பசி
க. நா. சுப்ரமண்யம்

13

“ஆசைப்படாதவர்களே அதிர்ஷ்டசாலிகள்; அவர்களுக்கு ஏமாற்றம் என்பதே கிடையாது” என்று ராஜி வெகு சுலபமாகவே சொல்லிவிட்டுப் போய் விட்டாள். கொள்கை அளவில் அதைக் கமலாவும் ஒப்புக் கொள்ளவே செய்தாள். ஆனால் உண்மையில் ஆசை வெட்கமே அறியவில்லை. ஏமாற்றத்துக்கும் துணிந்தே, ஏன், மீறியே மனித உள்ளம் சதா ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நடக்குமோ, நடக்காதோ என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க- நடந்தது போலக் கற்பனை செய்து கனவு கண்டுகொண்டிருப்பதிலே அளவற்ற இன்பம் இருந்தது என்பதைக் கமலா கண்டாள். கனவுகள் கனவுகளே; சந்தேகமில்லை. ஆனாலும் அவற்றிலேதான் என்ன இன்பம் இருந்தது! இன்பகரமான கனவுகளில் ஈடுபட்டு அவள் தன்னையே மறந்து விடுவாள், அடுப்பங் கரையில் உட்கார்ந்த படியே.

அரிசி குழைந்துவிடும். கல்யாணமே வேண்டாம்; இப்படியே ஆயுள் பூராவும், சாமாவுக்கு அருகிலேயே அவனுக்கு அடிமையாகக் கழித்துவிட முடியுமானால்……..! என்று எண்ணினாள் கமலா. ஆனால் அதெப்படி முடியும்! சாமாவுக்கு இன்று இல்லாவிட்டால் நாளை, இவ்வருஷம் இல்லா விட்டால் அடுத்த வருஷம் கல்யாணம் ஆகிவிடும். வருகிறவள் எப்படி இருப்பாளோ? தவிரவும் ஊரார் என்ன சொல்லுவார்கள். வயது பதினைந்து ஆவதற்கு முன்னரே தெருவில் தலை காட்ட வெட்கமாய் இருந்ததே!

இதில் விசேஷம் என்னவென்றால் சாமாவுக்குப் பெண் பார்க்க அவனுடன் அவளேதான் போக வேண்டி இருந்தது. வீட்டில் போகக்கூடிய ஸ்திரீகள் வேறு யாரும் இல்லை.

மனத்தை ஓரிடத்தில் வைத்தபின் வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்டுத் துன்பப்படுவதை விட உயிரை விட்டு விடலாமே என்றுகூடச் சில சமயம் அவளுக்குத் தோன்றிற்று. பைத்தியக்காரத்தனமான யோசனைதான் அது. அவள் மனத்தில் ஓயாமல் தாண்டவமாடிக் கொண்டிருந்த எத்தனையோ பைத்தியக்காரத்தனமான யோசனைகளில் அதுவும் ஒன்று. கிணற்றில் விழலாம்; மடியில் கல்லைக் கட்டிக்கொண்டு குளத்தில் விழுந்துவிடலாம். அப்படிப் பல பேர் செய்திருந்ததாக அவள் கேள்விப்பட்டிருந்தாள். ஆனால் அப்படியெல்லாம் செய்ய அவளுக்கு மனம் துணியவில்லை. தவிரவும் இன் னும் காரியம் முடிந்துவிடவில்லையே! கடைசி நிமிஷம் வரையில் நம்பிக்கைக்கு இடம் இருக்கிறது என்றே கமலா எண்ணினாள். ஒரு குற்றமும் செய்தறியாத தன்னை தெய்வம் சோதிக்கிறதே தவிர வேறில்லை. கூடிய சீக்கிரமே தான் நாடிய வரம் கிடைக்கும் என்று அவளுக்குக் காரண மில்லாமாலே ஒரு நம்பிக்கை இருந்தது. மனித உள்ளத்தின் அசட்டு ஆசைகளை என்னவென்று சொல்லுவது?

தனக்குச் சாமாவிடம் எதோ அசைக்க முடி யாத உரிமை உள்ளதுபோலவும், அந்த உரிமையை என்றும் மீற, ரத்து செய்ய, யாராலும் முடியாது சில சமயம் அவள் எண்ணினாள். அவள் நினைத்ததும் ஒருவிதத்தில் நிஜம்தான். ஆனால் எந்தவிதத்தில் என்று அவளுக்கே தெரியாது. அவளுக்கு சாமாவிடம் உண்மையான அன்பு இருந்தது. அன்பை விட உலகில் வேறு என்ன உரிமை தேவை; அதைவிடச் சிறந்த உரிமை வேறு என்ன உண்டு?’ இந்த உரிமையைச் சாமாவும் சில சமயம் தன்னை யும் அறியாமலே ஒப்புக்கொள்ளத் தான் நேர்ந்தது. தன் மனத்தில் ராஜியின் உருவம் இடம் பெற்றிருந்தது போலவே கமலாவின் மனத்தில் தன் உருவம் இடம் பெற்றிருந்தது என்பதைச் சாமா அறியாமல் இல்லை. கமலாவின் ஆசை நிறைவேறாது என்பதில் சந்தேகமில்லை. இதை நினைக்கும்போது சாமாவுக்குத் திடுக்கிட்டது. அதே போலத் தன் ஆசையும் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அவனால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நிறைவேறாமல் போனால் வாழ்க்கையில் சாரமே இராது. அதற்குப்பின் வாழ்க்கை நடத்தவே அவனுக்கு மனம் இராது. ஒரே அடியில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு விட்டால் நல்லது. என்றிருக்கும்! அதே மூச்சில் கமலாவுக்கும் ஓரளவு அப்படித்தானே இருக்கும்! பாவம்! என்று நினைக்காமல் இருக்க அவனால் முடியவில்லை. எப்படி யோசித்துப் பார்த்தாலும் இது விடுபடாத சிக்கலாகத்தான் பட்டது. ஏக்கம் இல்லாமல் வாழ்க்கை நடக்காதா? நடக்கவே நடக்காதா? ஆனால் சாமாவின் சித்தாந்தப்படியே கவனித்தாலும் பசி தானே வாழ்க்கையின் நியதி. மனிதர்களாகப் பிறந்துவிட்டவர்கள் பசிக்கு அஞ்சினால் சரிப்படுமா? அன்புப் பசி தீர ஆயுள் முழுவதும் தவம் கிடந்தாலும் தகும் என்றே சாமா எண்ணினான்.

அவனுடைய இரண்டாவது கடிதத்துக்கு ராஜி இடமிருந்து வெகுநாள் பதில் வரவில்லை. கடைசியில் வந்த பதிலும் சாமாவுக்குத் திருப்திகரமாக இல்லை; நம்பிக்கை தருவதாக இல்லை. அவளுடைய கடிதத்திலே ஒரு தீர்மானமும் நிராசையும் தொனித்தன. வேறு பல விஷயங்களையும் பரஸ்பர நண்பர்களையும் பற்றி விரிவாக எழுதிவிட்டு கடைசியில் அவள் “உன் அன்பார்ந்த சகோதரி” என்று கையொப்பம் இட்டிருந்தாள். கமலாவுக்கோ சாமாவுக்கோ கல்யாணம் நிச்சயமானால், தெரியப்படுத்தினால், தான் இரண்டு நாள் முன்னதாகவே வர விரும்புவதாகவும் எழுதியிருந்தாள். சுந்தாப் பாட்டியைப் பற்றி அவள் எழுதியிருந்ததில் அவளிடம் அவள் வைத்திருந்த அன்பும் அளவற்ற மதிப்பும் தெளிவாகத் தெரிந்தன. இந்தக் கடிதத்துக்கு என்ன பதில் எழுதுவது என்று அறியாமல் சாமா சும்மா இருந்துவிட்டான்; பின்னால் யோசித்துப் பதில் எழுதிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டான்.

சாமாவின் மனத்தில் ஏற்பட்டிருந்த இந்தப் போராட்டங்களை யெல்லாம் அறியாமலே நாராயணையர் காலம் கழித்துக் கொண் டிருந்தார்.

அவரைப் பற்றிய வரையில் அவருக்கு எவ்விதமான போராட்டமும் கிடையாது. அவர் மனத்தில் ஓர் அமைதி குடிகொண்டிருந்தது. அந்த அமைதிக்குத் தன் பிள்ளையே காரணம் என்று அவர் பெருமை கொண்டிருந்தார். அவனுக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இரண்டாவது அவனுக்கு இஷ்டமானபடி வாழ்க்கை நடத்த வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுத்துவிட்டு தான் வாழ்க்கையினின்றும் ‘ரிடைய’ராகி விட வேண்டு மென்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அறுபது வருஷங்களாக வாழ்க்கையில் எழுந்த பிரச்னைகளில் முட்டி மோதிக்கொண்டு அலுத்துவிட்டவர்களுக்குத் தெரியும் இந்த அமைதியின் அருமை ! எவ்வளவு இனிமையானது அது! தெருவில் திண்ணை திண்ணையாக உட்கார்ந்து நிஷ் கவலையாக அவர் தன் பிள்ளையின் பிரதாபங்களைப் பற்றி மணிக்கணக்காக அளந்துகொண்டிருப்பார்.

அவருடைய மன நிம்மதியும் சீக்கிரமே கெட்டு விட்டது. அறுபது வயதில்கூட மனிதர்கள் நிம்மதியாக இருப்பது ஏனோ தெய்வத்துக்குப் பிடிப்பதில்லை!

ஒருநாள் காலையில் வழக்கம்போல நாராயணையர் மகாலிங்கையர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தன் பிள்ளை என்னென்ன செய்திருக்கிறான், என்னென்ன செய்யப் போகிறான் என்று நீட்டி முழக்கிப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். காலைப் பத்திரிகையைப் பிரித்த மகாலிங்கையர் “சாமா நம்பர் என்ன, நாராயணா?” என்றார்.

பார்த்ததில் சாமா சொன்னபடியே மூன்றாவது பகுதியில் கோட்டை விட்டுவிட்டான். ஆத்திரத்துடன் எழுந்து வீட்டுக்கு வந்தார் நாராயணையர்.- சாமா ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து தன் பாட்டியுடனும் கமலாவுடனும் ஏதோ சிரித்து விளையாடிப் பேசிக் கொண்டிருந்தான்.

தெரு முழுதும் கேட்கும்படியாக நாராயணையர் “என் மானத்தைப் போக்கி விட்டாயேடா!” என்று இரைந்தார்.

சுந்தாப் பாட்டியும் கமலாவும் திடுக்கிட்டு எழுந்து நின்றனர். சாமாவும் திகைத்துப்போனான். “என்ன அப்பா அது?” என்று கேட்டான்.

“உன்னாலே எனக்கு இந்தக் தெருவிலே இனிமே தலைகாட்டக் கூட வெட்கமாயிருக்கு!” என்றார் அவர். இதைச் சொல்லிவிட்டு அவர் தெருத் திண்ணையில் போய்ப் படுத்துக் கொண்டு விட்டார். அவர் ஓர் ஆயுள் முழுதும் சிரமப்பட்டுக் கட்டியிருந்த கோட்டைகள் எல்லாம் ஒரே வினாடியில் இடிந்து விழுந்துவிட்டன. எவ்வளவுக்கெவ்வளவு அவர் தம் பிள்ளை கெட்டிக்காரன் என்று எண்ணி இருந்தாரோ அவ்வளவுக் கவ்வளவு அவன் மடையன், பேச்சைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவன் என்று அவருக்குத் தோன்றிற்று. அவர் உள்ளத்தில் இருந்த ஏக்கங்கள் பசிகள் எல்லாம் பிள்ளை என்ற ஒரு மந்திரத்தால் இவ்வளவு நாள் கட்டுண்டு கிடந்தன. அந்த மந்திரம் இப்போது பலிக்காத மந்திரமாகப் போய் விட்டது. அவர் உள்ளத்தின் ஏக்கங்கள், ஓர் ஆயுள் காலத்தின் பசிகள் எல்லாம் விடுபட்டுத் தலை விரித்துப் பேயாட்டம் ஆடின.

சின்ன விஷயம்தான். இதைச் சின்ன விஷயம் என்றுதான் சாமா கருதினான். ஆனால் வரப்போகும் தோல்விகளுக்கெல்லாம் இது அறிகுறி என்று நாராயணையர் கருதினார். சின்ன விஷயம்தான்: இவ்வளவு சின்ன விஷயத்திலேயே வெற்றி பெற மாட்டாதவன் வாழ்க்கையில் வேறு எந்தப் பெரிய போரில் வெற்றி பெற்றுவிடப் போகிறான் என்று எண்ணினார் அவர். அவர் எண்ணியதும் நியாயம் தானே !

பீ.ஏ. பரீக்ஷையில் தேறாமல் இருந்துவிட்டது பிசகு என்று தன் தகப்பனாரை அப்பொழுது பார்த்தபின்தான் சாமாவுக்குத் தோன்றிற்று. இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டிருந்தால் நிச்சயமாகத் தேறியிருக்கும். ஏதோ அலக்ஷியம்; விட்டு விட்டான். அப்படியும் என்ன மோசம் போய் விட்டது? ‘பாஸூம் பண்ணி விடலாம்.

“பாஸ் பண்றவாள்ளாம் மேதைகளோ?” என்று தன் தகப்பனாருக்கு அவன் சமாதானம் சொல்லிப் பார்த்தான். அவர் சாந்தமடைவதாக இல்லை. மனத்துக்குள்ளேயே அவர் பொங்கிக் கொண்டிருந்தார். அவர் சுபாவம் அது. அவரைச் சாந்தப்படுத்துவது எப்படி என்று அறியாமல் சாமா தவித்தான். வார்த்தைகளால் சமாதானமடைய மாட்டார்; ஏதாவது செய்கையில்தான் அவரைத் திருப்தி செய்யவேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.

காலகதியில் அவர் துன்பம் மாறிவிடும். அதற்குள் தன்னால் ஆனதையும் செய்யலாம் என்று சாமா எண்ணினான்.

வாழ்க்கையில் தான் எந்தத் துறையில் இறங்குவது என்று அவன் கல்லூரியில் படிக்கும்போதே தீர்மானித்திருந்தான். அந்தத் துறைக்கு அவன் பீ.ஏ. பட்டம் பெற்றாலும் ஒன்றுதான்; பெறாவிட்டாலும் ஒன்றுதான். இவ்வளவு நாள் அதில் கவனம் செலுத்தாமல் வீண் கனவுகள் கண்டுகொண்டு பொழுது போக்கிவிட்டது தவறு என்று அவன் வருந்தினான். பரிக்ஷை முடிவுகள் வெளி வந்த அன்றே அவன் எழுத உட்கார்ந்துவிட்டான்.

அவனுடைய வாழ்க்கை லக்ஷியம் இலக்கியம் தான்.

ஆங்கிலத்தில் அவனுக்கு நல்ல அறிவும் பயிற்சியும் இருந்தன. அதைப் பயன்படுத்திக் கொண்டு இலக்கிய ஆசிரியனாகிப் பெயரும் புகழும் மட்டுமன்றிப் பணமும் சம்பாதிக்கத் தொடங்கி விடுவது என்று அவன் தீர்மானித்தான். உள்ளத்தில் குமுறிக்கொண் டிருந்த சிந்தனைகளைப் புனைந்து இரண்டொரு கட்டுரைகளையும் கதைகளையும் ஒரு வாரத்தில் எழுதி முடித்தான். ஒன்றைச் சென்னை வாரப் பதிப்பு ஒன்றுக்கும், மற்ற இரண்டையும் அமெரிக்காவில் இந்திய விஷயங்களில் ஈடுபட்டுள்ள இரண்டு பத்திரிகைகளுக்கும் அனுப்பினான்.

அவன் தகப்பனார் வழக்கம் போல இருந்திருந்தால் அவன் அவரிடம் அவற்றைப் படித்துக் காட்டியிருப்பான். ஆனால் அவர் வழக்கம் போல இல்லை. சாமா தனக்குத் தீங்கும் அவமானமும் இழைப்பதையே லக்ஷியமாகக் கொண்டு விட்டான்; தான் இனி உயிர்வாழ வேண்டிய அவசியமே இல்லை என்று அவர் அனாவசியமான சிந்தனைகளால் குன்றிப்போய், மனம் இடிந்து உட்கார்ந்திருந்தார். சாமாவிடம் அவர் அவ்வளவு நாள் வைத்திருந்த அன்பும் மதிப்பும் இந்த ஒரு சின்ன விஷயத்தால் கசந்து விட்டன; அவருக்கு வாழ்க்கையே இப்போது கசந்தது. அவர் தன் வீட்டுக் குட்டித் திண்ணையை விட்டு இறங்குவதே இல்லை. தெருவைத் தாண்டி மகாலிங்கையர் வீட்டுத் திண்ணைக்குக் கூட அவர் போவதை நிறுத்திவிட்டார்.

சாமாவுக்கு அவரிடம் அனுதாபமில்லாமல் இல்லை. ஆனால் மனத்துக்குள் தன்னையே கேட்டுக் கொண்டான். “ஏன் இப்படி என்னைப் பற்றித் திண்ணை திண்ணையாகத் தம்பட்டம் அடித்துவிட்டு இப்போது அவதிப்பட வேணும்? சும்மா இருந்திருக்கலாகாதா?” அவரவர்களுடைய

பசிகள் அவரவர்களுக்குத்தானே தெரியும் !

சுந்தாப்பாட்டியும் கமலாவும் ஜானம்மாளும் கூடத் தங்கள் சாமாவுக்குப் பரிக்ஷை தேறவில்லை என்று அறிந்து ஆச்சரியப் பட்டார்கள். தேறியிருந்த இரண்டு பகுதிகளிலும் கூட அவன் நன்றாகத் தேறவில்லை. சுமாராகத்தான் தேறியிருந்தான் என்று அறிந்து திகைத்துப் போனார்கள். ஸ்ரீனிவாஸனும் ராஜியும் கூடத் தேறிவிட்டார் களே! அவர்களுக்கும் வருத்தம்தான். ஆனால் அதற்காக நாராயணையர் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டியதில்லை என்றே அவர்கள் எண்ணினார்கள். சாமாவின் மனம் கசந்துவிடாதோ என்று சிந்தித்தார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *