
பசி
க. நா. சுப்ரமண்யம்
8
நாட்கள் பல ஓடி மறைகின்றன. காலத்தின் நியதி அது. ஒரு நாளைப் போலத்தான் மறு நாளும் கோழி கூவுகிறது. கிழக்கு வெளுக்கிறது. காகம் கரைகிறது. வெயில் ஏறுகிறது. பொழுது சாய்கிறது. அஸ்தமிக்கிறது. இருட்டுகிறது. வானத்தில் நட்சத்திரங்கள் வெடித்து எழுகின்றன. ஒரு நாளைப் போலத்தான் மறுநாளும் ஜனங்கள் எழுந்து அவரவர்கள் வேலைகளை அவரவர்கள் சக்திக்கேற்றபடி செய்து முடிக்கிறார்கள். உண்கிறார்கள். உடுக்கிறார்கள். நடமாடுகிறார்கள். உறங்குகிறார்கள். ஆனால் உண்மையில் சொல்லப் போனால் ஒரு நாளைப் போல இன்னொரு நாள் இருப்பதே இல்லை. இது ஏன் என்று கால தேவனைத்தான் கேட்க வேண்டும் ; அவனாலும் பதில் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான்.
சாத்தனூர் ஸர்வமானிய அக்கிரஹாரத்து வாழ்க்கையில் சாமா தன் மனத்தைப் பறி கொடுத்து விட்டான். கல்லூரி வாழ்க்கையை விட இந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்தே தான் இருந்தது. ஆனால் அவன் மனத்தில் மட்டும் தீராத ஓயாத ஒரு சஞ்சலம் இருந்து கொண்டே இருந்தது.
தெருச் சிறுவர்களுடன் அவர்களில் ஒருவனாகக் கோலி ஆடுகிறான் : கிட்டிப்புள் அடிக்கிறான். ஆனால் சிறுவர்களுடன் விளையாடும் மற்ற பெரியவர்களைப் போல அவன் ‘வாச்சாங்குளி’ அடிப்பதில்லை; தோற்றுப் போனால் உரிய தண்டனையை ஏற்றுக்கொள்ள மறுத்து அவன் ஓடி விடுவதில்லை. சிறுவர்களுக்குச் சமானமாகவே அவனும் முட்டி தள்ளுகிறான் : கவுண்டி எடுக்கிறான்.
தன் வயது வாலிபர்களுடனும் தெருவில் உள்ள இரண்டொரு ‘மைனர்’களுடனும் அவன் உலகத்து விஷயங்களை எல்லாம் வார்த்தைகளைக் கொண்டு அளந்து பார்க்கிறான். நிர்வாண இயக்கம் முதல் நிறத்திமிர் வரையில், அரசியல் முதல் அச்சு யந்திர நுணுக்கங்கள் வரையில் எல்லா விஷயங்களும் அவர்களுடைய பேச்சிலே அடிபடுகின்றன. முக்கியமாகப் பெண்மையும் பெண்மையின் அந்தரங்கங்களும் அங்கே அம்பலத்துக்கு இழுக்கப்படுகின்றன. சாமாவும் இது போன்ற விஷயங்களைப் பற்றி எல்லோருடனும் சரி சமானமாக உட்கார்ந்து பேசுகிறானே தவிர பெண்மை என்பது அவன் இன்னமும் திறந்து பார்க்காத ஒரு புஸ்தகம். அவசரம் அவசரமாக அதைத் திறந்து பார்த்துவிட வேண்டும் என்று அவன் ஆத்திரப்படவில்லை. காத்திருக்கத் தயாராகவே இருக்கிறான். அவனுடைய உள்ளம் என்கிற புனிதமான கோயிலிலே இன்னும் ஒரு பிரதிமையும் இடம் பெற வில்லை. வயதிற்கு உகந்த சகவாஸத்தினால் வரும் அசட்டு எண்ணங்களுக்கும் காரியங்களுக்கும் சாமா விலக்கானவன் அல்ல. எனினும், அவை அவனுடைய உள்ளத்தைத் தொடவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒழிந்த நேரமெல்லாம் அவன் ஏதாவது புஸ்தகங்களைப் படித்துக் கொண்டே இருக்கிறான்;
வாழ்க்கை வழிகளையும் வேதாந்த முடிவுகளையும் அவன் பெரியவர்களுடன் ஆராய்ச்சி செய்கிறான். இந்தப் பையனுக்குத் தான் என்ன அறிவு என்று அவர்கள் வியக்கிறார்கள். ஆனால் அவனுக்கு உலக அனுபவம் அவ்வளவாகப் போதாது; போதிய அனுபவம் பெற்ற பின் வேதாந்த மெல்லாம் பறந்து போய்விடும் என்று அவர்கள் முடிவு கட்டு கிறார்கள். ஆணித் தரமான வார்த்தைகளைக் கொண்டு அவன் காட்டும் முடிவுகளையும் அவன் சொல்லும் வழிகளையும் அவர்கள் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. விவாதத்தை முடித்து விட வேண்டும், அல்லது ஒத்திப் போட்டுவிட வேண் டும் என்கிற உத்தேசத்தில் அவர்கள் சாமா கிளப்பும் பல முக்கியமான பிரச்னைகளுக்குச் சரியான பதில் தருவதில்லை. ஏதாவது சொன்னால் ‘ஆமாம்’ போட்டு விட்டு நகர்ந்து விடுகிறார்கள். சில விஷயங்களைப் பற்றி அவர்கள் விவாதிக்கச் சம்மதிப்பதே இல்லை. இப்படிப்பட்டவர்களுடைய நாட்களும், தன்னுடையதைப் போலவே, ஒன்றன் பின் ஒன்றாகக் கால தேவனின் கம்பீர கதியிலே நிம்மதியாகக் கழிந்து கொண்டிருப்பதைக் கண்டு சாமா வியப்பு அடைகிறான்.
சாம்பமூர்த்திராயரை எண்ணிப் பார்த்த போதெல்லாம் சாமாவுக்கு கண்களில் நீர் துளித்தது. சிந்தனா சக்தி சிறிது படைத்திருந்தவர்கள் எல்லோருமே வாழ்க்கைப் போரில் தோற்றுப் புறம் காட்டி ஓடிப்போக வேண்டியவர்களா? கடவுள் அப்படித்தான் விதித்திருந்தாரா? வாழ்க்கையில் வெற்றி என்று சொல்லப்படுவதற்கும் அறிவுக்கும் இடையே கடக்க முடியாத ஒரு மடுவைக் கடவுள் ஏன் சிருஷ்டித்திருக்கிறார்!
சீனத்துக் கவி ஒன்று சாமாவுக்கு ஞாபகம் வந்தது. ஒரு குழந்தையை ஆசீர்வதிக்கச் சென்ற ஓர் ஏழைக் கவி அறிவு படைத்தவன் என்ற ஒரே காரணத்தால் நான் இவ்வுலகில் பட்ட அவஸ்தைகள் அனந்தம். என் ஏழ்மை கூட என் அறிவினாலே ஏற்பட்டதுதான். அறிவில்லாத மனிதர்களிடையே அறிவுள்ள மனிதனாக வாழ்வது அறியாமையே ஆகும். அதனால் கணக்கற்ற தொல்லைகள் விளைகின்றன. அறிவுள்ளவன் உலகில் முன்னேறுவது முடியாத காரியம். ஆகையால் இக் குழந்தையை அறிவில்லாதவனாகப் படைத்து விடு கடவுளே, என்று நான் உன்னை வேண்டிக் கொள்ளுகிறேன். அதுவே நீ அவனுக்குச் செய்யக் கூடிய சிறந்த உதவி. அறிவிலியாகவே வளர்ந்து பெரியவனாகி அவன் கெளரவத்துட பணத்துடனும் பதவியுடனும் வாழ்வான்; தேசத்து முதல் மந்திரியும் ஆவான். இவனை அறிவில்லாதவன் ஆக்கிவிடு” என்று ஆசீர்வதித்தானாம்.
சாமா இதை ஒருதரம் தன் தகப்பனாரிடம் சொன்ன போது அவர் சிரித்தார். “உண்மைதான், உலகத்தில் அறிவாளிகளும் சிந்தை செய்யும் சக்தி படைத்தவர்களும் முன்னேறுவது என்பது சிரமமான காரியமாகத்தான் தோன்றுகிறது என்றார். எனினும் தம் பிள்ளைக்கு இருந்த அறிவின் முன்னர் எல்லாத் தடங்கல்களும் நீங்கிவிடும், உலகம் அவனைச் சீக்கிரமே அங்கீகரிக்கும், இயற்கையின் விதி அவன் முன் விலகி வழிவிடும் என்று தான் அவர் எண்ணியிருந்தார். அவரைப் போல பூரணமாக இல்லாவிட்டாலும் சாமாவுக்கும் அவ் விஷயத்தில் போதிய தன்னம்பிக்கை இருந்தது.
தெருவிலிருந்து “மேற்கே ” போய் வருபவர்களுடன் சாமாவும் அடிக்கடி போய் வந்தான். காரி யம் எதுவும் இல்லா விட்டாலும் பேச்சுத் துணைக்கு ஆள் அகப்பட்டால் போதும் என்று அவன் அந்தப் பக்கம் போகிறவர்களுடன் கோயில், கடைத்தெரு முதலிய இடங்களுக் கெல்லாம் போய் வந்தான்.
கோயிலிலும் அந்தக் கோயிலில் குடி இருந்த தெய்வத்தினிடமும் தன் அத்தைக்கும் பாட்டிக்கும் இருந்த நம்பிக்கை, விசுவாசம், பக்தி இவை தனக்கு இல்லையே, ஏற்பட மாட்டேன் என்கிறதே என்று சாமா பெரிதும் வருந்தினான். தெய்வம் என்கிற தத்துவத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க அவனுடைய திகைப்பும் ஆச்சரியமும் அதிகரித்தன. தெய்வத்தினிடம் நம்பிக்கை மட்டும் பூரணமாகத் தோன்றி விடுமேயானால் தன் வாழ்க்கையின் முக்கியப் பிரச்னைகள் எல்லாம், தன்னை வாட்டிய தீராத சந்தேகங்கள் எல்லாம் உடனடியாகத் தீர்ந்துவிடும் என்று அவன் எண்ணினான். இந்த நம்பிக்கைக்கு அவன் ஆதாரம் தேடிப் பார்த்து அலுத்துவிட்டான்.
ஆனால் உண்மையில் அவன் மனம் தெய்வத்தை நம்ப மறுத்தது. கோயிலிலே தெய்வம் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. தெய்வம் என்று ஒன்று இருப்பது உண்மையானால் அது மனிதர்களுடைய முக்கியமான அலுவல்கள் நடக்கும் இடத்தில் தான் குடிகொண்டிருக்குமே தவிர, கோயிலென்ற தனிக் குடித்தனம் நடத்தப் போகாது என்று அவன் எண்ணினான். புனிதமான உள்ளத்திலே தெய்வம் குடி இருக்கலாமே – கோயில் என்று ஒரு கட்டிடமும் ஆர்ப்பாட்டங்களும் அவசியம் இல்லையே என்று அவன் சிந்தித்தான்.
“சந்தை இரைச்சல்! அதுதான் இன்றைத் தெய்வம்!” என்று ஒரு மேல்நாட்டு மேதை சொல்லி யிருப்பதை அவன் உன்னி உன்னிச் சிந்தித்தான். நீட்ஷேயின் வாக்கியங்களில் ஒன்று சதா அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. “தெய்வம் இறந்து பட்டு விட்டது; எழுந்திரடா மனிதா!” இது மட்டும் உண்மையாக இருக்கு மானால்….!
அருள், அன்பு என்ற மதத்தைப் பற்றிச் சிந்திக்கவே தற்கால உலகம் இடம் கொடுக்கவில்லையே என்று அவன் வருந்தினான். தன்னைச் சுற்றிலும் இருந்து வாழ்ந்து களித்த மனிதர்களைக் கவனித்த போது இயேசு கிறிஸ்து, கௌதம புத்தர், மகாத்மா காந்தி முதலியோர் வாழ்ந்து பிதற்றிய தெல்லாம் வீண்தானே என்ற சந்தேகம் அவன் மனத்தில் எழுந்தது. அந்த மகாத்மாக்களைப் பற்றியே அறியாத மனிதர்களும் இருந்தார்கள்; மனிதர்களாகவே நடமாடினார்கள்; உலகமும் அவர்களை மனிதர்களாகவே அங்கீகரித்து நடத்தியது என்பது தான் சாமாவுக்கு எல்லாவற்றையும் விட அதிகமான விந்தையாக இருந்தது!
மேல் நாடுகளில் சமீப காலத்தில் உருவகமாகிக் கொண்டிருந்த சமுதாயங்களையும் அவற்றிற்கு அடிப்படையான தத்துவங்களையும் சிந்தனைகளையும் பற்றி சாமா எண்ணாமலில்லை. அவைகளெல்லாம் பொருளாதார தத்துவம் என்கிற அமானுஷ்ய கொள்கை ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை என்று சாமாவுக்குத் தோன்றிற்று. ஒரு காலத்தில் கோயிலில் தெய்வம் என்று ஓர் உருவத்தை ஸ்தாபித்து அதன் மூலம் நாட்டில் எல்லாவிதமான வளங்களையும் வளர்ப்பது சாத்தியமாய் இருந்தது. ஆனால் தெய்வத்துக்கு பதில் கோயிலில் மனிதனுடைய வயிற்றையும் ஜீரணக் கருவிகளையும் வைத்துப் பூஜித்து வளத்தை வளர்ப்பது முடியாத காரியம் என்றே அவன் எண்ணினான். “உணவு மட்டும் போதுமா உயிர் வாழ?” என்று இயேசு கிறிஸ்து கேட்டது நிரந்தரமான அழியாத உண்மை அல்லவா ? ஊன், உணர்வு, உயிர் என்று பிரிபடும் இந்த மனித தத்துவத்துக்கு அடிப்படையானது வயிறு ஒன்றுதானா? மூன்றில் ஒன்றான ஊனிலும் அது முப்பதில் ஒன்றுதானே! மனிதனுக்குப் பசி என்றால் வயிற்றுப் பசி ஒன்று தானா உண்டு! உடம்பிலே ஒவ்வொரு அங்கத்துக்கும் தனித்தனியே பசி ஒன்று ஏற்பட்டிருக்கிறதே! கண்ணுக்கென்று ஒரு பசி, காதுக்கென்று ஒரு பசி – பசி என்று பெயர் சொல்லாமல் வேறு பெயரிட்டு அழைத்து விட்டதனால் மட்டும் அவற்றின் பசித்தன்மை மறைந்து விடுமா என்ன ? உடலுக்கிருந்த்து போல மனிதனுடைய உள்ளத்திலே எத்தனையோ பசிகள்; ஆத்மாவில் எத்தனையோ !
மனித ஆத்மாவின் பசியைத் தீர்க்கத் தோன்றிய உணவு தானோ கடவுள் என்கிற தத்துவம்?
அல்லது பிரெஞ்சு ஞானி சொன்னது போல சாது மனிதர்களைத் தன்னலம் கருதி ஏமாற்றத் துணிந்த முதல் அயோக்கியன் சிருஷ்டித்த முதல் பொய்தானோ கடவுள்?
சாமாவின் உயிரும் உடலும் உணர்வும் எதைப் பற்றியும் எவ்வித முடிவுக்கும் வரமாட்டாமல் எதெதை எல்லாமோ எண்ணி எண்ணி ஏங்கி ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தன.
இவைகளெல்லாம் பெரிய பெரிய விஷயங்கள். சுந்தாப் பாட்டியைப் போன்றவர்களின் அறிவுக்கு நிச்சயமாக எட்டாதவை. ஆனால் அவள் உள்ளத்துக்கும் உணர்வுக்கும் எட்டாத விஷயங்கள் இவ்வுலகிலே கிடையாது என்றே சொல்ல வேண்டும்! சாமாவின் ஏக்கங்கள், சந்தேகங்கள், போராட்டங்கள் இவற்றின் சின்னங்களை அவள் சுலபமாகவே கண்டு கொண்டாள். அவளுடைய ஒளி மங்கிய கிழக்கண்களுக்கு சாமாவின் உடலிலும் மனத்திலும் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாறுதல்கள் தெளிவாகவே தெரிந்தன.
“ஏண்டா சாமா, இப்படி நாளுக்கு நாள் இளைச்சுத் துரும்பாப் போறயே!” என்றாள் சுந்தாப்பாட்டி ஒருநாள்.
“பேஷ்! நன்னாச் சொன்னே ! நானா இளைச் சுப் போறேன்” என்று சொல்லி நகைத்தான் சாமா. “ஊருக்கு வந்தப்புறம் நீ போடற பழைய துனாலே முப்பது நாளில் முப்பது பவுண்டு கனம் உடம்பில் ஏறி இருக்கு” என்றான்.
அவனுடைய சிரிப்பில் ஏமாந்து விடுகிறவளா சுந்தாப்பாட்டி? தன் பேரன் ஏங்கி இளைத்துப் போவதற்குக் காரணம் என்ன இருக்கு மென்று அவள் தன் மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டு விட்டாள். அதற்கான பரிகாரத்தைச் செய்யவும் அவள் உடனே முற்பட்டாள்.
அன்று மாலையிலேயே அவள் நாராயணையரிடம் ரகசியமாக “சாமாவுக்கு வயசாயிண்டிருக்கே! எங்கேயாவது நல்ல பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சூட வேண்டாமா?” என்று சொன்னாள்.
“இப்போ என்ன அவசரம் அதுக்கு ? ‘ என்று சற்றுத் தயங்கியே கேட்டார் நாராயணையர். அவசரமா? என் பேரனுக்குக் கல்யாணம் பண்ணி நான் என் கண்ணாலே பார்க்க வேண்டாமா? என்ன அவசரமிங்கறயே நீ ?”
“என் பிள்ளைக்குப் பொண் வேணும், பொண் வேணும்னு எல்லாரையும் கேட்டுண்டு போகச் சொல்றயா நீ ?” என்று சற்றுக் கோபமாகவே நாராயணையர் கேட்டார்.
“எனக்கு வயசு இப்போ எழுபத்தி எட்டுத் தான் ஆச்சு. இன்னும் கொஞ்சம் வயசானப்பறம் அப்படிச் சொல்லுவேனோ என்னவோ, யார் கண் டது ?” என்றாள் சுந்தாப்பாட்டி
நாராயணையரின் கோபம் உடனே தணிந்து விட்டது.
“என்னை என்ன பண்ணச் சொல்றே ? ” என்றார்.
“நல்லை இடமா வந்தா விட்டூடாதே! அவ்வளவு தான்.”
“விட்டு விடுவேனா ? சொல்லேன் நீதான் என்றார் நாராயணையர். “எனக்கு மட்டும் வயசு கொஞ்சமாத்தான் ஆறதா?”
சிறிது நேரம் கழித்து “சாமா என்ன சொல்லு வானோ என்றுதான் யோசிக்கறேன்” என்றார்.
“இப்போது சுந்தாப்பாட்டிக்குக் கோபம் வந்தது. அவன் என்னத்தைச் சொல்லுவான். எல்லாரும் சொல்றதைத்தான் சொல்லுவான். அவனை ஏன் கேட்கணும்?”
“இருந்தாலும். அவன் மாட்டேன்னால்…. ” என்று இழுத்தார் நாராயணையர்.
“என்ன, இருந்தாலும்னு இழுக்கறே. அவனுக்குச் சொல்ல வேண்டியதை எல்லாம் நான் சொல்லிக்கறேன். நீ சும்மா இரு” என்று சுந்தாப்பாட்டி தன் பிள்ளையின் ஆக்ஷேபணைகளை ஒரு அடியில் அடக்கி விட்டாள்.
இப்படித் தன் பிள்ளையைக் கலியாணத்துக்கு சம்மதிக்க வைக்கும் பொறுப்பு, தன்னைவிட்டு நீங்கியதில் நாராயணையருக்குப் பரம திருப்தி. தம் தாயார் மனது வைத்தால் அதைச் செய்தே விடுவாள் என்பது அவருக்குத் தெரியும். அவர் அதற்கு மேல் எவ்வித ஆக்ஷேபணையும் எழுப்பவில்லை.
தாய்க்கும் மகனுக்கும் நடந்த இந்த ரகசிய சம்பாஷணையைத் தற்செயலாக அந்த வீட்டிலிருந்த ஒரு ஜீவன் ஒட்டுக் கேட்க நேர்ந்தது. அகஸ்மாத் தாகக் காதில் விழுந்த அவ்வார்த்தைகள் அந்த ஜீவனின் மனத்தில் எவ்வளவு வேதனையையும் ஏக்கத்தையும் உண்டு பண்ணின என்பது நம்மால் விவரிக்க முடியாத காரியம்.



