
பசி
க. நா. சுப்ரமண்யம்
2
“இலுப்பக் கரண்டியிலே குடமிளகாய் வறுத்து வச்சேன்; போட்டயா; போடு” என்று சொல்லிக் கொண்டே சுந்தாப்பாட்டி சமையலறைக்குள் வந்தாள்.
“எல்லாம் போட்டாச்சு!” என்று சற்று அதட்டலாகவே ஜானம்மாள் பதில் அளித்தாள். “போடாட்டா நீ எங்க உசிரை எடுத்துட மாட்டயா? போட்டாச்சு, போட்டாச்சு! அங்கேயே இரு நீ ! இங்கே வந்து எச்சல், பத்து, தீட்டு எல்லாத்தையும் ஒண்ணாப் பண்ணிட்டுப் போயிடாதே! கூடத்திலேயே இரு.”
கமலா இதையே இன்னும் கொஞ்சம் ஹிதமாகச் சொன்னாள். “போட்டாச்சு பாட்டி; போட்டாச்சு. நீ போய் ஊஞ்சல்லே உக்காந்துக்கோ. கண் தெரியாமே இங்கே எதையாவது உருட்டிக் கொட்டிவிடாதே.”
திடீர் என்று, “எச்சல்! எச்சல்” என்று எட்டு வீட்டுக்குக் காது கேட்கும் படியாகக் கத்தினாள் ஜானம்மாள். “அந்தப் பிரும்மா உன் காலிலே ஒரு கண்ணை வக்காமே போனானே ! அவனைச் சொல்லணும். போ, போ! உன் பேத்தி சாப்பிட்ட எச்சலை மிதிச்சாச்சு. எங்கே பாத்தாலும் எச்சலாக்கி விடாதே. நில்லு அப்படியே! கமலா, ஒரு டம்ளர் ஜலம் எடுத்து அவ காலிலே கொட்டு.”
சுந்தாப்பாட்டி நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றாள். “எங்கேடி எச்சல்? அங்கே எங்கேயோ இருக்கு. வீணா ஏன் என் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கறே!” என்றாள் பாட்டி.
ஆனாலும் கமலா ஒரு டம்ளரில் ஜலம் கொண்டு வந்து அவள் காலில் கொட்டிய பிறகுதான் அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
“ஏன் பாட்டி, தள்ளாத வயசிலே இப்படிக் குறுக்கும் நெடுக்குமா நடந்து உடம்பை அலட்டிக்கறே? போய்க் கூடத்திலே உக்காரு. இதோ நான் சாப்பிட்டுவிட்டு வரேன் ” என்றான் சாமா.
“அவளுக்கு அங்கே இருப்புக் கொண்டால் தானே!” என்றாள் ஜானம்மாள். “நாங்கள்ளாம் அவளுடைய அருமந்தப் பேரனுக்கு வயிறு நிறையச் சாதம் போடுவமோ, மாட்டோமோ என்று அவளுக்குக் கவலை. பார்க்க வந்துட்டாள்.”
“பேரன் வரான், வரான்னு கார்த்தாலை முதல் அவள் பறந்த பறப்பு, பார்த்தவாளுக்குன்னா தெரியும்! இப்போ நீ கேலி பண்ணப்போறயேன்னு சும்மா இருக்காள்” என்றாள் கமலா.
“பேரனுக்காக ஓலையைப் போட்டு அடுப்பை மூட்டி அவ கையாலேயே குடமிளகாய் வறுத்து வச்சிருக்காள்.” என்றாள் ஜானம்மாள்.
“இன்னொரு குடமிளகாய் போடு கமலா” என்று கேட்டு வாங்கிக் கொண்டான் சாமா.
“இன்னிக்குக் கார்த்தாலை வேடிக்கையாக நான் பாகற்காய்க் குழம்பு பண்ணறேன்னு சொன் னேன். அவ்வளவுதான் ! பாட்டிக்கு வந்த கோபத்தைப் பாக்கணுமே!” என்று சொல்லிக் கமலா கலீர் என்று சிரித்தாள்.
இவள் சிரிப்புத்தான் எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று எண்ணியவனாக, சாமா “ஏன்?” என்று கேட்டான்.
“பேரனுக்குப் பாகற்காய் குழம்பு பிடிக்காதாம்! அதைப் பண்ணாதேடின்னு குதிக்க ஆரம் பித்துவிட்டாள்.”
கூடத்தில் போய் அவளுடைய நிரந்தரஸ்தானமாகிய ஊஞ்சலில் உட்கார்ந்து விட்ட சுந்தாப் பாட்டியைப் பார்த்து சாமா “இப்பவெல்லாம் எனக்குப் பாகற்காய் குழம்பு கூடப் பிடிச்சுப் போச்சு பாட்டி” என்றான்.
சுந்தாப் பாட்டியின் காதில் அவன் சொன்னது சரியாக விழவில்லை. பேரனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னைக் கேலிதான் செய்கிறான் என்று அவள் எண்ணிக் கொண்டாள். “போடாப்பா! அவா சொல்றதை எல்லாம் கேட்டுண்டு என் மண்டையைப் போட்டு உருட்டாதே!” என்றாள்.
“பாட்டியைப் போய்ச் சொல்லப் போய்ட்டாளே, பேத்தி! இவ மாத்திரம் என்ன லேசா? எங்க சாமா வரப் போறான், எங்க சாமாவரப் போரான்னு….”
தன் தாயார் அந்த வாக்கியத்தை முடிக்கும் வரையில் கமலா காத்திருக்கவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு “போடியம்மா போ! இதென்ன கேலி ! ” என்றாள்.
சாமா சிரித்தான். “மொத்தத்திலே இந்த ஆத்திலே நீ ஒத்திதான் சமத்தூன்னு சொல்லேன், அத்தை! சாமா வந்தா என்ன, வராட்டாத்தான் நமக்கென்னன்னு பேசாமே, கவலைப்படாமல் இருந்தயாக்கும்!”
கமலா கலகல வென்று சிரித்தாள்.
சாப்பாட்டை முடித்துக் கொண்டு சாமா எழுந்திருக்கப் பார்த்தான்.
“இன்னொரு பிடி வாங்கிக்கோயேண்டா சாமா. இருந்தாலும் வரவரச் சாப்பாடு மோசமாப் போயிண்டிருக்கே! ஓடற பாம்பை மிதிக்கிற வயசிலே, இப்படித்தான் சாப்பிடுவாளா? நன்னாருக்கு!” என்றாள் ஜானம்மாள். இன்னொரு கை போடறேன். இல்லாட்டா, நான் சரியா உனக்குச் சாதம் போடல்லே, நீ இளைச்சுத் துரும்பாய்ப் போயிட்டேன்னு அம்மா எங்கிட்டே சண்டைக்கு வந்துடுவாள். அவ கோபத்துக்கு ஆளாக நான் தயாராயில்லை.”
“போதும் அத்தை” என்று சொல்லிக் கொண்டே சாமா இலையை மடக்கிவிட்டான். ‘இங்கே எனக்குக் கிடைப்ப தெல்லாம் சுந்தாப் பாட்டிக்காகத்தான் போலிருக்கு. நீங்களா யிருந்தால் என்னைப் பட்டினியே போட்டு விடுவேள் போலிருக்கே…….. உம்……..”
“அதுக்கில்லை……..” என்று இழுத்தாள் ஜானம்மாள். “உம். சாதம் போறுமானால் எழுந்திரு. கை அலம்பு. சாப்பிட்டானப்புறம் எச்சக்கலையிலே உட்கார்ந்திருக்கப் படாது. சண்டை வரும்னு சொல்லுவா……..”
சாமா எழுந்தான். இரண்டாங்கட்டில் கை அலம்பி விட்டு, சுந்தாப் பாட்டிக்குப் பக்கத்தில் ஊஞ்சல் பலகையில் போய் உட்கார்ந்தான். தன் மங்கிய கண்களில் அளவு கடந்த வாத்ஸல்யம் ததும்ப அவள் அவனை நோக்கினாள். தாயில்லாக் குழந்தையை ஆறுமாதம் முதல் எடுத்து வளர்த்துப் பெரியவனாக்கியவள் அல்லவா அவள்!
“சாப்பிட்டாச்சா?”
“ஆச்சு! உன் பெண்ணும் பேத்தியுமாச் சேர்ந்துண்டு ஒண்ணரை வயத்துக்குச் சாதம் போட்டு விட்டார்கள். படுத்துக்கொண்டால் தேவலைப் போல் இருக்கு.”
“படுத்துக்கறயா வேணுமானால் ?” என்று கேட்டுவிட்டுப் பாட்டி தன் ஊஞ்சலைச் சாமாவுக்கு ஒழித்துவிடப் போனாள். சாமாவைத் தவிர வேறு யாராவது அந்த ஊஞ்சலில் இடம் கேட்டிருந்தால் பாட்டியிடம் அவர்கள் படுகிறபாடு சொல்லி மாளாது.
“வேண்டாம் பாட்டி! நீ உக்காரு. சாப்பிட்ட வுடன் படுக்கக்கூடாது. அதல்லாமல் மணி நாலு நாலரை ஆகிவிட்டது. இப்போ படுத்தா சரியாத் தூங்க முடியாது. உன்னோடு சித்தநாழி பேசலாம்னுதான் வந்து உக்கார்ந்தேன்.”
இதற்குள் சமையற்கட்டில் காரியத்தை எல்லாம் முடித்துக்கொண்டு ஜானம்மாளும் கூடத்தில் வந்து உட்கார்ந்தாள். கமலாவும், கையில் ஏதோ பழைய பத்திரிகையுடன் வந்து, தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்துகொண்டு நின்றாள்.
“ஏன் நிக்கறே. கமலா; உக்காரேன். கையில் என்ன பத்திரிகை அது? உனக்காக என் பெட்டியிலே இரண்டு புஸ்தகம் வாங்கி வச் சிருக்கேன்……..” என்றான் சாமா.
“பட்டணத்திலே உனக்கு உங்க அத்தங்காள் ஞாபகம் கூட இருந்ததா என்ன?” என்றாள் ஜானம்மாள் கேலியாக.
“என்னமா அத்தை, ஞாபக மில்லாமே போயிடும் ? அப்படிப் போக எனக்கு எத்தனை அத்தங்கா இருக்கா ? நீதான் சொல்லேன்.”
“போருண்டாப்பாபோரும். இருக்கிற அத்தங்காளுக்கே வழி பிறக்க மாட்டேங்கறது!” என்று சொல்லி ஜானம்மாள் பெருமூச்சுவிட்டாள். சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, “அவளுக்காக இரண்டு பொஸ்தகம் கொண்டு வந்திருக்க யோல்லியோ! போறாதா? பொஸ்தகம் ஒண்ணு தானே அவளுக்கிப்போ குறைச்சல்!” என்றாள்.
“என்ன புஸ்தகம் கொண்டு வந்திருக்கே சாமா? கதைப் புஸ்தகமா?” என்று கமலா ஆவலுடன் கேட்டாள்.
“ஒண்ணு, பாட்டுப் புஸ்தகம். இன்னொண்ணு நாவல். பெட்டியைத் திறந்து நீயே எடுத்துக்கோ. மேலேதான் வச்சிருக்கேன்” என்று சாமா தன் பூணூலிலிருந்து பெட்டிச் சாவியைக் கழற்றிக் கமலாவிடம் கொடுத்தான்.
புஸ்தகங்களை எடுத்துவரக் கமலா காமரா அறைக்குள் போயிருந்த போது சாமா தன் அத்தையைப் பார்த்துச் சொன்னான். ” முடிஞ்சிருந்தால் என் பெட்டியிலே போட்டு உனக்கு ஒரு நல்ல மாப் பிள்ளையும் கொண்டு வந்திருப்பேன். முடியல்லையே! என்ன பண்றது?”
ஜானம்மாள் பதில் சொல்லவில்லை. மறுபடியும் ஒரு தரம் பெருமூச்செறிந்தாள்.
“அததற்குக் காலம் வரவேண்டாமா?” என்று சுந்தாப்பாட்டி வேதாந்தம் பேசினாள்.
அவளை எரித்துவிட விரும்புகிறவள் போலப் பார்த்தாள் ஜானம்மாள்.
சாமா,”பார்க்கலாம். இந்த லீவிலே ஏதாவது ஒரு நல்ல வரனாகப் பார்த்து ஏற்பாடு செய்து விடறேன், பாரேன்” என்று சொன்னான்.
ஜானம்மாள் இதற்கும் உடனே பதில் அளிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து உரத்த குரலில், சிரிப்பும் அழுகையும் கலந்த பாவத்தில் “கமலா!” என்று கூப்பிட்டு “கேட்டயாடி உன் அம்மாஞ்சி சொல்றத்தை! உனக்கு ஒரு நல்ல வரனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிப்புட்டுத்தான் இந்த லீவிலே வேறே காரியம் பார்க்கப் போறானாம்….! பாத்துக்கோ, உன் அம்மாஞ்சியின் கரிசனத்தை!” என்று சொன்னாள்.
காமரா அறையில் இருந்த கமலாவின் காதில் இந்த வார்த்தைகள் நிச்சயமாக விழுந்திருக்கும். ஆனால் அவள் ஒரு பதிலும் சொல்லவில்லை.



