பசி
க. நா. சுப்ரமண்யம்

3

சிறிது நேரம் கூடத்தில் இருந்தவர்கள் யாரும் ஒன்றும் பேசவில்லை. அந்த மௌனம் கமலா மறுபடியும் கூடத்துக்கு வந்த பிறகுதான் கலைக் தது.

கையில் இரண்டு புஸ்தகங்களுடனும் ஒரு பெரிய போட்டோ படத்துடனும் கமலா காமரா அறையிலிருந்து வந்தாள். “பாத்தியாம்மா, காலேஜ் போட்டோ!” என்றாள். “சாமா! போட்டோவை இன்னிக்கே சோலமலையிடம் கொடுத்தனுப்பிக் கண்ணாடி போட்டு மாட்டிவிடு. இல்லாட்டா அதும்பாட்டுக்கு மாசக்கணக்காப் பெட்டியிலேயே கிடந்தூடும்; நீ மறந்துடுவே.”

இதை ஒரு’சாக்’காகச் சொன்னாளே தவிர கமலா உண்மையில் அந்தப் போட்டோவில் தன் அம்மாஞ்சியையும் அவனுடன் இருந்தவர்களையும் வெளிச்சத்தில் சரியாகப் பார்க்க வேண்டும் என்ற அந்தரங்க ஆசையுடன்தான் வெளியே கொண்டு வந்திருந்தாள்.

“இது மாதிரி இன்னும் இரண்டு கூடப் பெட்டி யில் இருந்துதே!” என்றான் சாமா.

ஆனால் அது ஒன்றுதான் கமலாவின் கவனத்தைக் கவர்ந்தது. அவளும் அவள் தாயாரும் முற்றத்தில் வெளிச்சத்தில் நின்று படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சாமாவும் எழுந்து முற்றத்துக்கு வந்தான்

“எங்கே காட்டு, நானும் பாக்கறேன்” என்று சுந்தாப்பாட்டியும் ஊஞ்சலைவிட்டு எழுந்து வந்தாள். “உனக்கு. அதிலே என்ன தெரியும்? கண் தான் மங்கிப் போச்சே!” என்றாள் ஜானம்மாள். “போட்டோவிலே மருமான் எங்கே இருக்கான்னு உனக்கே தெரியல்லையாம்!….” என்றாள் கமலா.

“அத்தை இப்போ படத்தில் மருமான் எங்கேன்னு தேடல்லை. நீ அப்படி எண்ணிண்டது உன் மேலேதான் பிசகு” என்றான் சாமா.

“பின்னே எதைத் தேடறாளாம்”

“சொல்லட்டுமா ?”

“சொல்லேன்.”

“சொல்லியே விடட்டுமா?”

“என்னவோ பிரமாதப் படுத்தறயே! சொல்லேன்.”

சாமா புன்னகையுடன் “இந்தப் படத்தில் இருப்பவர்களில் யார் தனக்கு மாப்பிள்ளையாக வந்தால் தேவலை என்று அத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாள்” என்றான்.

“சையப்பா! ” என்று சொல்லிக் கமலா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“நீதான் இந்த லீவிலே தேடித்தரேன்னுட்டயே! எனக்கென்ன இனிமேல் கவலை ? ” என்றாள் ஜானம்மாள் கடுகடுப்பாக.

“பாரேன், நான் சொன்னபடி….” என்று சாமா ஆரம்பிக்கையில் சிவந்த முகத்துடன் கமலா குறுக்கிட்டாள்: “என்னை இப்படியெல்லாம் கேலி செய்வதாயிருந்தால், நான் போறேண்டியம்மா. எனக்கு உள்ளே வேலை கிடக்கு. இந்தா, சாமா, படத்தைப் பிடி” என்றாள்.

“கடுகத்தனை அம்மாஞ்சி, அவனும் உன்னைக் கேலி பண்ணப் படாதுன்னா வேறே யார் கேலி பண்ணினாத்தான் பொறுக்குமாம் உனக்கு?” என்று ஜானம்மாள் தன் பெண்ணைக் கடிந்து கொண்டாள்.

“கேலி என்ன இதிலே? நல்ல வரனாப் பார்த்துக் கல்யாணம் பண்ண வேண்டாமா? வயசு ஆகல்லையா?” என்றாள் சுந்தாப்பாட்டி.

“வயசுதான் ஆறதே!” என்று குறைப்பட்டுக் கொண்டாள் ஜானம்மாள்.

“நாராயணனுக்கு உலக விவகாரம் ஒண்ணுமே தெரியாது.தன் பொண்ணுக்குக் கூட அவன் வரன் தேடிண்டு போனது கிடையாது; மருமாளுக்காகத் தேடப்போறானா? சாமாதான் பாத்து ஏற்பாடு செய்யணும். படிச்சவனா, நல்லவனா, பணம் அதிகம் கேக்காதவனாப் பாத்து………..” என்றாள் சுந்தாப் பாட்டி.

“இதோ கையிலே என்னோடே படிச்சவா படம் இருக்கே!” என்று சிரித்துக் கொண்டே சாமா சொன்னான். “இதிலே எந்தப் பையனை உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லு அத்தை. முடியுமானால் அவனையே பார்த்து கமலாவுக்கு முடித்து விடறேன்.”

ஜானம்மாள் சிறிது நேரம் தயங்கினாள். “வேலையிருக்கு. உள்ளே போறேன்” என்று கிளம்பிய கமலா கூடச் சிரித்தபடியே படத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள். சுந்தாப்பாட்டியின் கிழக் கண்கள் படத்தில் தன்னுடைய பேரன் எங்கே என்று துழாவிக் கொண்டிருந்தன.

“விளையாட்டில்லை அத்தை ” என்றான் சாமா.

“நிஜமாகத்தான். யாரைப் பிடிச்சிருக்குன்னு சொல்லேன். என் வகுப்புப் பையன்கள் எல்லோருமே நான் எது சொன்னாலும் கேட்பார்கள். தவிர என் அத்தங்காளுக்குத்தான் என்ன, அழகிலே குறைவா, அறிவிலே குறைவா?”

“யார் நன்னாருக்கான்னு சொல்லட்டுமா?” என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே ஜானம்மாள் கேட்டாள். சிறிது நேரம் படத்தையே உற்றுப் பார்த்தாள். அப்புறம் முதல் வரிசையில் உட் கார்ந்திருந்த ஒருவனுடைய உருவத்தில் கை வைத்துக் காட்டினாள்.

சாமா அவள் காட்டிய உருவத்தைக் குனிந்து பார்ப்பதன் முன் கமலாவின் குரல் கேட்டது. “அது நம்ம சாமா படம்னா. டிரெஸ் போட்டுண் டிருக்கான். அதனாலே உனக்குத் தெரியல்லை” என்றாள் கமலா.

சாமா தன் அத்தையைப் பார்த்தான்; நிமிர்ந்து அத்தங்காளையும் பார்த்தான். ஏன் அவளுடைய முகம் இப்படித் திடீரென்று கோவைப் பழம்போலச் சிவந்தது?

“சாமா படமா அது?” என்று ஒன்றும் அறியாதவள் போலக் கேட்டாள் ஜானம்மாள்.

“இப்படி நான் நின்னுண்டு பேசிண்டிருந்தாக்கே ராத்திரி சமையல் பன்னிரண்டு மணிக்குத் தான் ஆகும். மாமா வந்து கோபிச்சுக்குவா. நான் போறேன்” என்று சொல்லிக்கொண்டே கமலா அங்கிருந்து அகன்றுவிட்டாள். போகும் போது ஓரக் கண்ணால் தன்னுடைய ‘அம் மாஞ்சியை’ ஒருதரம் பார்த்துவிட்டுப் போனாள். அதைச் சாமா கவனிக்கவில்லை-என்னதான் படித்திருந்தாலும் அசட்டு’அம்மாஞ்சி’ தானே அவன்!

” எங்கே? இதுதானே சாமா?” என்று கேட்டபடியே சுந்தாப்பாட்டி போட்டோவைத் தன் கையில் வாங்கிக் கொண்டாள்.

“காரிலே இங்கே என்னைக்கொண்டு வந்து விட்டு விட்டுப் போனானே ஸ்ரீனிவாஸன், அவன் தான் இது” என்று வேறு ஓர் உருவத்தை சாமா தன் பாட்டிக்குக் காட்டினான்.

சுந்தாப்பாட்டி வேறு ஓர் உருவத்தைக் காட்டி “இது யாரு? வெட்கம் மானத்தை யெல்லாம் விட்டுட்டு இத்தனை புருஷாளுக்கு மத்தியிலே ஜம்னு உட்கார்ந்திருக்காளே, இது யாரு?” என்றாள்.

“அதுவா? என்னோடே கூடப் படிக்கறது. ராஜீன்னு பேரு. ஜட்ஜ் வீட்டுப் பெண்.”

“எங்கே?” என்று ஜானம்மாள் போட்டோவைத் தன் கையில் மறுபடியும் வாங்கிப் பார்த்தாள். அப்புறம் “கமலா! கமலா! இதைப் பார்த்தயோடி நீ?” என்று சமையலறைக்குள் சென்ற தன் பெண்ணைக் கூப்பிட்டாள். கமலா வந்ததும் அவள் கையில் போட்டோவைக் கொடுத்தாள். “பாத்த யாடி இந்தப் பொண்ணை. நம்ம சாமாவோடே சரி சமானமாப் படிக்கறதாம். ஜட்ஜி வீட்டுப் பொண் ணாம் ” என்றாள்.

“அதுக்கென்ன இப்போ?” என்றாள் கமலா.

சிறிது தயங்கிவிட்டு, “படத்திலே பார்க்க அழகாத் தான் இருக்காள்” என்றாள்.

“நேரிலே பார்க்கவும் சுமாரா அழகாய் இருப்பாள். ஆனால் படிப்பிலே அவ்வளவாகப் போறாது. சுமார்தான்” என்றான். சாமா.

“உட்கார்ந்திருக்கிற இருப்பே ரொம்பவும் அலங்காரமாத்தான் இருக்கு” என்றாள் கமலா

“இல்லாட்டா உன்னையும் என்னையும் போலக் கட்டுப் பெட்டியா கர்நாடகமா இருக்கணும் எங் கறயா?” என்றாள் ஜானம்மாள்.

“புது நாடகமா, அலங்காரமா மட்டும் இருந்துட்டாப் போதுமா? இந்த மாதிரிப் பொண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் ஒருவேளைப் பிண்டத்துக்குக்கூட அடிச்சிண்டு அழவேண்டியதுதான்.”

“சாப்பாட்டுக்கா பிரமாதம்? சமையல்காரனை வச்சுக்கறது” எள்றாள் கமலா.

“எனக்கும் படிச்ச, நாகரிகப் பெண்களைக் கண்டால் பிடிக்கறதில்லை தான். ஆனால் ராஜி, பாவம், அப்படி எல்லாம் இல்லை. நல்ல பெண். படிப்பிலே அதிகமில்லாவிட்டாலும் விவேகமுள்ளவள்….” என்றான் சாமா.

“படத்திலே பார்க்கறச்சயே தெரிகிறதே!” என்று கமலா குறுக்கிட்டாள்.

சாமா அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் அதைச் சொன்ன குரல் அவனுக்குப் பிடிக்கவில்லை. “நீயே பாரேன் ” என்றான் சாமா. “நேரில் பார்த்தால் தெரியறது. அவள்கூட அடுத்த மாசம் இங்கே நம்மாத்துக்கு வருவதாகச் சொல்லி இருக்காள்.”

இந்தச் செய்தியை எப்படி அங்கீகரிப்பது என்று அங்கிருந்தவர்கள் யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் சுந்தாப்பாட்டி ” நம்மஜாதிப் பொண் தானே அது?” என்று கேட்டாள்.

“ஆமாம்.”

”உன்னோடேயெல்லாம் சகஜமாகப் பேசுமா அது ?” என்று ஆச்சரியத்துடன் ஜானம்மாள் கேட்டாள்.

“பேசாமே என்ன ?” என்றான் சாமா. “பேசினால் என்ன? இப்போ நானும் கமலாவும் பேசல்லையா ? அண்ணா தம்பிகளோடே எல்லோரும் பேசறதில்லையா? அப்படித்தான். போட்டோவில் இருக்கிற எல்லாப் பெண்களும் என் வகுப்புத்தான். அவர்கள் எல்லோருமே எல்லோருடனும் சகஜமாகப் பேசுவார்கள்.”

“எல்லோருமே நல்லவாளா இருந்துட்டால் தப்பில்லைதான்” என்று ஜானம்மாள் ஆக்ஷேபித்தாள்.”ஆனால் எல்லோருமே உன்னைப்போல நல்லவாளா இருப்பாளா ?”

பெண் கல்வியைப் பற்றி விரிவாக விவாதிக்க அப்பொழுது சாமாவுக்கு மனமில்லை. தவிரவும் ஜானம்மாளுடன் அது விஷயமாக விவாதித்துத் தன்னால் வெற்றிபெற முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். அவளுடைய கேள்விக்கு அவன் பதில் அளிக்கவில்லை.

இரண்டு நிமிஷம் கழித்து ஜானம்மாள் “என்னமோ அப்பா! இதை யெல்லாம் பத்தி எனக்கென்ன தெரியும்? ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயம். இவ்வளவு தடிப்பயல்களுடன் சரிசமானமா என் பொண் பேசிப்பழகிண்டிருக்க நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்…” என்றாள்.

பேச்சை வேறு போக்கில் திருப்ப சாமா முயன்றான்.”அப்பா எங்கே? இன்னும் காணோமே? பொடி வாங்கப் போனாளாம்!” என்றான்.

ராஜியைப் பற்றிய பேச்சை அத்துடன் விட்டு விடக் கமலாவுக்கும் இஷ்டமில்லை போலும். “மற்ற பையன்களும் பெண்களும் நிக்கறாளே, நீயும் அவளும் மட்டும் வாத்தியார்களுடன் சரிசமானமா உக்காந்திண்டிருக்கேளே, ஏன் ? ” என்று கேட்டாள்.

“அதுவா? அவள் மாணவிகள் சங்கத்துக் காரியதரிசி. நான் மாணவர்கள் சங்கத்துக் காரியதரிசி. இரண்டு காரியதரிசிகளுக்கும் போட்டோவில் உக்கார இடம் கொடுப்பது கலாசாலையின் சம்பிரதாயம்.”

“படிப்பில் அவள் அவ்வளவா கெட்டிக்காரி இல்லேன்னியே!”

“படிக்கற பெண்களுக்குள் அவள்தான் கெட்டிக்காரி.”

“ஓஹோ!” என்றாள் கமலா. பிறகு சிறிது நேரம் யோசித்துவிட்டு “அவள் என்னிக்கி வர தாகச் சொன்னாள் ?” என்று கேட்டாள்.

“நிச்சயமில்லை. ஆனால் வருவதற்கு முந்தி எழுதுவாள்; ஏன்?”

“கேட்டேன். உம்……… படம் நன்னாத்தான் இருக்கு” என்றாள் கமலா.

எந்தப் படம் – ராஜியின் படமா, தன்னுடையதா, அல்லது முழுபோட்டோவுமா- எது நன்றாயிருந்தது என்று சாமா அவளைக் கேட்கவில்லை.

“ரெண்டு காரியதரிசிகளும் மட்டும் சேர்ந்து படம் எடுத்துக்கறதுன்னு சம்பிரதாயம் கிடையாதோ?” என்று ஜானம்மாள் கேட்டாள்.

“இன்னும் ஏற்படவில்லை” என்று சொல்லிச் சாமா சிரித்தான். அப்பொழுது வெளியே அவன் தகப்பனாருடைய குரல் கேட்டது. அவருடன் பேசச் சாமாவும் வெளியே போனான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *