பசி
க. நா. சுப்ரமண்யம்

4

தகப்பனும் பிள்ளையும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். அவர்களுக்கு இடையே நாம் குறுக்கிடாமல், பண்டைய சம்பிரதாயப்படி வாசகர்களுக்கு இங்கு (சந்தர்ப்பம் கிடைத்த போது) ஊர்வளம், தெருவளம், ஜனவளம் எல்லாவற்றையும் சொல்லுவோம்.

நமது கதை நிகழும் களமாகிய சாத்தனூர் என்னும் இந்த கிராமம் தஞ்சை ஜில்லாவிலே உள்ள எத்தனையோ சாத்தனூர்களில் ஒன்று. இது காவேரி நதியின் வடகரையில், கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் ஐந்து மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். சிவ க்ஷேத்திரம்; பாடல் பெற்ற ஸ்தலம் என்றும் சொல்லுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் நாகரிகத்தின் அம்சங்கள் சிலவும் இந்த குக்கிராமம் வரை எட்டி இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் இந்த கிராமம் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் ராஜபாட்டையில் இருப்பது தான்.

முன் ஒரு காலத்தில் இந்த சாத்தனூர் கிராமம் பொருள் வளம் போலவே கலை வளமும் நிறைந்ததாய் இருந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இப்போதும் அவ்விரண்டு வளங்களும் ஒரு காலத்தில் நிறைந்திருந்த இடமாகத்தான் காட்சி அளிக்கிறது அவ்வூர். தனி மனிதர்களுக்கும் சமுதாயங்களுக்கும் உண்டாவது போலவே ஊர்களுக்கும் கால கதியில் ஏற்றமும் தாழ்வும் ஏற்படுவது விந்தைதான்!

மராட்டியர்கள் தஞ்சையில் அரசாண்ட காலத்தில் ஒரு மன்னனுக்கு ஒரு சின்ன சங்கீத வித்துவானிடம் சிறிது மதிப்பு உண்டாயிற்று. அம் மதிப்பைக் குலைத்துக் கொள்ளாத விதமாக அந்த வித்துவான் நெடுங்காலம் நடந்து கொள்ளவே மன்னன் அவருக்கு இந்த சாத்தனூர் கிராமத்தை ஸர்வமானியமாக அளித்தான் – அவரும் அவருடைய சந்ததியாரும் சிலகாலம் வயிற்றுப் பாட்டை மறந்து விட்டுக் கலைப்பாட்டிலே ஈடுபடட்டும் என்று. ஆனால் அந்த வித்துவானுக்குப் பின் அந் தப் பரம்பரையிலே சங்கீதக் கலை தலைகாட்டவே இல்லை. வித்துவானுக்குப் பின் வந்தவர்கள் வேறு விதத்தில் கெட்டிக்காரர்களாய் இருந்தனர் ; தங்களுக்குக் கிடைத்த ஆஸ்தியை வெகு சாமர்த்தியமாகப் போற்றி வளர்த்துப் பெருக்கினார்கள். ஆனால் இதுவும் நாலைந்து தலைமுறைகளில் தான் நடந்தது. பின்னர் அந்தக் குடும்பமே கணிக்க ஆரம்பித்து விட்டது. படிப்படியாக மதிப்பிழந்து இறங்கிவிட்டது. ஸர்வமானியமாகக் கிடைத்த பரந்த நிலப்பரப்பில் இப்போது ஒரு சதுர அடி நிலம்கூட அந்தக் குடும்பத்தில் வந்தவர்களுடைய ஸ்வாதீனத்தில் இல்லை. அந்தக் குடும்பத்தின் இன்றைச் சின்னமாக ஊரில் பிச்சை எடுக்காத குறையாக நடமாடும். பிரக்ருதிக்கு, பிரிட்டிஷ் கோர்ட்டு சிவில் சட்ட விஷயங்கள் பூராவும் அத்துபடி என்று ஊரார் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

பத்து வேலி நிலத்தை எட்டு வருஷங்களில் தீர்த்துக் கட்டியிருப்பவருக்கு இதுகூடத் தெரிய வேண்டாமா? ஆனால் ஒன்று; அவருக்குச் சட்டம் தெரியலாம்; சட்டத்தின் நுணுக்கங்களும் முக்கியப் பகுதிகளும் பிரிவுகளும் நன்கு தெரியலாம்; எனினும் நியாயமும் தர்மமும் அவர் அறியாத விஷயங்கள் என்பதும் ஊரார் அறிந்த விஷயம்தான். தெரிந்திருந்தால் இந்த வயதில் பொய்ச்சாட்சி சொல்லத் தயாராக, யார் கூப்பிடுவார்கள் என்று, தினம் கச்சேரி வாசலில் காத்துக் கிடப்பாரா ?…….. சாரமற்ற விஷயம் ; இவரைப்பற்றி இவ்வளவு போதும்.

சாத்தனூரில் ஸர்வமானிய அக்கிரஹாரம் பூர்வ காலத்தில் ஆசிரமம் இருக்கும் என்று வர்ணிப்பார்களே, அதுபோலவே இருக்கும். எனினும் அந்த ஆசிரமத்துக்கும், இந்த அக்கிரஹாரத்துக்கும் உள்ள விசேஷ வித்தியாசங்களை மட்டும் முதலில் சொல்லிவிடுவோம். அந்தக் காலத்து ஆசிரமத்தில் வேத கோஷங்கள் சதா ஒலித்துக் கொண்டிருக்குமாம். இங்கோவெனில் சிறுவர்கள் தெருவில் கோலியோ, கிட்டிப்புள்ளோ ஆடிச் சண்டை போட்டுக் கொள்ளும் இனிய கோஷம் தான் காதில் விழும். அதில்லாவிட்டால் செட்டும் கட்டுமான கிரஹதர்மிணிகள் வெண்டைக்காய்க் கூடைக்காரிகளுடன் கொசுருக்காகக் கெஞ்சிக் கொண்டிருக்கும் கீதம்தான் காதில் விழும் அல்லது கருத்துள்ள பிள்ளைகள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு “ஓரோண் ஒண்ணு ” என்று சந்தம் வைக்கும் சத்தம்தான் காதில் ஒலிக்கும்.

சில சமயம் பெரியவர்களின் சீட்டுக் கச்சேரிச் சண்டைகளும் சல்லாபங்களும் கேட்கும். ஆசிரமத்தின் நீர்த் துறைகளில் அந்தக் காலத்தில் பசுவும் புலி யும் சேர்ந்து தண்ணீர் குடித்தன என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அது எப்படியோ, இப்பொழுது சாத்தனூர் ஸர்வமானிய அக்கிரஹாரத்தில் நடக்க முடியாத விஷயம். இங்கே பசு இருக்கிறது, புலி இல்லை. ஆனால் பசுவைப் போன்ற சுபாவமுள்ளவர்களும், புலியைப் போன்ற சுபாவமுள்ளவர்களும் (இருவரும் மனிதர்கள்தான்!) பலர் அக்கிரஹாரத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வசிக்கிறார்கள்.

மற்றபடி அந்தக் காலத்து ஆசிரமத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் அழகும் அமைதியும் பரிபூர்ணமாக சாத்தனூர் ஸர்வ மானிய அக்கிரஹாரத்தில் குடிகொண்டிருந்தன என்பது உண்மையே. தெரு நல்ல கோடையிலும் குளுமையாக இருக்கும்; நல்ல மழையிலும் சுத்தமாக இருக்கும். சிவன் கோயிலுக்கும் அதைச் சுற்றியிருந்த ஊருக்கும் கிழக்கே தொலைவில் இருந்த அந்தத் தெருவில் ஜன நடமாட்டம் அதிகம் கிடையாது. சுவாமி தரிசனம் செய்ய ஊருக்கு வந்துவிட்டுப் போகிற வெளியூர் வாசிகள் பலருக்கு சாத்தனூரில் ஸர்வ மானிய அக்கிரஹாரம் என்று ஒரு தெரு இருப்பதே தெரியாது.

தெருவில் இரண்டு வரிசை தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. ஒவ்வொரு வீட்டின் திண்ணைக்கும் தெருவுக்கும் நடுவே உள்ள இடை வெளியில் அந்தந்த வீட்டுக்காரர்களுக்கு உகந்த படி அலங்காரமாகவோ உபயோககரமாகவோ சிறு தோட்டங்கள் இருந்தன. உதாரணமாக இதோ குரோட்டன்களும், வாசனையற்ற பூஜைக்கு உபயோகமாகாத கனகாம்பர நீலாம்பர புஷ்பச் செடிகளும் ரோஜாச் செடிகளும் நிறைந்த இந்தத் தோட்டத்தை முன்னால் உடைய இவ்வீட்டின் சொந்தக்காரர், பணத்தின் அருமை தெரியாத, சர்க்கார் பென்ஷன் வாங்கும் ஓர் உத்தியோகஸ்தர். இதோ வாசலில் வாழையையும் வேறு பல காய்கறிச் செடிகளையும் பயிர் செய்து நல்ல வீட்டின் பார்வையைக் குட்டிச் சுவராக்கியிருப்பவர், காரைக்குடியில் ஒரு செட்டியாரிடம் பத்து வருஷம் கணக்கு எழுதிக்கொண்டிருந்து விட்டு கையில் இருபதினாயிரம் ரொக்கத்துடன் திரும்பி வந்து நிலபுலங்கள் வாங்கிக் கொண்டு செட்டும் கட்டுமாகக் குடித்தனம் பண்ணும் ஸ்ரீனிவாஸைய்யர் தான். நாராயணையர் வீட்டு வாசலிலோ வெளியே, தென்னை பாக்கு முதலிய மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன. இரண்டு வேப்ப மரங்கள் அடர்ந்து. வளர்ந்திருக்கின்றன. வாசனையை அள்ளி வீசும் மல்லிகை, இரவு ராணி முதலிய ஏழெட்டு புஷ்பச் செடிகள் பூத்துக் குலுங்குகின்றன. ‘கமானின்’ மேல் சம்பங்கியும் முல்லையும் படர்ந்திருக்கின்றன. தோட்டத்தை அடுத்திருக்கும் யானையடிக்கல் தளம் போட்ட குறட்டில் கோடையில், மாலையில் தண்ணீரைக் கொட்டிவிட்டு, இரவில் படுத்தால், சுகமாகத்தான் இருக்கும்: சந்தேகம் என்ன ?

ஒரு காலத்தில் இந்த அக்கிரஹாரத்தில் நூறு வீடுகளுக்குமேல் இருந்ததாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். இருந்திருக்கலாம்.

வேண்டிய இடம் இருக்கிறது. அந்த வீடுகளில் ஒரு பாதிக்கு மேல் இப்பொழுது வாழைத் தோட்டங்களாகவும் மா, தென்னை, பலா முதலிய மரங்கள் அடர்ந்த சோலைகளாகவும் உருமாறி விட்டன. தெருவில் சற்றேறக் குறைய வீடு என்று பெயர் சொல்லக் கூடியவை முப்பதுதான் இப்போது உள. அவைகளுள்ளும் இரண்டு மூன்று சதா பூட்டியே கிடப்பதால் கிலமாகிக் கொண் டிருக்கின்றன. நாலைந்தில், வீட்டிற்கொரு தனி விதவையைத் தவிர நடமாட வேறு மனிதர்களே கிடையாது. எஞ்சிய இருபது இருபத்திரண்டு வீடுகளில் குடியும் குடித்தனமு மாகவும் சீரும் செட்டுமாகவும் இருபது குடும்பங்கள் ஜீவித்து வருகின்றன. ஒரே தெருவில் வசித்த இந்த இருபது குடும்பங்களில்தான், ஒன்றுக்கொன்று எவ்வளவு தார தம்மியம் !

தெருவிலே மகாலிங்கையருடைய வீடுதான் மிகவும் பெரியது. ஊரிலேயே அவருடைய குடும்பம்தான் பெரியது என்று சொல்ல வேண்டும். அவர் பிள்ளைகள், அவருடைய தமையன் மார்களின் பிள்ளைகள் என்று பத்து வயது முதல் ஐம்பது வயது வரையில் பத்துப் பன்னிரண்டு பேர்வழிகள் அதில் இருந்தார்கள். ஸ்திரீ ஜனங்களின் தொகை (விதவைகள் உள்பட) இதைவிடச் சற்று அதிகமாக இருக்குமே தவிரக் குறையாது. பேரன் பேத்தி குஞ்சு குளுவான்களைப் பற்றியோ கேட்க வேண்டி யதே இல்லை; ‘வள்ளிசாக’ இரண்டு டஜன் இருக்கும். ஆனால் ஒன்று; நல்ல வேளையாக மகாலிங்கையரின் குடும்பத்தார் எல்லோருமே ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல சாத்தனூரில் தங்கி இருப்பது கிடையாது. அருகிலும் தூரத்திலும் இருந்த நகரங்களிலே ஏதோ சௌகரியமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த உறவினர்களின் வீடுகளிலே முறை வைத்துக் கொண்டு அவர்கள் மாறி மாறி அடைக்கலம் புகுந்து விடுவார்கள். பொது ஜன வாசக சாலைகளிலே எந்தப் புஸ்தகம் யாரிடம் இருக்கிறது என்று எழுதி ‘நோட்டுப்’ போட்டு வைத்துக் கொள்ளுவார்களே அது போல ரகசியத்தில் மகாலிங்கையரும் செய்து வருவார் என்று தான் எண்ண வேண்டி இருக்கிறது. இல்லா விட்டால் எந்தப் பேத்தி, எந்தப் பேரன் எந்தச் சமயம் எந்த ஊரில் யார் வீட்டில் இருக்கிறார்கள் என்று அவருக்கு எப்படித் தெரிய முடியும் ? இவ்வளவு பெரிய குடும்பத்தை அவருக்கிருந்த சொல்ப ஆஸ்தியை வைத்துக் கொண்டு அவர் எப்படிச் சமாளித்தார் என்பதும் அவர் மட்டுமே அறிந்த ரகசியமாக இருந்தது. ஏதோ செப்பிடு வித்தை தான் அது. அந்த மந்திரம் அவர் ஒருத்தருக்குத் தான் தெரியும் போலும். குடித்தனம் நடத்தியது மட்டுமல்ல; அந்தஸ்தாகவும் பகட்டாகவும் ஊரில் பெரிய மனுஷனைப் போல வாழ்ந்து வந்தார் அவர்.

அடுத்தபடியாகப் பெரிய குடும்பம் சீதாராமையருடையது தான். அவருக்கு ஏழெட்டு பிள்ளைகள்; நாலைந்து பெண்கள். இதில் ஒரு பகுதி மூத்த சம்ஸாரத்தினுடையவை. இளையாள், பாவம்!

ஒரு நோஞ்சான். நாலைந்து வருஷமாகவே படுத்த படுக்கைதான். கும்பகோணத்திலிருந்து வாரத்திற் கொருமுறை டாக்டர் வந்து பார்த்துக்கொண்டிருந்தார். இளையாளாக வாழ்க்கைப் பட்டு வந்த புதுசில் தன் மாற்றாள் குழந்தைகளை வஞ்சக மில்லாமல் தன் குழந்தைகளைப் போலவே பாராட்டி வளர்த்தாள். அதனால் அவளுக்குத் தெருவில் நல்ல பெயர் ; புண்ணியசாலி என்றும், மஹா லக்ஷ்மி போல் இருக்கிறாள் என்றும் சொல்லிக் கொள்ளுவார்கள். சீதாராமையர் பணக்காரர். அவருக்கு ஏழெட்டு வேலி நிலமும் ஏராளமான புன்செய்களும் கையில் நிறைய ரொக்கமும் உண்டு. தர்மிஷ்டர்; செலவாளி. அவருடைய குணாதிசயங்கள் ஒரு ‘தினுசு.’ கதாசிரியனுடைய நோக்குடன் பார்க்கவும் கேட்கவும் திருப்திகரமாகவும், ரஸமாகவும் இருக்கும். ஆனால் அவருடன் ஒட்டி வாழ்ந்து குடித்தனம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் மாட்டிக் கொண்டிருந்த அவருடைய மனைவி மக்களுக்குச் சொல்ல முடியாத வேதனையாக இருந்தன அவருடைய குணாதிசயங்கள்.

தெருவிலுள்ளவர்களில் மற்றவர்களைப் பற்றி விசேஷமாகக் குறிப்பிட வேண்டியது அதிகமில்லை. அவசியமானால் கதையில் அவர்களைச் சந்திக்க நேரும் போது விரிவாகச் சொல்லுவோம். இங்கே வெகு சுருக்கமாகச் சிலரைப் பற்றி மட்டும் சொல்லி விடலாம். ‘ஸாவுகார்’ (இது பட்டப் பெயர்) ராமச் சந்திரையர் தம்பிடி தம்பிடியாகத் ‘தம்’ பிடித்துச் சேர்த்தால் அது நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய், லக்ஷம் ரூபாய் என்று சேர்ந்து விடும் என்ற ஒரே லக்ஷியத்துடன் உயிர் வாழ்பவர். அதே மாதிரி அவருடைய தகப்பனார் ‘தம்’ பிடித்துச் சேர்த்து வைத்திருந்த ஆஸ்தி ஒரு லக்ஷமாவது இருக்கும் என்று ஊரார் சொல்லுவார்கள். சாத்தனூர் சப் ரிஜிஸ்டிரார் ஸ்ரீனிவாஸாசாரியாரும் ஸர்வமானிய அக்கிரஹாரத்தில் தான் குடி இருக்கிறார்; அவரைப் பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை; அவர் சர்க்கார் உத்தியோகஸ்தர். அதற்கேற்ற தோரணையும் மதிப்பும் உள்ளவர். மாஜி உபாத்தியாயர் ஒருவரும் இரண்டொரு பென்ஷன்தாரர்களும் தெருவில் வீடு வாங்கிக் கொண்டு புதிதாகக் குடியேறியிருக் கிறார்கள். இன்னும் பலர் அவர்கள் எல்லோரும் மிகவும் சாதாரணமானவர்கள். சிலர் வைதிகர்கள்; சிலர் குட்டி மிராசுதார்கள். ஏதோ எப்படியோ வாழ்க்கை என்ற நாடகத்தை நடத்திக் கொண்டு நடமாடிக்கொண் டிருக்கிறார்கள், மனிதர்கள் என்ற பெருமைப் பெயருடன்.

வயதான ‘மைனர்’ப் பையன்களுக்கும் சாத்தனூர் ஸர்வ மானிய அக்கிரஹாரத்தில் இடம் இருக் கிறது; இரண்டு பேர்வழிகள் இருக்கிறார்கள். பணத் தெம்பு அதிகம் இல்லாததால் அவர்கள் இருவரும் கும்பகோணத்து நிஜ ‘மைனர்’களின் பாதையில், அவர்களுக்குச் சற்றுத் தொலைவிலேயே, நடப்பவர்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *