
பசி
க. நா. சுப்ரமண்யம்
7
நாராயணையரும் சாமாவும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் என்னவெல்லாமோ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண் டிருந்தார்கள். அவர்களுடைய சம்பாஷணையின் பிற்பகுதியை மட்டும் நாம் இங்கே கவனிப்போம்.
சிறு குழந்தையைப் போல தன் பிள்ளையைத் தன்னுடன் சேர்த்து அணைத்து உச்சிமுகர வேண்டும் என்று நாராயணையருக்கு ஆசை. ஆனால் அவன் வளர்ந்து பெரியவனாகி விட்டவன் ; பீ. ஏ. பரிக்ஷை எழுதிவிட்டு வந்திருப்பவன்; ஏதாவது ஆக்ஷேபணை சொல்லுவானோ என்று அவர் பயந்து தன் ஆசையை அடக்கிக் கொண்டு இருந்து விட்டார். பக்கத்தில் அவனை உட்கார வைத்துக் கொண்டு கண்களில் அன்பு ததும்பி வழிய அவர் அவனுடைய தலையையும் முதுகையும் தடவிக் கொடுத்தார்.
“கல்கத்தாவிலிருந்து ஏதாவது கடிதம் வந்ததா?” என்று கேட்டான் சாமா.
“வந்தது; பாகீரதி இன்னும் பிரசவிக்கவில்லையாம்…”
“உம்….புதுசாக ஜாக் லண்டன் புஸ்தகங்கள் இரண்டு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.- மதி முகம் முதலிய கதைகள், ஜான் பார்லீகார்ண் என்று ஒரு நாவல்.”
கல்கத்தாவைப் பற்றிப் பேசியவுடனே சாமாவுக்கு ஜாக் லண்டன் ஞாபகம் வந்துவிட்டது. ஆங்கில அமெரிக்க இலக்கிய ஆசிரியர்களிலே அவனுடைய பெரிய சித்தப்பாவுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் ஜாக் லண்டன்தான். வாழ்க்கையின் அடிப்படையான உண்மைகளை இலக்கிய ஆசிரியர் களிலேயே அவன் ஒருத்தன்தான் சரியானபடி கையாண்டிருக்கிறான் என்பது அவருடைய அபிப் பிராயம். அவனுடைய புஸ்தகங்கள் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவர் வாங்கி வைத்திருந்தார். ஒவ்வொன்றையும் அவர் கணக்கற்ற தடவைகள் திரும்பத் திரும்பப் படித்திருக்கிறார். ஆங்கிலத்தில் நல்ல பயிற்சியும் ரஸனையும் பெற்றிருந்த தன் முத்தண்ணாவும் அவற்றை எல்லாம் படிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. தபால் செலவைக் கூட லக்ஷியம் பண்ணாமல் சில புஸ்தகங்களை அனுப்பியும் இருந்தார். சாமாவுக்கு ஜாக் லண்டனைப் பற்றி அவ்வளவாக உயர்ந்த அபிப்பிராயம் கிடையாது. எனினும், சித்தப்பாவுக்காக, அப்பா படிப்பாரே என்று அகப்பட்ட புஸ்தகங்கள் இரண்டை வாங்கி வந்திருந்தான்.
“ஜான் பார்லீகார்ண் படித்திருக்கிறேன். நல்ல புஸ்தகம். இன்னும் ஒருதரம் படிக்கலாம். மதிமுகம் பார்த்ததில்லை.”
“சுமாராகத்தான் இருக்கு” என்றான் சாமா. “ஜாக் லண்டனைத் தவிர இன்னும் பத்துப் பதினைந்து புதுப் புஸ்தகங்கள் வாங்கிக்கொண்டு வந் திருக்கிறேன். ரொமென் ரோலந்தின் ஜீன் கிறிஸ் தோவ் வாங்கினேன். எவ்வளவு அழகான புஸ்தகம் தெரியுமா அது? ஒவ்வொரு பக்கத்திலும், ஏன், ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலுமே உணர்ச்சியும் அழகும் முட்டித் ததும்பி நிற்கின்றன. நீட்ஷேயின் இப்படிச் சொன்னான் ஜார துஷ்டிரன் என்கிற புஸ்தகமும் கொண்டு வந்திருக்கிறேன். சிந்தித்துப் பார்க்கவே மாட்டேன் என்று மறுக்கும் மனிதனைக்கூட சிந்திக்க வைக்கக்கூடிய புஸ்தகம் அது” என்று அளவு கடந்த உத்ஸாகத்துடன் சொன்னான் சாமா.
“யார் அது? நீட்ஷேயா? பெயரைக்கூடக் கேள்விப்பட்ட தில்லையே! ” என்றார் நாராயணையர். தான் கூடக் கேள்விப்பட்டிராத ஆசிரியர்களை எல்லாம் தன் பிள்ளை படிக்கிறானே என்ற பெருமிதத் தால் அவர் பூரித்துப் போனார்.
“நம் ஊரில் ஆங்கிலம் படித்தவர்களில் பலருக்கு ரெய்னால்ட்ஸைத் தவிர வேறு என்ன தெரிகிறது? விரும்பிப் படிப்பதும் அதைத் தவிர வேறு இல்லை. நீட்ஷே என்ற பெயரைக்கூட நம்மூரில் பலர் இன்னமும் கேள்விப்பட்டதில்லை. நம்முடைய அறியாமைதான் எப்படிப்பட்டது என்று சொல்ல முடியுமா?” என்றான் சாமா. நீட்ஷே என்பவன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே உயிர் வாழ்ந்த ஒரு தத்துவ ஞானி. ஜர்மனி தேசத்திலே பிறந்தவன். அவன் வாழ்ந்ததெல்லாம் சுமார் ஒரு ஐம்பது வருஷங்களே. அதிலும் கடைசி சில வருஷங்களில், உலகின் போக்கைக் கண்டு சகியாமல் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாம். அப்படியும் மிகச் சொல்ப காலத்தில் அவன் எழுதி வெளியிட்ட நூல்களும் அவற்றில் அவன் விவரித்த கொள்கைகளும் அபிப்பிராயங்களும் தத்துவங்களும் சிந்தனா லோகத்தையே ஒரு புரட்டுப் புரட்டி விட்டன என்று சொல்லுகிறார்கள். மேல்நாடுகளில் எல்லா வாழ்க்கைத் துறைகளையுமே அவனுடைய சிந்தனைகள் பாதித்திருக்கின்றன. இதன் பயன் நல்லதா கெட்டதா என்பதை சரித்திரம்தான் பின்னர் சொல்ல வேண்டும். அவன் புஸ்தகங்களைப் படிக்கும் போது சில இடங்களில் நமக்கு மூச்சுவிடக் கூடப் பயமாயிருக்கிறது. பயங்கரமான இடங்களுக் கெல்லாம் நமது கற்பனையை அவன் கூட்டிச் செல்லுகிறான். பாதாளங்களையும், மேரு சிகரங்களையும் அவன் எழுத்திலே காணலாம். இதென்ன பிதற்றல் என்று சில இடங்களில் தோன்றும்; சில இடங்களில் இதென்ன அற்புதம் என்று தோன் றும்; ஆனால் எல்லா இடங்களிலும் அவன் நமது கற்பனையை, சிந்தனையைத் தூண்டி விடுகிறான்,.. என்ன அழகு!……என்ன அற்புதம்! ” சாமா மூச்சு விடுவதற்காகத் தனது பிரசங்கத்தைச் சற்றே நிறுத்தினான்.
“உம்..” என்றார் நாராயணையர்.
சாமா சிறிது நேரம் தயங்கினான். பிறகு சொன்னான்: “கல்லூரியில் ஆங்கில வியாசப் போட்டியிலே முதல் பரிசாக அந்தப் புஸ்தகத்தை எனக்குத் தந்தார்கள்.”
“வியாசப் போட்டியிலா?” என்றார் நாராயணையர். கல்லூரி ஆங்கில வியாசப் போட்டியில் தம் பிள்ளை முதல் பரிசு வாங்கினான் என்பதைக் கேட்டு அவர் உள்ளம் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தது. நீட்ஷே என்ற மேதாவியைப் பற்றி இவ்வளவு நேரம் சாமா சொன்னதெல்லாம் அவருக்கு அடுத்த வினாடியே மறந்துபோய் விட்டது; ஆனால் அந்த நீட்ஷே எழுதிய ஒரு புஸ்தகம் (“அதன் பெயர் என்ன? ஓ ! ‘இப்படிச் சொன்னான் ஜாரதுஷ்டிரன்’ என்று பெயரா அதற்கு ? சரிதான்”) தம் பிள்ளைக்கு வியாசப் போட்டியில் முதல் பரிசாக அளிக்கப்பட்டது என்பது மட்டும் அவர் மனத்தில் அழியாமல் நிலைத்துவிட்டது.
“ராத்திரி அதில் சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறேன் பார், அப்பா” என்றான் சாமா.
தனக்குப் பிடித்த புஸ்தகங்கள் பலவற்றை சாமா தன் நண்பர்களுக்கும், முக்கியமாகத் தன் தகப்பனாருக்கும் வாசித்துக் காட்டுவது நெடு நாளைய பழக்கம். பல புஸ்தகங்களை அவன் இப்படித் தன் தகப்பனாருக்கு வாசித்துக் காட்டியது உண்டு. இரவு வெகு நேரமாகிவிடும்; நாராயணையருக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றும். சாமா வாசித்துக் கொண்டிருக்கையிலேயே சில சமயம் அவர் கண்ணை மூடிவிடுவார். “தூக்கம் வரதா அப்பா? போதுமா என்று சாமா கேட்பான். அவன் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டு “இல்லையே! ” என்பார் நாராயணையர். “மேலே வாசி” என்பார். நிஜமாகவே அவர் தூங்கிவிடும் வரையில் சாமா வாசித்துக் கொண்டிருப்பான். அரைத் தூக்கமும் விழிப்புமாக அவன் வாசிக்கக் கேட்ட புஸ்தகங்களை எல்லாம் அவர் மறுநாள் பகலில் ஒருதரம் படித்து விஷயத்தைத் தெரிந்து கொண்டு விடுவார்; இல்லாவிட்டால் பிள்ளையுடன் ஏதாவது விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் போது தான் தூங்கிவிட்ட குட்டு வெளியாகி விடுமே என்ற பயம் அவருக்கு.
நாராயணையர் தவறுதலாகத் தபாலாபீஸில் சேர்ந்து தன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டவர். அவருடைய அறிவும் படிப்பும் உபயோகமாகியிருக்கக் கூடிய வேறு ஏதாவது ஒரு துறையில் அவர் ஈடுபட்டிருந்தாரானால் மிகவும் நல்ல ஸ்திதிக்கு வந்திருக்கக் கூடியவர் அவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சகோதர மாணவர்கள் அவருக்கு பயத்துடனும் பக்தி யுடனும் மெக்காலே என்றும், மார்க்கஸ் டல்லியஸ் சிஸரோ என்றும் பட்டப் பெயர் சூட்டியிருந்தார்கள். கல்லூரியின் தலைவராயிருந்த வெள்ளைக்கார் கூட நாராயணையரின் பாஷா விலாஸத்தையும் பேச்சு வன்மையையும் கண்டு வியந்ததுண்டு என்று அவருடன் படித்தவர்கள் சொல்லுவார்கள். தபாலாபீஸில் அவருடைய அறிவும் சக்திகளும் துருவேறி எதற்கும் பிரயோசனப் படாமல் போய் விட்டன.
தாம் சம்பாதித்து வைத்திருந்த சொத்துக்களுக்கு மட்டுமன்றித் தம்முடைய அந்தரங்க ஆசைகளுக்கும், நிறைவேறாத லக்ஷியங்களுக்கும் வாரிசாகப் பிறந்தவன் சாமா என்று கருதி நாராயணையர் அகமகிழ்ந்திருந்தார். தம் வாழ்க்கையில் கைகூடாத ஆசைகளும் அபிலாஷைகளும் தம் பிள்ளையின் வாழ்க்கையில் கை கூடி விடும் என்றே அவர் கனவு கண்டுகொண்டிருந்தார். ஆதியிலிருந்தே கலை, இலக்கியம் போன்ற விஷயங்களில் தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவர் தம் பிள்ளைக்கும் புகட்டி இருந்தார்; சற்றுக் கடுமையாகவே புகட்டி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தம் சிஷ்யன் தம்மையும் மிஞ்சி விடுவான் என்று கண்டதில் அவருக்கு உண்மையிலேயே பரம திருப்தி. தம் லக்ஷியங்கள் மட்டுமல்ல; தமது பண்டைக் குடும்பத்தின் லக்ஷியங்கள் எல்லாமே தன் பிள்ளையால் நிறைவேறும் என்று அவர் மனப்பால் குடித்தார். இவ்வளவு நாள் ஒளிமங்கி, எங்கே அணைந்து விடுமோ என்று திக்குத் திக்கென்று அடித்துக் கொண்டிருந்த தம் குடும்ப ஜோதி தம் மகனால் மீண்டும் உயிர் பெற்றுப் பிரகாசம் பெற்றுச் சுடர் விட்டுக் கொழுந்து விட்டு உலகெலாம் பரந்த ஒளியாகும் என்றே அவர் கனவு கண்டார்.
தம் கனவுகள், தம் லக்ஷியங்கள், பலிக்காமல் போனதற்கு ஒரு காரணம் தம்முடைய ஆதி காலப் பொருளாதார நிலைமை தான் என்று அவர் எண்ணினார். நோக்கங்களும் லக்ஷியங்களும், அவை எவ்வளவுதான் உயர்ந்தவை யானாலும், பசியுடனும் பட்டினியுடனும் நேரடியாகச் சண்டைபோட்டு நிற்க முடியாதவை என்பது அவர் அனுபவ சாத்தியமாகக் கண்டறிந்திருந்த ஓர் உண்மை. தம் மகன் வயிற்றுப் பசியால் அவஸ்தைப் படாமலிருக்கும் வண்ணம் தம்மால் ஆன வரையில் அவர் ஏற் பாடு செய்து விட்டார். மற்ற பசிகளுக்கெல்லாம் தேவையான பரிகாரத்தை அவனேதான் தேடிக் கண்டு கொள்ள வேண்டும். தம் இள வயதில் தம் மனத்தில், தம் இதயத்தில் எழுந்த பசி வேட்கைகள் தம் பிள்ளையின் மனத்திலும் இதயத்திலும் தோன்றி விட்டன என்று அவர் அப்போது, அவனுடன் பேசிக் கொண்டிருக்கையில், அறிந்து கொண்டார். நல்லதுதான் என்று அவர் தம் மனத்தில் ஆனந்தம் கொண்டார். அவர் பசிகள் அவர் ஆயுளில் தீரவில்லை; ஆறவில்லை. அவன் பசிகள் தீர்ந்து விடும், அதற்குத் தம்மாலானதைச் செய்தாய் விட்டது என்று அவர் எண்ணினார்.
அவருடைய சிந்தனைகள் கலைந்தன, சாமாவின் வார்த்தைகளால்: “பரிக்ஷையில் முதல் இரண்டு பகுதிகளையும் நன்றாகவே எழுதியிருக்கிறேன். மூன்றாவது பகுதிதான் கொஞ்சம் தகராறு. தேறுவதே சந்தேகம்” என்றான் சாமா.
சாமா பரிக்ஷையில் எப்படி எழுதினான் என்று நாராயணையர் விசாரிக்கவில்லை. விசாரிக்க வேண்டியது அவசியமில்லை என்று தான் அவர் எண்ணினார். அவனாகவே இப்போது சொன்னதில் கூட அவருக்கு நம்பிக்கை விழவில்லை. அவன் நன்றாகத் தேறுவான்; இரண்டொரு பகுதிகளில் ராஜ தானியிலேயே முதலாவதாக இருப்பான் என்று அவர் எண்ணியிருந்தார். விளையாட்டாக ஏதோ அவன் சொல்லுகிறான் என்று அவர் எண்ணினார். “ஏன்? மூன்றாவது பகுதி என்ன ரஸாயனம் தானே ? அதில் சரியாக எழுதவில்லையா?” என்று அதில் அதிக ‘சொரத்’தில்லாமலே கேட்டார்.
“பிராக்டிகல் சரியாக வரவில்லை. போனால் போகிறது; பார்த்துக் கொள்ளலாம். ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும் சரியாக எழுதி விட்டேன்” என் றான் சாமா.
“உம்…. தேறாமலா போய்விடும் ?”
சாமா இரண்டு வினாடி ஒன்றும் சொல்லவில்லை. பிறகு “பார்த்தயா ! மறந்தே போய் விட்டேன்!” என்றான். உள் பக்கம் திரும்பி “கமலா! கமலா ! ” என்று கூப்பிட்டான். கமலா வந்ததும் அவளிடம் “என் பெட்டியைத் திறந்து அதிலே மேலே கும்பகோணத்திலே இருந்து வாங்கிண்டு வந்த பொடி இருக்கு. மாமா கிட்டே கொண்டு வந்து கொடு ” என்று சொன்னான்.
பிள்ளையின் வருகையால் பூரித்துப் போயிருந்த நாராயணையரின் உள்ளம் இந்தச் செய்தியைக் கேட்டு இன்னும் அதிகமாகப் பூரித்தது. பிள்ளைக்கும் புஸ்தகங்களுக்கும் அடுத்தபடியாக அவருக்குப் பொடியில் தான் ஈடுபாடும் பிரியமும் அதிகம். சாத்தனூரில் தமக்கு வேண்டிய காரமான பொடி கிடைப்பதில்லை என்று அவர் கண்டவரிடமெல்லாம் அழாத குறையாகச் சொல்லிக் கொண்டே இருப்பார். கும்பகோணம் போய் வருவதாக யார் கிளம்பினாலும் தமக்குப் பொடி வாங்கிக் கொண்டு வரச் சொல்லிக் கெஞ்சிப் பல்லைக் காட்டிக் கொண்டே இருப்பார். தம் பிள்ளை மறந்து விடாமல் தமக்காகக் கும்பகோணத்தி லிருந்து பொடி வாங்கிக் கொண்டு வந்ததில் அவருடைய மகிழ்ச்சி அளவு கடந்ததாகி விட்டது.
புதுப் பொடி மட்டை – பெரிய மட்டை ; அதில் கால் சேராவது பொடி இருக்கும் – கைக்கு வந்து சேர்ந்தவுடனே அதைத் தட்டிச் சுவாரசியமாக ஒரு சிமிட்டா பொடியை எடுத்து உறிஞ்சி விட்டுத் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு மகாலிங்கையர் வீட்டுத் திண்ணையை நோக்கி நடந்தார் நாராயணையர்.
இந்தி உலகத்திலே இரண்டு விதமான மனுஷ்யப் பிரக்ருதிகள் உண்டு ; ஒன்று கழுத்தை வெட்டினாலும் தம் மனத்தில் உள்ளதை உள்ளபடியே வெளியிடாது; மற்றது தன் மனத்தில் உள்ளதைத் தவிர வேறு எதையுமே பேசாது. நாராயணையர் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். வயதான காலத்தில் அவருக்குத் தம் பிள்ளையைத் தவிர வேறு ஞாபகமோ கவலையோ கிடையாது. தம் பிள்ளையின் புகழை கண்டவர் கேட்டவரிடமெல்லாம் ஓயாமல் ஓதிக்கொண்டே இருப்பார். ஈசுவரநாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே மோக்ஷம் அடைந்துவிட வேண்டும் என்று பூர்வ காலத்தில் மனிதர்களுக்கு ஆசை இருந்தது; அதுபோலவே நாராயணையருக்கும் இடை விடாமல் தம் பிள்ளையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும், அதுவே தமக்கு சாயுஜ்யம் என்று இருந்தது. நடந்தது, நடக்கப் போவது, நடக்காதது எல்லாவற்றையும் கலந்து அவர் கதம்பமாகப் பிறர் காதும் மனதும் புளிக்கும் வரையில் பேசிக் கொண்டே இருப்பார். மகாலிங்கையரைப் போன்றவர்கள் சிலர் அவரை “ஊங்’ கொட்டித் தூண்டி விடுவார்கள்; பின்னர், அவர் போன பின், அவரைப் பற்றியும் அவருடைய அருமையான பிள்ளையைப் பற்றியும் குறைவாகவும் கேலியாகவும் தங்களுக்குள் பேசிக் கொள்ளுவார்கள். ஆனால் எந்தப் பிள்ளையைப் பற்றிக் குறைவாகவும் கேலியாகவும் பேசினார்களோ அந்தப்பிள்ளையின் படிப்பும் அறிவும் லவலேசமும் தங்கள் பிள்ளைகளுக்கு இல்லையே என்று அவர்கள் உள்ளூர உண்மையில் அசூயையும் ஆங்காரமும் பட்டுப் புழுங்கினார்கள்.



