தான். அந்த நாராயண தீக்ஷிதரின் பேரரான சுவாமிநாத தீக்ஷிதர் என்பவர் வாஜபேயம் முதலிய யாகங்களைச் செய்து பெரும்புகழ் பெற்றிருந்தார். தர்க்க நியாய சாஸ்திரங்களில் அந்தக் காலத்தில் பாரத வர்ஷத்திலேயே அவரை வெல்லக் கூடியவர் யாரும் கிடையாது என்று புகழ் பெற்றிருந்தார். அவர் சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் பல நல்ல நூல்கள் இயற்றியிருக்கிறார்.
சரபோஜி ராஜா நாட்களில் தஞ்சையைச் சீர்திருத்த முன் வந்த ஷ்வார்ட்ஸ் பாதிரியார் என்பவர் இந்த சுவாமிநாத வாஜபேயரின் பிள்ளைகளில் ஒருவரான நாராயண வாஜபேயரை தஞ்சை சமஸ்தானத்து நியாயாதிபதிகள் மூவரில் ஒருவராக நியமித்தார். ஆனால் அவருக்குப்பின் அவருடைய குடும்பம், பொருளாதாரத் துறையில் மட்டுமின்றி, வேறு துறைகளிலும்கூடப் பின்னடைந்து ஷணிக்க ஆரம்பித்துவிட்டது.
அவருடைய பிள்ளைகள் எழுவரில் மூவர் நல்லவர், சாதுக்கள். மற்ற நால்வர் எதற்கும் துணிந்த அயோக்கியர்களாக இருந்தார்களாம். சுவாமிநாத வாஜபேயர் சம்பாதித்த பொருள் எல்லாம் இந்த அயோக்கியர்கள் கையில் அகப்பட்டுக் கரைந்து விட்டது; அவர்களும் சில நாளில் சந்ததி இல்லாமல் இறந்து ஒழிந்து விட்டார்கள். எஞ்சிய மூன்று சாதுக்களும் வஞ்சனை இன்றிக் குடும்பத்தை விருத்தி செய்தார்கள்; வயிறு வளர்த்தார்கள். பொருளோ அறிவோ அவர்கள் பராமரிப்பில் விருத்தியாகவில்லை.
இவர்களின் வழிவந்த நமது நாராயணையரின் பாட்டனார் தமமுடைய பூர்வீகமான கிராமத்தை விட்டு வெளியேறித் தம்முடைய மனைவியின் கிராமமாகிய சாத்தனூருக்கே குடிவந்துவிட்டார். அவருடைய மனைவி மூலம் அவருக்கு சொல்ப நில புலன்களும் சர்வமானிய அக்கிரஹாரத்தில் ஒரு நல்ல மாடி வீடும், கிடைத்தன. அவருடைய பிள்ளை (நாராயணையரின் தகப்பனார்) சுவாமிநாதையர் என்பவர் சாத்தனூரிலேயே ஒரு சின்னப் பள்ளிக் கூடம் வைத்து, சொல்பலேவாதேவியும் செய்து பொருளீட்டினார். அவருக்கு சங்கீதத்திலும் மற்ற நற்கலைகளிலும் ஈடுபாடு அதிகம். அது காரணமாகத் தாசிகளின் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டு அவர் ஈட்டிய பொருளில் பெரும் பகுதி கரைவதற்கு ஹேதுவாயிற்று. அவருக்கு நாலு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் பிறந்தார்கள். மூத்தவர்தான் நாராயணையர் ; அவரை எப். ஏ. வரையில் படிக்க வைத்தார். இரண்டாவது பிள்ளை ஜவுளிக் கடை வைக்கிறேனென்று வீட்டிலிருந்த பணத்தை யெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு போய்த் திருச்சியில் தாசி லோலனாகத் திரிந்துவிட்டு அல்பாயுஸில் மாண்டு போனான்.
அவருடைய இரண்டாவது பிள்ளையின் காரியங்களும் சாவுமே சுவாமி நாதையருடைய அகால மரணத்துக்குக் காரணம் என்று சொல்லலாம். இறக்கும் போது அவருக்கு வயது ஐம்பது ஐம்பத்திரண்டு தான் இருக்கும். அப்போது நாராயணையருக்கு வயது முப்பதிருக்கும்; நாகப்பட்டினத்தில் இருபது ரூபாய் சம்பளத்தில் தபாலாபீஸில் குமாஸ்தாவாக உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குக் கலியாணமாகிப் பத்து வருஷங்களாகியும் அப்போது புத்திர சந்தானம் இல்லாமலிருந்தது. அவருடைய மனைவியும் நல்ல வமிசத்தில், பெரிய குடும்பத்தில் உதித்த பெண். அவர்கள் இருவரும் குடித்தனம் நடத்திய அழகைப் பற்றி அந்தக் காலத்தில் அவர்களை அறிந்திருந்தவர்கள் எல்லோருமே இன்னமும் சொல்லுவார்கள். எடுத்ததற்கெல்லாம் நாராயணையருக்குப் பிரமாதமாகக் கோபம் வந்துவிடுமாம் ; கையில் அகப்பட்டதைக் கொண்டு மனைவியை நையப் புடைத்து விடுவாராம். தெருக்கூடி மத்தியஸ்தம் செய்து வைத்து விட்டுச் சிரிக்குமாம். தபாலாபீஸில் வேலை பார்த்த நாராயணையருக்குக் கோபம் வரவும், மனைவியை அடிக்கவும் ஒழிந்த நேரம் சாப்பாட்டு நேரம்தான்; எனவே பாதிநாள் அவர் அரைப்பட்டினி, அவர் மனைவி முழுப் பட்டினி என்றாகி விடுமாம்.
தன் மாமனார் இறந்து பத்து வருஷங்களுக்கெல்லாம், நாராயணையரின் மனைவியும், ஒரு பெண்ணையும் பிள்ளையையும் பெற்று வைத்துவிட்டு இறந்து விட்டாள். நாராயணையர் மறுவிவாகம் செய்து கொள்ளவில்லை. தாயில்லாத அவருடைய குழந்தைகளை எடுத்து வளர்த்துப் பெரியவர்களாக்கும் பொறுப்பு சுந்தாப்பாட்டி என்கிற நாராயணையரின் விதவைத் தாயாரின் தலையில்தான் விழுந்தது. அந்தப் பொறுப்பை ஏற்று மிகவும் சிரத்தையுடன் நிறைவேற்றினாள் அவள்.
நமது கதை ஆரம்பிக்கும் போது நாராயணையர் தபாலாபீஸ் உத்தியோகத்திலிருந்து பென்ஷன் வாங்கிக்கொண்டு விலகிவிட்டார். பென்ஷன் நூற்றைம்பது ரூபாய் வந்தது. சம்பாதித்த பணத்தில் மீதம் பிடித்து நல்ல நஞ்சையாக இரண்டு வேலி நிலம் வாங்கியிருந்தார். அவருக்கு வயதும் கிட்டத் தட்ட அறுபதாகி விட்டது. சீமந்த புத்திரியான காமாக்ஷிக்குக் கலியாணமாகிக் கணவனுடனும் குழந்தை குஞ்சுகளுடனும் வடக்கே டெல்லியில் இருந்தாள். பிள்ளைதான் சாமா என்கிற நமது சுவாமிநாதன்.
நாராயணையருடைய தம்பிகள் இருவரும் கல்கத்தாவில் இருந்தார்கள். கிருஷ்ணையர் என்பவர் சொந்தமாகக் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவர் திரைகடலோடியும் திரவியம் தேடியவர். ஆனால் தேடிய பொருள் தங்கவில்லை. அவரும் மனைவி அற்றவர்தான்; சிறுவயதிலேயே மனைவியை இழந்து விட்டவர் ; பிள்ளை குட்டிகளும் கிடையாது. சதுரங்கம், சீட்டு, வாசிப்பு இவற்றில்தான் அவருக்கு இப்போது உண்மையான ஈடுபாடு. நல்ல அறிவாளி. கடையில் வந்த சொல்ப வருவாயைக் கொண்டு போதுமென்ற மனத்துடன் காலம் தள்ளி வந்தார்.
அவருடைய தம்பி வேங்கடராமையருடன் தான் அவர் கல்கத்தாவில் வசித்து வந்தார். தம்பிக்கு ஒரு கம்பெனியில் மானேஜர் உத்தியோகம்; முன்னூறு ரூபாய் சம்பளம் வந்தது. அவருக்கு மூன்று சிறு குழந்தைகள் உண்டு. அவரை அவ்வளவாக அறிவாளி என்று சொல்ல முடியாது. ஆனால் அவருக்கில்லாத கெட்டிக்காரத்தனத்தைச் சரிக்கட்டப் போதிய அளவு சமர்த்து அவருடைய சஹதர்மிணி பாகீரதிக்கு இருந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து அவஸ்தைப் பட்டவள் அவள் ; சாமர்த்தியசாலி; குடும்ப நிர்வாக மெல்லாம் அவள் கையில்தான். சுந்தாப் பாட்டியிடமும் நாராயணையரின் மனைவியிடமும் குடும்ப நிர்வாகப் பயிற்சி பெற்றவள் அவள். ஒன்பது வயது முதலே வேறு வழி இல்லாமல் புக்ககத்தில் அடைக்கலம் புகுந்துவிட்டவள். அவளுக்கு முத்தண்ணாவிடமும் சுந்தாப் பாட்டியிடமும் அளவிடமுடியாத அத்தியந்தமான பக்தி. அவர்களுடைய மனம் கோணும் படியாக அவள் எதுவும் செய்துவிட மாட்டாள். முத்தண்ணாவின் பிள்ளை சாமாவிடமும் அவளுக்கு அதிக வாஞ்சை. தன் விடுமுறை நாட்களில் பாதியை சாமா கல்கத்தாவில்தான் சிறு தாயார் வீட்டிலே கழிப்பான்.
நாராயணையருடைய தங்கைகள் இருவரில் ஒருத்தி கலியாணமாகு முன்னரே பத்து வயதில் இறந்து விட்டாள். அவளால் யாருக்கும் எவ்விதக் கஷ்டமும் கிடையாது. ஜானகி என்ற பெயருடைய மற்றவளுக்குஅவளுடைய தகப்பனாரே கண்குளிரக் கல்யாணம் செய்து வைத்தார். ஆனால் புகுந்த இடம் சரியான இடமில்லை. ஜானகியின் புருஷன் தன் ஞாபகார்த்தமாக ஒரு பெண்ணையும் தீராத வியாதியையும் இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஆஸ்தியையும் மூவாயிரம் ரூபாய் கடனையும் வைத்து விட்டு அல்பாயுஸாய்ப் போய்விட்டான். நாராயணையர்தான் தம் தங்கையின் கடன்களை அடைத்து நிலங்களை மீட்டார். ஜானகி சாதாரண ஹிந்துப் பெண்ணாக நல்லவளாகக் காலங்கடத்தி இருப்பாள்.
ஆனால் விதவையான பின் ஜானம்மாள் என்ற பெயருடன் அவள் மனத்திலே ஒரு விஷம் புகுந்துவிட்டது. நிர்த்தாக்ஷண்யமாக, சில சமயம் மூர்க்கமாகக் கூட, யாரையும் மதிக்காமல் அவள் எதையும் பேசுவாள். வயது ஆக ஆக அவளுடைய கெட்ட குணங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. வாய்த்துடுக்கில் ஆரம்பித்து அகங்காரம், அசூயை, சகிப்பின்மை, கொடூரம் முதலிய துர்க்குணங்கள் அவளிடம் தாண்டவமாடின. இந்த விஷயத்தில் அவளும் அவளுடைய தாயான சுந்தாப் பாட்டியும் நேர் எதிர். சுந்தாப் பாட்டியின் மனத்திலே கள்ளம் கபடு கிடையாது; அவள் இருக்கும் இடத்திலேயே சாந்தமும் அமைதியும் குடிகொண் டிருக்கும்.
ஜானம்மாளுக்கும் அவளுடைய பெண் கமலாவுக்கும் இடையே குணதிசயங்களில் விசேஷ வித்தியாசம் இருந்தது. ஆனால் கமலா அவளுடைய பாட்டியைக் கொண்டிருந்தாள் என்றும் சொல்லி விடமுடியாது; ஏதோ கலப்பு இருந்தது. கமலாவுக்கு நமது கதை ஆரம்பிக்கும் போது வயது பதினாலு ஆகிவிட்டது. கலியாணமாகவில்லை என்று தான் சொல்லி விட்டோமே. நாராயணையர்தான் பார்த்துச் செய்தாக வேண்டும். வேறு யார் கதி அவளுக்கு?
இவ்வளவு சொன்னபின் கமலாவின் உருவத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளேனும் சொல்லாமல் இருக்கலாமா? சொல்லியே விடுவோம். இளமையின் பளபளப்பும் வசீகரமும் அவளுக்கிருந்தன. பொன்னிறமான மேனி. ஓடி ஆடி வீட்டு வேலைகள் செய்து பழகியதால் அவள் உடல் உறுதி பெற்றிருந்தது. அவள் உடலில் ஆரோக்கியம் நிறைந்திருந்தது என்பது அவளுடைய ஒவ்வொரு அசைவிலுமே நன்கு தெரிந்தது. உயரமும், உயரத்துக்குப் ‘பாந்தமான ‘ காத்திரமும் அவளுக்கிருந்தன. அவள் கண்கள் ஆழ்ந்து கிடந்தன; ஆனால் வர்ணமற்றிருந்தன. நல்ல எடுப்பான மூக்கு; அகண்ட நெற்றி. இதற்கு சாமா “அகமுடையானை அடக்கி ஆளுவாள்” என்று வியாக்கியானம் செய்வான். ஆனால் கமலாவை முதல் முதலாகப் பார்ப்பவர்கள் ஒருவரும் உடனே அவள் அழகியா அல்லவா என்று தெளிந்து சொல்லிவிட முடியாது. சாமாவுக்கே அந்த விஷயம் இன்னமும் சற்றுச் சந்தேகமாகவே இருந்தது. சிலருக்கு அவள் அழகியாகத் தோன்றலாம்; வேறு சிலருக்கு அவள் குரூபியாகக் கூடத் தோன்றலாம். சாமாவைப் போலவே நாமும் கமலா அழகியா அல்லவா என் பது பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டியதுதான்.



