பசி
க. நா. சுப்ரமண்யம்

11

ராஜியின் ரகசியத்தை அறிந்தது முதலே சாமாவினுடைய மனத்தையும் உடலையும் என்னவோ செய்தது. இந்த உணர்ச்சிகளைச் சமாளித்துக் கொண்டு அவனால் அவளுடன் முன் போலப் பழக முடியவில்லை. உபாத்தியாயர் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட, தவறு செய்து விட்டு மாட்டிக் கொண்ட பையனைப் போல் அவன் ‘நாக்கு குழறிற்று; வார்த்தைகள் தடுமாறின. இது வரையில் எந்தப் பெண்ணைப் பற்றியும் அதிகமாகச் சிந்தித்து அறியாத சாமா இப்பொழுது இந்தப் பெண்ணைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்கச் சக்தி இல்லாதவன் ஆகிவிட்டான். அவன் சிந்தனையில் இரக்கம், பரிதாபம் போன்ற பல ரகமான உணர்ச்சிகள் குறுக்கிட்டுக் குழம்பின. எதைப் பற்றியும் தெளிவாகச் சிந்தனை செய்யும் சக்தி வாய்ந்தவன் என்று தன்னைப் பற்றிப் பெருமை கொண்டிருந்த சாமாவுக்கு அவனுடைய புதிய மனக் குழப்பம் ஒரு நூதன அனுபவமாக இருந்தது.

குறையோ நிறையோ எதுவும் அன்பு என்னும் கண் கொண்டு பார்க்கிறவர்களுக்குத் தான் தெரியும் என்று சொல்லுவார்கள். அதுபோல சுந்தாப் பாட்டியின் கண்களில்தான் சாமாவின் இந்த மாறுதல் முதல் முதலில் பட்டது. மற்றவர்கள் அதைக் கவனிக்கவே இல்லை; ராஜியும் கவனிக்கவில்லை. இது திருப்திகரமான மாறுதலாக சுந்தாப் பாட்டிக்குத் தோன்றவில்லை. இந்த மனநிலை சாமாவை எங்கே கொண்டு போய் விடுமோ என்று எண்ணி அவள் பயந்தாள். ராஜியிடம் அவளுக்குப் பரிபூர்ணமான அனுதாபம் இருந்தது. ஜட்ஜ் வீட்டுப் பெண்ணின் அந்தரங்கத் துன்பங்களை அறிந்து அவளும் வருத்தப்பட்டாள். மனப் பூர்வமாக வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன தான் அவள் செய்யக்கூடும்!

அன்று ராஜியும் தானும் பேசிக் கொண்டிருந்ததைச் சாமா கேட்டு விட்டான்; அது தான் அவனுடைய மாறுதலுக்குக் காரணம் என்று சுந்தாப் பாட்டி அறிந்து கொண்டாள். ஆனால் ராஜியின் துன்பங்களைத் தவிர்க்க சாமா முன் வருவானேயானால், அவனும் அந்தத் துன்பச் சுழலில் அகப்பட்டுக் கொள்ளுவான். அதைத்தவிர வேறு ஒரு பலனும் இராது என்று தான் சுந்தாப்பாட்டி எண்ணினாள். இந்திய தேசத்தில் பிராம்மண குலத்தில் பிறந்து பின் கணவனை இழக்கும் துர்ப்பாக்கியமும் பெற்ற ஸ்திரீக்கு கதிமோக்ஷமே கிடையாது என்றுதான் அந்தக் கர்நாடகக் கிழவி எண்ணினாள். விதியை யார் தான் மீற முடியும் ? சுந்தாப்பாட்டி விவேகிதான். ஆனால் மனித அறிவுக்கும் விவேகத்துக்கும் எட்டாத பல விஷயங்கள் வாழ்க்கையில் இருக்கத் தான் இருக்கின்றன. ஒரு சமூகத்தின் நியதிகள், விதிகள் எல்லாம் இந்த ரகத்தைச் சேர்ந்தவை தான். எந்த விவேகியும் இதை மறுக்க முடியாது. மற்ற எல்லாச் சுப சௌக்கியங்களையும் படைத்திருந்த ராஜி இந்த விஷயத்தில் உண்மைச் சௌபாக்கிய மில்லாதவளாகவேதான் ஆயுள் முழுவதும் தள்ளியாக வேண்டுமா? வேறு வழி இல்லையா?

ராஜியின் சரித்திரத்தைக் கேட்கக் கேட்கச் சுந்தாப்பாட்டிக்கு வழி இல்லை என்ற நம்பிக்கை தான் உறுதி அடைந்தது. தவறி அகஸ்மாத்தாக தன் வாய்விட்டு வந்துவிட்ட விஷயத்தை மறுநாள், ராஜி, தன் உள்ளத்தில் பொங்கி எழுந்த துக்கத்தையும், கண்ணில் பொங்கிய கண்ணீரையும் அடக்கிக் கொண்டு பாட்டியிடம் சவிஸ்தாரமாகக் கூறினாள் – மனம் விட்டுக் கூறினாள். சுந்தாப் பாட்டியைப் போன்ற ஒரு முதிய ஸ்திரீயினிடம், தன்னை முழுதும் அறிந்து கொண்ட ஒரு ஸ்திரீயினிடம் தன் சோகக் கதையைக் கூறுவது அவளுக்கு மிகவும் ஆறுதலாகவே இருந்தது.

பத்தாவது வயதிலேயே அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். மறு வருஷம் அவளுடைய இளம் கணவன் ஒரு கோர விபத்தில் அகப்பட்டு இறந்து விட்டான். வைதிகக் குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையில் பெரும் பகுதியை வைதிக மனப்பான்மையுடனேயே கழித்து விட்ட அவள் தகப்பனாருக்கு இந்த சம்பவத்தால் மனம் உடைந்து விட்டது. அவர் தம் பெண்ணைப் படிக்க வைத்தார். அவளுக்குத் தன் கணவனின் உருவம் கூடச் சுதாவாக ஞாபகம் இல்லை; போட்டோ உருவம்தான் ஞாபகம் இருந்தது. ஆறேழு வருஷங் களுக்குப் பிறகு ஒரு தரம் அவள் தகப்பனார் கொள்கைகளை எல்லாம் மறந்து விட்டு, அவளுக்கு மறு விவாகம் செய்து வைக்க முயன்றார். கல்யாணம் ஆகும் தறுவாயில் எதிர்பாராத விதமாகத் தடைப்பட்டு நின்று விட்டது. ராஜியும் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். மறுபடியும் ஒரு தரம், அவளுடைய பதினெட்டாவது வயதில், அவளுக்கு விவாகம் செய்து வைக்க முயற்சி நடந்தது. நல்ல இடத்தில் நிச்சயமும் ஆயிற்று. ஆனால் அதுவும், காரணமே இல்லாமல், விதியின் குறுக்கீடு ஒன்றே காரணமாகத் தடைப்பட்டு விட்டது.

“விதியுடன் யாராலும் போராட முடியாது” என்றாள் சுந்தாப் பாட்டி.

“எனக்கு எங்கேயாவது உபாத்தியாயினியாக வேலை கிடைக்கும். தாயற்றுப் போய் விட்ட என் தமக்கையின் குழந்தைகளுக்குத் தாயாக நான் என் வாழ்க்கையை நடத்தி முடித்து விடுவதாகத் தீர்மானித்திருக்கிறேன்” என்றாள் ராஜி. அவள் உதடுகள் துடித்தன; கண்கள் நிறையாத குறை தான்.

“உம்……..” என்று பெருமூச்சு விட்டாள் சுந்தாப் பாட்டி. “நான் பழங் காலத்துக் கிழவி. நீயோ படிச்ச பொண். நான் சொல்றது உனக்கு ஏற்குமோ, ஏற்காதோ?”

“நீங்கள் என் தாயைப் போல” என்றாள் ராஜி. “இன்று வரையில் நான் யாருடனும் இவ்வளவு மனம் திறந்து பேசியதே கிடையாது.”

“என்,பொண்ணாயிருந்தால் எதையும் எண்ணி ஆசைப்படாதே; திடசங்கல்பத்துடன் இரு என்று தான் நான் சொல்லுவேன்” என்றாள் சுந்தாப் பாட்டி.

ராஜியிடம் ஏற்கெனவே சுந்தாப் பாட்டிக்கு இருந்த மதிப்பு அவளுடைய வரலாற்றை அறிந்த பின் பன்மடங்காகப் பெருகியது. ஆனால் அவள் இன்னமும் தன் வீட்டில் தங்கி இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. சாமா காரணமாகவே அவள் பயந்தாள். சாமா அவ்வளவாக மனோதிடம் இல்லாதவன். ராஜியின் நெருங்கிய தொடர்பு, அதுவும் அவளுடைய கஷ்டம் அவனுக்குத் தெரிந்த பின், அவனை எப்படிப் பாதிக்குமோ என்று அவள் பயந்தாள். இரண்டு வருஷங்களாகவே கல்லூரியில் நெருங்கிப் பழகியவர்கள் என்பதை அவள் மறந்து விட்டாள். இந்தக் காலத்துப் பிள்ளைகள் என்ன வெல்லாமோ அசட்டுப் பிசட்டு என்று பிதற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்! அசட்டுப் பேச்சிலிருந்து அசட்டுச் செய்கைக்கும் பாய்வது வெகு சுலபமே! இந்த அசட்டுத்தனம் காலத்திற்கே உரியது என்று சுந்தாப்பாட்டி அறிவாள். அதற்காகச் சாமாவையோ, ராஜியையோ குறை கூறிப் பயன் இல்லை. ஈசுவர சிருஷ்டியையே மாற்றி விடச் சக்தி படைத்தவர்கள் போல் சிலர் பிதற்றித் திரிந்து கொண்டிருந்ததைக் காலத்தின் கோளாறு என்று சொல்லாமல் வேறு என்ன என்றுதான் சொல்ல முடியும்?

ராஜி எவ்வளவு சீக்கிரம் தன் வீட்டை விட்டுக் கிளம்புகிறாளோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது என்று எண்ணினாள் சுந்தாப் பாட்டி- சாமாவுக்கு நல்லது. ராஜியிடம் தனக்கு ஏற்பட்டிருந்த மதிப்புக்காகவும், அனுதாபத்துக்காகவும் தன் சாமாவை அவள் பலி கொடுக்கத் தயாராய் இல்லை. சாமாவுக்குக் கூடிய சீக்கிரம் நல்ல இடமாகப் பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று சுந்தாப் பாட்டியின் மனத்தில் ஏற்கெனவே உதித்திருந்த சிந்தனை இதனால் உறுதிப்பட்டது. ராஜி கிளம்பி விட்டாளானால் நல்லது. ஆனால் ‘நீ ஊருக்கு போய் விடு’ என்று அவளை மூட்டை கட்டிக் கிளப்பிவிட முடியுமா என்ன?

ஆனால் ராஜியும் அதிக நாள் இந்தச் சங்கடத்துக்கு இடம் வைக்கவில்லை. இரண்டொரு நாளில் தானாகவே கிளம்பி விட்டாள். போகும் முன் அவள் கமலாவிடம், அவளுக்காக தான் போன தூதில் தோல்வியுற்று விட்டதை நாஸுக்காக, குறிப்பாகச் சொல்லிவிட்டுத்தான் போனாள். சுந்தாப் பாட்டி தனக்குச் சொன்ன உபதேச மொழிகளை அவள் கமலாவுக்குத் திருப்பி விட்டாள். “எதிலும் ஆசை வைக்காதவர்களே இவ்வுலகில் அதிர்ஷ்ட சாலிகள் ; ஏனெனில், எதிலும் அவர்களுக்கு ஏமாற்றம் என்பதே கிடையாது” என்று சொன்னாள். இந்த அபிப்பிராயத்துக்கு அரண் காட்டுவதே போல அவள் கமலாவுக்குத் தன் துயர ரகசியத்தையும் ஓரளவு சொன்னாள். பிறர் கஷ்டங்களைக் கேட்பதில் தங்கள் கஷ்டங்களை மறந்து ஆறுதல் பெறுவது மனித சுபாவம் அல்லவா!

ஊருக்குக் கிளம்பும் போது ராஜி வந்து சுந்தாப்பாட்டிக்கு நமஸ்காரம் பண்ணினாள். பாட்டி அவளை வாரி எடுத்து உச்சிமுகந்தாள்.

“நீங்கள் என் பாட்டியாக இருக்கக் கூடாதா? இருந்தால் உங்களை விட்டுப் பிரியாமலே இருக்கலாமே என்றிருக்கு எனக்கு” என்றாள் ராஜி.

“உன் பாட்டிதான், வேறு என்ன? எனக்கு இங்கே இன்னும் கொஞ்சம் காரியம் இருக்கு. அதை முடிச்சுண்டு உன்னோடேயே வந்து இருந்து விடறேன், பாரேன்.”

சாமாவிடம் சாதாரணமாகப் பேசி, நகைத்து விடை பெற்றுக் கொண்டாள் அவள். “உன் கல்யாணம் இந்த ஆனிக்குள் நடந்து விடும் என்கிறாள் உன் பாட்டி. கடிதம் போட மறந்துடாதே! கட்டாயமாக நான் வருவேன் ” என்றாள்.

“நீ வராமலா?” என்று கேட்டுவிட்டுச் சாமா அவளை ஒரு பார்வை பார்த்தான். அவன் குரல், பார்வை இரண்டிற்கும் ஏதோ தனி அர்த்தம் இருந்ததென்று ராஜி மறுநாள், ஊருக்குப் போய்ச் சேர்ந்த பின் தான் உணர்ந்தாள்.

சாத்தனூர் ஸர்வமானியத் தெருவாசிகள் ராஜி ஊரை விட்டுப் போனபின் பல நாட்கள் அவரவர்கள் கண்ட ராஜியைப் பற்றிப் பலவிதமாக வம்பளந்து கொண்டிருந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?

ராஜியைப் பற்றியே ஓயாமல் நாலைந்து நாட்களாகச் சிந்தனை செய்து கொண்டிருந்த சாமாவால் அவளைப் பற்றி எவ்வித முடிவுக்கும் வர முடியவில்லை. மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் தெளிவாகச் சிந்தனை செய்யப் பழகியிருந்த அவன் தனக்கே சொந்தமான இந்த விஷயத்தைப் பற்றி எவ்வித முடிவுக்கும் வரமுடியாமல் தடுமாறினான். ஏதோ அதுவரையில் அவன் அறிந்திராத ஒரு புது உணர்ச்சி குறுக்கிட்டது; அது அவன் கண்களை மறைத்தது. அவன் மனது அவனுக்கே சரியாகத் தெரியவில்லை. பலதரப்பட்ட எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் எழுந்து அவன் உள்ளத்தைக் கலக்கின. தனக்குப் புதுமையான இந்த மனக் குழப்பத்தையும் உணர்ச்சியையும் அவன் காதல் என்று எண்ணிக் கொண்டான். இந்த எண்ணம் உதித்ததுதான் தாமதம். அவன் உடனே உட்கார்ந்து ராஜிக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டான் காதல் கடிதம். அவனுடைய அப்போதைய மன நிலை அந்தக் கடிதத்தில் நன்கு பிரதிபலித்திருந் தது. அவளுடைய கஷ்டத்தை அறிந்தது முதல் தன் மனத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல்களை எல்லாம் அவன் அதில் விவரித்திருந்தான்.

ராஜி சாத்தனூரை விட்டுக் கிளம்பியதற்கு மறுநாள் கடிதம் தபாலில் சேர்ந்துவிட்டது. கடிதம் எழுதியான பின் கூடச் சாமாவின் மனம் ஒருமைப் பட்டு அமைதி பெறவில்லை. மறுபடியும் புதுப்புது சந்தேகங்கள் அவன் மனத்தில் வெடித்தெழுந்தன. காதல் என்று தான் முடிவு கட்டியது தவறாக இருந்து விடுமேயானால்!

இருவருடைய வாழ்க்கையும்அன்றே ஓர் அர்த்தமற்ற பிணைப்பால் வீணாகிவிடும்! ராஜியை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு ஓர் ஆயுள் முழுவதையும் கடத்துவது சாத்தியமான காரியமா என்று அவன் சிந்தித்துப் பார்த்தான். படித்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த அவன் கனவில்கூட நினைக்கவில்லை. ஆனால் ராஜி மற்ற படித்த பெண்களைப் போல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவள் எல்லா விதத்திலுமே சிறந்தவள்தான். பெண் குலத்தின் வெற்றி அவள். தவிரவும் அந்தக் கல்யாணத்துக்குத் தன் தகப்பனாரும் பாட்டியும் முழுமனத்துடன் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள்! எப்படிப் பார்த்தாலும் தான் விரும்பியது: சாத்தியமல்லாத அசட்டுக் காரியமாகத்தான் பட்டது சாமாவுக்கு.

கடிதத்தையோ தபாலில் சேர்த்தாகிவிட்டது வீணாக மனத்தை அலட்டிப் புண்படுத்திக் கொள்வானேன்! பதில் வரட்டும், பார்க்கலாம் என்று நினைத்தான் சாமா. அப்படியும் அவனுக்கு நிம்மதி பிறக்கவில்லை. கடிதத்தை அனுப்பிய அன்று இரவு மணி மூன்று வரையில் அவன் வராந்தாவில் கையைக் கட்டிக்கொண்டு, குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தான். மணி மூன்று அடித்த பின் படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டே இருந்தான்: உறங்கவில்லை. தன் சொந்த வாழ்க்கை யில் தன்னை மிகவும் நெருங்கிப் பாதித்த ஒரு பிரச்சனையைத் தன்னால் தீர்க்க முடியவில்லையே என்று அவன் வருந்தினான். தன் அறிவு, ஆற்றல் எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான், காரியத்தில் பலன் தராதவை என்று அவன் கண்டு கொண்டான். அவனுடைய தன்னம்பிக்கையும், விவாதத்தில் அவனுக்கிருந்த ஈடுபாடும் விருப்பமும் இந்த அனுபவத்தால் சற்றுக் குறைந்தன என்றே சொல்லலாம்.

சுந்தாப் பாட்டியிடம் தன் மனத்தில் உள்ளதைச் சொல்லி விட்டால் நிம்மதி பிறந்துவிடும்; நல்லதோ கெடுதலோ அவள் ஒரு வழி காட்டிவிடுவாள் என்று சாமா நினைத்தான். ஆனால் தான் படித்தவன்; வளர்ந்து பெரியவனாகி விட்டவன் ; விவேகி. இப்படி இருந்தும் தன் பிரச்னையைத் தானே தீர்த்துக் கொள்ளாமல் அவள் உதவியை நாடுவது அவமானமான விஷயம் என்று எண்ணிச் சும்மா இருந்துவிட்டான். மறுநாள் பொழுதையும் எப்படியோ கழித்தான்.

அதற்கு மறுநாள் அவனுடைய காதல் கடிதத்துக்கு பதில் வந்துவிட்டது. அவனுடைய கடிதத்துக்கு நேர்மாறான கடிதம் அது. அதில் சஞ்சலமோ குழப்பமோ பதட்டமோ இல்லை ஆழ்ந்த நம்பிக்கையும் அமைதியும் தீர்மானமும் அதில் தெளிவாக ஒலித்தன. அதன் பாவம் சாமாவுக்குப் பிடித்திருந்தது; ஆனால் அதிலிருந்த விஷயத்தைச் சாமா ஒப்புக் கொள்ளவில்லை. “என்னுடைய வரலாற்றைத் திடீர் என்று அறிந்த வேகத்தில் எழுந்த அனுதாபத்தை, பரிதாபத்தை, நீ காதல் என்று எண்ணிக் கொண்டு விட்டாய்; அவ்வளவுதான் என்று அவள் எழுதியிருந்தாள். சாமா அதை ஒப்புக் கொள்ளவில்லை. அவள் வரலாற்றை அறியும் முன்னரே அவன் மனத்தில் அவள் ஒரு ஸ்தானம் பெற்றிருந்தாள். ஸ்திதியில் அவள் தனக்கு உயர்ந்தவள் என்ற ஒரே எண்ணத்தினால் தான் அவன் அதைப் பற்றிச் சிந்திக்கவே தைரியமில்லாமல் பயங்கொள்ளியாக ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தான். இப்பொழுது அவனுடைய பயங்கொள்ளித் தனம் அகன்று விட்டது.

அவள் பின்னும் இந்த விஷயத்தை நீ உன் பாட்டியிடம் சொல்லி இருப்பாய் என்றே நம்புகிறேன். அப்படிச் சொல்லி இருந்தா யானால் என் பதில் என்னவா யிருக்கும் என்று, என் மன நிலையை அவள் புரிந்துகொண்ட வகையில் உனக்குப் பதில் அளித்திருப்பாள். அத்தைப் பாட்டி மாதிரி ஏதோ எழுதுகிறேனே என்று எண்ணிக் கொள்ளாதே. வயதில் இல்லாவிட்டாலும் அனுபவத்தினாலும் அறிவினாலும் உணர்ச்சிகளாலும் நான் அத்தைப் பாட்டியே தான். பெரியவர்கள் நமது நலத்தையே நாடுகிறார்கள். சில சமயம் நமக்கு நலத்தைத் தரும் காரியங்கள் நமக்குப் பிடிக்காதவைகளாகவும் இருக்கலாம். அதற்கென்ன செய்வது? முக்கியமாக நீ சுந்தாப் பாட்டியைக் கேட்டு அவள் சொல்படி நடப்பதே நல்லது என்று எனக்குப் படுகிறது. சொல்லலாம் என்ற உரிமையுடன் சொல்லுகிறேன்.. ” என்று எழுதியிருந்தாள்.

சுந்தாப் பாட்டிக்கும் அத்தைக்கும் நமஸ்காரத்தைத் தெரிவித்திருந்தாள். கமலாவை விசாரித்திருந் தாள். சாமா இந்தக் கடிதத்தை நாலைந்து தடவை திருப்பித் திருப்பிப் படித்தான். ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் அவனுடைய தீர்மானமும் வியப்பும் அதிகரித்தன. படிப்பில் அதிகத் துடியில்லாத ஒரு பெண்ணுக்கு எவ்வளவு மனோதிடமும் அறிவும் இருந்தன என்று அவன் வியந்தான். உடனே உட்கார்ந்து பதில் எழுதிவிட வேண்டுமென்று அவன் துடித்தான். ஆனால் முன்போல குழப்பமான மனநிலையைப் பிரதிபலிக்கக் கூடிய கடிதம் எழுத அவனுக்கு இஷ்டமில்லை. அவள் கடிதத்துக்கு ஏற்ற பதிலை எழுத வேண்டும் என்று ஒரு நாள் காத்திருந்தான்; அவன் உணர்ச்சிகள் உரம் பெற்றன.

மறுநாள் அவன் கடிதம் எழுதிவிட்டான். நாலே நாலு வரிகள்தான் எழுதி இருந்தான். “உன் மனம் மாறும் வரையில் நான் காத்திருக்கத் தயார். உன் மனம் மாறும் என்பது எனக்குத் தெரியும். இன்றோ நாளையோ, யார் சொல்ல முடி யும்? உன்னை அடையும் வரையில் என் வாழ்க்கைப் பசி தீராது” என்று எழுதினான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 2.5 / 5. வாக்கு எண்ணிக்கை: 2

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !