
பசி
க. நா. சுப்ரமண்யம்
5
தெருக்காரர்களைப் பற்றி மட்டும் சொல்லி விட் டால் போதுமா? இந்த அக்கிரஹாரத்தின் வாழ்க்கையில் மற்ற தெருக்காரர்களுக்குச் சிறிது கூடப் பங்கில்லாமலா போய் விடும்? அவர்களைப் பற்றியும் சிறிது சொல்லுவோம்.
தெருவுக்கு வெளியே இருந்து கொண்டு தெருக்காரர்களின் மேல் அதிக ஆதிக்கம் செலுத்துபவர் களில் முக்கியமானவர் ஸ்தல தெய்வமாகிய சிவ பெருமான் தான். கோயில் இத்தெருவிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்தது. எனினும், அதனுடைய வாழ்க்கை கோயிலுடன் சற்று நெருக்கமாகவே பிணைபட்டிருந்தது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதிகாலையிலிருந்து அர்த்தராத்திரி வரையில் ஆறு காலங்களிலும் கோயில் மணி கண கண என்று ஆனந்தமாக ஒலிக்கும். கடிகாரம் இல்லாத வீடுகளில்- கிராமத்தில் முக்கால் வாசி வீடுகளில் கடிகாரம் கிடையாது- இந்த மணிச் சப்தத்தை ஆதாரமாகக் கொண்டு தான் தினசரி அலுவல்கள் – எழுகை, ஸ்நானபானாதிகள், சாப்பாடு, ஓய்வு, தூக்கம், எல்லாம் நடக்கும். கிராமத்தின் வாழ்க்கைக்கு இந்தக் கோயில் மணி திவ்வியமான சுருதியாக அமைந்திருந்தது. தெருவிலிருந்து தினசரி தவறாமல் மாலையில் கோயிலுக்குப் போய் விட்டு வருபவர்களும் உண்டு. கோயிலில் உத்ஸ வாதிகள் ஆரம்பித்து விட்டால் ஸர்வ மானிய அக்கிரஹாரத்தில் சில வீடுகளுக்கேனும் விருந்தாளிகள் வந்துவிடுவார்கள். சுருக்கமாகச் சொன்னால் போதுமே…. குடும்பத்து எண்ணைக் கொள்முதல் கூட ஏதோ சொல்பமேனும் கோயில் காணிக்கைக் கும் சேர்த்துத்தான் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும்.
சர்வ வல்லவராகிய இந்தச் சிவபிரானுக்கு அடுத்தபடியாக ஊரில் ஆட்சி செலுத்தியவர் ஸ்ரீமான் சிவஷண்முகம் பிள்ளை அவர்கள். ஊர்ப் பொதுக் காரியங்கள் எல்லாவற்றிற்கும் அவர்தான் தனிக் காட்டு ராஜா. (ஸர்வமானிய அக்கிரஹாரத்தில் இந்தக் கலியுக தெய்வத்தின் பிரதி நிதியாக விளங்கியவர் மகாலிங்கையர் தான்.) ஸ்ரீமான் சிவஷண்முகம் பிள்ளையைச் சிம்மா சனத்திலிருந்து இறக்கி விட்டு தாம் முடி சூட்டிக் கொண்டுவிட வேண்டுமென்று பத்து வருஷங்களாக ராமநாதையர் விடாமுயற்சி செய்து வருகிறார். ஆனால் அது நடக்கக் கூடிய காரியமாகத் தோன்ற வில்லை. பிராமணரல்லாதாருக்கு ஸ்ரீமான் சிவ ஷண்முகம் பிள்ளையவர்களிடம் அபாரமான அசைக்க முடியாத பக்தி உண்டு. பிள்ளையவர்களுக்கோ வெனில் பிராமணர்களிடம் அசைக்க முடியாத பக்தி. தெய்வ சித்தம் மட்டும் இருக்கு மானால், இப்படியே அவர் இன்னும் பத்து வருஷங்களுக்குக் குறையாமல் சாத்தனூரில் ஆதிக்கம் செலுத்துவார். கோயில் டிரஸ்டி; பஞ்சாயத்துத் தலைவர். மளிகைக் கடை, ஜவுளிக் கடை, சில்லறைக் கடை என்று அவருக்கு ஊரில் மூன்று கடைகள் இருக்கின்றன. நில புலமும் வேண்டியது இருக்கிறது. தேவையானபோது பணம் கொடுக்கவோ கும்பகோணத்தில் வட்டிக் கடைகளும் பாங்குகளும்தான் பெருகிக் கொண்டிருக்கின்றனவே! அவருக்கென்ன கவலை? ஆனால் அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் மட்டும் தங்கள் தகப்பனாரிடம் விசுவாசமே கிடையாது. ரகசியமாக அவர்கள் மூவரும் ராமநாதையரின் கட்சியை ஆதரிப்பவர்கள். தகப்பனாரின் ஆஸ்தியில் தங்களுக்கென்று ஏதாவது கொஞ்சமாவது தங்குமா என்று அவர்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் பின்னாடி ஏதாவது கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தால் இப்பொழுதே பத்திரங்கள் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி தாராளமாக சிவஷன்முகம் பிள்ளையின் ஸாக்ஷாத் பிள்ளையாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான். அடுத்த தலைமுறையில் பசி வந்து விடப் போகிறதே என்று மற்றவர்கள் இருவரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவஷண்முகம் பிள்ளைக்கோ பெயரிலும் புகழிலும் படாடோபத் திலும் பசி விழுந்திருக்கிறது; வேறு எதையும் அவர் லக்ஷியம் செய்வதாகக் காணோம்.
ஊரில் ஸ்ரீமான் பிள்ளையவர்களின் முயற்சியால் “லோகல் பண்டு” ஆஸ்பத்திரி ஒன்று, போஸ்டாபீஸ் ஒன்று, பொதுக் கூட்டங்கள் கூடப் ‘பார்க்கு’ ஒன்று எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. கும்பகோணத்தில் உள்ள பார்க்குகளை எல்லாம் விட சர்த்தனூர்ப் பார்க்குதான் உயர்ந்தது என்பது சாத்தனூர் வாசிகளின் தாழ்மையான அபிப்பிராயம். பட்டணத்து டாக்டரைவிட உள்ளூர்ப் “பரிகாரி”க்குத்தான் சாத்தனூரிலே மதிப்பு அதிகம். தபாலாபீஸைப் பற்றிக் கூட உள்ளூர் அபிப்பிராயம் அப்படித்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! இந்த ஸ்தலங்களைத் தவிர கடைத் தெரு, காபி ஹோட்டல்கள் எல்லாம் ஊருக்குப் பொதுவானவை. ஸர்வமானிய அக்கிரஹார வாசிகள் அனைவரும் தினம் ஒரு தரமாவது : மேற்கே போய்விட்டு வருவார்கள். கோயிலுக்குப் போவதும் மேற்கேதான்; புல்லுக்கட்டு வாங்கப் போவதும் மேற்கேதான். நாராயணையரும் பொடி வாங்குவதானால் மேற்கேதான் போயாக வேண்டும். கிழக்கே என்றால் காவேரிக்கு என்று தான் அர்த்தம்; சிலசமயம் கள்ளுக் கடைக்கு என்றும் ‘அனர்த்தம்’ செய்வதுண்டு.
அடுத்தபடியாக தெரு மிராசுதாரர்களின் வயல்களில் வேலை செய்யும் பண்ணையாட்களையும் குத்தகைக்காரர்களையும் தான் நாம் முக்கியமானவர்களாகக் கருதுகிறோம். ஆனால் அந்த மிராசுதாரர்களுக்கு அப்படி இல்லை; தங்கள் வீட்டுப் பசுக்களுக்கும் எருதுகளுக்கும் சமானமானவர்கள் என்றுதான் இவர்களை எண்ணுகிறார்கள்; கறக்க வேண்டிய வரையில் கறந்துகொண்டு விட்டுவிட வேண்டிய ‘வஸ்து’க்கள் என்றுதான் அவர்கள் ஞாபகம்.
தெருவில் வீடுகளைக் கூட்டிப் பெருக்கி வேலை செய்யும் வேலைக்காரிகள் ஒரு தனி ரகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் மகாலிங்கையரைப் போலவே அவர் வீட்டில் வேலை செய்த பெண்ணரசியும் முக்கியமானவள். அவள் பெயர் தில்லைக்கண்ணு என்கிற பொன்னம்மாள். வயது முப்பதுக்குமேல் தான் இருக்கும். எனினும், பார்த்தால் இருபது வயது என்று மதிப்பிடும்படியாகத் தள தளவென்று பகட்டாக இருப்பாள். அவள் கணவன் சிறு வயதிலேயே அவளை விட்டுவிட்டு மலேயா போய்விட்டானாம். அதற்கு முன்னரே இஷ்டப்படி சுதந்தரமாகத் திரிய ஆரம்பித்துவிட்ட பொன்னம்மாளுக்கு அவன் போனது நல்லதாகிவிட்டது. மகாலிங்கையர் வீட்டில் பொன்னம்மாள் வைத்ததே சட்டம். அந்த வீட்டில் அவள் தாயில்லாதவர்களுக் கெல்லாம் தாய் என்றும், பெண் இல்லாதவர்களுக் கெல்லாம் பெண் என்றும் ஊரார் விஷமமாகச் சொல்லுவார்கள். இது அப்படியே உண்மையாக இராது எனினும் உண்மைக் கலப்பே அற்ற விஷயமும் அல்ல. அது எப்படி ஆனாலும் மகாலிங்கையர் வீட்டில் தில்லைக்கண்ணு என்கிற பொன்னம்மாளுக்கு இருந்த செல்வாக்கு சற்று அதிகம் என்றே தான் சொல்ல வேண்டும். தெரு வேலைக்காரிகளில் அவளுக்கு அடுத்தபடியாக நம் கதைக்கு முக்கியமானவள் நாராயணையர் வீட்டில் வேலை செய்யும் கிழவிதான். ஆனால் அவளுடைய முக்கியத் துவம் பொன்னம்மாளுடையதைப் போன்றதல்ல.
இவர்களைத் தவிர கிராம சமுதாயத்திற்கு அவசியமான வியாபாரிகள், தயிர் மோர் பால்காரிகள், கூலியாட்கள் முதலியோரை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் விரிவாக விரித்துக் கொண்டிருந்தால் “எமக்கு என்ன ஓய்! கொஞ்சங்கூட அறிவு கிடையாது என்று எண்ணி விட்டீரோ ?” என்று வாசகர்கள் நம்மிடம் சண்டைக்கு வந்தாலும் வரலாம். தவிரவும் பட்டினத்திலேயே வளர்ந்து பட்டினத்துத் தண்ணீரிலேயே ஊறியவர்களாய் இருந்தாலும் வாசகர்களில் அநேகமாக எல்லோருமே ஒருதரமாவது, பழைய ஜன்மவாசனை இழுக்க, கிராமங்களின் பக்கம் போயிருக்க மாட்டார்களா?
சாத்தனூர் போன்ற தஞ்சை ஜில்லா கிராமங்களில் முஸ்லிம் சகோதரர்களுக்குத் தனி இடம் உண்டு. இது ஒரு சீர்திருத்த நாவலாய் இருந்தால் அவர்களைப் பற்றி உதாரணங்கள் கொடுத்து இங்கே அதிகம் எழுத வேண்டி இருக்கும். நல்ல வேளையாகச் சீர்திருத்தப் பசி எதுவும் நமக்கில்லை. நம் கதையில் சாத்தனூர் முஸ்லிம்கள் அதிகமாகக் குறுக்கிடவும் இல்லை.
இன்னும் ஒருவரைப் பற்றி மட்டும் இங்கே எழுதி விட்டோமானால் இந்த சாத்தனூர் ஜனவளப் பகுதி திருப்திகரமாக முடிந்துவிடும். ஆனால் அவரைப் பற்றி எழுதுவது சற்றுச் சிரமமான காரியம். அவர் எல்லாம் வல்ல இறைவனைப் போலவும் தாமரை இலைத் தண்ணீர் போலவும் எதிலும் பட்டும் படாமலும் இருப்பவர். உதாரணமாக ஓர் அல்ப விஷயத்தை எடுத்துக் கொள்ளுவோம். அவர் ஸர்வமானிய அக்கிரஹாரத்தில் வசிப்பவரா அல்லது வேறு தெருவில் வசிப்பவரா? அது கூட நிச்சயமாகச் சொல்லுவதற்கில்லை. ஒரு காலத்தில் இதே அக்கிரஹாரத்தில் அவருக்கு மூன்று வீடுகள் இருந்தன ; வாஸ்தவம்தான். இப்பொழுதும் அவர் வேறு தெருவுக்கு வசிக்கப் போய்விடவில்லை.
ஸர்வமானிய அக்கிரஹாரத்திலிருந்து காவேரிக்குச் செல்லும் பாதையில் ஒரு தென்னந்தோப்பில் சவுக்கண்டி அமைத்துக் கொண்டு அவர் வசித்து வருகிறார். அது ஸர்வமானிய அக்கிரஹாரத்தைச் சேர்ந்ததா அல்லவா? சேர்ந்தது என்றும் சொல்லலாம்; சேராதது என்றும் சொல்லலாம். தபாலாபீஸில் விசாரிக்கலாம் என்றாலோ – தபாலாபீஸுக்கும் அவருக்கும் வெகு நாளாக எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. அவருக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை ; அவரும் யாருக்கும் எழுதுவதில்லை
ஆமாம்: உலகத்திலேயே தனி மனிதர் அவர். பெண்டாட்டி, பிள்ளை, மற்றும் நெருங்கிய உறவினர்கள் அநேகமாக எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக அவரை விட்டுப் போய் விட்டார்கள். எஞ்சிய ஒரு பிள்ளையிடமிருந்து அவர் தாமாகவே ‘அறுத்து’க் கொண்டு விட்டார். கடைசிப் பந்தம் விலகிய போது அவருக்கு வயது ஐம்பது கூட நிறைந்திராது. பீ.ஏ. வரையில் (அந்தக் காலத்தில்) படித்தவர்; நல்ல உத்தியோகம் பார்த்தவர்; சொத்தும் நிறைய இருந்தது. இப்பொழுது ஆண்டியாக தாடி வளர்த்துக் கொண்டு பீடி குடித்துக் கொண்டு சவுக்கண்டியில் காலம் தள்ளுகிறார், தனிமையில். ஆனந்தமாகவா துக்கத்துடனா என்று யாரும் சொல்ல முடியாது. அவருக்கே தெரியாது. சுகம், துக்கம் எல்லாவற்றையும் கடந்துவிட்டவர் அவர். சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய பசிகளை எல்லாம் வென்று வீழ்த்திவிட்டவர் அவர். மரணத்தை வருந்தி அழைக்கும் பசியைக்கூடத் தாண்டி விட்டவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அவரைப் பற்றித் தெருவில் விசித்திர விசித்திரமாகக் கதைகள் சொல்லுவார்கள். வேடிக்கையாக வீணர்களால் திரித்துச் சொல்லப்படும் கதைகள் எல்லாம், சற்றே சிந்தித்துப் பார்ப்பவர்களின் மனத்தைப் பிளக்கக் கூடியனவாக இருக்கும். அவர் நமது கதாநாயகன் சாமாவுக்கு ஆப்த நண்பர்; ஒருவிதத்தில் குரு; லக்ஷ்ய புருஷர். தன் அறிவுப் பசியையும், விவாத தாகத்தையும் தணித்துக்கொள்ள சாமா அந்த ஊரில் அவரிடம் தான் போவான். நீட்ஷே என்ன, ப்ளேடோ என்ன, காண்ட் என்ன, மார்க்ஸ் என்ன – இப்படி மேல்நாட்டு மேதைகளின் வாக்கியங்களையும் சிந்தனைகளையும் சரமாரியாக சாமா அவரிடம் அவிழ்த்துவிடுவான். அவர் ஒரு புன்னகையுடன் அவனுடைய சந்தேகங்கள் எல்லாவற்றையும் திலகரின் கீதா ரகசியத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டி அடக்கிவிடுவார்.
அவர் மராட்டி பாஷை பேசும் ராயர் : பெயர் சாம்பமூர்த்தி.



